Wednesday, September 23, 2020

பாமாயிலும் குரங்குகளும்

குரலுக்கு வயதில்லை


ஓராங் ஊத்தான் (Orangutan) குரங்கிற்கும் நாம் சாப்பிடும் காலை உணவான சீரியலுக்கும் (Cereals) தொடர்பிருக்கிறதா  ?  ஆமாம்.  சரி.  ஓராங் ஊத்தானுக்கும்  பாமாயிலுக்கும் ?  அதற்கும் தொடர்பு இருக்கிறது. மேலே படியுங்கள்...

நமது அன்றாட உணவில் பாம் ஆயில் தெரிந்தோ தெரியாமலோ  நேரடியாகவோ  அல்லது மறைமுகமாகவோ  கலந்திருக்கிறது. அந்தப் பாமாயில் தோட்டங்களை அமைக்க  பல இலட்சம் ஏக்கர் மழைக் காடுகள் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

இதனால்,  அந்தக் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் கொன்றழிக்கப்படுகின்றன. முக்கியமாக  ஓராங் ஊத்தான் குரங்குகள் பல்லாயிரக்கணக்கில் செத்து மடிகின்றன. இந்த அவலங்களை என்னுடைய "வனநாயகன்" நாவலும் பேசி இருக்கும்.

இந்த விவரங்களை அறிந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தற்செயலாக தங்களுடைய காலை உணவான சீரியலில் பாமாயில் கலந்திருப்பதைக் கவனித்தனர். அதுவும் காடுகளை முறையின்றி அழித்து பாமாயில் தோட்டங்களை ஏற்படுத்தும் ஒரு நிறுவனத்திடம் வாங்கியவை.

உடனே செயலில் இறங்கிய அந்தக்  சிறுமிகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தினார்கள். அது மட்டுமல்லாமல்,  இது குறித்து தயாரிப்பவர்களுக்கு ஒரு புகார் கடிதமும் அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் புகார் கடிதத்தில் எத்தனை பேர் கையெழுத்திட்டவர்கள் எத்தனை பேர்தெரியுமா  ? 8 இலட்சம் பேர்.

மேலே சொன்ன புகாருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த சீரியல் நிறுவனம். வேறு வழியில்லாமல், வரும் நாட்களில் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாத பாமாயில் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டும் எண்ணெய் கொள்முதல் செய்வதாக அறிவித்திருக்கிறது. 

படத்தில்- சூழல் சீர்கேட்டுக்கு எதிராக கொடி பிடித்த இங்கிலாந்து சிறுமிகள் ஆஷா (12) , ஜியா (10).


இப்படிப் பாமாயில் மரத் தோட்டங்கள் அமைக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஒராங்குட்டான்கள் கொல்லப்படுகின்றன என்பது இங்கே கூடுதல் செய்தி.

No comments:

Post a Comment