Tuesday, June 2, 2020

நீங்கள் கவிதை எழுதுபவரா !?

எழுத்தாளர் அரசன் ஊரில் இருந்து ஒரு கவிதை புத்தகத்தை கொடுத்தனுப்பி இருந்தார். "காதல் தின்றவன்" எனும் தலைப்பிட்ட அந்தக் கவிதைப் புத்தகத்தை சி.கருணாகரசு எனும் அன்பர் எழுதியிருந்தார்.

பூக்களை விற்பவள்,
கூடை நிறைய சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை..

****
நம் பெயரை ஒருசேர
எழுதித் தந்தேன்
காதலுக்கு முகவரியாய் !

என்பது மாதிரியான விடலைக் கவிதைகளை அழகான வண்ணப்
படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள்.

இதுபோல கவிதைகளை வாசித்தேன், எழுதினேன் என பொதுவில் சொல்லவே பலர் கூச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், இன்றைய தேதியில் கவிதை எழுதுவது என்பது தேசதுரோகம் போன்றொரு பிம்பத்தை அறிவார்ந்த சமூகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அப்படியே யாராவது தப்பித் தவறி கவிதை எழுத நேர்ந்தாலும் அந்தக் கவிதையில் அது இல்லை இது இல்லை என கேலியோடு ஒதுக்கும் மனப்பான்மையே இன்று இருக்கிறது.  

பள்ளியில் இருக்கும் வரை நமது மொழிப்பாடத்தில் கவிதை குறித்தோ கவிதை எழுதுவது குறித்தோ முறையான அறிமுகங்களோ , பயிற்சிகளோ இருந்ததாக நினைவில்லை (மரபில் செய்யுள் எழுதுவது என்பது வேறு). அப்படி இருந்தும் கூட நம்மில் பல சிறந்த கவிஞர்களும், பாடலாசிரியர்களும் உருவாகி வந்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யப்படவேண்டிய விசயமே. 

உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதில் கவிதை எழுவது என்பது மிகவும் இயற்கையானது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் தங்கள் உணர்ச்சிகளை கவிதையாக எழுதுவது ஆரோக்கியமானதும் கூட.பல மேலை நாடுகளில் கவிதையின் ஆற்றலை உணர்ந்திருப்பதால் அவர்கள் மிகச்சிறு வயதிலேயே கவிதை எழுதுவதை உற்சாகப்படுத்துகிறார்கள். பிடித்த கவிதையை  மீண்டும் மீண்டும் வாசிப்பது இல்லை மனனம் செய்து இசையோடு வாய்விட்டு ஒப்புவிப்பது என கவிதையின் சுவையை ஊட்டுகிறார்கள். சிறுவயதில் கவிதையை எழுதுவது, எழுதியதைப் பிறரிடம் பகிர்வதையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.  அந்த வயதில் பலருக்கு தங்கள் சொந்த கவிதைகளை எங்கிருந்து தொடங்குவது என்றுகூட தெரியாது. அதற்கான பயிற்சியையும் சேர்த்தே மொழி வகுப்பில் சொல்லித் தருகிறார்கள்.

இதுபோல் எழுதப்படும் கவிதைகளுக்கு என்ன மதிப்பு எனும் ஆராய்ச்சியில் 
நாம் இறங்காமல் அவற்றை அந்தந்த இடத்திலேயே நிறுத்தினால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், நம்மூரில் கவிதை எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளுக்கு இலக்கிய உயரம் கேட்கும் போதுதான் சிக்கலே தொடங்குகிறது. ஒருமுறை பள்ளியில் கவிதை என்றால் என்ன என தமிழாசிரியர் கேட்டபோது, கட்டி உரைப்பது கவிதை, நெஞ்சில் இருப்பது கவிதை என அன்று வகுப்பில் இருந்த 40 பேரும் ஆளுக்கொன்றாக எழுதி வந்திருந்தார்கள் (இப்போதெல்லாம், அப்படிக் கேட்கிறார்களா என்ன ? ).

பொதுவாக கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.  உணர்ச்சிகளில் பேதம் எதுவுமில்லை.  ஆனால், அதைச் சரியான சொற்களால் 
கடத்துவதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.  அதில் எதுகை, மோனை, இசை இருக்கவேண்டிய பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
அந்தப் புரிதல் அனைவருக்கும் ஏற்ப்பட்டால் நல்ல கவிதைகள் உருவாகும். 
பலர் பிட் நோட்டிஸ் அடிப்பது போல கவிதைப் புத்தகங்களை அடித்து தூக்கிச் சுமக்கவேண்டிய தேவையும் இருக்காது.

கவிதைகள் நம் வாழ்விற்கு முக்கியம்.  அதற்கு சிறந்த கவிஞர்களை
உருவாக்குவது மிக முக்கியம்.  அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவசியம்.
ஏன், அது இன்றைய அவசரமும் கூட.

4 comments:

  1. 2003ல் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும்போது ஆண்டுமலர் ஆசிரியர் குழுவில் நானும் உறுப்பினர். 2002ல் வடமாநிலத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஒரு புகைப்படத்திற்கு கவிதை கேட்கவும், இரண்டாம் ஆண்டு மாணவி எழுதி எடுத்து வந்திருந்தார். அதை படித்த எங்கள் யாருக்கும் திருப்தி இல்லை. ஏதாவது சீரமைத்து எழுதி எடுத்துவருமாறு என்னிடம் கொடுத்தார். நானும் ஓரளவு யோசித்து எளிமையாக உரைநடை வரிகளை உடைத்துப்போட்டது போல் எழுதிச் சென்றேன். அந்த மாணவி எழுதிக் கொடுத்த வார்த்தைகள் எதுவுமே இல்லை. அர்த்தமும் புதியதாக இருந்ததால் என்னுடைய பெயரிலேயே பிரசுரம் செய்யச் சொல்லிவிட்டார். அந்த கவிதை 2003ஆம் ஆண்டு மாலைமுரசு தீபாவளிமலரிலும் பிரசுரமாகி வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசை பெற்றுத் தந்தது.

    நிற்க.

    அதன் பிறகு நான் ஒரு கவிதை கூட எழுதவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கவிஞராவதற்கான வாய்ப்பை விட்டுட்டீங்க போலவே.. இன்னமும் மோசம் இல்லை. எழுதலாமே :)

      Delete
  2. தென்றல் காற்று என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பலர்...

    ReplyDelete
    Replies
    1. தலைவரை, தெற்கில் இருந்து வருவது தென்றல், வடக்கில் இருந்து வருவது வாடை எல்லாம் இப்ப தமிழ் வகுப்புல இல்லையா. ?

      வகுப்புல தமிழே இல்லைனு சொல்லிடாதீங்க.. ஹஹா..

      Delete