Wednesday, September 30, 2020

இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது சொன்னது...

இலங்கை வானொலி புகழ் பி. எச். அப்துல் ஹமீதின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். 


நேர்காணல் கண்ட 'பட்டிமன்ற புகழ்' பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஹமீதுவிடம்
எல்லோரும் வழக்கமாகக் கேட்கும்  திரை நட்சத்திர அனுபவங்களைத் தாண்டி, அவரிடம் பொது வெளியில் இன்றைய தமிழ், மொழியின் எதிர்காலம் போன்ற  சில நல்ல விசயங்களையும் அபூர்வமாக உரையாடினார்கள்.  

இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும். அவர்களைக் கவர வேண்டும் என்றால் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பேசவேண்டும் எனும் எழுதப்படாத சட்டத்தைத் தமிழக ஊடகங்கள் கையில் எடுத்து பல்லாண்டுகள் ஆகின்றன. அது குறித்து பதில் அளித்த ஹமீது,  ஊடகங்களின் இந்தத் தவறான போக்கை "மயக்கம்" என்றார். என்னைக் கேட்டால், அதை அவர் "மடத்தனம்" என உடைத்துச் சொல்லி இருக்கவேண்டும்.

சரி, பெரும் நிறுவனங்களின் ஊடகங்கள் தான் அப்படி என்றால் சாமானியர்களின் கடைசி போக்கிடமான இணையமும் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன.

அந்த நேர்காணலின் முதல் பகுதியின் இணைப்பு

https://youtu.be/49AArBV8OZo


Saturday, September 26, 2020

இர்மா-அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினம்

"இர்மா-அந்த ஆறு நாட்கள் "குறித்து முகநூல் வாசகர்  Senthan Sethirayar  அவர்களுடைய  பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி செந்தன் !!

//புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் ஈழ புலம்பெயர் இலக்கிய சூழலையொட்டியே அதிகம் இருக்கும். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிணி தொழில்நுட்ப வேலைகளினால் கடந்த இருபது வருடமாக பெருமளவில் அதிகரித்ததென்றாலும், இயல்பிலேயே வாசிப்பு தன்மை அதிகமில்லாததால், நம் சமூகங்களிலிருந்து பெருமளவிலான படைப்புகள் உருவாவதில்லை. அப்படியான ஒரு சூழலில் எழுத்தாளர்  திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் “இர்மா - அந்த ஆறா(ஆறு) நாட்கள்”  எனும் புதினம் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை பதிவு என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் புத்தக வாசிப்பு பற்றிய பேஸ்புக் நேரலையை பார்த்தபிறகு அவருடைய “இர்மா - அந்த ஆறா (ஆறு) நாட்கள்” 


நாவலை கிண்டிலில் வாங்கினேன். மனிதர் ஏமாற்றவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக ஃப்ளோரிடா வாசியானதால், இங்கு மக்கள் ஹரிக்கேன் எனும் பெரும்புயலுக்கு எப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியும், அதே சமயம் தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பலரும் அவர்களின் இர்மா புயல் காலத்திய நினைவுகளை பகிர்ந்திருந்தது என கிட்டதட்ட இந்த புனைவு குறிக்கும் காலநிகழ்வுகளில் இயல்பாக பொருத்திக்கொள்ள முடிந்தது.

கதையின் மையம் என்பது வாழ்வின் நிலையில்லாமையை காட்டுகிறது, நிகழ்வுகள் யாவும் பரணி எனும் கதை நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. பரணி வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும், சொந்த ஊரின், மக்களின் நினைவுகள் பரணியின் மனதில் வரும் போது காட்டும் நிலையில்லாமையிலிருந்து, இர்மா எனும் ராட்சத ஹரிகேனினால் தன் வீட்டை விட்டு பாதுகாப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் போது பரணிக்கு ஏற்படும் மனபோராட்டம் காட்டும் நிலையில்லாமை என்று தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் மிக விரிவாக அமெரிக்க வேலை சூழல், வீட்டு சூழல், குடியுரிமை பிரச்சனைகள், புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் அமெரிக்க மக்கள் பற்றிய அவதானிப்புகள், அமெரிக்காவின் பொது நிர்வாக கட்டமைப்புகள், கருப்பின மக்களின் துயரங்கள் என்று பலவற்றையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் அதுவே சற்று தோய்வாகவும் இருக்கிறது. ஆனால் அமெரிக்க புலம்பெயர் சூழலில் வாழாதவர்க்கும் சேர்த்தே எழுத்தப்பட்டது என்பதால்,இப்படி இருப்பதே புனைவினுள்ளே வாசகனை இழுக்க செய்கிறது. 

ஹரிக்கேன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ஊரைவிட்டு வேறு பாதுக்காப்பான ஊர்களுக்கு போகலாமா வேண்டாமா என்று நடக்கும் மன போராட்டம் என்பது ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்திராதவற்கு விளங்காத ஒன்று. ஆனால் அப்படியான நாட்களில் பரணியின் எண்ணவோட்டம் என்பது இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் எண்ணவோட்டங்களை  அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த   ஹரிக்கேன் சீசனில் வந்த புயலில் ஏறகுறைய இதே நிலைமை தான் எனக்கும். 

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முதல்தலைமுறை தமிழர்கள் பலரின் நெருக்கடிகளை அப்படியே எழுதியிருக்கிறார். பரணி புயல்கால சமூக பணிகளுக்கு(volunteering) தன் பெயரையும் கொடுக்கட்டுமா என கேட்கும் போது அவன் மனைவி, வீட்டில் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு தங்கள் பாதுக்காப்பே கேள்விக்குறியாக இருக்கும் போது எதற்கு இந்த வேண்டாத வேலை என கடிந்துகொள்வது, என்ன தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வீடு வாங்கி பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது பலருக்கும் புலம்பெயர்ந்த நிலம் அன்னிய நிலமாகவே தம் காலமுழுதும் இருக்கும் என்பதை அழகாக சில சொற்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்.

அதே போல, தன் சக பணியாளர்கள் புயலுக்கு பிறகான மறுசீரமைப்பு வேலைகளில் கடுமையாக வேலை செய்யும் போது, தான் மட்டும் அட்லான்டாவில் பாதுக்காப்பாக இருப்பதில் பரணிக்கு ஏற்படும் குற்றயுணர்ச்சியை காட்டும் இடங்கள் அருமை.  

அமெரிக்க வாழ்க்கை பற்றி பரணியின் எண்ணங்களாக வரும் வார்த்தைகள் எல்லா புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களே, இவ்வாழ்க்கையில் பல சமயங்களில் பெறுவதை விட இழப்பது அதிகமென்றே தோன்றும். இங்கே புதிதாக தமிழர்களை சந்திக்க நேர்ந்தால், பேச்சு அமெரிக்கா வந்ததினால் ஏற்படும் இழப்புகளை பற்றி பேசாமல் முடியாது. 

அதே சமயம், சில சமயங்களில் பரணியின் மனவோட்டங்களாக எழுத்தாளரின் எண்ணங்கள் வலிந்து திணிக்கப்பட்டது போன்று தோன்றவதையும் சொல்லியாக வேண்டும் , குறிப்பாக புயலை நினைத்து வருத்தப்படும் போது வாழ்கையை பற்றிய அவதானிப்புகள் ஏற்கனவே பல புதினங்களில் படித்தது போலவே இருப்பது, அட்லான்டா நோக்கி பயணப்படும் போது வரும் புலம்பெயர்தல் பற்றிய வர்ணனைகள், என்று, சில இடங்களில் சற்று ஆசுவாசபடுத்துகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் கருப்பர் இன சம்பந்தமான பதிவுகளும், புனைவும் தேவையில்லாமல் கருப்பர்கள் பற்றிய கருத்தை பதிவிட எழுதப்பட்ட இடைச்சொருகளாக தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மனவோட்டங்களையும் அதனுள்ளே இழையோடும் நிலையில்லாமையையும் இவ்வளவு விரிவாக வேறு யாரேனும் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதற்காகவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினங்களில் ஒன்று.

ஒரே வருத்தம், பதிப்பித்த நூலில், மேலும் சில பின் இணைப்புகளை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அவற்றை வாசிக்கமுடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும். 

கிண்டிலில் வாங்க - https://www.amazon.com/அந்த-நாட்கள்-Tamil-ஆரூர்-பாஸ்கர்-ebook/dp/B07NBDM78S/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=இர்மா&qid=1592258584&sr=8-1

//

புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

Wednesday, September 23, 2020

பாமாயிலும் குரங்குகளும்

குரலுக்கு வயதில்லை


ஓராங் ஊத்தான் (Orangutan) குரங்கிற்கும் நாம் சாப்பிடும் காலை உணவான சீரியலுக்கும் (Cereals) தொடர்பிருக்கிறதா  ?  ஆமாம்.  சரி.  ஓராங் ஊத்தானுக்கும்  பாமாயிலுக்கும் ?  அதற்கும் தொடர்பு இருக்கிறது. மேலே படியுங்கள்...

நமது அன்றாட உணவில் பாம் ஆயில் தெரிந்தோ தெரியாமலோ  நேரடியாகவோ  அல்லது மறைமுகமாகவோ  கலந்திருக்கிறது. அந்தப் பாமாயில் தோட்டங்களை அமைக்க  பல இலட்சம் ஏக்கர் மழைக் காடுகள் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

இதனால்,  அந்தக் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் கொன்றழிக்கப்படுகின்றன. முக்கியமாக  ஓராங் ஊத்தான் குரங்குகள் பல்லாயிரக்கணக்கில் செத்து மடிகின்றன. இந்த அவலங்களை என்னுடைய "வனநாயகன்" நாவலும் பேசி இருக்கும்.

இந்த விவரங்களை அறிந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தற்செயலாக தங்களுடைய காலை உணவான சீரியலில் பாமாயில் கலந்திருப்பதைக் கவனித்தனர். அதுவும் காடுகளை முறையின்றி அழித்து பாமாயில் தோட்டங்களை ஏற்படுத்தும் ஒரு நிறுவனத்திடம் வாங்கியவை.

உடனே செயலில் இறங்கிய அந்தக்  சிறுமிகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தினார்கள். அது மட்டுமல்லாமல்,  இது குறித்து தயாரிப்பவர்களுக்கு ஒரு புகார் கடிதமும் அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் புகார் கடிதத்தில் எத்தனை பேர் கையெழுத்திட்டவர்கள் எத்தனை பேர்தெரியுமா  ? 8 இலட்சம் பேர்.

மேலே சொன்ன புகாருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த சீரியல் நிறுவனம். வேறு வழியில்லாமல், வரும் நாட்களில் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாத பாமாயில் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டும் எண்ணெய் கொள்முதல் செய்வதாக அறிவித்திருக்கிறது. 

படத்தில்- சூழல் சீர்கேட்டுக்கு எதிராக கொடி பிடித்த இங்கிலாந்து சிறுமிகள் ஆஷா (12) , ஜியா (10).


இப்படிப் பாமாயில் மரத் தோட்டங்கள் அமைக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஒராங்குட்டான்கள் கொல்லப்படுகின்றன என்பது இங்கே கூடுதல் செய்தி.

Friday, September 4, 2020

இந்தியாவிலே நீண்ட பெயருள்ள இரயில் நிலையம் எங்கு இருக்கிறது ?

பொதுவாக, இந்தியர்களின் பெயர்கள் கொஞ்சம் நீளமானது என்ற வகையில் நமது பெயர்கள் மேற்கு நாடுகளில் கிண்டலடிக்கப்படும்.  "பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் தானே எல்லாம் இருக்கிறது" என்ற ஒரு கவிதையைக் கூட கேட்ட ஞாபகம் இருக்கிறது. அதற்காக நாம் எண் கணிதம் எனும் நியூமராலஜிக்குள் (numerology) நுழையவேண்டியதில்லை.

இத்தனைக்கும், மேற்கு நாடுகளில் முதல் பெயர் (First Name), குடும்பப் பெயர் (Last Name) ஏன் மிடில் நேம் (Middle Name) கூட வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமக்கு,  அப்பா பெயரைக் குடும்பப் பெயராக பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவில்  பெரும்பான்மையான மாநிலத்தினர் இன்னமும் ஜாதி பெயரைச் சுமந்து திரிகிறார்கள். 

நான் கவனித்தவரை, ஆந்திர நபர்களின் பெயர்கள் (குறிப்பாக ஆண்கள்) மிக மிக நீளமானவை. நா.முத்துக்குமாரின் "ஆடு மாடு மேல உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்..." எனும் திரைப்பாடல் வரிகள் போல. ஆந்திர மக்கள் இன்னமும்  தாத்தா, பாட்டி பெயர், ஊர்ப்பெயர், குல தெய்வப் பெயர்களை எல்லாம் இணைத்துக் கொள்கிறார்கள். 

என்னுடன் வேலை செய்த ஒரு தெலுங்கு நபருடைய பெயர் 'ராஜிவ் கிருஷ்ணமாச்சாரியலு ஸ்ரீமத் திருமலை சதீஷ்'. அவரைச் சுருக்கமாக சதீஷ் என்போம். இவ்வளவு ஏன், இந்தியாவிலே நீண்ட பெயருள்ள இரயில்  நிலையம் ஆந்திராவில் தான் இருக்கிறது.  'வெங்கட நரசிம்ம ராஜுவரிபேட்' (Venkata Narasimha Rajuvaripet) என்கிறது கூகுள்.




நமது வீடுகளில்  நாராயணசாமி என்ற பெயரே கொஞ்சம் நீளமாக இருப்பதாகக் கருதி  நாணு என்றோ, சிவக்குமாரை சிவா என்றோ காமாட்சியை காமு என சுருக்கி வசதிக்காக அழைப்போம். அந்த வகையில், நகரத்தார் வீடுகளில் விசாலாட்சியை, சாலா என்றும், சிவகாமியை சோகு என்றும், பழனியப்பனை பழம் என்றும் கூப்பிடுவார்களாம்.

பிளாக் எனும் வலைப்பூக்கள் வந்த சமயத்தில் பலர்  வேதாளம், சிறுத்தகுட்டி, புலிக்குட்டி என்றெல்லாம் புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருந்தார்கள். 
நேற்று கூட 'போடா டேய்' என்ற பெயருடைய ஒருவர் நட்பு விடுப்பு கொடுத்திருந்தார். அந்த நாட்களில் இராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் போன்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது போல, பள்ளி நாட்களில்  சுண்டெலி, கணக்குப்புலி, மூக்கொழுகி எனப் பட்டப் பெயர்கள்  வாங்கியவர்கள் தானே நாமெல்லாம் ? :)