தொலைகாட்சி என்றால் தூர்தசன் என்றிருந்த காலம். வெள்ளிக்கிழமை ஓளியும் ஓலியும்-க்கும் ஞாயிற்றுக் கிழமை படத்துக்கும் தமிழ்நாடே காத்துக் கிடந்த நாட்கள். ரோஜா படம் வெளியான வாரம் ஒளியும் ஒலியுமில் சின்ன சின்ன ஆசை பாடலை ஒளிபரப்புகிறார்கள். நானோ பத்தாவது படிக்கும் சின்னப் பையன்.
அதற்கு முன், குமுதம் இதழில் 'விக்ரம்' படத்தில் கமல் சொந்தக் குரலில் பாடிய 'விக்ரம்... விக்ரம்...' பாடலின் இசையில்தான் முதன்முதலாக கம்யூட்டரில் கம்போஸ் செய்தார் இளையராஜா. அதன்பிறகு 9 வருடங்கள் கழித்து 'ரோஜா' படப் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் கம்யூட்டரில் சிறப்பாக கம்போஸ் செய்திருக்கிறார் என எழுதியிருந்ததைப் படித்திருந்தேன்.
ஆனால், இளையராஜா இரசிகனாக இருந்த எனக்கு சின்னப்பையன் என்ன பெரிய பிரமாதமாகச் செய்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையோடுதான் அந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலின் புது புது இசைத்துணுக்குகள் இதுவரை கேட்டிராத வித்தியாசமான ஒலியோடு என் காதில் நுழைகிறது. அது தமிழ்த்திரை இசையின் அடுத்த சகாப்தம் என அப்போது கண்டிப்பாக நினைக்கவில்லை. ஆனால், வித்தியாசமான ஏதோ ஒன்று இந்தப்பாடலில் இருக்கிறது என்று மட்டும் மனசு சொல்லியது.
அன்று பலருக்கு கம்ப்யூட்டர் என்றால் என்ன ? சின்தசைஸர் (synthesizer) என்றால் என்ன ? எனப் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை கம்யூட்டர் என்பது ஒரு இயந்திரம். ஒரு இயந்திரத்தை வைத்து இளையராஜா எனும் மிகப்பெரிய மனிதரை ஓடங்கட்டிவிட முடியுமா என்ன ? 'இதெல்லாம் பிஸ்கோத் வேலை, எத்தனை நாளைக்கு கம்ப்யூட்டர வைச்சு மியூசிக் போட முடியும். நீ வேணா பாத்துக்கிட்டே இரு, ஒரே படத்தோட இவன் போய்டுவான் பார்' என என்னைப் போன்ற விடலைகள் எதிர்பார்த்திருந்த நேரம்.
ஆனால், அவரோ ரோஜாவுக்கான தேசிய விருதோடு நின்றுவிடாமல் ஜென்டில்மேன், திருடா திருடா, புதியமன்னர்கள் என தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களைத் தந்து என்னைப் போன்ற அன்றைய விடலைகளை அவருடைய இரசிகராக்கிவிட்டார்.
தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் 'கம்ப்யூட்டர்' குறித்து எழுதிய சிறிய குறிப்பில் இருந்து...
வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே !
ReplyDelete