Monday, December 21, 2020

நோபல் பரிசு - ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற புத்தகத்தை வாசிக்க இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் நிதர்சனத்தை எஸ்.ரா தனது  வலைப் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.


"தாய்மொழி - தமிழ், நமது உயிர்மொழி" எனப் பேசி புலகாங்கிதம் அடையும் நாம் இப்படிச் சில எளிய இலக்குகளைத் தொடக் கூட பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டி இருப்பது வேதனை தருகிறது.


நோபல் பரிசு பெற்ற படைப்புகளுக்கே இந்த நிலை என்றால் நம்மால் மற்ற படைப்புகளைப் பற்றி யோசிக்க கூட முடியாது. இந்தப் படைப்புகள், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவரும் போது அதற்கு இருக்கப் போகும் வாசகர் பரப்பைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும். 

மற்றபடி, "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்.  தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும், என அன்றே சொன்னான் பாரதி " என மேடையில் பேசினால் மட்டும் போதாது. அறிவுசார் சூழலில் இயங்கும் உள்ளூர், வெளியூர் தமிழ் அமைப்புகளும், இசை நிகழ்ச்சி என நட்சத்திர விருந்து வைக்கும் அனைத்து அயல்நாட்டு தமிழ்மன்றங்களும் மொழிபெயர்ப்பிற்கு நிதி சேகரிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

அதுபோல, வரி விலக்கு எனச் சொல்லி வரிப்பணத்தைத் திரைத்துறைக்கு வாரிவிடும் அரசுகளும், கல்வி நிதி உதவி பெறும் பல்கலைக் கழகங்களும் இதை ஓர் இனத்திற்கு செய்யவேண்டிய அறிவு முதலீடாகக் (knowledge investment) கருதி செய்ய முன்வர வேண்டும்.

மற்றபடி, தமிழில் இல்லை என்றால் என்ன ? ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே தேடி பிடித்து வாசித்து விடுவார்கள். தமிழர்களிடம் வாசிப்பு குறைவு போன்ற காரணங்களைத் யாரும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். வாசிப்பும் ,எழுத்தும் மட்டும் இல்லை என்றால் தமிழகமும், தமிழினமும் என்றோ இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எஸ்.ராவின் கட்டுரை இணைப்பு https://www.sramakrishnan.com

No comments:

Post a Comment