Tuesday, April 19, 2022

வனநாயகன் குறித்து-22 (தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன)

அமெரிக்காவில் வசிக்கும் கனிமொழி (Kanimozhi MV)  வனநாயகன்- மலேசிய நாட்கள் குறித்து எழுதிய முகநூல் குறிப்பு (2017)

"தோழர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் வனநாயகன் நெடுங்கதைப் படித்தேன்...

 பெரும்பாலும் நெடுங்கதைகள் படிக்கும் பழக்கம் இல்லை, கடைசியாக படித்த நெடுங்கதை நினைவில் கூட இல்லை... அதனால் சற்றுத் தயங்கியபடியே தான் படிக்க ஆராம்பித்தேன். ஒரு 25 பக்கங்கள் பொறுமையாக திருப்பிக்கொண்டு வந்தேன், பின் போக போக கதை விறுவிறுப்புடன் சென்றது, மலேசிய கதைக்களம், நாம் மலேசியாவில் இருப்பதுபோன்று காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. 

கதையின் நடுவே ஏராளமான செய்திகள், மலேசியாவின் ஊர்ப்பெயர்கள் பற்றி அங்கே வாழ்க்கை முறை பற்றி தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

ஒரே ஒரு வருத்தம் அந்த முக்கிய கதை நாயகனை சைவமாக வைத்திருக்க வேண்டாம் 😄😄



ஒரு நெடுங்கதைக்கு முக்கியத் தேவை படிப்போரை இறுதிவரை கதையை முடித்துவிட வேண்டும் என்ற  உந்து சக்தியை தக்க வைப்பது.. அதை தோழர் சிறப்பாக செய்திருக்கின்றார்

வாழ்த்துகள் தோழர் !! "

புத்தகங்களை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/



Wednesday, April 6, 2022

ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா ?

"ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா. உங்க போஸ்டையே பாக்க முடியலையே..." என நேர்பேச்சில் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படி ஒருவருடைய பதிவுகள் தங்கள் ஃபேஸ்புக்-இல் வருவதில்லை எனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்காக...


இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விசயம். ஆமாம். பேஸ்ஃபுக் அல்காரிதம் என்பதும் அதுதான். நீங்கள் யாருடைய பதிவுகளை அதிகம் படிக்கிறீர்களோ, அவர்களுடைய பதிவுகளே உங்களுடைய பக்கத்தில் தொடர்ந்து  வரும். இங்கே படிப்பது என்றால் அதைச் சும்மா பாரத்துவிட்டு நகர்வது அல்ல. அந்தப் பதிவுகளுடன் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளவேண்டும்.

அதாவது,  நான் இந்தப் பதிவுகளை விரும்புகிறேன் எனும் விதத்தில் லைக் பொத்தானை அழுத்த வேண்டும். இல்லை மறுமொழி (கமெண்ட்) தரவேண்டும்.

அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில் அந்தப் பதிவுகளை நீங்கள்| படிக்காமல் தவிர்த்து விட்டு கடந்து போவதாக பேஸ்ஃபுக் (இப்போதைக்கு)  புரிந்து கொள்கிறது. இது அவர்களுடைய அல்காரிதத்தின் ஒரு அம்சம் மட்டுமே. ஏனென்றால், நீங்கள் பொழுதுபோக்கு என்ற இடத்தில் பிரியாணி சமைப்பது எனக் குறிப்பிட்டு இருந்தால்,  உங்களுக்குப் பிரியாணி தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து   காட்டி உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பதும் அவர்களுடைய அல்காரிதத்தின் இன்னொரு அம்சமே. இப்படிப் பல...

அதனால், இனி யாரிடமும் "நீங்க இப்பெல்லாம் போஸ்டே போடறதில்லையா... ?" எனக் கேட்பதற்கு முன் நீங்கள் முதலில் அவருடைய நட்புப் பட்டியலில் இருக்கிறீர்களா? அவர்களுடைய டைம்லைனில் புதிய பதிவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

வனநாயகன் குறித்து-21 (இரட்டைக் குழல் துப்பாக்கிகள்)

வனநாயகன் குறித்து தனது கருத்துக்களைத் தனி மடலில் பகிர்ந்த அகிலா-வுக்கு நன்றி ! 

//சார்,

சமீபத்தில் நான் நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த (நடந்து கொண்டிருக்கிற) காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பற்றி பேசும் நாவல்

இந்தப் படைப்பின் வழியாக ஆசிரியர் தொல்குடியினரின் வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும், விலங்குகளையும் குறித்து பதிவுசெய்திருக்கிறார். அது குறித்தான தகவல்களை மேலும் அறிய உரிய ஆங்கில சொற்களும் தரப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

மலேசிய பின்புலத்தில் நீங்கள் எழுதிய வனநாயகன் (மலேசிய நாட்கள்)-னும் இந்தக் காடோடி-யும் சம காலத்தில் மலேசிய நிலப்பரப்பு குறித்தும், சூழல் குறித்தும் எழுதப்பட்ட அழுத்தமான படைப்புகள் என நினைக்கிறேன்.  இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல.. வாழ்த்துகள் !

//

Tuesday, April 5, 2022

மூப்பில்லா தமிழே தாயே

'மூப்பில்லா தமிழே தாயே..' பாடல் வெளியாகி இருக்கிறது.  இதுவரை அதை யூடியூப்-இல் பல இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு நிற்கவேண்டிய இந்தப் பாடலில்  குறுகிய கண்ணோட்டத்தோடு எங்கு பார்த்தாலும் விளம்பரங்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் சிலர்.  சிலர், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அதில் சரியாக பிரதிபலிக்கவில்லை என்கிறார்கள். அதுபோல, பாடகிகளின் குரல் தேர்வு, உச்சரிப்பு குறித்தெல்லாம் அதன் வல்லுநர்கள் கருத்து சொல்லட்டும். பிரச்சனையில்லை. அது அவர்களுடைய சுதந்திரம்.


ஆனால், தமிழ் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை முன்னெடுத்து தரணி ஆள தமிழை அழைக்கும் பாடலில் ஒரு விசயம் என் கண்னை உறுத்தியது.  அதில் ஒரு காட்சியில் ஒருவர் (எழுத்தாளர்? ) ஊஞ்சலில் அமர்ந்தபடி யோசித்து பேனாவால் எழுதுவது போல அமைத்திருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்களை என்றும் வயதானவர்களாகக்  காட்டி அந்நியப்படுத்த வேண்டுமா என்ன ? கூடவே, தமிழில் ஓர் இளைஞியோ இளைஞனோ கைப்பேசியில் இல்லை கணினியில் ஆர்வத்தோடு தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா ?  இளைஞர்களுக்குத் தமிழ் என்பது ஆடல், பாடல் என்பது மட்டும்தானா  ? 

இல்லை, அந்த வயதானவரே கூட அடுத்த கட்ட நகர்வாக தாளில் எழுதாமல் தமிழில் தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா.  இத்தனைக்கும் பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகள் (கவிஞர் தாமரை) தட்டச்சில் தனியே நின்றோம்.. என  வருகிறது என நினைக்கிறேன். அதைக் காட்டுவதில் அவர்களுக்கு என்ன தயக்கமோ. இல்லை என்ன பிரச்சனை வந்துவிட போகிறதோ தெரியவில்லை.

நமக்கு, இதைப் பார்க்கும் பல கோடி தமிழர்களில் சில நூறு பேராவது (குறிப்பாக இளைய தலைமுறை) தமிங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுத முயற்சி செய்ய மாட்டார்களா என்ற ஆதங்கம்தான் வேறென்ன.

பாடலின் குறிப்பிட்ட அந்தக் காட்சிக்கான இணைப்பை மறுமொழியில் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

https://youtu.be/JDYiJGTOFHU?t=271