Tuesday, April 5, 2022

மூப்பில்லா தமிழே தாயே

'மூப்பில்லா தமிழே தாயே..' பாடல் வெளியாகி இருக்கிறது.  இதுவரை அதை யூடியூப்-இல் பல இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு நிற்கவேண்டிய இந்தப் பாடலில்  குறுகிய கண்ணோட்டத்தோடு எங்கு பார்த்தாலும் விளம்பரங்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் சிலர்.  சிலர், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அதில் சரியாக பிரதிபலிக்கவில்லை என்கிறார்கள். அதுபோல, பாடகிகளின் குரல் தேர்வு, உச்சரிப்பு குறித்தெல்லாம் அதன் வல்லுநர்கள் கருத்து சொல்லட்டும். பிரச்சனையில்லை. அது அவர்களுடைய சுதந்திரம்.


ஆனால், தமிழ் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை முன்னெடுத்து தரணி ஆள தமிழை அழைக்கும் பாடலில் ஒரு விசயம் என் கண்னை உறுத்தியது.  அதில் ஒரு காட்சியில் ஒருவர் (எழுத்தாளர்? ) ஊஞ்சலில் அமர்ந்தபடி யோசித்து பேனாவால் எழுதுவது போல அமைத்திருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்களை என்றும் வயதானவர்களாகக்  காட்டி அந்நியப்படுத்த வேண்டுமா என்ன ? கூடவே, தமிழில் ஓர் இளைஞியோ இளைஞனோ கைப்பேசியில் இல்லை கணினியில் ஆர்வத்தோடு தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா ?  இளைஞர்களுக்குத் தமிழ் என்பது ஆடல், பாடல் என்பது மட்டும்தானா  ? 

இல்லை, அந்த வயதானவரே கூட அடுத்த கட்ட நகர்வாக தாளில் எழுதாமல் தமிழில் தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா.  இத்தனைக்கும் பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகள் (கவிஞர் தாமரை) தட்டச்சில் தனியே நின்றோம்.. என  வருகிறது என நினைக்கிறேன். அதைக் காட்டுவதில் அவர்களுக்கு என்ன தயக்கமோ. இல்லை என்ன பிரச்சனை வந்துவிட போகிறதோ தெரியவில்லை.

நமக்கு, இதைப் பார்க்கும் பல கோடி தமிழர்களில் சில நூறு பேராவது (குறிப்பாக இளைய தலைமுறை) தமிங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுத முயற்சி செய்ய மாட்டார்களா என்ற ஆதங்கம்தான் வேறென்ன.

பாடலின் குறிப்பிட்ட அந்தக் காட்சிக்கான இணைப்பை மறுமொழியில் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

https://youtu.be/JDYiJGTOFHU?t=271




No comments:

Post a Comment