Saturday, December 13, 2014

ரஜினியின் லிங்கா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் 'லிங்கா' உலகம் முழுவதும்  வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நான் கண்ணை மூடிக் கொண்டு "வெற்றிகரமாக" என்ற வார்‌த்தையை சேர்க்க எந்த பிரயத்தனமும் செய்ய தேவையில்லை. உலகத்தமிழர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.

ஆனால், இந்தமுறை முன்பு எப்பொழுதும் போலில்லாமல் ரஜினி பற்றியும் அவர் அரசியல் நிலைப்பாடு ,சாதனை, வயது பற்றியும் நிறைய வெளிப்படையான விமர்ச்சனங்கள்  சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டன.

முதல் காட்சிக்கு சென்று ரசிக்கும் ரசிகனாக இல்லாவிடிலும், கடந்த 30 வருடமாக நானும் ரஜினி ரசிகன்தான். பதின்ம வயதுகளில் பார்த்த  எஜமான் படத்தில் ரஜினியின் அறிமுக காட்சிகளில் உற்சாகம்  உடலின் ஒவ்வொரு செல்லிலும் பொங்கியது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.  இதை சொல்லிக் கொள்வதில் எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நாயகன் அவர்.  ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக நம்மில் ஒருவராய் உலா வருகிறார்.

சந்திரமுகி படத்தில் அவர் வடிவேலுவுடன் செய்யும்  சில நகைசுவைகள்கூட
எனக்கு உடன்பாடு இல்லை தான்.  அதற்காக அவரை முற்றிலும் என்னால் புறக்கணிக்க இயலவில்லை. முன்பு வடிவேலு இப்போது சந்தானம் என ஜெயிக்கும் குதிரையுடன் பயணிக்கிறார்.  காதாநாயகிகள், லொகேஷன் என
மாறினாலும் அவர் படங்கள் பழைய பார்முலாதான். எனவே சினிமா ஓரு வியாபாரம் என்ற நிலையுடன் நிறுத்திக்கொள்வது உத்தமம். அதுபோல அரசியல்  நிலைப்பாடாகட்டும்  அல்லது விளம்பரமாகட்டும் ரஜினி அவருடைய பாதையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.

நாம்தான் தேவையில்லாமல் சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக் கொள்கிறோம். திரையில் அவர் செய்யும் சாகசங்களை நிஜ வாழ்விலும் எதிர்பார்க்கிறோம். நம் இயலாமையில் இருந்து மீட்க ஓரு  ரட்சகரை நோக்கி காத்‌துக்கிடக்கிறோம்.  அது அறிவீனமின்றி வேறென்ன ?.

அவர் மேல் வீசப்படும் மற்றோரு குற்றச்சாட்டு அவரின் பொதுநல தொண்டு பற்றியது. நிஜ வாழ்வில் அணை கட்டுவார், மருத்துவமனை காட்டுவார் என எதிர்பார்க்காமல். அரசுக்கு சரியான வரி கட்டினால் சந்தோசப்படுங்கள். அவர் வழி எப்போதும் தனி வழி என விடுங்களேன். அவர் "மாஸ் எண்ட்டெர்டெயினர்" அதுவன்றி வேறென்ன தேவை?

நாட்டைத் திருத்த 'லிங்கா' க்கள் வர வேண்டியதில்லை. நம்மை
நாமே திருந்திக் கொள்வதுதான் வழி என்ற நிதர்சனத்தை உணர்ந்தால் விசனப்பட வேண்டியதில்லை.

2 comments:

  1. அலட்டிக்கொள்ளாமல் அமைதியான நடிப்பு
    இந்த வயதிலும் அவரால் சிறப்பாக நடிக்க முடிகின்றது என்பதே ஒரு சிறப்பு
    நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் செய்து சிலர் தவறாக எழுதுவது முறையல்ல
    கலையை கலையாகத்தான் பார்க்க வேண்டும் .நல்லதை எடுத்து அல்லவையை தவர்த்துக் கொள்வது மேன்மை

    ReplyDelete
  2. அருமையான கருத்து, கலையை கலையாகத்தான் பார்க்க வேண்டும் என்பதே இதன் அடிநாதம்..

    ReplyDelete