சென்னையில்வுள்ள நண்பர் ஓருவரிடம் சில வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் என்றால் என்னைவிட ஜூனியர் , இருப்பத்தேழு இருக்கலாம். சில வருடங்களாகத்தான் பழக்கம் ஆனால் வெளிப்படையாக பேசும் டைப். இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஐ.டி. துறையில் இருந்த நல்ல வேலையைவிட்டு தற்போது இசைத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் வசதியானவர். அப்பா மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருந்தவர். தற்போது கார்ப்பரேட் ட்ரைனிங் சென்டர் நடத்துகிறார்.
இவர் படித்ததோ இன்ஜினியரிங், சிறு வயதில் பெரிய இசையும் பயிற்சியும் இல்லை. ஆர்வத்தில் கடந்த ஒரு வருடத்தில் பியானோ வில் ஏதோ ஏழு எட்டு லெவல் படித்து விட்டாராம். இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரின் இசைக் கல்லூரியில் வேறு ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு திரைபட இசையமைப்பாளரின் உதவியாளராக
சேர்ந்து பின்பு படிப்படியாக இசையமைப்பாளராவது அவர் கனவு. மேற்க்கத்திய இசையில் ஆர்வம் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழிசை எந்த திசையில் இருக்கிறது என நீங்கள் கேட்பது என் காதில்விழுகிறது. :)
சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஆல்பம், படப்பிடிப்பு என இருந்த வேலையும் விட்டுவிட்டு கைக்காசை செலவு செய்து சுத்திக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த திரைப்படப் பாடலாசிரியர்களை ஆல்பத்தில் பயன்படுத்துவது பற்றிக் கூடப் பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பின்பு சமீபத்தில் தான் பேசினேன். ப்ரைவேட் ஆல்பம் நண்பர்கள் கொடுத்த ஐடியாவாம். அந்த பதினைந்து நிமிட ஆல்பத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக மெனக்கெட்டுருக்கிறார். மெட்டு அமைப்பது, சரியான பாடல் வரிகளை தேர்வு செய்வது அதற்க்கு ஏற்ற இசைக் கோர்வைகள் உருவாக்குவது மேலும் பொருத்தமான வாத்தியக் கருவிகளை பயன்படுத்துவது, நல்ல தரமான ஒலிப்பதிவு என வேலை பின்னி எடுத்துத்திருக்கிறது. பாவம் நோகாமல் ஏசி யில் ஐ.டி வேலை செய்து சம்பளம் வாங்கியவருக்கு இதெல்லாம் புதிதுதான்.
அது மட்டுமின்றி ரெக்கார்டிங் ஸ்டூடியோ, பாடக, பாடகியர் காஸ்டியூம், வீடீயோ என பணமும் சில லட்சங்கள் வரை காலி.
மேலும் தொழில் நுட்பங்களை புரிந்து கொண்டு தனியாக இயங்க பல ஆண்டு கடும்உழைப்பு தேவை என்பதை இந்த ஒரு ஆல்பத்தின் வழியாகவே அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளார். அப்படி நல்ல திறமை உள்ள சிலரும் திரையில் ஜொலிக்க இயலவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறார். இசை பிரியம் என்பது வேறு அதையே ஜீவனமாக்கி கொள்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.
அடுத்தது என்ன? என்றால்,' ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இதில் குதித்தாகிவிட்டது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் முயற்சித்து பார்க்கவுள்ளதாக' சொன்னார்.
நினைத்திருத்தால் இவர் வேலையை விடாமல் எப்போதோ திருமணம்,குழந்தை என செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இவர் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட துணிந்து விட்டார். இப்போது சேர வேண்டிய இலக்கு கண்ணுக்கு தட்டுப்படவில்லை. ஆனால் கை கால்கள் இப்போதே சோர்வடையத் துவங்கி விட்டது.
இவரைப் போல படைப்பாளியாக முயற்சித்து தோற்று அல்லது முழுமையாக முயற்சிக்காமல் பாதியில் விட்டவர்கள் பலர்.
அவர்கள் எங்கோ மேடைக் கச்சேரிகளில் வெற்றி பெற்றவர்களின் பாடல்களை பாடிக் கொண்டோ அல்லது இசை அமைத்துக் கொண்டோ இசையோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நீஙகள் தரும் மிகப்பெரிய வெகுமதி கைத்தட்டலும், பாராட்டுமன்றி வேறில்லை..
No comments:
Post a Comment