Sunday, March 17, 2019

கதைச்சொல்லி

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் தேடிப்பிடித்து  தமிழ் சிறுவர் கதைப்புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். பெரும்பாலனவை
குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளைக் கொண்டு சொல்லப்படும் நீதிக்கதைகள், குறும்பான நகைச்சுவை கதைகள்.  தெனாலிராமன், புராண, காப்பியக் கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மிடம் ஆங்கிலத்தில் இருப்பது போல வெரைட்டி இல்லை எனும் குறை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக  இன்று அறிவியல் புனைகதைகளுக்கான தேவை இருக்கிறது.

சொல்வளம் அதிகமில்லாத அமெரிக்க பிள்ளைகளுக்கு  தமிழ்புத்தகங்கள் வாங்குவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. முதன்மையாக கதை நீண்ட வாக்கியங்களில் இல்லாமல் மிகவும் சுருக்கமாக எளிமையான மொழி நடையில் இருக்கவேண்டும். அடுத்தது சொற்களின் பயன்பாடு - பிள்ளைகளுக்கு பரிட்சியமில்லாத அந்நியச் சொற்களை
அறிமுகப்படுத்துவதிலும் சிரமிருக்கிறது. அப்படியே புதிய சொற்களை அறிமுகம் செய்வதாக இருந்தால் அதற்கு துணை செய்வதுபோல ஒவியங்கள் அமைந்திருந்தால் வாசிப்பு எளிமையாகும். உதாரணமாக பாம்பு புற்றில் இருந்து தலை தூக்கியது என கதையில் எழுதினால்,  கூடவே கண்டிப்பாக மண் புற்றின் படத்தைப்  போட்டுவிடுங்கள். புற்றுக்கு நாங்கள் விளக்கம் சொல்ல கூகுளைத் தேடவேண்டியிருக்காது.  அதுபோல அந்தக் கதை ஒரு நீதிக்கதையாக இருந்தாலும் குழந்தைகளின் உளவியலை அறிந்து அவர்களை ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இருப்பதும் நல்லது.  பல தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களையும்
பார்க்கமுடிந்தது. அதுபோல சில புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் அடுத்தடுத்தாக சேர்ந்தும் கூட வந்திருப்பதைப் பார்த்தேன்.

இன்னொரு முக்கியமான அம்சம் அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியம்
கவனத்தைக் கவரும் வகையிலும் அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் ஓவியங்களும் கற்பனையைத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
ஓவியத்தோடு கதையை வாசிக்கும் பிள்ளைகளுக்கு அவை  மன எழுச்சியை தரவேண்டும்.

இனி இந்தப் புத்தகங்களை வார இறுதியில் தமிழ்வகுப்புகளில் வாசிக்கத் தொடங்க வேண்டும். வழக்கம்போல் ஆசிரியர் கதைகளை வாசித்து காட்டுவதை விடுத்து பிள்ளைகள் தன்னிச்சையாக கதையை வாசிக்கவும், அதை மற்றவர்களிடம் பகிரும் பழக்கத்தையும் ஊக்குவிக்கவும் ஒரு யோசனை செய்திருக்கிறேன்.

அதன்படி இனி வரும் நாட்களில்  ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு
செய்யப்பட்டவரே அடுத்த வாரத்தின்  "கதைச்சொல்லி". அவரிடம் மேற்ச்சொன்ன ஓர் எளிய தமிழ் சிறுவர் சிறுகதைப் புத்தகத்தைக் கொடுத்துவிடலாம்.   அவர் அந்தக் கதையை வீட்டில் வாசித்து முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு வரும் வாரத்தில் மற்ற பிள்ளைகளுடன் பகிரட்டும்.

இப்படிச் செய்வதால் பிள்ளைகளுக்கு தமிழில் சொந்தமாக வாசிக்கும்
பழக்கம் மேம்படுவதுடன் மற்றவர்களுக்கு ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டுவதால் குழுவுடன் புரிந்துணர்வு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக
மற்றவர்களுடைய கைத்தட்டல்களும், பாராட்டுகளும் அவர்களை உற்சாகப்படுத்தி தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
முயற்சி செய்து பார்ப்போம்.


No comments:

Post a Comment