Monday, March 11, 2019

தமிழ் எழுத்துலகும் குழுக்களும்

பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்,  முற்போக்கு இலக்கிய இயக்கம், திராவிட எழுத்தாளர் குழுமம் என்றெல்லாம் பிரிந்து இங்கே தனித்தனிக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குழுக்களுக்கென சிற்றிதழ்கள், தனித் தனியான முறைமைகள்,
வாசகர் வட்டங்கள் உண்டு. அவர்கள் தங்களுக்குள்
அடிக்கடி உரசிக் கொளவார்கள், வேண்டியவர்களை உயர்த்திப்பிடிப்பார்கள்,
சிலரைக் கைதூக்கி விடுவார்கள், தங்களுக்குள் விருது கொடுத்துக் கொள்வார்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஆனால்,  மேலே சொன்ன எந்தப்பிரிவிலும் சாராத படைப்பாளர் கூட்டம் ஒன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இணையம் பெருத்து சமூகவளைதளங்களின் கைஓங்கியிருக்கும் இந்த நாட்களில் அவர்களின்
எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன்.
அரசியல் பின்புலம் எதுவுமின்றி  தங்கள் அனுபவத்தோடு தமிழையும், படைப்பாற்றலையும் மட்டும் நம்பி அவர்கள்  வாசகர்களை நேரடியாக
சந்திக்கிறார்கள். "நான் இலக்கியவாதிகளுக்காக எழுதவில்லை , வாசகர்களுக்காக எழுதுகிறேன்" எனும் கோசத்துடன் களமிரங்கி இருக்கும் இவர்களில் பலருடைய எழுத்து கவனிக்கத்தக்கது.

இதில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் படைப்புகளைத் தாங்களே பதிப்பித்து அச்சில் கொண்டுவருகிறார்கள். சிலர் நேரடியாக அமெசானின் கிண்டில் போன்ற மின்னணு ஊடகங்களை நாடுகிறார்கள். படைப்புகளை வெளியிட்ட கையோடு அதற்கான மார்கெட்டிங் வேலையையும் கையில் எடுத்துக்கொள்ளும் இவர்கள் சமூக ஊடகங்களில் தொய்வின்றி தீவிரமாக
செயல்படுகிறார்கள்.

இன்டிபெண்டன்ட் ஆத்தர்ஸ் (Independent Authors ) என ஆங்கிலத்தில் சொல்வதுபோல எந்தக் குழுவையும் சாராமல் சுயாதீனமாக செயல்படும்
இவர்களுடைய எண்ணிக்கை  அதிகரித்து வருவதை ஆரோக்கியமானதாக நினைக்கிறேன். இவர்கள் இலக்கிய வட்டங்களின்
மைய அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தாலும் இவர்களுடைய படைப்புகளை நாம் புறந்தள்ளவேண்டியதில்லை.  மாறாக
இவர்களுடைய எண்ணிக்கை வரும்நாட்களில் இன்னமும் கணிசமாக உயர்ந்து தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுப்பார்கள் என நம்புகிறேன்.

1 comment: