Tuesday, April 16, 2019

நாடாளுமன்ற தேர்தல் - 1989 vs 2019

எங்கள் தொகுதி திருவாரூர். நாகை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும்.  நினைவு தெரிந்தவரை அது மாறி மாறி வலது இடது என தொடர்ச்சியாக கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையாகவே இருந்து வந்தது.  அதனால் தேர்தலின் பேதெல்லாம் ஓட்டு "அருவா சுத்திக்கா ?, கதிர் அறுவாளுக்கா ?" என்பதே  பிரதான பேச்சாக இருக்கும். தேர்தல் வருகிறதென்றாலே ஊர் அமர்களப்பட்டுவிடும்.  திருவிழா போல கட்சிக்காரர்கள்  கோலாகலமாக கொண்டாடத் தயாராகிவிடுவார்கள். தேர்தலுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே போட்டிபோட்டு எல்லா தெருச் சுவர்களையும் வளைத்து பிடித்து வெள்ளையடித்து முன்பதிவு செய்வது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஜரூராக களத்தில் இறங்கிவிடுவார்கள். அப்போது சுவர் விளம்பங்களில்  "நாகை நாடாளுமன்ற தொகுதி (தனி)" என்றெல்லாம் எழுதுவார்கள்.  தனித் தொகுதி என்றால்  என்ன எனும் புரிதல் கூட இல்லாத நாட்கள் அவை.

அன்று மக்களிடம் பிரச்சனையைக் கொண்டு செல்ல இன்றுபோல டீவிக்களோ, செல்போன்களோ இல்லாத கால கட்டம். டிவி என்றால்
அரசாங்கத்தின் தூர்தசன் தவிர வேறில்லை. கட்சிகள் பொதுக்கூட்டங்கள், நாளேடுகள், ரேடியோக்கள், சுவர் விளம்பரங்கள், பிட் நோட்டிசுகள், தெருமுனை பிரச்சாரங்களின் வழியாகவே மக்களை நேரடியாக சந்தித்தனர்.

அது தொடர்பான ஒரு சம்பவம் (இதில் அரசியல் எதுவும் இல்லை).  அது 1989 நாடாளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அப்போது தேசிய அளவில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், விடுதலைப் புலிகள்-அமைதி படை என மக்கள் அதிருப்தி அடைந்து தேர்தல்களம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்த காலகட்டம்.  அப்போது போபர்ஸ் ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல எதிர்கட்சிகள் ஒரு நூதன யுத்தியைக் கையாண்டனர்.

அவர்கள் செய்தது இதுதான். ஒரு சிறிய பனைமரத்தை வெட்டி பக்கவாட்டில் சற்று சாய்வாக நிறுத்தி இரண்டு புறத்திலும் கார் டயரை சக்கரம் போல வைத்து பக்காவாக பீரங்கியைப் போல செய்துவிட்டார்கள். அங்கே
அட்டகாசமாக ராஜூவின் போபர்ஸ் பீரங்கி தயார்.  அதை நகரின் முக்கிய வீதிகளிலும் தெரு முனைகளிலும் மக்கள் கண்களில் நன்றாக படும் வகையில் கொஞ்சம் உயரமாக பரண் அமைத்து நிறுத்தி வைத்துவிட்டார்கள். அப்படி விரைத்தபடி நின்றிருந்த அந்த பீரங்கிக் குழலின் முனையில் துணி சுற்றி எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் படி கொளுத்தியும் விட்டிருந்தார்கள்.  நாள் முழுக்க மக்கள் கண்களை உறுத்தும்படி தெருமுனையில் அன்று போபர்ஸ் பீரங்கி ஊழல் புகைந்துகொண்டிருந்தது.

அன்று  இப்படி தான் தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் 
தேர்தல் களத்தில் மக்களை அப்படித்தான் சந்தித்து சிந்திக்க வைக்க வேண்டியிருந்தது. இன்று காட்கள் மாறிவிட்டன.

இணையம், சமூக வலைதளங்கள், காணோலிகள், பல நூறு டிவிகள் என இன்றைய தொழி நுட்ப வளர்ச்சியால் ஒற்றைச் சொடுக்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை எளிதாக சென்று சேர்ந்துவிட முடிகிறது. அதனால்  இன்று எதிர்கட்சிகளும் ஊடகங்களும்  மத்திய, மாநில பிரச்சனைகளை, ஊழல் விவகாரங்களை மக்களுக்கு தொடர்ந்து எளிதாக கொண்டு சொல்ல முடிகிறது. மக்கள் மறந்தாலும் அவர்களால் பல பிரச்சனைகளைத் தொடர் விளம்பரங்கள் செய்து நினைவூட்டமுடிகிறது.

இன்று எப்படிதான்  அரசியல் கட்சிகள் எந்தமாதிரியான நூதன யுத்திகளைக் கையாண்டாலும் இறுதியில் ஓட்டு என்பதும் அதன் மூழம் வெற்றி,
ஆட்சியமைப்பது என்பதும் மக்கள் கையில் இல்லை விரலில்தான் இருக்கிறது.  மக்கள் மெளன புன்னகையோடு அரசியல் கட்சிகளின் இந்தக் கலாட்டாக்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த மெளனப் புன்னகையின் உண்மையான அர்த்தத்தை தேர்தல் முடிவு வந்தபின்பே நம்மால் சொல்ல முடியும். காத்திருப்போம்.

1 comment: