Saturday, August 10, 2019

தமிழில் மெய்யியல் கொள்கைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -3)

முந்தைய பதிவு.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளைப் பார்ப்பதற்கு முன்பு சில தகவல்கள்.

மாநாட்டிற்கென உலகம் முழுவதிலும் இருந்து பல
பல்கலைக்கழகங்கள், தமிழ்ஆர்வலர்கள் என பலநூறு ஆய்வுக்கட்டுரைகள் வந்ததாக சொன்னார்கள்.

அதன்படி, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்." எனும் கருப்பொருளில் "ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக் கட்டுரைகளையும்" (RESEARCH PAPER)
கேட்டிருந்தார்கள். அப்படி வந்த பலநூறு கட்டுரைகளில் தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரை ஆசிரியர்களுக்கு மட்டுமே சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாம். அதுபோல தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரைகளை "ஆய்வுக்கட்டுரைகள்-வரைவு " எனும் தலைப்பில் ஆய்வரங்க கையேட்டில்
வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி அந்தக் கட்டுரைகளைத் தேர்வுசெய்தார்கள் ?, எதன் அடிப்படையில்? அதன் வெளிப்படைத் தன்மை என்ன? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.  மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் மன்றத்தை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

இங்கே சூலை 6,7-ம் தேதிகளுக்கான நிகழ்ச்சி நிரலின் இணையதளமுகவரியைத் தருகிறேன். https://www.icsts10.org/wp-content/uploads/2019/06/World_Tamil_Conference_Schedule.pdf

கூடவே சூலை-6, சனிக்கிழமை அன்று மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கட்டுரைகளை இங்கே  படங்களாகவும் இணைத்திருக்கிறேன். (ஆய்வரங்க கையேட்டில் இருந்து)



அன்று நான் ஆர்வமாக கலந்து கொள்ள நினைத்த பல நிகழ்வுகள் இணை அமர்வாக இருந்ததால்  1. "Evolution of the Tamil Script : An Archaeological Perspective"2. " ஆசீவகம் என்னும் அறிவியல்" என இரண்டு அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.


ஆய்வரங்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் சில:

ஒவ்வொரு  அமர்விலும் ஆய்வாளருக்கு குறிப்பிட்ட காலகெடு வழங்கப்படுகிறது.  அந்த காலகெடுவுக்குள் அவர் தனது ஆய்வை
முன்வைத்து பேசியபின்,  அமர்வின் தலைவர் அதில் திருத்தங்கள் இருந்தால் சொல்கிறார்.
சமயங்களில் அதுதொடர்பான சில கேள்விகளையும் எழுப்புகிறார். இறுதியாக பார்வையாளர்களும் தங்கள் கேள்விகளை  ஆய்வாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பி விளக்கம் பெறலாம்.

உண்மையில் அவசரகதியில் என்னால் மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளையும் கூட ஆழமாக கருத்தூன்றி முழுமையாக கவனிக்க இயலவில்லை. மேலோட்டமாக எடுத்த எனது  குறிப்பில் இருந்து சில தகவல்கள்:


திருக்குறளைத் தொடக்கத்தில் "முப்பால்" என்றே அழைத்தார்கள். குறள் குறித்து எழுதப்பட்ட  "திருவள்ளுவ மாலை " எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு (50 பாடல்கள்) ஆகும்.  இப்படி ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ  எல்லாப் புலவர்களும் முதலில் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.

மொழிக்கலப்பு- சங்க இலக்கியத்தில் வட சொற்கள் 2% மும்,  திருவாசகத்தில் 8% மும்  கலந்திருக்கின்றன.  அவை தமிழில் இருந்து அங்கே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறதாம்.

ஆசீவகம் என்பது ஒரு தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கத்தையும் குறிக்கிறது. அதைப் பின்பற்றுபவர்களை ஆசீவகர்கள் என்கிறார்கள். தமிழ் மெய்யியல் கோட்பாடு- கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ கோட்பாடு அதன் பகுப்பாய்வு போன்ற தரவுகளும் பேசப்பட்டன.




மேலே உள்ள நிகழ்ச்சி நிரல்படி சனிக் கிழமை அன்று மட்டும் மொத்தமாக  32(15+17) கட்டுரைகள் அறிமுகமாகி இருக்கின்றன.  அன்று பல அமர்வுகளில் திருக்குறள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டாலும், இணை அமர்வு எனும் தொல்லையால் என்னால் ஓர் அமர்வில் கூட முழுமையாகக் கலந்துகொள்ள இயலவில்லை எனும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தமிழ்மன்றம் இந்த நிகழ்வுகளை காணோளி மூலமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அவை  அனைவருக்கும் பயன்படும் வகையில்  கூடிய விரைவில் பொதுவில் பகிர்வார்கள் என நம்புவோம்.

1 comment: