Friday, February 28, 2020

வனநாயகன் குறித்து-14 (ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன் (மலேசிய நாட்கள்)"  குறித்து  ஃபிளாரிடா வாசகர் மருத்துவர் உதயகுமார் அவர்கள் முகநூலில்  எழுதியது.  நன்றி  உதயகுமார் !!

**************************
ஆரூர் பாஸ்கரின் “வனநாயகன்-மலேசிய நாட்கள்“ வாசித்து முடித்துவிட்டேன். ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி இன்னமும் என் மனதில் வழிந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைவுகளோடு எனது வாசக அனுபவத்தைப் பகிர்கிறேன்.

மழையில் நனைந்த சாலை சற்று நேரத்தில் காய்ந்து மிகப் பிரகாசமாகத் துடைத்து எடுத்தது போல மாறிவிடும். அதுபோல, திரைக்கதை போல நகரும் ஆரூர் பாஸ்கரின் நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் புத்தம் புது காட்சிகளோடு மிக அழகாக நம் கண்முன்னால் விரிகிறது. 

எடுத்த உடனேயே இது ஒரு கம்பியூட்டர் யுகக் கதை, நிச்சயம் ஓயிட் காலர் கிரைம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பிறகு ஐடி-யும் வங்கிகளும் வருவதால் இது வர்த்தகக் கதையோ இல்லை இது காதல் கதையாககூட இருக்குமோ என்றெல்லாம் கூட மூளை ஆரம்பத்தில் விவாதிக்கிறது. பிறகு கதையோட்டம் நமக்குப் பிடிபடுகிறது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் ? அதுவும் தன் சுய நலத்திற்காக ? என்பதை அறியும் போது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை. இப்போதைய நிலைமை. கதையினூடே மலேசியாவில் கை நிறையச் சம்பாதிக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படிப் போய்க் கொண்டிருந்தது என்பதையும் ஆசிரியர் அழகாகச் சொல்லிவிடுகிறார். அதுபோல இந்திய வம்சாவளியில் பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே மலேசியா வந்துவிட்ட சீக்கியர்களின் சந்ததியரான டிரைவர் சிங் மறக்கமுடியாத மனிதராக இருக்கிறார்.

வனநாயகனில் நாயகனாக சுதா மட்டும் வரவில்லை நடு நடுவே (எழுத்தாளர்) சுஜாதாவும் வருகிறார். நம் மூளையைத் திறந்து கதையை உள்ளே போடுவதிலும் சுஜாதா மாதிரிதான் ஆரூர் பாஸ்கர் வல்லவராக இருக்கிறார். அதோடு அந்தக்

காலத்திலேயே மலேசியா போன தமிழர்கள் பலர் இன்னமும் பழமை மாறாமல் திண்ணையில் அமர்ந்து பெரிய பைண்டிங் செய்த அக்கவுண்ட் புத்தகங்களைச் சிறு மேஜைகளின்மேல் வைத்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்கிறார்கள், லாபத்தைப் பற்றி கவலைப் படாமல் மலிவான விலையில் சுவையான நல்ல இட்லி சாம்பார் விற்கிறார்கள் என்பது போன்ற பல சுவையான விவரங்களை நான் அறிந்துகொண்டேன்.

அதுபோல, நல்ல கதை வாசித்த அனுபவத்தோடு மலேசியாவில் பார்க்கவேண்டிய இடங்களை ஆர அமர சுற்றிப்பார்த்த அனுபவமும் நாவலை வாசித்த போது கிடைத்தது. மலேசியா போக எண்ணுபவர்கள், அங்கு என்ன என்ன பார்க்கவேண்டும் என அறிய விரும்புபவர்கள் இந்த நாவலை ஒரு வழிகாட்டியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக வனநாயகனாக சித்தரிக்கப்படும் ஒராங்குட்டான் குரங்கின் பிறப்பிடமும் அதன் வாழ்விடங்களும் தற்போது எப்படியெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு புரியுமாறு கதையோடு பிணைந்து வழங்கியதும் சிறப்பு.
கதையில் மலேசியத் தமிழ்ப்பெணணாக அறிமுகமாகும் பத்மா வாசிப்பவர்களின் மனதைவிட்டு இறங்க மறுக்கிறாள். அதற்கு அவளுடைய குடும்பச் சூழல் மட்டுமல்ல, அவள் சுதாவிடம் காட்டும் அன்பும் அக்கறையும் நம்மை அவளுக்காக யாரிடமும் வாதாடச் சொல்கிறது. நாவலின் முடிவு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

மிக அருமையான கதையமைப்பு, நெஞ்சைத்தொடும் பாத்திரங்கள் என வனநாயகனில் ஆரூர் பாஸ்கர் வாசகர்களுக்கு ஓர் அறுஞ்சுவை விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தின் சுவை என்றும் நாவிலும் மனதிலும் தொக்கி நிற்கும் திருப்தியோடு நாவலை வாசித்து முடித்துவிட்டு கீழே வைத்தேன். வாழ்த்துகள் !

அன்புடன்,
உதயகுமார்


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

Wednesday, February 26, 2020

தமிழ்ச்சரம் - ஓர் எதிர்நீச்சல்

பல ஆண்டுகளாக தமிழில் ஒரு வலைத்திரட்டி  இருந்தது. பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தத் தளம்  செயல்பட்டுக் கொண்டிருந்தவரையில் பெரிய பிரச்சனைகள் இல்லை , அனைவரும் தமிழ் வலைத்தளங்களை வாசிப்பதற்கு என இணையத்தில் ஓர் இடம் இருந்தது. அது கடந்த சில மாதங்களுக்கு முன் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட பின், வலைத்தள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே இருந்த ஒரு நல்ல தொடர்பு அறுபட்டு விட்டது என்று கூட சொல்லாம். அதனால், பல வலைத்தளங்களின் வருகைகள் (ஹிட்ஸ்) வெகுவாகக் குறைந்தன. உற்சாகம் இழந்த சிலர் வலைதளங்களில் இருந்து வெளியேறியதும் கூட  நடந்தது.

அந்த நிலையில் தான் நியூயார்க் நண்பர் ஆல்பி முதன் முதலாக என்னைத் தொடர்புகொண்டு தமிழில் நல்ல வலைத்திரட்டிக்கான தேவையை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார் (நன்றி நண்பரே). பிறகு தமிழ்நாடு, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் என்னிடம் இதுபற்றி பேசினார்கள். அதன் தொடர்ச்சியாகவே, தமிழில் வலைத்திரட்டி ஒன்றை நிறுவும் பணியைக் கையில் எடுத்தேன். இணையதளம் என்றதும் அது ஏதோ காமா சோமா என்றில்லாமல் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் சிறந்ததாக வரவேண்டும் எனத் திட்டமிட்டு ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களைத் தேடிப்பிடித்தேன். அப்படிக் கிடைத்தவர்தான் ராஜா.

கடந்த 6 மாதங்களாக நடந்து முடிந்த இந்த வேலையில் பல சவால்கள்.  ஆமாம்,  ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்குஅனுபவங்கள்.  பணத்தை விடுங்கள்.அது பெரிய பிரச்சனை இல்லை. எத்தனை இடர்பாடுகள். வேலைசெய்த ஆட்கள் !? மனிதர்கள் எத்தனை விதமாக இருக்கிறார்கள் ?.  நியூஜெர்சியில் இருந்து தளவடிவமைப்புச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அலுவலக நெருக்கடி காரணமாக திடீரென பாதியில் விலகிவிட்டார். பிறகு, வேறு ஆட்களைத் தேட வேண்டியதாகி விட்டது.  சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரையில் இருந்து  வெப்-டிசைனர் என நண்பரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நபர் 12  இமெயில்களில் முன்னும் பின்னுமாக கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டார். இறுதியாக, தமிழ் ஃபான்ட் எழுதி பழக்கமில்லை எனச் சொன்ன அந்த  நபர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. அத்தோடு தொடர்பு நின்று விட்டது.

ஒன்று மட்டும் உறுதி.  நம்மூர் ஆட்களில் பலருக்கு இதுபோல முடியாது ஒத்துவராது, ஆர்வமில்லை ( How to say No) போன்ற விசயங்களைச் சொல்ல கற்றுத்தர வேண்டும் போலிருக்கிறது. பிறகு, ஒருவழியாக அந்த வேலையைக் கல்கத்தாவில் இருந்து தொடர்புகொண்ட ஒரு பெங்காலி பெண்னை வைத்து செய்து முடித்தோம்.

நான் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். எத்தனையோ கோடி மதிப்புமுள்ள பணிகளை ஆட்களை வைத்து கச்சிதமாக செய்து முடித்திருக்கிறேன். ஆனால், ஒரே வித்தியாசம்
சொல்லி வைத்தாற் போல அவை எல்லாம்  அலுவலகத்திற்காக செய்த புராஜெக்ட்கள்.  அனைவரும் முழுநேர பணியாளர்கள்.

சொந்த வேலை, பகுதிநேர ஊதியம் என்று வரும்போது !? அட, இப்படியும் மனிதர்களா என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்கள். நல்லவேளையாக எனது இந்தப் பயணத்தில் நண்பர் ராஜா (நீச்சல்காரன்)  கடைசிவரைத் துணையிருந்தார். தளத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அவர்தான் பார்த்துக்கொண்டார். இணையதள பயன்பாடுகளில் நல்ல அனுபவம் உள்ளவர். தமிழில் வாணி எனும் பிழைதிருத்தியைக் கூட சொந்தமாக எழுதியிருக்கிறார்.  (அதற்காக, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய "கணிமை விருது" பெற்றவர்). 

இதோ, பல சவால்களைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு கடந்த வாரம் அறிமுகமான தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com)  நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி.
இதுவரைத் தளத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி. அமெரிக்காவில் இருந்து அர்ஜூன் தொழில்நுட்ப உதவி செய்தார். சென்னை நண்பர் அரவிந்த் விளம்பர பேனர் வடிவமைப்பில் உதவினார். அதுபோல, தொடக்கத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தருவது, டெஸ்டிங் எனும் சோதனை ஒட்டத்தில் பங்கெடுப்பது என உலகின் பல மூலைகளில் இருந்து ஆர்வத்தோடு பங்கெடுத்த
நெருங்கிய நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து அன்பர்கள் 'திண்டுக்கல்'- தனபாலன், சரவணன் போன்றவர்களுக்கு நன்றி !

கட்டணமில்லாத சேவையாக அறிமுகமாகி இருக்கும் இந்தத் தளம் உலகத்தமிழர்களின் தரமான பதிவுகள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், ஆழமான விவாதங்கள் வழியாக  தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாறும் கருத்துமேடையாக இருக்கும், இருக்கவேண்டும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

                                                   ****************

Sunday, February 23, 2020

உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்

ஓராங் ஊத்தான்/ஒராங்குட்டான் (Orangutan)  குரங்கு ஒருவனுக்கு கைகொடுப்பதுபோல் உள்ள இந்தப் புகைப்படம் உலக கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்  "போர்னியோ" தீவு பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு.  எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.

மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது.  மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான  ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும்  ஒரு ஒராங்குட்டான் குரங்கே.

மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக,  மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம்.  அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த  ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.

இப்படிச் சேற்றில் சிக்கிய  மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து  இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர்  'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'.  'மனிதன் மறந்த கருணையை இன்னமும்  குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள்  குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல  அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.

இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில்  பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?


Sunday, February 16, 2020

இர்மா (அந்தஆறுநாட்கள்) -நூல் வெளியீடு

கடந்த மாதம் (ஜனவரி-18, சனிக்கிழமை) மத்திய ஃபிளாரிடா முத்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்வில் எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" புதினம் (நாவல்),  திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுடைய சிறப்பான அறிமுகத்துடன்   வெளியிடப்பட்டது.

தாம்பா தமிழ் ஸ்நேகம் தேவா அன்பு வெளியிட, அர்லாண்டா தமிழ்ச்சங்க முன்னோடிகளான மருத்துவர் திரு சம்பத் சண்முகம், வெண்- வீராசாமி பெற்றுக்கொண்டனர்.

வாழ்த்திப் பேசிய மருத்துவர் சம்பத், தனது கல்லூரி நாட்களில் கோவையில் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். அடுத்துப்



பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில்  சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

இறுதியாக, நான் அனைவருக்கும் நன்றி சொல்லி பேசினேன். நிகழ்ச்சி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாட்டிக்கொண்டதால் என்னால் சவகாசமாக பேச இயலவில்லை. அதிகபட்சம் 2-3 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன்.
ஆனால், யோசித்து வைத்திருந்த விசயங்களைப் பிசிரில்லாமல் பேசினேன் என்றுதான் நினைக்கிறேன். 

இந்தச் சிறிய விழா பார்வையாளர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் தான், மேடையை விட்டு இறங்கியபின் பலர் தனிப்பட்ட முறையில் சந்தித்து சுய அறிமுகம் செய்து கொண்டு அன்பு பாராட்டிச்  சென்றனர் என கற்பிதம் செய்துகொள்கிறேன்.

இப்படிச் சந்திக்கும் முகம் அறியா தமிழ் நெஞ்சங்களின் கண்களில் கசியும் அன்பு நம்மை மேலும் உற்சாகப்படுத்தி இயங்கச் செய்கிறது.

#இர்மா_அந்தஆறுநாட்கள்

Thursday, February 13, 2020

தமிழ் வலைத்திரட்டி

தமிழில் சமூக வலைதளம் தாண்டிய எழுத்துகளைச் சரியாக முறையில்
திரட்டி ஒருங்கிணைக்கும் தேவை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  அதன் ஒரு முயற்சியாக பிரத்தியோக இணையதளம் ஒன்றை இதற்கென
நிறுவ இருக்கிறோம். 

இதற்காக கடந்த 4-5 மாதங்களாக ஒத்த ஆர்வமுள்ள அன்பர்கள் சிலருடன்
நான் இணைந்து பயணிக்கிறேன். பொதுவாக,  முகநூல் தாண்டிய எழுத்துகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வலைப்பூக்கள் எனும் பிளாக்-களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து,
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள். தென் அமெரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற தெரிந்த பிரபல நாடுகளைத் தாண்டி வியட்நாம், அந்தமான் போன்ற குட்டி குட்டி நாடுகளில் இருந்தெல்லாம் தமிழில் பதிவுகளை எழுதுகிறார்கள். அதுவும் காமோ சோமா என்றில்லாமல் பலர் நல்ல உள்ளடக்கத்தோடு எழுதி 'அடடே' எனச் சொல்ல வைக்கிறார்கள். நான் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விசயம் பதிவுகளின் நேர்த்தி (எல்லா பதிவுகளும் அல்ல). ஒரு பயணக்குறிப்பாக இருந்தாலும் கூட பொருத்தமான படங்களை, காணொலிகளை மிகச் சரியான இடத்தில் பொருத்தி, பத்தி பிரித்து தேவைப்பட்டால் வண்ண பாண்டுகளைப் பயன்படுத்தி
மிகவும் அழகாக எழுதுகிறார்கள். இப்படி  எழுதுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதும் ஆச்சர்யமில்லை.

இதுபோன்ற தளங்களில் நான் கண்ட இன்னோரு சிறப்பு. 'வெரைட்டி' எனும் பல்சுவை. "செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் என்ன ? " "திருநீற்றின் மகிமை" போன்ற ஆன்மிக பிரியர்களுக்கான பதிவுகள். "அருமையான தம் பிரியாணி வீட்டில் செய்வது எப்படி ?" என்பது மாதிரியான சமையல் குறிப்புகள். "ஈழப்போர் - இறுதி நாட்களின் இரகசியங்கள் படங்களோடு" என்பது மாதிரியான வெகுஜன ஊடகங்களில் கிடைக்காத தகவல்கள். கூடவே "பங்குச்சந்தையில் முதலீடு  செய்ய சரியான நேரம் எது ?" என்பது மாதிரியான பல வணிக செய்திகள். அதுபோல,  அரசியல், தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பல பதிவுகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே. "போர்ப்ஸ் பட்டியலில் நடிகை சாய்பல்லவி".  "அஞ்சலியை சுவரொட்டியில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது" (பார்த்தவுடன் !!? :) என்பது மாதிரியான இளமை துள்ளல்களையும் பார்க்க முடிகிறது.  

தளம் குறித்த மேலதிக விவரங்களை விரைவில் பகிர்கிறேன்.