Saturday, February 26, 2022

அறத்துக்கு அப்பால் - முனைவர் மதிப்பிரியா

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்... நூல் குறித்து முனைவர் மதிப்பிரியா முகநூலில் எழுதியது. நன்றி மதிப்பிரியா!.

//புத்தகம் என்னை ஒரு விருவிறுப்பான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தூண்டியது . அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்று பணத்தை இழந்தது ... "எவ்வளவு பெரிய ஆளுமைகள்... இவர்கள் கூட இப்படி இருப்பார்களா? " என்று நீங்கள் கூறிய பல சம்பவங்களும் சற்றே அச்சமூட்டியது.

இணையத்தால் இழந்த நிம்மதிகளை சுட்டிக்காட்டியது, கேரள சம்பவமும் பிரியாவின் அமைதியும். முகநூல் முடக்கப்பட்டால் மனதளவில் எவ்வளவு பாதிப்பு என்பதை உணர்த்தியது மருத்துவர் சிவனின் அனுபவம். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முதல் அரசியல் கட்சிகளின் ஐ.டி விங் வரை... அட இணையத்துல இதெல்லாம் சாதாரணமப்பா.. என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.


ஜல்லிக்கட்டு... ஸ்டெர்லைட்.. என்று சில மறக்க இயலா.. சம்பவங்களை சுட்டி காட்டியதில் ஆய்வு நோக்கு. நிறம் குறித்த உங்களின் பார்வை அழகு . இணையத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூறி அதனை அவர்கள் கையாண்ட விதத்தையும் கூறும் போது ஒரு நல்ல நண்பரின் உடனிருப்பை உணர்ந்தேன். உங்களால் ஹேமா ஜெய், சங்கீதா வெங்கடேஷ், கலைமணி, கோசி ஜோசப், ஆசிரியர் உமா போன்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இணையத்தை நல்ல வழியில் பயன்படுத்தி வெற்றிகண்ட என் அன்பு சகோதரி தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி அவர்களை குறிப்பிட்டதில் பெருமிதம். அதே இணையத்தால் உங்களின் (ஆரூர் பாஸ்கர்)நட்பும்.. அட்டை படத்திற்கு சிறப்பாக ஓவியம் தீட்டியது டிராட்ஸ்கி மருது என்ற கணிப்பிற்கு உங்கள் (ஆரூர் பாஸ்கர்) புத்தகங்கள் பரிசாக கிடைத்ததையும் சேர்த்து கொள்ளலாம்.

மொத்தத்தில் இணையம் விரித்திருக்கும் மாயவலையில் சிக்காமல் நீந்த கற்றுத் தருகிறது இந்த புத்தகம்.

//

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை– யூ-டியுபில் கனிஸ்கர்

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை புத்தகம் குறித்து யூடியூப் அன்பர் கனிஸ்கஸ்கரின் பார்வை..


இணைப்பு https://youtu.be/UUZ7MAnr6ao

சமயங்களில் நாம் யாருக்காக எழுதுகிறோம். ஏன் எழுதுகிறோம். எதற்காக இயங்குகிறோம் என்றெல்லாம் தோன்றும் சமயங்களில் இதுபோன்ற முன் அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து வரும் பாராட்டு நம்மைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கச் செய்கிறது. ஆர்வத்துடன் உள்பெட்டியில் இதைப் பகிர்ந்த கனிஸ்கருக்கு நன்றி !

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இணைப்புசோஷியல் மீடியா

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை– ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை குறித்து திருவாரூர் சரவணன்...

 //

மூளையின் திறனில் 1 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மற்றதெல்லாம் துருப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று எனக்கு தெரியாது.

ஆனால் இருக்கும் வாய்ப்புகளில் 1 சதவீதமாவது பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம் எனக்கு. சமூக ஊடகங்களில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

ஆத்தி... எப்படி எல்லாம் யோசிச்சு ஏமாத்த கிளம்பியிருக்காங்கய்யா... என்ற வடிவேலுவின் வசனத்தை அறிந்திருக்கலாம். சமூக ஊடங்களில் எப்படி எல்லாம் ஏமாற்ற கிளம்பியிருக்கிறார்கள் என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

வாழைமரம், அலங்கார மின்விளக்குகள், வழவழ தரை, பிரமிக்க வைக்கும் உள் அலங்காரம் என்று பளபளப்புடன் இருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருப்போம். அந்த அழகைத் தவிர வேறு எதுவும் நம் கண்களுக்கு தெரியாது.

ஆனால் இடம் வாங்க அலைந்தது முதல், பூமிபூஜை, கடைக்கால், பேஸ்மெண்ட், லிண்டல், ரூஃப், ஃபர்னிஷிங், வயரிங், பெயிண்டிங், ஃபினிஷிங் என்று ஒவ்வொரு கட்டமும் பெரும்பாலும் வீட்டைக் கட்டியவருக்குதான் தெரியும்.

ஒரு 'கிளிக்'-கில் ஒளிப்படம், அடுத்த 'கிளிக்'-கில் ஒளிப்படம் தேர்வு, அதற்கடுத்த 'கிளிக்'-கில் உலகெங்கும் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் ஏதேனும் ஒரு தளத்தில் பகிர்வு.

இதை மட்டும் அறிந்தவர்களுக்கு இணையத்தின் தோற்றம், ஒவ்வொரு கட்டமாக வளர்ந்த விதம் அனைத்தையும் எளிமையாக, சுருக்கமாக, விளக்கமாக இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

நாயகன் படத்தில் வேலுநாயக்கர் முதன் முதலில் யாரை இல்லாமல் செய்தாரோ, அவரது முழு மன வளர்ச்சி இல்லாத மகன்தான் முடிவுரை எழுதுவான்.

அதைப் போல் நீங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பதிவு செய்த எழுத்து அல்லது படம் பிற்காலத்தில் பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்தக்கூடும் என்று இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.


நீங்கள் தினமும் சென்று வரும் சாலைதான். ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வழியில் உள்ள வேகத்தடைகள், பள்ளங்கள் உங்களை கவிழ்க்காமல் விட்டிருக்கும். என்றாவது ஒருநாள் அதில் சிக்கி பெரிய பாதிப்பில் சிக்கிய பிறகுதான் அடடா... இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவோம்.

நீங்கள் தினமும் பலமணி நேரம் சோஷியல் மீடியாவில் செயல்படுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் கவனிக்காத ஏகப்பட்ட ஏரியாக்களைப் பற்றி இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

முழுவதும் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி படிப்பது ஆர்வத்தை தூண்டும். ஆனால் நாம் புழங்கும் இடத்தில் நாம் கவனிக்காத அதாவது நம் வீட்டிலேயே இன்னென்ன இருக்கிறது என்று மூன்றாம் நபர் சுட்டிக் காட்டுவதைப் போல் சோஷியல் மீடியா பற்றி பல தகவல்களை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.

ஆரூர் பாஸ்கர் எழுதிய 'சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை' புத்தகத்தை நான் படித்த பிறகு எனக்கு தோன்றிய விஷயங்களைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

//

ஜீரோடிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக காட்சியில் கிடைக்கும்.

Thursday, February 17, 2022

இர்மா-அருமையான படைப்பு

எனது இர்மா நாவல் குறித்து முகநூல் நண்பர் சுதா ரவி அவர்கள் சென்னையில் இருந்து எழுதியது. நன்றி சுதா !

//

 இர்மா – ஆரூர் பாஸ்கர்

இயற்கை பேரழிவின் கோர தாண்டவத்தை, அந்த ஆறு நாட்களை அதிலிருந்து அனுபவிப்போரின் மன நிலையிலிருந்து மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆசிரியர் சொல்லும் சம்பவங்களை கதையாக இல்லாமல் நம்மை அங்கிருக்கும் சூழலை உணர வைத்திருக்கிறார். ஒரு பேரிடர் வரும் போது மனித மனங்களில் எழும் அழுத்தமும், பயமும், பல விதமான உணர்வுகளையும் பரணியின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
ப்ளோரிடா மாகாணத்தை அடிக்கடி தாக்கும் சூறாவளியின் தாக்கங்களையும், முன்னேற்பாடுகளையும் மக்களின் மனதில் எழும் பயத்தையும் ஒவ்வொரு சம்பவத்தின் மூலம் காட்டி இருக்கிறார்.
இர்மா கேட்டகரி ஐந்து என்று சொல்லப்பட்டு, பல விதமான செய்திகளை தாங்கிக் கொண்டு ப்ளோரிடாவில் இருக்கும் மக்களை பரபரப்படைய செய்து மெல்ல நகர ஆரம்பிக்கிறது. பரணி தன் குடும்பத்துடன் வாழும் இளைஞன். முதலில் சாதரணமாக எடுத்துக் கொண்டவர்கள் எல்லாம் நேரமாக ஆக இர்மாவின் தீவிரத்தை அறிந்து தங்களது பாதுக்காப்பை நாடி வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவெடுக்கிறார்கள்.



பரணியும், தாரிணியும் அங்கேயே இருந்து சமாளித்து விடலாம் என்று அதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அலைந்து திரியும் நிலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு பக்கம் இர்மாவை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டும், வீட்டின் பாதுகாப்பை பலப்டுத்திக் கொண்டும் தண்ணீருக்கும், பெட்ரோலிற்கும் அலைகிறான் நாயகன்.
அவன் மனதில் இர்மாவை பற்றிய அழுத்தம் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய நெருடலும், சொந்த மண்ணைப் பிரிந்த வேதனையும் தென்படுகிறது. இர்மாவிற்கு முன் அந்த ஆறு நாட்களை அவர்களின் மன நிலையிலிருந்து காட்டி இருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை தாண்டி இர்மா எந்தப் பக்கம் நகருகிறதோ என்று எண்ணும் அளவிற்கு இர்மாவின் தாக்கம் நம்மையும் அழுத்துகிறது.
ஆசிரியர் அமெரிக்க வாழ்க்கையின் சலனங்களை, ஆப்ரிக்க அமெரிக்ககர்களின் வேதனையை, இயற்கை பேரிடரில் கூட மறைந்திருக்கும் இன வெறியை என்று பல்வேறு சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார்.



இர்மா என் நினைவலைகளை மீட்டிச் சென்றுள்ளது. 1977- ஆம் ஆண்டு நாகைப்பட்டினம் நவம்பர் பனிரெண்டு அன்று காலையில் இருந்து ரேடியோவில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. புதிய புயல் சின்னமொன்று நாகையை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அன்று இரவு கரையைக் கடக்க கூடும் என்று.
மதியம் வரை அது சாதாரண புயல் சின்னமாக மட்டுமே இருந்தது. அதனால் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சுமார் மூன்று மணியளவில் மீண்டும் ரேடியோவில் அறிவிப்புகள் கலவரத்துடன் வர ஆரம்பித்தன. புயல் சின்னமாக இருந்தது சூறாவளியாக உருவெடுத்து விட்டது என்றும், தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிவேகமாக பேரிடர் குழுக்கள் முடுக்கிவிடப்பட்டன. அவசரம் அவசரமாக தாழ்வான இடங்களில் இருந்தவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். நாங்கள் இருந்த இடத்திற்குப் பின்னே சுமார் ஒரு மூன்று கிலோமீட்டருக்குள் கடற்கரை. பேரிடர் குழு எங்களை காலி செய்து கொண்டு எங்காவது சென்று விடும்படி கூறியது. அந்த நேரத்திற்கு மேல் எங்கும் செல்ல முடியாது என்று கூறி கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு அங்கேயே தங்கி விட்டோம்.
அவசர தேவைகளுக்கு பக்கத்திலிருந்த கடையில் பால் பவுடர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி வைத்துக் கொண்டோம். ஏழு மணி வரை எந்த மாற்றமும் இல்லை. ஊர் மிக அமைதியாக இருந்தது. மக்களுக்கு சூறாவளியின் தீவிரம் புரியவில்லை. ஆனால் அரசாங்கம் அலறிக் கொண்டு மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
சுமார் ஒன்பது மணியளவில் காற்று சுத்தமாக நின்று போய் ஊரே இறக்கமாக மாறியது. லேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. ரேடியோவில் சூறாவளி நாகைக்கு மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது இரவு பனிரெண்டு மணிக்கு கரையை கடக்கும் என்று அறிவித்தது.
ரேடியோவில் பாடல்களும் அறிவிப்புகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பத்து ஐம்பதுக்கு காற்றின் வேகம் லேசாக கூட ஆரம்பித்திருந்தது. மழையின் வேகமும் அதிகரித்தது. அப்போது சூறாவளி கரையை கடக்க தொடங்குகிறது என்றும் அதனால் சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது.
குயிலே கவிக் குயிலே” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. சடாரென்று மின்சாரம் நின்று போனது.
அப்போது மழை குறைந்து ஒரு ஆட்டோவின் ஹாரன் சத்தத்துடன் காற்று சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. நானும் என் தாயும், தந்தையும் ஒரு ஜன்னலில் நெருக்கமாக அமர்ந்திருந்தோம். காற்றின் வேகத்திற்கு எங்கள் வீட்டின் ஓடுகள் நான்கு புறமும் பறந்து சென்றது.
நமது முடிவு நிச்சயம் என்கிற எண்ணத்தோடு பயந்து கொண்டே அமர்ந்திருந்தோம். காற்றின் அறைகூவல் காதுகளை செவிடாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர பேயாட்டம் முடிந்து ஊரையே தரை மட்டமாக்கியது.
மறுநாள் காலை வீட்டின் வாயிலை திறந்தால் மக்கள் கூன் போட்டுக் கொண்டே நடந்து சென்ற கொண்டிருந்தனர். காற்றின் வேகம் அப்போதுமிருந்தது. எங்கும் மக்கள் பிணங்களை தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு வாயிலின் சுவற்றில் ஒரு முழு ஆட்டை அப்படியே தூக்கி அடித்திருந்தது.
தென்னை மரங்கள் அனைத்தும் தலையை இழந்திருந்தது. கொல்லைபுற கதவை உடைத்துக் கொண்டு கட்டுமரம் ஒன்று பாதி உள்ளே வந்திருந்தது. அன்று எங்களின் அதிர்ஷ்டம் கடல் நீர் ஊருக்குள் நுழையவில்லை. அதே சூறாவளி ஒரு நாள் விட்டு ஆந்திராவை சின்னாபின்னம் ஆக்கியது. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழப்பு.
இர்மா 1977 நவம்பர் 12 க்கு கூட்டிச் சென்று விட்டது. அருமையான படைப்பு...வாழ்த்துக்கள் சார்.

//

Sunday, February 13, 2022

2021 சாகித்ய யுவபுரஸ்கார் விருது - கார்த்திக் பாலசுப்ரமணியன்

2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய யுவபுரஸ்கார் விருதை கார்த்திக் பாலசுப்ரமணியன் பெறுகிறார். ஐடி எனும் தகவல் தொழில்நுட்பத் துறை கதைக்களத்தில் எழுதப்பட்ட "நட்சத்திரவாசிகள்" எனும் புதினத்துக்காக (நாவல்) இந்த விருதை அவர் பெறுகிறார். வாழ்த்துக்கள் கார்த்திக்!!





Monday, February 7, 2022

நட்புரையாடல் - பா.சதீஸ் முத்து கோபால்

தமிழ்ச் சமூகத்தில் பலர் தன்னலம் இல்லாமல் தொடர்ச்சியாக செயல்பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தும் விதமாக தமிழ்ச்சரத்தின் வழியாக "நட்புரையாடல்" என்ற ஒரு புதிய நிகழ்வை முன்னெடுக்கிறோம்.



இந்தத் தொடர் நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக நான் வரும் சனிக்கிழமை (பிப்-12) நண்பர் பா.சதீஸ் முத்து கோபால்-ஐ சந்திக்கிறேன். இயற்கை, சுற்றுச்சூழல், கானுயிர் தொடர்பாகப் பல ஆண்டுகளாக பேசி, எழுதி வரும் சதீஸ் ஒரு நூலாசிரியரும் கூட. அவருடைய "யாருக்கானது பூமி ?" (அகநாழிகை வெளியீடு) எனும் கட்டுரைத் தொகுப்பு தமிழக அரசின்  சிறந்த சுற்றுச் சூழல் விருதை (2015) பெற்றிருக்கிறது.

சதீஸ் தொழில் முறையில் ஒரு மென்பொருள் வல்லுநர். சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்த இவர் தற்போது  பெங்களூரில் வசிக்கிறார்.

நண்பர்கள் பரவலாக நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் இதை  ஃபேஸ்புக் நேரலையில் (Facebook Live) நடத்துகிறோம். வாய்ப்புள்ள நண்பர்கள் நேரலையில் கலந்து கொள்ளுங்கள். நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் கேள்வி நேரமும் உண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.