சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை குறித்து திருவாரூர் சரவணன்...
//
மூளையின் திறனில் 1 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மற்றதெல்லாம் துருப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று எனக்கு தெரியாது.
ஆனால் இருக்கும் வாய்ப்புகளில் 1 சதவீதமாவது பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம் எனக்கு. சமூக ஊடகங்களில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
ஆத்தி... எப்படி எல்லாம் யோசிச்சு ஏமாத்த கிளம்பியிருக்காங்கய்யா... என்ற வடிவேலுவின் வசனத்தை அறிந்திருக்கலாம். சமூக ஊடங்களில் எப்படி எல்லாம் ஏமாற்ற கிளம்பியிருக்கிறார்கள் என்பதை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
வாழைமரம், அலங்கார மின்விளக்குகள், வழவழ தரை, பிரமிக்க வைக்கும் உள் அலங்காரம் என்று பளபளப்புடன் இருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருப்போம். அந்த அழகைத் தவிர வேறு எதுவும் நம் கண்களுக்கு தெரியாது.
ஆனால் இடம் வாங்க அலைந்தது முதல், பூமிபூஜை, கடைக்கால், பேஸ்மெண்ட், லிண்டல், ரூஃப், ஃபர்னிஷிங், வயரிங், பெயிண்டிங், ஃபினிஷிங் என்று ஒவ்வொரு கட்டமும் பெரும்பாலும் வீட்டைக் கட்டியவருக்குதான் தெரியும்.
ஒரு 'கிளிக்'-கில் ஒளிப்படம், அடுத்த 'கிளிக்'-கில் ஒளிப்படம் தேர்வு, அதற்கடுத்த 'கிளிக்'-கில் உலகெங்கும் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் ஏதேனும் ஒரு தளத்தில் பகிர்வு.
இதை மட்டும் அறிந்தவர்களுக்கு இணையத்தின் தோற்றம், ஒவ்வொரு கட்டமாக வளர்ந்த விதம் அனைத்தையும் எளிமையாக, சுருக்கமாக, விளக்கமாக இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
நாயகன் படத்தில் வேலுநாயக்கர் முதன் முதலில் யாரை இல்லாமல் செய்தாரோ, அவரது முழு மன வளர்ச்சி இல்லாத மகன்தான் முடிவுரை எழுதுவான்.
அதைப் போல் நீங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பதிவு செய்த எழுத்து அல்லது படம் பிற்காலத்தில் பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்தக்கூடும் என்று இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
நீங்கள் தினமும் சென்று வரும் சாலைதான். ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வழியில் உள்ள வேகத்தடைகள், பள்ளங்கள் உங்களை கவிழ்க்காமல் விட்டிருக்கும். என்றாவது ஒருநாள் அதில் சிக்கி பெரிய பாதிப்பில் சிக்கிய பிறகுதான் அடடா... இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவோம்.
நீங்கள் தினமும் பலமணி நேரம் சோஷியல் மீடியாவில் செயல்படுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் கவனிக்காத ஏகப்பட்ட ஏரியாக்களைப் பற்றி இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
முழுவதும் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி படிப்பது ஆர்வத்தை தூண்டும். ஆனால் நாம் புழங்கும் இடத்தில் நாம் கவனிக்காத அதாவது நம் வீட்டிலேயே இன்னென்ன இருக்கிறது என்று மூன்றாம் நபர் சுட்டிக் காட்டுவதைப் போல் சோஷியல் மீடியா பற்றி பல தகவல்களை இந்த புத்தகம் சொல்லியிருக்கிறது.
ஆரூர் பாஸ்கர் எழுதிய 'சோஷியல் மீடியா - இது நம்ம பேட்டை' புத்தகத்தை நான் படித்த பிறகு எனக்கு தோன்றிய விஷயங்களைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
//
ஜீரோடிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக காட்சியில் கிடைக்கும்.
No comments:
Post a Comment