ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்த தனது வாசிப்பனுபவத்தை முகநூலில் பகிர்ந்த பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. நூலின் இறுதியில் வரும் கவிதை அவருடையதே.
//
மனதில் ஒரு நீலநாரையின் சிலாசாசனம் (கல்வெட்டு)
ஒரு நாவலின் பக்கங்களுக்குள் எல்லையற்ற உலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கனவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. மனித ஆத்மாவின் யதார்த்த எல்லைக்கு அப்பால் உயர்ந்து, வாசகரின் இதயத்திலும் மனதிலும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும் அந்த நாவல்.
எழுத்து பிரசுரம் மூலம் வெளிவந்துள்ள, நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸி (எ) ஜெஸிகா கிங் என்ற நாவலை வாசித்து முடித்த பொழுதில், Blue Heron பறவையும், ஜெஸிகா என்ற பெண்மணியும் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளனர்.
கதைக்களம் வட அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணம். ஒரு குடியிருப்பு பகுதியில் கொரோனா கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் நகர்கிறது.
Sub divisionல் வசிக்கும் அண்டை வீட்டினைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் கேசியின் அம்மாவான ஜெஸி என்ற பெண்மணிக்கும், அதே சம வயது டீன் ஏஜ் பெண் பிரியாவின் அப்பாவான கதை நாயகனுக்கும் இருக்கும் நட்பையும், திடீரென கொரோனா கால கட்டத்தில், காணாமல் போன ஜெஸியைக் குறித்து கவலை கொள்ளும் கதாநாயகனின் மன நிலையையும், அவளுக்கு என்னவாயிற்றோ எனக் கண்டுபிடிக்க அவன் எடுக்கும் முயற்சிகளே கதையின் போக்காக அமைந்துள்ளது.
இது ஒரு கிரைம் நாவலாக இருப்பதால், அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஜெஸிக்கு என்ன ஆகியதோ என நம்மையும் தேட வைக்கிறார் ஆசிரியர். கதை வாக்கில் பறவைகள் குறித்தான தகவல்கள் நிறைய உள்ளன. Like..
“தெரியும்மா இப்படி பறவைகள் ‘V’ போலப் பறப்பதால் எனஜியைச் சேமிக்குது. அப்புறம் அந்தப் பறவைகளின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்குப் பாத்தியா?”
வட அமெரிக்கா நிலப்பரப்பின் அடையாளங்களை, தனது எழுத்து நடையில் விரிவாக பாஸ்கர் கொண்டு வந்துள்ளதால் எளிதாக என்னால் காட்சிப் படுத்திப் பார்க்கவும், கதை மாந்தருடன் பயணிக்கவும் முடிந்தது. இறுதியில் ஜெஸிகாவுக்கு என்ன ஆயிற்று என்பதின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வரைக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள், மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரின் பழக்க வழக்கங்களை விரிவாகக் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
ஜெஸியின் கையில் “Blue Heron” பறவையைப் பச்சைகுத்தி இருப்பாள். அதுவே இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பிலும் வந்துள்ளது.
“வழிமாறித் திசைமாறிப் பறக்கும்
நீல ஹெரான் பறவையைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
இணைந்தே பயணிக்கிறோம் நீயும் நானும்
மீளவும் மீளவும்
புலரியில் எழும் அந்திச் சூரியனைப் போல.”
- Priya Baskaran பிரியா பாஸ்கரன்
என்ற எனது இந்தக் கவிதை வரிகளுடன் இந்த நாவலை நிறைவு செய்துள்ளார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்...//
நூல்: ஜெஸி (எ) ஜெஸிகா ஜிங்
No comments:
Post a Comment