Tuesday, July 11, 2023

பறவைகள் திசை அறிவது எப்படி ?

நம்முடைய மனம், உடல் மட்டுமின்றி உலகின் பல சிக்கலான விசயங்கள் குறித்த ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படி ஆராயப்படும் பல விடயங்களில் ஒன்று பறவைகள் வலசை போவது. இதைப் பற்றி பேசும் How do birds find their way? எனும் ஒரு புத்தகம் வீட்டில் கண்ணில் பட்டது.

பல பறவைகள் குளிர் காலங்களில் சூடு தேடி கண்டம் விட்டு கண்டம் பறப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதன் வழித்தடம்தான் பலருக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. சிலர், அந்தப் பறவைகள் சூரியன் எழும் திசை, மறையும் திசை ஏன் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பொருத்தும் கூட அவை இரவும் பகலும் பயணிக்கின்றன என்கிறார்கள். அதே சமயத்தில், அவைகளால் மேகமூட்டமான நேரத்திலும் பயணிக்க முடிகின்றன என்பதையும் கவனிக்கிறார்கள்.





சிலர் பறவைகளின் உடலுக்குள்ளேயே தென்புலம், வடபுலம் அறியும் காந்த ஊசி இருப்பதாக நம்புகிறார்கள். ஏன், வலசை என்றில்லை பொதுவாகவே பறவைகள் எப்படி பறவைகள் தங்கள் வழித்தடத்தை தொடர்கின்றன அல்லது கூட்டை வந்தடைகின்றன  என்பதே இன்னமும் புதிராகவே இருக்கிறது. 

அதிலும் குறிப்பாக புறாக்கள் (homing pigeons) தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகளாம். ஒரு முறை அதன் கண்களைத் திரையிட்டு மறைத்தாலும் அவைச் சரியான வழியில் பயணித்து தன்னுடைய கூடுவந்து சேர்ந்து விடுகின்றனவாம். (இதெல்லாம் தெரிந்துதானே அன்றே நம்மாட்கள் புறாவை தூது அனுப்பினார்கள் :))

ஒரு லண்டன் பறவையை திடீரென விமானத்தில் கொண்டுவந்து அமெரிக்காவில் 'அம்போ' என விட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பறவையோ சரியாக  12-வது நாள்  தன்னுடைய லண்டன் கூட்டில் ஜாலியாக வந்து உட்கார்ந்து பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு பறவைகளின் வழித்தடம், அதன் பறக்கும் உயரம், காலநிலை போன்றவைகளை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனாலும், பறவைகளின் உள்ளுணர்வு எனபது இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

2 comments:

  1. பறவைகள் பற்றிய அருமையான தகவல்கள். இணையத்தில் வாசித்ததுண்டு. மிகவும் வியந்திருக்கிறேன். இன்னும் ஒவ்வொரு பறவை பற்றியும் தெரிந்து கொள்ளும் போது அவற்றின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நேரம் கிடைத்தால் இருவாட்சி-Great hornbill பற்றி வாசியுங்கள். சுவாரசியமானது.

      Delete