Wednesday, January 29, 2020

ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் Duel

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் உலகம் முழுதும் அறியப்பட்ட ஹாலிவுட் இயக்குநர். ஜூராசிக் பார்க், ஜாஸ் (Jaws) , ஈ.டி. (E.T.), மைனாரிட்டி ரிப்போர்ட், ஏ.ஐ. (A.I.) என பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியர்.  புகழ்பெற்ற இயக்குநர் என்பதைத் தாண்டி அவர் ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளரும் கூட. இரண்டு முறை  ஆஸ்கார் விருது பெற்ற அவருடைய முதல்படமான Duel (1971) -ஐ சமீபத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ('Duel' - தமிழில் 'ஒண்டிக்கு ஒண்டி' என நேரடியாக மொழிபெயர்க்கலாம்)

படம் அதிரடி திரில்லராக இருந்தாலும். படம் பார்த்த எனக்கு ஒரு வித அதிர்ச்சி.  காரணம், ஒத்த செருப்பு போலொரு படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியதைப் போல உணர்ந்தேன். அதாவது, ஸ்பில்பெர்கின் பல பிரமாண்ட படங்களின் வழியாக அவர் குறித்து  என் மனதில்  வேறொரு சித்திரம் இருந்தது.

Duel படத்தின் கதை இதுதான். ஒரு நெடுஞ்சாலையில் நாயகன், தன் காரை ஓட்டிக்கொண்டு செல்கிறான். அவனுக்கு முன்பாக ஒரு டிரக், அவனுக்கு வழி விடாமல் சாலையை மறித்துக்கொண்டு செல்கிறது. காரில் இருக்கும் நாயகன், அடிக்கடி 'ஹாரன்' அடித்துப் பார்க்கிறான். பயனில்லை. தொடர்ந்து நந்தி போல சாலையை மறைத்து போகும் டிரக்கோ அவனுக்கு  வழி கொடுப்பதாக தெரிய இல்லை.

இப்படிப் பிடிவாதமாக வழியை அடைத்தபடி செல்லும் டிரக் மேல் எரிச்சடைந்த நாயகன் ஒருகட்டத்தில் சாமர்த்தியமாக சந்தில் புகுந்து டிரக்கைச் சட்டென முந்தி சென்று விடுகிறான். வந்தது வினை. டிரக்கில் இருக்கும் அந்த முகமறியா மனிதன் நாயகனுக்கு எதிராக, எமனாக திரும்பி விடுகிறான்.

அங்கிருந்து இடைவேளையின்றி காரில் இருக்கும் நாயகனும், முகமறியா டிரக் டிரைவரும் நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும் மூர்க்கமாக தாக்கிக் கொண்டும் படம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.  இறுதியில் யார் யாரை வென்றார்கள் ? எப்படி? என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் (யூ.டியூயில் கிடைக்கிறது).

இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டியது திரைக்கதை பற்றி. அதாவது,
எந்தவொரு கிளைக் கதைகளும் இல்லாமல் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு நாயகனை மட்டும் வைத்து திரைக்கதை அமைத்து ஸ்பில்பெர்க் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் முதல்படம். வெளியில் இருந்து பார்த்தால், படம் இரண்டு வாகனங்களுக்கு இடையேயான போட்டி என்பது போல தோன்றினாலும் அது மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் நடக்கும் போராட்டம் என்பதை நம்மால் பட உணர்ந்துகொள்ள முடியும். காலத்தை வென்று நிற்கும் படம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.



Wednesday, January 1, 2020

தமிழ்த்திரையுலகில் இரட்டையர்கள்


தமிழ்த்திரையுலகில்  இரட்டையர்களுக்கு என்று ஓர் இடம் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. முன்பு  இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மனோஜ் கியான் எனும்  அந்த வரிசையில் இன்று சபேஷ் - முரளி... அதுபோல பாரம்பரிய சங்கீதத்தில் சூலமங்கலம் சகோதரிகள்,  பாம்பே  சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி. நாட்டுப்புறப் பாடலில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி- அனிதா, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி இணை என அங்கேயும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தவகையில் திரைப்படத்
தொகுப்பாளர்களாக பி. லெனின்-வி. டி. விஜயன் நினைவுக்கு வருகிறார்கள்.



அதாவது ஒத்தத் துறையில் இணைந்து செயல்படுபவர்களைப் நாம் பேசுகிறோம். வைரமுத்து-ஏ.ஆர் ரகுமான் போன்ற வெற்றிக் கூட்டணிகள் என்பது வேறு.ஆனால், எழுத்தில்  இரட்டையர்கள் என்றால் நமக்குச் சட்டென நினைவுக்கு வருபவரகள் சுபா மட்டுமே. நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என இருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தை எடுத்து சுபா எனும் புனைப் பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள்.  மற்றபடி தமிழ் எழுத்துத்துறையில் இரட்டையர்களைச் சிரமப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது

எழுத்து என்பது தனிமையோடு தொடர்புடையதாலோ என்னவோ அது பெரும்பாலும் தனி ஆவர்த்தனமாகவே இருந்திருக்கிறது.   ஆனால்,  ஆங்கிலத்தில் John Lennon & Paul McCartney போல பல இரட்டை பாடல் ஆசிரியர்கள் duo songwriters உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள். 

அதுபோல நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் அமெரிக்க ஆசிரியர்களான கேத்லீன் ஓ’நீல் கியர் அவருடைய கணவருடன் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அதுபோல மார்சியா முல்லர் மற்றும் பில் ப்ரோன்சினி (Marcia Muller and Bill Pronzini) எழுத்துலகில் உலகப்புகழ் பெற்ற இணை.

இங்கே அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றவர்களுடன் இணைந்து எழுதுவதும்  பரவலாக நடக்கும் விசயமே. அதாவது எழுதுவது என்பது ஒரு தனிமையான முயற்சியாக இருந்தாலும் ஒத்தக் கருத்துள்ள இரண்டு ஆளுமைகள் இணையும்போது ஆச்சரியமான கதைகள் சுவாரஸ்யமான நடையில் உருவாக வாய்ப்புள்ளன. அந்த வகையில் பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன் மற்றவர்களுடன் இணைந்து பல படைப்புகளை எழுதித் தள்ளியிருக்கிறார். அவர்   அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் இணைந்து சமீபத்தில் எழுதிய ”அதிபரைக் காணவில்லை” (The President is Missing by Bill Clinton and James Patterson ) வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.  சிறார் புத்தகங்களையும் எழுதியிருக்கும் ஜேம்ஸ் பேட்டர்சன் ஃபிளாரிடாவில் வசிக்கிறார். எனக்கு உள்ளூர்காரரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு மகளுடன் போய் அவருக்குச் சின்ன ஹலோ சொல்லிவிட்டு வந்தோம். 

என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் விரும்பும் ஒரு நல்ல படைப்பைத் தர ஒத்த நடையுள்ள இருவர் இணை ஆசிரியர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருவேறுபட்டத் தளங்களில் இயங்குபவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி, மேற்குலகில் பிரபலமான எழுத்தாளர்கள் கூட்டுசேர்ந்து புனைவு எழுதுவதை நாம் விட்டு விடுவோம். தமிழில் ஓரளவு பெயர் தெரிந்த எழுத்தாளர்கள் இணைந்து புனைவு ஏன் , நான்கு வரியில் ஒரு கட்டுரையைக் கூட எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை.

நான் இதையெல்லாம் எழுதக் காரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் தனது நண்பர் ராமசேஷன் எனும் கணினிப் பொறியாளருடன்  இணைந்து  ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” எனும் புத்தகத்தைக் கொண்டுவருகிறேன் என எழுதியிருந்தார். இலக்கணத்துக்கும் சாருவுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பவர்களுக்கும் அவர் தனது தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள்.

இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இணையாசிரியராக சேர்ந்து எழுத முன்வந்திருப்பது நல்லதொடக்கம். ஓரளவு புத்தகத்தையும் இணையாசிரியரையும்  சேர்ந்து பிரபலப்படுத்தும். இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்!



Wednesday, December 25, 2019

இர்மா- அந்த ஆறு நாட்கள்

நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! .  கடந்த ஆண்டு எனது  'அந்த ஆறு நாட்கள்'  (புதினம்/நாவல்)  அமெசான் கிண்டிலில்   வெளியானது  
உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு  எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது.  தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம். 

பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம்.  அதுபோல,  நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில்  வாசகர்களின்  ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள்  (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம்.  இது எனக்கு நான்காவது நூல். 

நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய  ‘எழுத்து பிரசுரம் பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.  

அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா... இனி உங்கள் கைகளில்.



Monday, December 9, 2019

அமெசான் - லாஸ் வேகாஸில் நடத்திய மாபெரும் மாநாடு!

அமெசானின் துணை நிறுவனம் லாஸ் வேகாஸில் நடத்திய மாநாடு ( AWS-re:Invent)  முடிந்து வீடு திரும்பிவிட்டேன்.  மொத்தமாக ஐந்து நாட்கள் நடந்த   இந்த மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், அயர்லாந்து என எண்ணிலடங்காத நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். நல்ல கூட்டம்.  கலந்து கொண்டவர்களின்  எண்ணிக்கை  60 ஆயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தக் கூட்டத்தால் லாஸ் வேகாஸ் குலுங்கியது என்றேல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனேன்றால் அந்த நகரில் இதுபோல பல மாநாடுகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடந்தபடியிருக்கின்றன.  அதனால், நகர் எப்போதும் விழாக்கோலத்துடன் ஒருவித கொண்டாட்ட மனோநிலையிலேயே இருக்கிறது.  அடுத்து ரோடியோ எனும்  குதிரைச் சவாரி செய்பவர்களுக்கான விழா தொடங்கிவிட்டதால் நகர் முழுவதும்  'கொவ் பாய்' தொப்பியில் ஆண்களையும், பெண்களையும் பார்க்க முடிந்தது.

ஏடபுள்யூஎஸ் (AWS) விழாவில் கலந்துகொண்டவர்கள் தும்மல் வந்தால் "ஹச்.. ஹச்" எனத் தும்மாமல் "அமெசான்... அமெசான்" எனத் தும்மிவிடுவார்களோ எனச் அச்சப்படும் அளவுக்கு ஐந்து நாட்களும் AWS பற்றி பேசித் தீர்த்துவிட்டார்கள்.

உண்மையில் இணையவர்த்தகத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த அமெசான் தனது சொந்த உள்கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கியதே அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) எனும் தொழில்நுட்பம். ஆனால், அது  இன்று மேகக்கணினி எனும் Cloud Computing துறையில்  உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

 2006-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட AWS சேவை இன்று அமேசானின் மொத்த காலாண்டு விற்பனையில் சுமார் 10 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது.

பொதுவாக மாநாட்டில் கணிசமான அளவு இந்தியர்களைப் பார்க்க முடிந்தது.  அதில் பல நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அடக்கம்.  கடைசி நாளில் நெதர்லாந்தில் இருந்து வந்த பேராசியர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது பேச்சுனூடாக "இந்திய மக்கள் தொகை சுமார் 1.3 பில்லியன்.  அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் வல்லவராக இருக்கும் இந்தியர்கள் ஏன் இதுபோல் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை இதுவரைத்  தொடங்கவில்லை ? " என்றார்.  நான் பதிலாக  "ஆமாம், இதுவரைத் தொடங்கவில்லை" என்றேன். அதைவிடுத்து அவரிடம்  நமது கல்விச் சூழல்
குறித்தெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன ?


Sunday, November 10, 2019

அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே ? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-10)

சிகாகோவில் (2019 ஜுலை) நடைபெற்ற "10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு" தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் இதுவரைப் பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி. நாம் அதன் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம்.


நான் முன்பே சொன்னதுபோல அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து இந்தஆண்டு முப்பெரும் விழாவாக  வெற்றிகரமாக நடத்தி முடிந்திருக்கிறார்கள். 

வழக்கமான பேரவை விழாவுடன் இந்த முறை ஆராய்ச்சி மாநாடு  இணைந்த்தால் தமிழுடன், கலையும் சேர்ந்துகொண்டது. 

அதனால் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், தென் அமெரிக்கா, கனடா, இலங்கை, நார்வே, இங்கிலாந்து எனப் பற்பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை பல நூறு தன்னார்வத் தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு பகலாக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்.

பேரவை விழா பற்றி விசாரித்த நண்பர் ஒருவர் "வழக்கம் போல மெல்லிசை, இன்னிசை, பட்டிமன்றம், கவியரங்கம் தாண்டி வேறென்ன புதுசா ?" எனக் கேட்டிருந்தார். இன்னொருவர் "இந்த வருசமும் புடவை, மளிகை கடைகள் உண்டா ? " என நக்கலடித்திருந்தார். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் திருவிழா. வயது வித்தியாசமின்றி அனைவரும் தமிழர்கள் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். திருவிழா என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தானே.


பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலர் மரபுக்கலைகளை மறவாமல் தாங்கள் கற்பதோடு மட்டுமில்லாமல் அடுத்தத் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒயிலாட்டம், கரகம், சிலம்பம், தப்பாட்டம்,நாதசுவரம் என தமிழகத்தில் வழக்கொழியும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழக நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து இங்கே மேடை ஏற்றியிருந்தார்கள். 300 இசைக்கலைஞர்கள் இணைந்து "முரசு-சேர்ந்திசை" எனும் தலைப்பில் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இசையூட்டிய நிகழ்ச்சி உலகத் தரம்.


நிறைவாக ஒன்று, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வரலாற்றில் முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து முடிந்த விழா இதுவாக இருக்கும் என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

வழக்கமாக தமிழ்ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில் அடுத்த மாநாட்டு நிகழ்வை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி சிறப்பாக  அரசியல் இலாபமின்றி தமிழுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நிகழ வாழ்த்துவோம்.

குறிப்பு- இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையை இங்கிருந்து வாசிக்கத்தொடங்கலாம். 

Wednesday, October 30, 2019

படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-9)

இந்தத் தொடரின் முந்தையக் கட்டுரையை (8) இங்கே வாசிக்கலாம்.

வழக்கமாக பேரவை விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு  விழா மலர் அன்பளிப்பாக வழங்குவது மரபு. அந்தப் பேரவைவிழா மலரின் ஆசிரியர் குழுவில்  இந்தஆண்டு  உறுப்பினராக இருந்தேன்.  பேரவை மலருடன் பல ஆண்டுகள் தொடர்பிருந்தாலும் உறுப்பினராக மலர்க் குழுவுடன் இணைந்தது இதுவே முதல்முறை.

அதனால் பல மாதங்களாகவே விழா குழுவினருடன் தொடர்பில் இருந்தேன். சரியாக சொல்வதென்றால் இந்த ஆண்டு (2019) பிப்ரவரியில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. உலகின் பல நாடுகளில் இருந்து   விழாவின் கருப்பொருளுக்கு ஏற்றவகையில் படைப்புகளை வரவேற்பது, தேர்வு செய்வது, பிழை திருத்துவது, நெறிமுறைகளைச் சரிபார்ப்பது என பல வேலைகள் இருந்தன.

இவற்றைச் செய்து முடிக்க உறுப்பினர்கள் அனைவரும்  வாரம் ஒருமுறை தொலைபேசி பல்வழி இணைப்பில் சந்தித்தோம். பிறகு நாட்கள் நெருங்க நெருங்க அது வாரம் இருமுறை என்றுகூட ஆனது. குழு உறுப்பினர் எனும் வகையில் நான்  இணைந்து செயல்பட்ட பல பணிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு. ஒன்று சமூக வலைதளங்களில் பகிர மார்கெட்டிங் அணியுடன் இணைந்து ஃபிளையர்கள் தயார் செய்து பகிர்ந்தது. அடுத்தது தமிழில் சிறந்த 100 நூறு புத்தகங்கள் எனும் பட்டியல் தயாரிப்பை ஒருங்கிணைத்தது.

இந்தியாவில் இருந்து கிராபிக் வல்லுனர்கள் வடிவமைத்த பல ஃபிளையர்களில் சிறந்த இரண்டைத் தேர்ந்தேடுப்பது என்பது பாலுமகேந்திராவின் படங்களில் சிறந்த ஒளிப்பதிவைத் தேர்தெடுப்பது போல கடினமான வேலை இல்லை என்பதால், வந்த ஃபிளையர்களில் சிறந்த இரண்டை மட்டும் குழுவினரின் பார்வைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெற்று வெளிச்சுற்றுக்கு அனுப்பினோம்.

அடுத்தது படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத்  தயார் செய்யவேண்டும் என்ற போதே மலர்க்குழுவில் இருந்த
நாங்கள் அனைவரும் மலைத்தோம். தயாரிக்கும்போதும் கண்டிப்பாக அதன் கனத்தை அனைவரும் உணர்ந்தோம். விண்மீன்களில் சிறந்த நூறைத் தேர்தெடுப்பதுபோல  அது சவாலான ஒன்றாகத்தான் இருந்தது.

முக்கியமாக தமிழில் சிறந்த நூறு புத்தகங்கள் எனும் போது திருக்குறள், சிலப்பதிகாரம் என்றில்லாமல் நவீன எழுத்துகளை அடையாளப்படுத்த நினைத்தோம். அதனால், கடந்த 100-120 ஆண்டுகள் எனும் வரையறையில் சிறப்பான படைப்புகளைத் தேர்ந்தேடுக்க முடிவுசெய்தோம். அதைப் புதினம் (50), கவிதை (25), புதினம் இல்லாதவை (25) என மூன்றாக பிரித்துக்கொண்டோம்.  இந்த வேலையில் எனது புனைவிலக்கிய பரிச்சயம் கண்டிப்பாக கைகொடுத்தது.  சிறந்த கவிதைத் தொகுப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் மரியாதைக்குரிய நண்பர் கவிஞர் ஜெயதேவனும் உதவி செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

புத்தகப் பட்டியல் -விழா மலரில் இருந்து...






முக்கியமாக இது தரவரிசைபட்டியல் இல்லை.  மலர்க்குழுவின் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் .
இந்தப் பட்டியல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். இந்தப் பட்டியலில் விடுபடல்கள்  இருக்க வாய்ப்பு உண்டு.

புதின (நாவல்) வரிசை எழுத்துரு வடிவில் கீழே


#  புத்தகம் ஆசிரியர்
1 புயலிலே ஒரு தோணி ப சிங்காரம்
2 ஒரு புளிய மரத்தின் கதை சுந்தர ராமசாமி
3 கரைந்த நிழல்கள் அசோகமித்திரன்
4 மோகமுள் தி ஜானகிராமன்
5 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்
6 கோபல்ல கிராமம் கி ராஜநாராயணன்
7 சாயாவனம் சா கந்தசாமி
8 பொன்னியின் செல்வன் கல்கி
9 உப்பு நாய்கள் லக்ஷ்மி சரவணக்குமார்
10 ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ்
11 வாடிவாசல் சி சு செல்லப்பா
12 உப பாண்டவம் எஸ் ராமகிருஷ்ணன்
13 விஷ்ணுபுரம் ஜெயமோகன்
14 கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன்
15 இரும்பு குதிரைகள் பாலகுமாரன்
16 கோவேறு கழுதைகள் இமையம்
17 ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா
18 கடல்புரத்தில் வண்ணநிலவன்
19 நாளை மற்றோரு நாளே ஜி நாகராஜன்
20 வெக்கை பூமணி
21 கிருஷ்ணபருந்து ஆ மாதவன்
22 வானம் வசப்படும் பிரபஞ்சன்
23 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி
24 சோளகர் தொட்டி ச பாலமுருகன்
25 காவல் கோட்டம் சு வெங்கடேசன்
26 எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சில் நாடன்
27 பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
28 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான்
29 தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி
30 கூளமாதாரி பெருமாள் முருகன்
31 ஒருநாள் க நா சுப்ரமணியம்
32 தலைமுறைகள் நீல பத்மநாபன்
33 நாகம்மாள் ஆர் ஷண்முகசுந்தரம்
34 அஞ்சலை கண்மணி குணசேகரன்
35 புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசன்
36 வாசவேஸ்வரம் கிருத்திகா
37 ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் தமிழவன்
38 வேள்வித்தீ எம் வி வெங்கட் ராம்
39 சித்திரப் பாவை அகிலன்
40 புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன்  
41 கமலாம்பாள் சரித்திரம் ராஜம் அய்யர்
42 அகல் விளக்கு மு.வ.
43 நைலான் கயிறு சுஜாதா 
44 அபிதா லா சா ராமாமிர்தம்
45 நல்ல நிலம் பாவை சந்திரன்
46 ரத்த உறவு யூமா வாசுகி
47 மலரும் சருகும் டி செல்வராஜ்
48 பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
49 கூகை சோ தர்மன்
50 கருக்கு பாமா


அடுத்தப் பதிவு 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய இறுதிப் பதிவாக இருக்கும்.

Wednesday, October 23, 2019

ஓஷோ எனும் ஆளுமை

சமயங்களில் சில புதிய மனிதர்களைச் சந்திக்கும் போது இவரை எப்படி  இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தோம்  (நல்ல விதத்தில்)  என நினைக்கத் தோன்றும் . அப்படி சமீபத்தில் வாசிக்கும்போது தோன்றிய புத்தகம் "Osho's Emotional Wellness" (Transforming Fear, Anger, and Jealousy Into Creative Energy)  தமிழில் நேரடியாக  "உணர்ச்சி ஆரோக்கியம்" (எப்படி பயம், கோபம், பொறாமையைப்  படைப்பு ஆற்றலாக மாற்றுவது)  எனச் சொல்லலாம்.

நமது தினசரி பிடுங்கல்களில் இருந்து கொஞ்சம் விலகி நின்று வாழ்வைச் சற்று உள்ளார்ந்த பார்வை பார்க்க வைக்கும் புத்தகம்.

நம் அன்றாட வாழ்வின் மிகப்பெரிய சிக்கலே வாழ்க்கையை வாழ்வதுதான்.
உண்மையில் உள்ளே என்ன  நினைக்கிறோம். எதை வெளியே சொல்கிறோம்.  அதை எப்படிச் சொல்கிறோம்.  என நொடிக்கு நொடி நமக்குள் பல கேள்விகள் பல அடக்குமுறைகள்.  சமயங்களில் நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், நெருக்கமானவர்களைக் காயப்படுத்திவிடுகிறோம்.  இல்லை சொன்னால் அவர்களிடமிருந்து அந்நியப்படுவோம் என அஞ்சி சிலதைச் சொல்லாமல் மறைக்கிறோம். அந்தவகையில் எது சரி, எது தவறு. அதை யார் சொல்வது எனும் பல குழப்பங்களுக்கு விடை காண முயலும் ஒரு புத்தகம் இது என்றும் சொல்லாம்.

குறிப்பாக மானுட வாழ்வின் கசடுகளைப் பற்றி ஓஷோ எனும் ரஜனீஷ் பல புத்தகங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் மானுடத்தை உடல், புத்தி, இதயம் (body,mind,heart) என மூன்றாகப் பிரித்து அதன் போக்கையும் அழகாகச் சொல்கிறார். அதனூடாக ஆண், பெண் உறவுச் சிக்கலையும் அவர் சொல்லத் தவறவில்லை. அதுபோல மனிதர்கள் ஒவ்வொரும் தனித்துவமானவர்கள். அதனால், நம்மை நாமே தினம் தினம் சக மனிதர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டு பொறாமை பிடித்து வாழ்வது முட்டாள் தனமான செயல் எனவும் சாடுகிறார்.

பொறாமை குறித்து ஓரிடத்தில் "நல்லவேளை நீ மரங்களுடன்   உன்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை.  அப்படி செய்திருந்தால் நீ மிகுந்த  பொறாமை பட்டிருப்பாய். நான்  மட்டும் ஏன்  பச்சையாக இல்லை. எனக்கு மட்டும் ஏன் பூக்களைத் தாங்கும் சக்தி இல்லை என்றெல்லாம் கூட பலவாறு நீ வருத்தப்பட்டிருப்பாய். 

அதுபோல நல்லவேளையாக பறவைகளோடும், ஆறுகளோடும், மலைகளோடெல்லாம்  நீ  உன்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தாலும் நீ  இன்னமும் மிகுந்த வேதனை பட்டிருப்பாய்.

நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ தினம் தினம்  உன்னை ஆடும் மயிலோடும், பேசும் கிளியோடும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பொறாமையால் வெந்திருப்பாய்.  ஒருகட்டத்தில் அந்தப் பொறாமையின் கனம் தாங்காமல்  நீ செத்து ஒழிந்திருப்பாய்".

என பல தத்துவ விசாரணைகளைத் தூண்டும் புத்தகம். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.   முக்கியமாக நான் ஓஷோவின் எல்லா புத்தகங்களையும்
படித்து அவரை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்றோ இல்லை அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், இதை வாசித்தபின் ஓஷோ 20ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர் எனச் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றே தோன்றுகிறது.