Friday, December 30, 2016

2016ல் வாசித்தவை - ஒரு பார்வை

நண்பர்களே,

பலரும் தங்களின்  2016 புத்தகப்பட்டியலை பகிர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், வருடக் கடைசி என்றால் அந்த வருடம் வாசித்த எல்லா புத்தகங்களையும்  பட்டியலாக சொல்லியே ஆகவேண்டும் என்பது கட்டாயமோன்றுமில்லை.

ஆனால், வாசித்த புத்தகங்களின் தலைப்புகளையேனும் மேலோட்டமாக ஒரு பருந்து பார்வை பார்ப்பதில் கண்டிப்பாக சின்ன திருப்தி இருக்கிறது. அதைத்தாண்டி முக்கியமாக அந்த வருடத்தில் நாம் எந்த  வகையான (genre) புத்தகங்களைப் படித்திருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்ப்பதும் அவசியமாகிறது. அது நாம்  வாசிப்பில் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்தி தேவைப்பட்டால் நம்மை சரிசெய்து கொள்ள உதவும்.

அதுமட்டுமல்லாமல் புதிதாக வாசிக்க வருவர்களுக்கும் நமது பட்டியல் ஒரு நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.

எனக்கு கடந்த வருடம் இந்தமாதிரியான புத்தகங்களைதான் வாசிக்கவேண்டும் எனும் பெரிய திட்டங்களோ முன்னேற்பாடுகளோ எதுவுமில்லை.  2016ஐ திரும்பிப் பார்க்கையில் நான் கையில் கிடைத்த புத்தகங்களையும்,  நண்பர்கள் பரிந்துரைத்தவற்றையும் வாசித்திருக்கிறேன்.  2017ல் அதைக் கொஞ்சம்  முறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்.

 2016ல் திட்டமிட்டிருந்த இன்னோரு விசயம் புத்தக   வாசிப்புக்கு பின் முடிந்தவரை  மனத்தில்  தோன்றியதை விமர்சமாக எழுதவேண்டும் என்பது. அதில் கொஞ்சம் வெற்றி  பெற்றிருப்பதாகவே
நினைக்கிறேன்.  எழுதிய விமர்சனங்கள் பல இணையகளிலும், ஏன் அச்சு இதழ்களிலும் வெளியானதும்   மகிழ்ச்சியே.  அந்த உத்வேகத்தோடு 2017ல் காலடி வைக்கிறேன்.

அதிகம் மெனக்கெடாமல் முதலில்  ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிடலாம்.

A Wicked History 20th Century, Idi Amin by Steve Dougherty
The MotorCycle Diaries - Che Guevara

தமிழில் வாசித்தவை.

புதினங்கள் (நாவல்கள்)
****
சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
கெடைகாடு - ஏக்நாத்
எங் கதெ - இமையம்
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்
பருக்கை - வீரபாண்டியன்
சாயாவனம் -சா.கந்தசாமி
சின்னு முதல் சின்னு வரை - வண்ணதாசன்
24 ரூபாய் தீவு - சுஜாதா

சிறுகதைகள்
****
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் -நாஞ்சில் நாடன்
அறம் - ஜெயமோகன்
கனவுப் பட்டறை -மதி
பாக்குத்தோட்டம்-பாவண்ணன்
25 வருடக் கதை - ஸ்டெல்லா புரூஸ்

பொது
***
கற்க கசடற ( விற்க அதற்குத் தக) - பாரதி தம்பி
பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் -கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழர் நாட்டுப் பாடல்கள்-நா.வானமாமலை
அரசியல் பழகு - சமஸ்
உபசாரம்-சுகா

கவிதைகள்
***
கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி
துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்
ஊழியின் தினங்கள் -மனுஷ்ய புத்திரன்

இந்தப் பட்டியல் முழுமையானதாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால், வனநாயகனுக்காக வாசித்த மலேசியா தொடர்பான புத்தகங்களையும், கணினியில் வாசித்தவைகளையும், அலுவலகத்துக்கு பயணிக்கையில் கேட்கும் ஆடியோ சிடிக்களையும் இந்தப் பட்டியலில் இருந்து தவிர்த்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை  வாசித்தலே ஒருவனின் இருத்தலை இவ்வுலகுக்குச் சொல்கிறது என  நம்புகிறவன்.  தமிழ், ஆங்கிலம்
அல்லது ஏதோ ஒரு மொழியில் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த 2017 புத்தாண்டு வாழ்த்துகள்!

Tuesday, December 27, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-2

கடந்த பதிவில் தலைவரின் இறுதிஊர்வலம் தொடர்பான எனது எண்ணங்களைப் பகிர்ந்துக் கொண்டேன். அந்தப் பதிவு இங்கே.


புரட்சித் தலைவரின் இறுதிஊர்வலம்  நடந்தது 1987, இப்போது 2016. ஏறக்குறைய 30 வருட இடைவெளி. 33 வருடங்களை ஒரு தலைமுறைக்கான இடைவெளி என்பதை நீங்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இந்த 30 வருடங்களில் எவ்வளோவோ விசயங்கள் மாறிவிட்டன. அரசியல்,பொருளாதார, தனிமனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் சற்று மாறி இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அப்போழுதெல்லாம்  சத்துணவு,சீருடை,காலணி போன்ற அரசின் இலவசங்கள்  கொஞ்சம் இருந்தன.  ஆனால், ஒட்டுச் சாவடிக்கு வர எவரும் காசு வாங்கவில்லை. அன்று  மூன்றுவேளை அரிசி சாப்பாடு  என்பது என்பது பலருக்கு சாத்தியமில்லைதான். ஆனால் மக்கள் இன்றைவிட ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அன்று  சமூகத்தில் மனிதமாண்பு  இருந்தது.  உறவுகள் கொண்டாடப்பட்டன. உங்களுக்கு வெளியே ஒரு பிரச்சனை என்றால் தைரியமாக ஏன் என்று தட்டி கேட்டு உதவிட ஆட்கள் ஒடிவந்தார்கள்.   கொஞ்சம் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் இன்று அடுத்த அப்பார்மெண்டில்  ஒரு மரணம் சம்பவித்தால் கூட என்ன ஏதென்று பார்க்காத மனிதநேய சமூகத்தில் தான் வாழ்கிறோம்.  பெத்த தாய் இறந்தால் கூட வாய்விட்டு அழாத நாகரீக சமூகத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த  மாறிவிட்டச்சமூகச் சூழலிலும் மறைந்த முதல்வருக்கு இறுதி மரியாதை செய்ய கட்சிவேறுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடியது.   அதற்குக் காரணம் அவர் மேல் தமிழக மக்களுக்கு இருந்த மாறாத அன்பு என்பேன். அவரின் மறைவை தங்களின் குடும்பத்தின் இழப்பாக நினைத்தார்கள்.  இனிவரும் எந்தத் தலைவருக்கும் மக்களோடு இதுபோன்றதோரு பிணைப்பை ஏற்படுத்த இயலாது என்பது உண்மை.

அன்று இதுபோன்ற இறுதிஊர்வல நிகழ்வுகளை நியூஸ் ரீலில்தான்
பார்க்கமுடிந்தது, ஆனால், இன்று  மறைந்த முதல்வரின் இறுதி ஊர்வலத்தையொட்டிய நிகழ்வுகளை நிறைய சேனல்கள் இணையத்தில் நேரடி ஒளிபரபரப்பு செய்தார்கள்.

அதுவும் இலவசமாக விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பு
செய்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள். அவர்கள் வாழ்க எனச் சொல்லும் அதே நேரத்தில், மனதில் தோன்றிய ஒரு விசயத்தைச் சொல்லிவிடுகிறேன். அது அந்த நேரடி நிகழ்வின் வர்ணனையாளர்களைப் பற்றியது.

ஒரு மாநில முதல்வரின் இறுதி ஊர்வலத்தை கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நேரடியாக வழங்குகிறோம் என்ற உணர்வு அந்த
வர்ணனையாளர்கள் பலருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பறவைகள் பலவிதம் என்பது போல் ஒவ்வோரு சேனலும் ஒருவிதமான இம்சை. 

ஒருவர் கன்னிப்பொங்கலன்று குதிரை வண்டி ரேக்ளா ரேசுக்கு வர்ணனை தரும் தொனியில் தமிங்கிலத்தில் படபடத்துக் கொண்டிருந்தார். அது பொறுமையாக, துக்கத்திலிருப்பவர்களின் இறுக்கமான மனநிலையை புரிந்து தன்மையாக, தெளிவாகப் பேசவேண்டிய நேரமாயிற்றே. ஏன் அந்த அவசரமோ ?.

ஒருவர் தொலைபேசியில் அனுதாபச் செய்தி வாங்குகிறேன் பேர்வழி என 75-80 வயது பிரபலங்களை  கூட மொட்டையாக பெயர்சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ' சொல்லுங்க வெண்ணிற ஆடை நிர்மலா ' எனத் தொடங்கியவர், கடைசியில் பட்டென 'நன்றி வெண்ணிற ஆடை நிர்மலா' என முடித்தார். சரி 'திருமதி' எனும் அடைமொழி வேண்டாம், பேச்சில் தன்மை வேண்டாமா ? உங்களுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி பேசும் பிரபலங்களை துளிகூட மரியாதை தொனி இல்லாமல் பேசும் நாகரீகம் எங்கிருந்து வந்தது?

எம்ஜிஆரின் இறுதி யாத்திரை தொலைக்காட்சி வர்ணனையில் வலம்புரி ஜானின் முத்தாய்ப்பாக "பூமியை வெட்டி தங்கத்தை எடுப்பார்கள். ஐயோ இங்கே பூமியை வெட்டி தங்கத்தைப் புதைக்கிறார்களே". என்றார்.  அவருடை சொற்களுடன் தொனியும் சேர்ந்து கண்டவர் கண்களைக் குளமாக்கியது.  முப்பது வருடங்களுக்குபின்பும் கூட இந்த நிகழ்வை நண்பர் இணையத்தில் சிலாகிக்கிறார் என்றால் அதன் தாக்கத்தை நாம் உணரலாம்.


இந்தி ஒழிப்பு போராட்டாத்தில் தமிழுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மிச்சங்கள்  இன்னமும்  திராவிடக் கழகங்களில் இருக்கிறது தானே?.

இன்னோரு விசயம், அவர்களின் வர்ணணை பெரும்பாலும் பேச்சுத்தமிழாகவே இருந்தது. அதிலும் வார்த்தை தடுமாற்றங்கள், அனுபவமின்மையால் பேச்சுனுடே நிறைய இடைவெளி. நடுவில் ' ஹம்' எனும் சத்தம் வேறு. என்ன திட்டமிடலோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதுபோல, பெரும்பாலானவர்கள் சரியான தமிழ் வார்த்தை தெரியாமல் தடுமாறி ஆங்கிலத்துக்குத் தாவினர். ஜெவை புகழ்கிறேன் பேர்வழி எனத் தொடங்கிய ஒருவர் 'தலைமைத்துவ பண்புகள்' எனும் தமிழ் வார்த்தை கிடைக்காமல் சில நொடிகள்
தடுமாறி் கடைசியில் 'லீடர்சிப் குவாலிட்டிஸ்' என பல்டி அடித்தார். இதுபோல பல தருணங்கள்.

இந்த வர்ணனையாளர்களை எவ்வாறு தேர்வுசெய்கிறார்கள் எனப் புரியவில்லை. தெளிவான உச்சரிப்புடன் பேசும் ரவி பெர்ணாட், வீர பாண்டியன் போன்றவர்கள் இப்போது களத்தில் இருக்கிறார்களா ?

திராவிட அரசியல் தெரிந்து, இறந்தவரைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுடன் காத்தாரமான ஒரு வர்ணனையை யாரும் தந்தது போலத் தெரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன் பார்த்த எம்ஜிஆரின் இறுதிஊர்வல நினைவுகளை சுமந்து கொண்டு சொல்கிறேன். கடந்த வாரம் இவர்கள் தந்தது வெற்றுக் கூச்சலைத் தாண்டி வேறில்லை. பின்ணணியில் அந்த மெலிதான சோக இசை மட்டும் இல்லையெல்லால் இவர்கள் பாடு வெகுத் திண்டாடமாயிக்கும் .

கடைசியாக ஒரு விசயம், தமிழ்நாட்டைத் தாண்டி உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வில் நல்லத் தமிழில் நிகழ்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து காட்சி ஊடகங்கள் தவறிவிட்டன என்பது எனது கருத்து.

இறுதியாக,  அவரை இழந்து தவிக்கும் கோடான கோடி நல்ல உள்ளங்களுக்கு எனது ஆறுதல்கள். மறைந்த முதல்வரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

எம்.ஜி.ஆர் - ஜெ எனும் இந்த சிறிய கட்டுரைத்தொகுப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன். உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

Wednesday, December 14, 2016

சினிமா டைரி-3

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது. 

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக. இரண்டாவது பகுதிக்கு இங்கே சொடுக்குக.

சிறந்த திரைக்கதை ஆசிரியரும் நடிகருமான பாக்யராஜின்
மிகப் பெரிய வெற்றிப்படம் "அந்த ஏழு நாட்கள்".
அவர் நடிகை அம்பிகாவுடன், அப்பாவி பாலக்காட்டு மாதவனாக தன் நகைச்சுவை நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த படம். சரி நாம் படத்தலைப்புக்கு வருவோம்.

குறிப்பாக நாட்கள் பற்றி. நாள்+கள் = நாட்கள். இதில்  
நாட்கள் பிழையன்று. ஆனால் பொருள் திரிபுக்கு (நாள்பட்ட கள்) இடம்தருதலால்  நாள்கள் என இயல்புற எழுதலாம்.

அது மட்டுமல்லாமல்,  தமிழில் அலகுகளைக் குறிப்பிடுகையில் பன்மை அவசியமில்லை. 'இரண்டு நாள் கவியரங்கம்', 'மூன்று மாதத் திருவிழா' என்றால் 'நாள்', 'மாதம்' ஆகியவை தானே பன்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடும்.

***
"அபியும் நானும் " நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த படம். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்ட இப்படம் வந்த புதிதில் பெரிதும் பேசப்பட்டது.

சரி தலைப்புக்கு வருவோம். இந்தத் தலைப்பில் "அபியும் நானும்" என்பதில் வரும் "உம்" என்பது இணைப்பை உண்டாக்கும் ஒர் இடைச்சொல். நாம் "உம்" மை நாளாவட்டத்தில் கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
அதை எளிதான சில  வாக்கியங்களின் மூல
ம் பார்த்துவிடலாம்.

"நீங்கள் சொத்துகளை வாங்கவும், விற்கவும் இனி பான் நம்பர் அவசியம்".


இதில் வாங்கவும் விற்கவும்-வாங்குவதற்கும் விற்பதற்கும் என்று பொருள்தரும் இணைப்புச்சொல்லாகவே பயன்பட்டுள்ளது.வரவும்,போகவும் வசதியாக-இதில்பிழையில்லை.

"இந்த இணைப்பைச் சொடுக்கவும் "

என்பது பிழை. இதுபோல நீங்கள் உடனே வரவும்,கடிதம் போடவும்,அனுப்பிவைக்கவும் என்பதுபோல் கட்டளைப்பொருளில் பயன்படுத்துதல் பிழை.


***

சின்னத்திரையில் முடிசூடா மன்னனாக
வலம் வந்துக் கொண்டிருக்கும்
‘மெட்டி ஒலி‘ புகழ் திருமுருகன் இயக்குநராக
அறிமுகமான திரைப்படம் "எம்டன் மகன்". 

அந்தத் தலைப்பில் இருக்கும் "எம்டன்" என்பதை கில்லாடி அல்லது தந்திரக்காரன்
எனும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். "எம்டன்" என்பது தமிழ் வார்த்தையில்லை. அதற்கான பெயர் காரணம் தெரியாதவர்களுக்காக, ‘எம்டன்’ என்பது ஜெர்மனியின் யுத்தக் கப்பல் ஒன்றின் பெயர்.

1914ல் அன்றையச் சென்னையை யாரும் எதிர்பாராத

சமயத்தில் அது குண்டு வீசி தாக்கியது. சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த தாக்குதலில் மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. அதன் தொடர்ச்சியாக நாம் கில்லாடி ஆட்களை எம்டன் எனச் சொல்வது பேச்சுவழக்கானது.

Friday, December 9, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-1

'எம்ஜிஆரின்  இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன்  ' என இப்போது சொன்னால்  சிலருக்கு  அது சிரிப்பாக இருக்கலாம்.  ஆனால் அது உண்மை.  உங்களில் எத்தனைப் பேருக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இறுதிப் பயணம்  நினைவிருக்கும் எனத்
தெரியவில்லை.  அது நடந்தது 1987ல்.   நான் பத்து வயது சிறுவன்.
அப்போதெல்லாம் டிவி என்றால் தூர்தர்ஸன் தான். அவர்கள் வைத்தது தான் சட்டம். மற்றபடி செய்திகளுக்கு பத்திரிக்கைகளை விட்டால் வானோலி மட்டுமே.

அந்த சமயத்தில் வந்த  நடிகர் பாக்கியராஜின் அவசரபோலீஸ் 100 படத்தில் தலைவரின் இறுதிப்பயணத்தை  சிறப்புக் காட்சியாக காண்பித்தார்கள். எம்ஜிஆர் உயிருடன் இருக்கையில் பாக்கியராஜை தனது கலை உலக வாரிசாக அறிவித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், அப்பா புரட்சித்லைவரின்  தீவிர  ரசிகர். அவரோடு தியேட்டருக்குப் போயிருந்தேன்.  அந்தக் காணோலி 30 நிமிடங்களுக்கு மேல் ஒடியதாக நினைவு. அதில் வரும் ஒர் காட்சி இன்னமும் மனதில் நிற்கிறது. கட்சித்தொண்டர் ஒருவர் சாலையோர கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பார். அப்போது வானோலியில் புரட்சித்தலைவரின் மறைவை  அறிவிப்பார்கள். முதன்முறையாக தலைவரின் மரணத்தைக் கேட்ட அந்தத்தொண்டரின் அதிர்ச்சியை,   முகமாற்றத்தை,உணர்ச்சிப் பூர்வமான அந்த ரியாக்சனை  அப்படியே  பதிவுசெய்திருப்பார்கள்.

கையில் கண்ணாடிக் குவளையுடன் நின்ற பாசாங்கற்ற அந்த சாமானியனின் முகம் இன்னமும் நெஞ்சில் நிற்கிறது.    அதுபோல
இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகத்தில்  உண்மையான சோகம் இருந்தது. பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு   கதறி  அழுதனர்.  அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் ஆதர்சன நாயகனாக, ஏன் தெய்வமாக இருந்தார்.


அப்படியானதொரு உணர்ச்சிகரமான காட்சிகளை மறைந்த முதல்வர் ஜெயின் இறுதி ஊர்வலத்திலும் பார்க்கமுடிந்தது. அது பற்றிய எனது எண்ண ஒட்டங்களை வரும் நாட்களில் பதிவு செய்கிறேன்.

Friday, December 2, 2016

சினிமா டைரி-2

நண்பர்களே,  சினிமா டைரி தொடர்கிறது.

முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக.

            ***
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின்
"நிழல் நிஜமாகிறது" படத்தில் வரும் அருமையான பாடல் "கம்பன் ஏமாந்தான்". நடிகர் கமல் உதட்டசைக்க பாடகர் பாலு ரசித்து "பாவமாக" பாடியிருப்பார். "ஏமாந்தான்" எனும் அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? "ஏமாற்றுதல்" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். "ஏமாற்றப்படுதல்" என்பதற்கு ? -"ஏமாற்றப்பட்டான்", "ஏமாறினான்" என எழுதலாம். "ஏமாந்தான்" பிழையான சொல். வேண்டுமானால் அதை பேச்சு வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் "ஏமாந்தான்" சரியான சொல் அல்ல. அதனால் இனிமேல் ஏமாறவேண்டாம். ;)

                 ***
மறைந்த இயக்குநர் பாலுமகேந்ராவின்
இயக்கத்தில் வந்த திரைப்படம் "ராமன் அப்துல்லா".
"உன் மதமா ? என் மதமா ? " எனும் நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றிருந்த படம்.
அது மட்டுமில்லாமல் படம் வந்த புதிதில் அந்தத் தலைப்பிற்காகவே பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தலைப்பை "இராமன் அப்துல்லா" என எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் 
"ல,ள,ர,ற" போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும்,ராகவியை யும் எப்படி எழுதுவதாம் ?. அவற்றை அ,இ,உ சேர்ந்து எழுதவேண்டும். (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பது சரி.

அது சரி, நீங்கள் பாலுமகேந்ராவுக்கு ரசிகரா ? இரசிகரா ? ;)
             ***


"என் ராசாவின் மனசிலே " ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றித்திரைப்படம். நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமான படமும் கூட. அருமையான பாடல்கள். 

அது இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரை முன்னிறுத்தியே படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டது.


"என் ராசாவின்.. " எனும் அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு சிறிய தகவல். எனது சட்டை, எனது ஜன்னல் என உடைமைப்பொருட்களை "எனது" எனலாம்.

ஆனால், உறவுப் பெயர்களை என் மகள், என் மகன், என் நண்பன் என்றே குறிப்பிடவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" நினைவுக்கு வருகிறதா ?

          ***

Friday, November 25, 2016

அரசியல் பழகு - சமஸ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சமஸின் "அரசியல் பழகு" எனும்
சிறு நூலை வாசித்தேன்.   இது ஆசிரியர் தமிழ் இந்துவிற்காக
2016 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.



இந்தக் கட்டுரைகளை எழுதும் முன் ஆசிரியர் தமிழகத்தின் வெவ்வேறு  பின்புலம் கொண்ட 25,000   கல்லூரி மாணவர்களைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தக் கட்டுரைகள் இன்றையத்
தலைமுறையின் உண்மையான மனஓட்டத்தைப் புரிந்து  கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த இளைஞர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு அரசியல் அறிமுகத்துக்கு அறைகூவல் விட்டு அழைக்கும் வகையிலேயே நூல்  " அரசியல்  பழகு"  எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

சமூக பார்வையற்ற கேளிக்கைகள், "படிக்கும் போது உன் கேரியர் முக்கியம்"  எனச் சொல்லி  வளர்க்கப்படும் மாணவர்கள், "அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கானதல்ல "  எனும் பொதுபுத்தி போன்ற பல சமூக சீர்கேடுகளைக் கண்டித்திருக்கிறார். அந்த  மனப்பான்மை மாற வேண்டும்  என்ற கருத்துடைய "அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்"  என தனது முதல் கட்டுரையைத் தொடங்குகிறார்.

சமூகம், அரசியல் பிரஞை  எதுவுமற்ற சூழல் ஆபத்தானது என்பதைச்சொல்லும் அதே வேளையில் அரசியல் விழிப்புணர்வு ஏன் இன்றைய அவசரத் தேவை என்பதை நாட்டின் இன்றைய சமூக சீர்கேடுகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார். அதற்க்காக  உலக அரங்கில் இந்தியா பற்றிய பல தரவுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைகைக்கிறார்.

அதேபோல,  இந்தியா மிகப் பெரிய ஜனநாயகநாடு, நமது அரசியலைமைப்புச் சட்டம் அனைவருக்குமானது  என்பதை  பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.  தேர்தலில் நம் ஒவ்வொருவருடைய ஒட்டும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறார்.

ஆனால், இன்றைய தலைமுறைக்கு நல்ல தலைவர்களாக அடையாளம் காட்ட ஆசிரியருக்கு சுதந்திரம் பெற்ற  இந்தியாவில் காந்தி, நேரு,காமராஜ்  என விரல்விட்டு எண்ணும் தலைவர்களே
இருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விசயம்.

உண்மையைச் சொல்வதென்றால்,    நாம்  பொதுவாக   அரசியல் பற்றி பொதுவெளியில் (என்னையும் சேர்த்து) பேசுவதில்லை இல்லை அப்படிப் பேசத் தயங்குகிறோம். அந்த தயக்கங்கள் முற்றிலுமாக ஒழிந்து அரசியல் என்பது அடிப்படையில் சகமனிதருக்கும் நமக்குமான உறவு என்பதை உரத்துச் சொல்ல முயலும் நூல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

இது அரசியல் அறிந்தவர்களுக்காகான நூல் இல்லை எனும் ஆசிரியர் குறிப்புடன் இருக்கும் இந்த நூலின் விலை ரூபாய். 20, பக்கங்கள்-48

படம்- நன்றி இணையம்


அரசியல் பழகு
சமஸ்
துளி வெளியீடு
விலை : ரூ.20

Tuesday, November 22, 2016

சினிமா டைரி-1

எனது தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள்
எழுதிய "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்" நூல் வாசிப்பின் அனுபவங்களை எளிமையாக  அனைவருக்கும் புரியும்படி
பகிரவிரும்பினேன்.

அதை திரைப்படங்களை வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

**
நாயகனாக ஜெயம் ரவி , எதிர்மறையான வேடத்தில்
அரவிந்த்சாமி நடித்து சமீபத்தில் வெற்றிப் பெற்ற
அதிரடித் திரைப்படம் "தனி ஒருவன்". ஒரு மாறுதலுக்காக நாம் இப்படி யோசிக்கலாம். இதே படத்தை இயக்குநர் ஷங்கர் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜூலீயை நாயகியாக வைத்து
ஒரு படம் எடுத்தால் ? ;) "தனி ஒருவள்" எனத் தலைப்பிடலாமா? கூடாது, அப்படி செய்தால் அது தப்பான தலைப்பாகவே இருக்கும். ஒருவன், ஒருத்தி என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். ஆனால், "ஒருவன் " என்பதுபோல் "ஒருவள் " என்பதும் "ஒருத்தி " என்பதுபோல் " ஒருத்தன்" என்பதும் பிழை.   அதே சமயத்தில் ஒருவனோ, ஒருத்தியோ -இருவரையும் "ஒருவர் " எனச்  சொல்லலாம் தவறில்லை.


** அஜித் நடித்த வெற்றிப் படம் " உன்னை கொடு என்னை தருவேன்" இதை சரியாக எழுதினால் "உன்னைக் கொடு என்னைத் தருவேன் " . திரையில் "க்","த்" விடுத்து எழுதியிருப்பார்கள். இப்படி திரையுலகில் படத் தலைப்பிற்கு தேவையின்றி ஒற்று சேர்ப்பதும் நீக்குவதும் வாடிக்கை. அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணமல்லாத காரணங்களுக்கு நாம் போக வேண்டாம். இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" வருவதால் ('உன்னை', 'என்னை') வலி மிகும் என்பது செய்தி.

**

"நாயகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் நம் நெஞ்சில் என்றும் நீங்காத பாடல். அந்தப் பாடலில் எந்த குறையுமில்லை. :) அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்லும் இந்த நேரத்தில்
தீபாவளி பற்றிய ஒரு நல்ல தகவல். சமீப காலங்களில் ஊடகங்களில் தீபாவளி, தீபத்திருநாள், தீபஒளித்திருநாள் என பல சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிலிருக்கும் நுட்பத்தை பார்ப்போம். தீபாவளி=தீபம் + ஆவளி ( தீபங்களின் வரிசை )
தீபத்திருநாள் = தீபங்களின் திருநாள்
தீபஒளித்திருநாள் = தீபங்கள் ஒளிரும் திருநாள்
ஒளிர்ந்தால் தானே தீபம் ? அதனால் "தீபஒளித்திருநாள்" என்பதில் ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்பதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.


மேலும் தொடர்வேன்.

Sunday, November 13, 2016

பருக்கை - வீரபாண்டியன்

சமீபத்தில்  2015ல்  சாகித்ய அகாதமியின்   'யுவ புரஷ்கார்'  விருது பெற்ற வீரபாண்டியனின்  "பருக்கை" நாவலை (புதினம்)வாசித்தேன்.

தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான "பருக்கை" என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டின் முதலில் பாராட்டுக்குரியவர்.

சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு,  தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு  என  எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.


படிக்க வரும்  அவர்கள்  கையில் காசில்லாததால் படிப்புச் செலவுக்காகவும் நல்ல சாப்பாட்டிற்காகவும் சென்னையில் "கேட்டரிங்" எனும் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள். அங்கே நேரும் அவமானங்கள் , அனுபவங்கள் எனக் கதை விரிகிறது.


கல்யாணவீடுகளில் நாம் எளிதாகக் கடந்தபோகும்  அந்தச் சாமானிய மனிதர்களின் உள்ளக்குமுறலை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் ஆசிரியர்  பதிவு செய்திருக்கிறார்.  கதையுனுடே இந்த நகரச்சூழலில் அந்த இளைஞர்கள்  எதிர் கொள்ளும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், காதல், வர்க்கப்பிரிவினை, பண்பாட்டுச் சிக்கல்கள் எனும் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
  
கதை பெரும்பாலும் பெரிய வர்ணனைகள் இல்லாமல் இயல்பான உரையாடல்களால் நகருகிறது. இயல்பான அன்றாட பயன்பாட்டிலிருக்கும் சாமானியனின் மொழி கதைக்குப் பலம்.

"ஏய்யா.. உங்களுக்லாம் அறிவில்ல ? வேலை செய்யிறதுக்குதான வந்திங்க.. டைம் ஆச்சில்ல எலயப் போடாம வடைய எடுத்துத்
தின்றிங்க. ...." (பக்கம்-153)

இதில் பட்டினி வயிறோடு பந்தியில் ஒடியாடி உணவு பரிமாறுபவனை ஒரு சகமனிதனாக மதிக்காமல் நோகடிக்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறார்.

".. (நீ ) இங்க  மெட்ராஸுக்கு வந்து படிக்கிறன்னு உங்கப்பன் அங்க ஊருபுல்லா பெருமையடிச்சிட்டுக் கெடக்குறான்.  நீ இன்னானா இங்க டீய வித்துங் கெடக்குற. இதுக்குதான் உங்கொப்பன் உன்ன படிக்க அனுப்ச்சானா ? ..." (பக்கம்-239)

ஒரு கிராமத்து மனிதரின் ஆற்றாமையான உள்ளக் குமுறல் அது.

கதையில் கல்யாண மண்டபங்களின் திரை மறைவு விசயங்கள், கல்யாண வீட்டுச் சமையல், அங்கே சமைப்பவர்கள், பரிமாறுதல் போன்ற விசயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வரும் பல நுண்விவரங்கள் வியக்கவைக்கின்றன.

"சாப்பிடுகிறவர்கள் பாராட்டுகிற மாதிரி சாம்பார் ஊற்றுவது ஓரு சாதனை. அந்தப் பாராட்டுதல் அவர்கள் முகத்திலேயே தெரியும். ஒரு தலை ஆட்டுதலிலோ, ஒரு தேங்ஸ்-லோ, விழிகள் விரிய அவர்கள் தரும் சிறு புன்னகையோலோ.. அது தெரியக்கூடும். ஒரு சுருங்கிய முகம் சாம்பார் ஊற்றியதில் மயங்கி மலர்வதிலோ அது தெரியக்கூடும்......  " (பக்கம்-132)

".. சோறு கட்டியாக இல்லாமல் உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தால் ரசம் ஊற்றுவது சுலபம். ரசத்தை ஒரே இடமாக ஊற்றாமல், சோற்றுக்குள் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசை ஊற்றும் போது மாவை வட்டமாகத் தேய்ப்பது போல ரசத்தை ஊற்றினால்,.....  " (பக்கம்-133)

ஒடியாடி பரிமாறிக் களைத்து போய் விரும்பிய உணவு தீர்ந்து, பசியெல்லாம் சுத்தமாய் அடங்கி, ஆறியச் சாப்பாட்டைக் கடைசியில் சாப்பிடும் அவலத்தைச் சொல்லும்  இந்தக் கதையில் பசி எனும் உயிர்ப்பு கடைசி வரை தொடர்கிறது. அதுவே எழுத்தாளரின் வெற்றியாக நினைக்கிறேன்.

இளமையில் வறுமை எனும்  துயரம் அனுபவித்தால் தெரியும் என்பதை வாசகர்களுக்குக் கடத்துவதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது கதையில் வரும் எழுத்தாளரின்
ரசிக்கும் படியான சில சொந்தக் கவிதைகள்

"பெண்கள் குனியும் போதெல்லாம்
கும்மாளம் போடாதீர்கள்
உங்கள் மனைவிக்கும்
தண்டுவடம் தாழாமலிருக்காது.. " (பக்கம்-149)

இயல்பான நகைச்சுவைக் கதையில் ஒடுவதும் நல்ல அம்சம். அதுபோல, கதையில் ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது.  குறிப்பாக அரசு விடுதிகளின் சீர்கேடுகள், உடன் படிக்கும் கண் பார்வையற்றவரின் சிரமங்கள் எனப்  பல மெத்தனங்களுக்குச் சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

விருது பெற்ற நாவல் எனும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றங்களும் உண்டு. 

முதல் படைப்பென்பதால் பெரிதாகத் திட்டமிடல் இல்லாமல் எழுதப்பட்டது போலுள்ளது.  உதாரணமாக.  கதைசொல்லியின் நண்பர்களை எந்தவோரு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  கதை நகர்த்தலிலும் அவர்களின் பங்கு பெரிதாக வெளிப்படவில்லை.   நடுவில் வரும்
முழுமை பெறாத  பெண் நண்பியின் கதாபாத்திரம் இப்படிப் பல.

நண்பியிடம் காதலைச் சொல்ல முடியாத தருணத்தில் தனது மனநிலையைக் கதைச்சொல்லி இப்படிப் பதிவுச் செய்கிறார்.

"..அவள் பேசினாலும் 'லவ் பண்றதுலாம் பிடிக்காது ' என்பது மட்டுமே என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மனைவி இறந்து குழந்தை பிறந்த மனநிலையோடு நின்றேன். (பக்கம்-67)"

ஒர் இளம் பெண்ணுடன்  தனிமையில் இருக்கும் மணமாகாத இளைஞனுக்கு இதுபோன்றதோரு  மனநிலை என்பது செயற்கைத் தனமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.

சமீபத்தில் பட்டமேற்படிப்பு முடித்த வீரபாண்டியனின் முதல் படைப்பு இது. அந்த வகையில் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் ஒரு மாணவன் அந்த வாழ்பனுவத்தை ஒரு புனைவாக எழுதுகிறார். அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டு அந்தப் படைப்பு மத்திய அரசின்  உயரிய விருது பெறுவது என்பதைத் தமிழ் எழுத்துலகில் நல்லதோரு தொடக்கமாக நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பாக நல்ல உத்வேகத்தைத் தரும் நிகழ்வு.

அதுபோல ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதால் இந்தப் படைப்பு எவர் கண்ணிலும் படாமல் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். தமிழ் எழுத்துலகில் அதுதான் நிதர்சனம்.  அதிஷ்டவசமாக   இந்தப் படைப்பு இலக்கிய உலகின்  உயரிய விருதால்  நல்ல கவனம் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் வீரபாண்டியன் விருது தந்த இந்த வெளிச்சத்தை வரும் காலங்களில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை எந்தத் தமிழ்படைப்பாளியும் தொட்டதாக நினைவில் இல்லாத மாதிரியான ஒரு கதைக்களன்.  இதை கதைக்கட்டமைப்பு, செவ்விதழ் இலக்கியம் என்றேல்லாம் கறாராகச் சீர்தூக்கிப் பார்க்காமல்  சாமானியர்களின் கதைக்கரு என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் நிச்சயம் இது ஒரு புதுமையான படைப்பு.   

வீரபாண்டியனை வாழ்த்தும் அதே நேரத்தில் ஆசிரியர் புகழ்பெறாதவர் என ஒதுக்காமல் அவரின் நூலை வெளியிட்ட பரிசல் புத்தக நிலையத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

பருக்கை 
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 


இந்தக் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://solvanam.com/?p=47204


Sunday, October 30, 2016

அலமாரியில் ஆரூர் பாஸ்கர்

நண்பர்களே,

எஸ்.ராவின் சஞ்சாரம் புதினம் பற்றிய எனது கட்டுரையை  கிழக்குப் பதிப்பகத்தின் "அலமாரி மாத இதழ்" தனது அக்டோபர் இதழில்
வெளியிட்டுள்ளது.

நன்றி - கிழக்கு.







Tuesday, October 4, 2016

எழுத்தாளர் சுஜாதா - 14 வருட அதிசயம்

எழுத்தாளர் சுஜாதா மிகைப்படுத்தலின்றி அதீத உணர்ச்சிவசப்படாமல் எழுதக்கூடியவர். அதை உறுதி செய்வதுபோல் இருந்தது நான் சமீபத்தில் வாசித்த அவருடைய  ''நிலா நிழல்'' நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரை.  அந்த 14 வருட அதிசயத்தை  நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுஜாதா ''நிலா நிழல்'' யை   தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை. அந்தக் கதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் இரண்டாம் பதிப்பாக வெளியிடும்போது கவனித்து சுஜாதாவிடம் சொல்ல. சுஜாதா 14 வருசங்கள் கழித்து அந்த விடுபட்ட அத்தியாயத்தை எழுதித் தருகிறார். நிலா நிழல் லின் இரண்டாம் பதிப்பில் இதை சிலாகித்து எழுதிய சுஜாதாவின் முன்னுரை இங்கே.

"உலகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் பதினான்கு வருஷம் கழித்து எழுதப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன்.
எழுதும்போது மனதின் அடித்தளத்தில் தேங்கியிருந்த கதைக்கருவின் வடிவம் மறு உயிர் பெற்றது எழுத்து பிசினஸ்ஸில்
உள்ள விந்தைகளில் ஒன்று. "



இந்த நிகழ்வை கண்டிப்பாக வேறேந்த எழுத்தாளராக இருந்தாலும்
உணர்ச்சிப்பூர்வமாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருப்பார்கள் என்பது எனது அனுமானம்.

ஒரு அத்தியாயம் தொலைந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது முதல் அதிசயம். அதைத் தாண்டி,  சுஜாதா கதை எழுதியது 1988, பின் 2002ல் அதாவது  14 வருடங்களுக்கு பின் விடுபட்ட அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். நான் 14 வருடங்களுக்கு பிறகு 2016ல் அதை கவனித்து எழுதுகிறேன்.  இந்த நிகழ்வு 14 வருட அதிசயம் தானே  ? ;)



புகைப்படங்கள் நன்றி:
www.google.com



Sunday, September 25, 2016

இவர்கள் வாசகர்கள்-4

நண்பர்களே,  எனது இரண்டாவது புதினம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை கேட்கிறது.  போன வாரம்
ஒரு வழியாக  எழுத்துப்பணி நிறைவடைந்து இந்த வாரம்
பிழைத்திருத்தத்தில் இருக்கிறேன். முழுதாக முடிந்ததும் சொல்கிறேன்.

"இவர்கள் வாசகர்கள்" பகுதியில்  "பங்களா கொட்டா" புதினம்
பற்றி  குமுதம் புகழ் நண்பர் சுரேஷ் கண்ணன் அவரகளின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  நான் முன்பே சொன்னது போல வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்களின் முன் வைக்கிறேன்.

வாசகர்களின் பரந்துபட்ட கருத்துகளால்,  நான் ஒரு படைப்பாளியாக நிறைய கற்றுக் கொள்கிறேன் என சொல்லிக் கொள்வதில் மிகையோன்றுமில்லை.

***********

நண்பர் ஆரூர் பாஸ்கர், அவருடைய நாவலான 'பங்களா கொட்டா'வை அனுப்பித் தந்தார்.
அது பற்றிய விமர்சனக் குறிப்பு, புத்தக மதிப்புரைகளுக்கென வெளிவரும் பிரத்யேக மாத இதழான 'அலமாரி'யில் வெளிவந்துள்ளது.
நண்பருக்கு வாழ்த்துகள்.

அலமாரி  (கிழக்கு பதிப்பகம்)





பங்களா கொட்டா வை வாசித்து கருத்துகளைச் சொன்ன சுரேஷ் கண்ணனுக்கு எனது நன்றிகள்!!

Friday, September 16, 2016

துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்

ஜூலையில்  கவிஞர் உமா மோகனின் "துயரங்களின் பின்வாசல்"
கவிதைத் தொகுப்பு இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறி என் முன்வாசல் வழியாக வந்தது.

நூலின்  எனும் தலைப்பை பார்த்தவுடன் ஓருகேள்வி
எனது மனத்தை துளைக்கத்தொடங்கியது.   துயரத்தின் பின்வாசல் எப்படியானது ? நல்லதா ? கெட்டதா ?  என்பது பற்றியது.  எங்கள் ஊர் பக்கம் எந்த நல்லவிசயம் செய்தாலும் வாசல் பக்கமாக  செய்ய வேண்டும் என்பார்கள்.  அதாவது யாருக்காவது  நெல்லோ, பணமோ, கூலியோ எது
கொடுப்பதாக இருந்தாலும் அது  முன் வாசலில் வழியாகதான்.   அது நல்ல சுபமான  காரியங்களுக்கு. துயரத்துக்கு ? துயர வீட்டை கடந்து பின்வாசல் வழி வெளியேறிச் செல்வது சுபமாகதான் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் நூலின் உள்ளே நுழைந்து வெளியேறி சரியெனத் தெளிந்தேன்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஓரு கவி சாதாரணமானவன் அல்ல.

அவன் இந்த உலகை  தன் புறக்கண்ணால் பார்த்து எளிதில் கடந்துபோகக்கூடியவனில்லை. அவன்  இந்த உலகை அகக்கண்ணால் கண்டு அதை உயிரின் உள்கடத்தி அந்த அனுபவத்தை கவிதையாய் வடித்துத் தருபவன் என்பதை உமா மோகனின் துயரங்களின் பின்வாசல் கவிதைத் தொகுப்பில் அறியமுடிகிறது.

எந்தவோரு நிகழ்வையும் புறவயமாக கடந்துசெல்லாமல் தன் மனதின்
தவிப்புகளை   அழகான கவிதைகளாக்கியிருக்கிறார். அந்தக் கவிதைகளின்  நுட்பத்தை கண்டு வியந்தேன். உதாரணமாக இதைச் சொல்லிவிடுகிறேனே. கவிஞரின் பூங்கொத்து கவிதையை பாருங்கள்

பூங்கொத்து அழகாகத்தான் இருக்கிறது...
முன்னறியா நிறங்களில்
வித்யாசத் தோற்றங்களோடு
..
விலை கேட்டதும் 
நாளை வாடிவிடுமே எனத்தான்
தோன்றுகிறது
 ..

பூங்கொத்தின் விலை கேட்டாலே அது வாடிவிடுமே என நினைக்கும்
அந்த மென்மையான மனநிலை ஓரு ஆச்சர்யம்.  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை  அல்லவா கவிஞர்
நினைவுபடுத்திவிட்டார்.

கவிஞரால் இந்த அவசர யுகத்தில் அந்த சின்ன  மகிழம்பூக்களை நினைக்க முடிகிறது.  அதைப் பற்றி  அவரால் உருகியபடி  கவிதையும் எழுதமுடிகிறது.


அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்துக் கொண்டு
நடத்தல் சாத்தியமில்லை.. - பக்கம்-18

அந்த மகிழம்பூவிலிருந்து "உங்கள் மழையும் எங்கள் மழையும் ஓன்றல்ல " எனும் கவிதையில் விவசாயக் குடும்பத்தின் அவலத்தை சொல்வது வரை 
பல கவிதைகளில் இவர் இந்த மண்ணை,  மக்களை மழையை,  இயற்கையை நேசிக்கும் மென்மனது கவிஞராய் மிளிர்கிறார்.



தனது முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சொன்னது போல உமா மோகன் தன் கவிதைகளின் மூழம் துயரத்தின் பின் வாசல் வழி அனைவரும் வெளியேறினார்களா ? எனும் தவிப்புடன் பதைபதைக்கிறார்.

அது போல,  மாய்ந்து மாயந்து   விலை மதிப்பான வைரம் வாங்கும் சமூகம், "வைரம்" எனும் பெயரை பழசு என குழந்தைகளுக்கு வைக்க மறுக்கும்
முரணான மடமையை கவிஞர்  ஏக்கத்தோடு பதிவு செய்கிறார்.

பார்ப்பதே களைப்பு உனக்கு
பறத்தலின்  
சுகம் அறியாய்
அலங்காரத்துக்கேனும்
சிறகு விரித்துப் பார்.  -51

என்பதில் அவர் சகமனிதர்களிடம் வைத்திருக்கும்  அந்த வாஜ்ஜை தெரிகிறது.

குறிப்பெழுதி வைக்காமலே
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத்
தெரியுமளவு
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் - பக்கம்-34

எதைக் கண்டும்
காறித்துப்புமளவு எச்சில்
சுரப்பதில்லை இப்பொதெல்லாம்..பக்கம் -56

எனும் போது அவர் தன் ஆற்றாமையை சொல்கிறார்.


ஓரு கவிதை தொகுப்பை ஓவ்வோருவரும் தங்களுக்கு பிடித்த வகையில் மனதுக்குள் கற்பனை செய்துக் கொள்கிறார்கள்.சிலருக்கு மலர்த் தோட்டம்,
கரும்புத் தோட்டம், நீரோடை  இப்படி பல.  எனது முதல் தொகுப்பான
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" க்கு  முன்னுரை எழுதிய நிரஞ்ஜன் பாரதி கூட வீட்டின் சமையலறையிலிருந்து வரும் சர்க்கரைப் பொங்கல் போல மணம் வீசுவதாக வாழ்த்தியிருந்தார். அது அவர்களின் மனநிலையை பொறுத்தது என்பேன். இந்த தொகுப்பில் பல கவிதைகள் எனக்கு இனிப்புத்துண்டு.

 நாம்  சமயங்களில் சில இனிப்புகளை சாப்பிடும் போது அதன் முதல்
கடியின் சுவையிலேயே  அதிசயித்து திகைத்து நின்றுவிடுவோம். அந்த ஓரு துண்டின் சுவையிலேயே லயித்து, திளைத்து நம்மை மறந்து பேரானந்தம் அடைவோம்.  குறிப்பாக  துயரங்களின் பின்வாசல் எனும் இந்தக்  கவிதையை படித்த போது அந்த அனுபவம் எனக்கு.

மையோ மரகதமோ அய்யோ வும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஓன்றாகுமா .. பக்கம் -91

மேலும் சிறக்க வாழ்த்துகள் உமா மோகன்.

நூல்  : துயரங்களின் பின்வாசல்
ஆசிரியர் :  உமா மோகன்
வெளியீடு : வெர்சோ பேஜஸ்
விலை : 80

Sunday, August 21, 2016

இவர்கள் வாசகர்கள்-3

நண்பர்களே,  

இவர்கள் வாசகர்கள் பகுதியில் ' பங்களா கொட்டா '  அனைத்து தரப்பு வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்கள் முன் வைப்பதையே நான் விரும்புகிறேன். புதினம் பற்றி நண்பர் அரசன் அவர்கள் வாசகர் கூடம் தளத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் உங்களுக்காக இங்கே. 


இதுபோன்ற வாசக நண்பர்களின் தொடர் உற்சாகமே எழுதுபவர்களை உற்சாகப்படுத்தி   தொடர்ந்து முன்னேடுத்துச் செல்ல உதவும். அந்த வகையில் அரசனின் நடுநிலையான கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரசனுக்கு எனது நன்றிகள் பல.

****
ண்ணையும் அதன் சார் மனிதர்களையும் பற்றிய படைப்புகள் என்றால் எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு தட்டாது எனக்கு. அந்த மாதிரியான களத்தினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது இந்த பங்களா கொட்டா நாவல். புகழ் மிகுதி கொண்ட மனிதர்களைத் தான் இந்த உலகம் படைப்பாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கிறது. புதிதாய் வருபவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களது முயற்சிகளுக்கு செவி சாய்க்காமல் வெற்றி பெற்றவனின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற சம காலத்தில், புதிதாய் ஒரு நபர் புத்தகம் வெளியிட்டு அதை சந்தைப் படுத்துவதில் உள்ள சிரமத்தை சமீபத்தில் உணர்ந்தவன் நான்.




பங்களா கொட்டா மூலம் மண்ணை மோதிப் பிளந்து கொண்டு வந்திருக்கும் புதிய விருட்சம் தான் நண்பர் ஆரூர் பாஸ்கர். படைப்பு வெற்றியடைந்து உலகம் கொண்டாடுதோ இல்லையோ? இம்மாதிரியான முயற்சியினை ஆரத்தழுவி வரவேற்க வேண்டியது சக படைப்பாளிகளின் கடமை. அதற்கான சூழல் தமிழிலக்கிய உலகில் சாத்தியமில்லை. சரி வாருங்கள் பங்களா கொட்டா நாவலைப் பற்றி காண்போம்.

ஒரு கிராமத்திற்கு அடையாளமாக இருக்கும் பரந்து விரிந்த பண்ணை, பண்ணையின் பெரியவர், அவரின் மூன்று வாரிசுகள், மற்றும் பண்ணையினை நம்பி பிழைக்கும் அவ்வூர் மக்கள் சிலர். இவர்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது பங்களா கொட்டா. மேலோட்டமாக பார்த்தால் எளிமையிலும் மிக எளிமையான புனைவைப் போன்று தான் தெரியும். ஆனால் வாசித்தால் மட்டுமே அதன் அடர்த்தியை உணர முடியும். விவசாயத்தினையும், அதனை செய்யும் மாந்தர்களின் மன நிலைக் கூறுகளையும் முடிந்த வரை பதிவு செய்ய முயன்றிருக்கிறார் நண்பர் ஆரூர் பாஸ்கர்.

பண்ணைக்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவன் நகரத்தில் வழக்கறிஞர் பணி, அவ்வப்போது கிராமத்திற்கு வந்து தலை காட்டிவிட்டு போகும் மனிதர். அடுத்து, ஞானி இவர்தான் தனது படிப்பினை மேலும் தொடர விருப்பமின்றி விவசாயத்தின் மீது தீவிர பற்று கொண்டு, வயசான பண்ணை முதலாளிக்கு துணையாக இருந்துகொண்டு விவசாயம் தடை பட்டு போகாமல் பார்த்துக்கொண்டு வருகிறார். கடைக்குட்டி இராசு அதீத பாசத்தினால் சீர்கெட்டு திரியும் இளம் மைனர். இம்மூவர்களின் நிலப் பங்கீடும், அதன் வழி கிளம்பும் சில சிக்கல்களும், இடையே ஞானியின் காதலும் என்று கலவையான படைப்பு. மற்ற இருவரும் நிலத்தினை பங்கிட்டு காசு பார்க்க துடிக்கையில் ஞானி மட்டும் ஒரு கல்லூரி கட்டி இலவச படிப்பினை வழங்கும் நோக்கில் தனது செயலினை முன்னெடுக்கிறான். கிட்டத்தட்ட ஞானியினை மையப்படுத்தியே கதை நகர்கிறது. விவசாயம் செழித்தோங்கிய மண்ணில் தற்போது நிலவி வரும் வறட்சியில் துவங்கி, வாரிசுகளினால் துண்டாடப்படும் நிலக்கூறுகள் உருவாக்கும் அதிர்வுகள் வரை எளிமையாக பதிவு செய்திருக்கிறார்.

எல்லா இடத்திலும் நல்லார்க்கு உள்ள எதிரிகளைப் போன்று இக்கதையிலும் சில நயவஞ்சக மனிதர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதன் கதகதப்பில் சுகம் தேட முயன்று தோற்றுப் போகிறார்கள், அவர்களின் வஞ்சகத்தன்மையை அழுத்தமாக சொல்ல முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார் நாவலாசிரியர் திரு ஆரூர் பாஸ்கர். கிராமத்திலே பிறந்து வளர்ந்த என்னால் நிலப் பிரச்சினைகளினால் ஏற்படும் சர்ச்சைகளோடு எளிதில் ஒன்றிப் போக முடிந்தது, ஆனால் தற்போதைய இளம் வாசிப்பாளர்களால் இயலுமா என்பது கேள்விக்குறி, அவர்களுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விலாவாரியாக பதிவு செய்திருக்கலாம்.

எழுத்து என்பது வெறும் நிகழ்வினை கடத்துபவையாக இல்லாமல் அந்நிகழ்வினை மிகுந்த அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பவன் நான், இக்கதையினுள் நிறைய விசயங்களை அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அதை சற்று மேலோட்டமாகவே கடந்து போயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஞானி கல்லூரி எதற்காக கட்ட வேண்டும் என்று துடிக்கிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறி இருக்கிறார். முக்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க வேண்டிய உருவ/உடல் விவரிப்பினை கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். சில பக்கங்களே வந்து போகும் சாமியாருக்கு கூட தீர்க்கமான பார்வை, நீளமான முடி என்று விவரணை அந்த இடத்தில் தேவையற்றது என் கருத்து.

இன்னொரு மிக முக்கிய பிரச்சினை நிறைய ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக "ஒ" விற்கு பதிலாக "ஓ"தான் இருக்கிறது. இப்படியான பிழைகளை கொஞ்சம் தவிர்த்து இருக்க வேண்டும். இன்னொன்று பேச்சு வழக்கில் தொடங்கிய எழுத்து வழக்கில் கரைந்து மீண்டும் பேச்சு வழக்கில் வந்து நிற்கிறது. முதல் படைப்பு அதுவும் வட்டார வழக்கினை மையப்படுத்தி புனையப்பட்டதினால் பெரும் குறையாக தனித்து தெரியவில்லை என்றாலும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படியான சில குறைகளை கலைந்துவிட்டுப்  பார்த்தால் தனக்கான தனித்துவ அடையாளத்தைப் பெறுகிறது இந்த "பங்களா கொட்டா".      

அமெரிக்காவில் வசித்தாலும் தனது மண்ணையும், அதனுள் வாழ்ந்து மரித்த/வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் நேசித்து அவர்களின் வாழ்வியல் முறையினை எழுத்தில் பதிவு செய்து வரும் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டியது அவசியம். மனிதர்கள் மறந்தாலும், என்றாவது உங்கள் படைப்புகளை காலம் நினைவு கூறும் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்... பெரு வாழ்த்துக்கள்....

================================================================

ஆசிரியர் வலைதளம் : https://aarurbass.blogspot.in/

பதிப்பகம் : அகநாழிகை

விலை : 130/- 

=================================================================

- அரசன்
http://karaiseraaalai.com/


இணைப்பு
http://vasagarkoodam.blogspot.com/2016/08/pangalaakotta.html

Sunday, August 7, 2016

இவர்கள் வாசகர்கள்-2

நண்பர்களே, கிராமத்து பிண்ணனி உள்ளவர்களுக்கு எனது 'பங்களா கொட்டா' நாவல்(புதினம்) பிடித்திருக்கிறது என்ற எனது அனுமானத்தை சமீபத்தில் வந்த இந்த வாழ்த்து உறுதிசெய்திருக்கிறது. வாழ்த்திய அந்த வாசகருக்கு எனது நன்றிகள் !! #bunglawkotta #பங்களா கொட்டா




Add caption

Saturday, July 23, 2016

அமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்

நண்பர்களே,

'கபாலி' யை  இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன்.  தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம்.

இன்று  அமேரிக்காவில்  கபாலி வெளியான மூன்றாவது நாள். ஆனாலும் கட்டணம் சாதாரண படங்களை போலின்றி இரண்டு மடங்கு வசூலித்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.

அமேரிக்காவில்  சிலர்  படம் பார்க்க நூற்றுக்கணக்கான மைல்கள் டிரைவ் செய்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால்
பொதுவாக நான் அது போன்றதோரு வேலைகள் பிடிக்காததால்
அப்படிச் செய்வதில்லை.

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கபாலி சுமார் 30 நிமிட டிரைவில்
திரையிடப்பட்டதால்தான்  சென்றேன். அதுமட்டுமில்லாமல் மலேசிய கதைக்களத்தை எப்படி திரையில் கையாண்டிருக்கிறார்கள் எனும் ஆர்வதிலும் சென்றிருந்தேன். என்னுடைய அடுத்த நாவல் மலேசிய கதைக்களம் என்பது  இங்கே கூடுதல் தகவல். :)

இனி,  படத்தைப் பற்றி எனது அனுபவங்களைப் பார்கலாம்.
என்னுடைய கருத்தை நீங்கள் வாசிக்கும் முன்  ஓரு விஷயம். இதுவரை கபாலி பற்றி எந்த ஓரு விமர்சனத்தையும் நான் வாசிக்க வில்லை. இவை எனது சொந்த கருத்து மட்டுமே. மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

முதலில் படத்தின் கதையை பற்றி பார்போம்.  இதை
ஓரு
மலேசிய தாதாவின் பழிவாங்கும்  கதை என்பதா ?,
இறந்துபோனதாக நினைத்த மனைவியையும், மகளையும் 25 வருடங்களுக்கு பின் சந்திக்கும்
ஓரு மனிதனுடையதா ?,  இல்லை
மலேசிய இன வர்கப்பிரிவினையை எதிர்த்துப் போராட்டுபவனின் கதையா  ?என்றால்,  இது மேலே சொன்ன எல்லாமும் சேர்ந்த கதை எனலாம். ஆனால் மேலேச் சொன்ன எந்தவொரு விசயமும் ஆழமாக சொல்லப்படவில்லை என்பது எனது அபிப்ராயம்.  இருந்தாலும், ரஜினி எனும் ஓரு மிகப்பெரிய சக்தியை வைத்து எல்லாதரப்பையும் திருப்தி படுத்துவது போல படமெடுப்பது
அவ்வளவு எளிதல்ல என்பதேன்னவோ உண்மை.

குறிப்பாக ,ரஜினியின்  முந்தைய படங்களின் சாயல் வரக்கூடாது.
அதுபோல  கமலின் நாயகன் படம் போல வரக்கூடாது என இயக்குநர் மேனக்கெட்டிருப்பார் போல இருக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த படங்கள் வெற்றி அடைந்த சூட்சுமத்தை கண்டேடுத்து கபாலியில் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஓருவர் மலேயில் பக்கம் பக்கமாக பேசி வெறுப்பேற்றினார். அதுபோல, கொஞ்சம் வன்முறையை குறைத்திருக்கலாம். 1980 களில் நடக்கும்  நிகழ்வுகளில் உடை தேர்வு அற்புதம். ஆனால் , சில  காட்சி அமைப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறைகள் கண்ணுக்கு தெரிகிறது.

அது போல சிலகாட்சிகள் இழுவை, உதாரணமாக மனைவியை தேடி மலேசியாவிலிருந்து சென்னை, புதுவை எனச் சுற்றுவது. ரஜினிக்கு இவையெல்லாம் வெகு சாதரணமாக இருக்கிறது.
மலேசிய படம் எனும் முத்திரை வரக்கூடாது என தமிழ்நாட்டுக் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.

இனி நல்ல விசயங்களை பார்கலாம். ரஜினியின் நடிப்பு அபாரம்.
உணர்ச்சி பூர்வமான நடிப்பு. கண்களாலே பேசி மனிதர் அசத்துக்கிறார். அதுவும் 25 வருடத்திற்கு பிறகு மனைவி, மகளை பார்க்கும் காட்சி.   படம் முழுமையும் அப்படி தொடராதா என
ஏங்கத் தூண்டுகிறார்.

ரஜினி, நாசர் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் படத்தில் இல்லை. இருப்பினும் ரஜினியுடன், தோள் கொடுத்து படத்தில் பலமூட்டியிருப்பவர்கள் அவரது மகள்களாக நடித்த இரண்டு பெண்களும் குறிப்பாக ரஜினி தத்தேடுக்கப் போவதாக சொல்லுபவர் அற்புதம். ரஜினியின் மனைவியாக வருபவர் (ராதிகா ஆப்தே) நடிகை செளந்தர்யாவை நினைவுபடுத்துகிறார். அதுபோல  ரஜினியின் நண்பராக வரும் அமீர் எனும் கதாபாத்திரம் கச்சிதம்.

பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன, படம் பார்த்து முடியும் வரை. பிண்ணனி இசை படத்திற்கு கண்டிப்பாக நல்லபலம்.   சில இடங்களில் கண்ணீரை வர வைக்கிறார். படத்தில் நகைச்சுவை இல்லை எனும் குறை எல்லாம் கண்டிப்பாகத் தோன்றவில்லை.
அது போல  ரஜினியை ஓரு நல்ல  நடிகராக இயக்குநர் மறுகண்டெடுப்பு செய்திருக்கிறார். அந்த வகையில் பாராட்டுக்குரியவர்.

ரஜினி ஓரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி. இதை ஓரு திரைப்படமாக பார்க்கும் போது சொல்லவந்த கருத்தை இன்னமும் வலுவாக சொல்லியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.
மலேசிய தமிழர்களின்/தோட்டத் தொழிலாளர்களின் கதையை திரையில் இன்னும் யாராலும் முழுமையாக, ஆழமாகச் சொல்லவில்லை. கபாலியும் விதிவிலக்கல்ல.  லேசாக தொட்டிருக்கிறார். அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

மலேசிய தமிழர்கள் மட்டுமே  தங்களை, தங்களின் வாழ்வை திரையில் பார்த்து, உணர்ந்து இதற்கான பதிலை சொல்லவேண்டும்.

Monday, July 18, 2016

தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகம் - அ. ராமசாமி

பேராசிரியர் அ. ராமசாமி  தமிழ் இலக்கிய உலகில்  தவிர்க்க முடியாத ஆதர்சனங்களில் ஓருவர். பேராசிரியராக, திறனாய்வளராக, விமர்சகராக, நூலாசிரியராக, நாடகவியல் ஆய்கவாளராக இன்னும் பல துறைகளில் பல்லாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர்.

பேராசிரியர் தற்போது அமேரிக்காவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கிறார்.  (இவருடைய மகன் பாஸ்டனில் இருக்கிறார்)
அவர் இந்த மாத தொடக்கத்தில்  நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 2016ம் ஆண்டு தமிழ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அப்போது  பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. அதற்கு உதவிய நண்பர் ஆல்பிக்கு எனது நன்றிகள்.



நேற்றைய  (ஜூலை, 17, 2016) நிகழ்வுக்கு வருவோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாதமொருமுறை இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வை நடத்திவருகிறது.  அந்த நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் பாஸ்டனிலிருந்து  பல்வழி இணைப்பு வழியாக கலந்துக் கொண்டார்.

தனது பேச்சின் தொடக்கத்தில் தமிழ் விழா 2016 பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்தார்.  பின் "தமிழ் நாடகம் ; அடையாளமும், போக்குகளும்" எனும் தலைப்பில் பேசினார்.  நான் சமீபத்தில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு இது.  தனது பேச்சில் நூற்றாண்டு பாரம்பரிய தமிழ் நாடக உலகின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றார்.

அவருடைய பேச்சை தனியாக குறிப்புகள் எதுவும் எடுக்கவில்லை.
அதனால் நிகழ்வின் இறுதியில் கேள்வி நேரத்தில் அவர் தந்த பதில்களை நினைவில்  இருந்ததை  மட்டும்  உங்களுக்கு தருகிறேன்.
(எதேனும் விடுபட்டிருந்தால் அது எனது தவறு மட்டுமே.)  இவை தமிழ் பேசும் அனைவரையும் சிந்திக்கவைப்பது.

தமிழ் நாடக உலகின் மூத்தவர் என  சங்கரதாஸ் சுவாமிகள் மட்டும் கொண்டாடப்படும் அதே வேளையில் பாஸ்கர தாஸ் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஓட்டிக் கேட்கப்பட்ட கேள்விக்கு. 

அது திட்டமிட்டு செய்யபடும் இருட்டடிப்பு அல்ல. சங்கரதாஸ் அவர்கள் நாடக உலகின்  முன்னோடி என்ற அளவில்  பெரிதும் பேசப்படுவதாகச் சொன்னார்.

தமிழ் சிறுகதைகளை நாடகமாக்குதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு

தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறுகதைகளை நாடகமாக்கியதில் தனது பங்கை குறிப்பிட்டார்.  மேலும் ஓருபடி மேலேபோய், கதை என்ன ?, கவிதையையே நாடகமாக்கியிருக்கிறோம் என்றது ஆச்சர்யமே.

காலஞ்சென்ற இயக்குநர் பாலு மகேந்திராவின் கதைநேரம் போன்றதோரு முயற்சிகள் தொடரவேண்டும்.

கர்நாடக சங்கீத சபாக்களில் நாடகங்கள் பற்றி ?

கர்நாடக சங்கீத சபாக்களில் முன்னுரிமை எப்போதும்
இசையென்ற போதிலும்,  அங்கே மற்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஈட்டு நிரப்ப தொடங்கப்பட்டவையே  இயல், இசை, நாடகம் எனும் வரிசையில்  பேச்சும், நாடகமும்.

அந்த நாடகங்கள் நடுத்தர மக்களின், குறிப்பாக சென்னையில் வாழும் குறிப்பிட்ட  ஓரு சமூகத்தின் வாழ்க்கையை ஓட்டியே வளர்ந்து வந்ததாகச் சொன்னார்.

இந்த தகவல்  கண்டிப்பாக புதியவர்களுக்கு நல்லதோரு செய்தியாக இருக்கும்.

தமிழ் சூழலில் நாடகத்தின் இன்றைய நிலை ?

மிக முக்கியமானதோருக்குக் கேள்வி.  தனது உரையில் பல இடங்களில் இதை தொட்டுச் சென்றார். அதை குறிப்புகளாகத்
தருகிறேன்.


  • இன்று  வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும்  திரைப்படங்களும், அரசியலுமே பேசுகின்றன. அவையே  பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்காக தொடர்ந்து முன்  வைக்கப்படுகிறது.
  • சின்னத்திரையின் தாக்கம்,  நகர்மயமாதல் போன்ற காலச் சூழல்
  • நாடகம் எனும் கலை மக்களின் பெரும் ஆதரவு இல்லாத போதிலும் இந்திய அரசின் உதவியாலும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் நாடகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய நாடக முயற்சிகள் தொடர்கின்றன.


தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?

கலை வடிவங்களான கவிதை, நாடகம்,  எழுத்து, மேடைப் பேச்சு,
திரைப்படம்  இவற்றின் மூழம் ஆட்சியைப் பிடித்த அரசியல்
கட்சிகள் அந்த விழுமியங்களை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆதங்கப்பட்டார். கேரள, மகாராஷ்டிர, வங்காள மாநிலங்களை  நல்ல எடுத்துக்காட்டாக சுற்றிக் காட்டினார்.


அடுத்த தலைமுறையில் நாடகத் துறையை வளர்க்க ?

பல கல்லூரிகளில் தொடங்கப்பட்டு, மாணவர்கள் விருப்பிச் சேரும்
ஓரு துறை விசுவல் கம்யூனிகேசன். அந்த  மாணவர்களுக்கு ஓரு குறும்படம் இயக்குவது  என்பது பாடத்திட்டத்தில் இருப்பதால் அவர்கள் நாடகவடிவத்தை  தேடி அணுகும் போக்கு வளர்ந்திருப்பதாகச் சொன்னார். அது  லேசாக
நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

இளைய தலைமுறையிடம்  (மாணவர்களிடம்)  நாடகத்தை கொண்டு செல்வதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான முயற்சியில் தன்னுடைய மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைச்  சொன்னார்.

இப்போது திரைப்படங்களுக்கும்  இந்த  பின்புலம்  (Stage) தேவை எனும் நிதர்சனம் புரியத் தொடங்கியிருப்பதாக  ஜிகிர்தண்டா திரைப்படத்தை மேற்கோள் காட்டியதாக நினைவு.

கேள்வி நேரத்தில் நான் கேட்க நினைத்த கேள்விக்கு பேராசிரியரே
கடைசியில் பேச்சுனுடே பதில் சொல்லிவிட்டார். ஆங்கிலத்தில் Reading between the Lines  என்று சொல்வதுபோல. அதை நான்
புரிந்து கொள்கிறேன்.

நான் கேட்க நினைத்த கேள்வி "தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகத்தின் நிலை என்னவாக இருக்கும் ? "

அவர் சொன்ன அந்த வரி  " நாடகம் அழியுமோ என்ற கவலை இருக்கிறது "  .

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர். அ.ராமசாமி
அவர்களுக்கு  வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Sunday, July 10, 2016

சொல்வனம் இதழில் ...

நண்பர்களே,  இந்த வார சொல்வனம் இணைய இதழில் புத்தக அறிமுகம் பகுதியில் எனது  ’பங்களா கொட்டா’ நாவல் வாசகர்களுக்கு அறிமுகமாயிருக்கிறது.
உங்களின் வாழ்த்துக்களுக்கும், தொடரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.
இனி  சொல்வனத்திலிருந்து..
// *****************
சொல்வனம் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதி இருக்கிற ஆரூர் பாஸ்கரின் முதல் நாவல் வெளியாகி இருக்கிறது. ’பங்களா கொட்டா ‘ என்ற தலைப்பு கொண்ட இப்புத்தகம் பற்றி அவர் சொல்கிற சில வார்த்தைகளை இங்கே கொடுக்கிறோம்.
விவசாயப் பின்னணியில் வந்த எனக்கும் கிராமங்களுடன் நீண்டதொரு பிணைப்பு உண்டு. இன்று அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்றும் அதன் நினைவுகளைச் சுமந்து திரிபவன். பால்யத்தில் நான் கேட்ட செவிவழிக் கதைகளையும், எனது கிராமத்து நினைவுகளையும் எழுத்தில் மீட்டெடுத்த முயற்சிதான் ‘பங்களா கொட்டா’ எனும் இந்த நாவல்.
நானும் என் முன்னோர்களும் நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த வாழ்கையின் மெளன சாட்சி எங்கள் கிராமம். அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி வெகு வேகமாய் நகர்மயமாகும் அல்லது நகரமயமான லட்சக்கணக்கான கிராமங்களில் எங்கள் கிராம்மும் ஓன்று என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை ஓன்றுமில்லை. ஆம், வேப்பங் குச்சியிலிருந்து பற்பசைக்கும், தாவணியிலிருந்து சுடிதாருக்கும், நைட்டிக்கும், கறவை பாலிலிருந்து பாக்கெட் பாலுக்கும் மாறிவிட்ட கிராமங்கள் அவை.
அந்தக் கிராம சூழலில் வெவ்வேறு காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் வாழ்வை சிறிது கற்பனை கலந்து ஓரு நாவலாக்கியிருக்கிறேன்.
ஒரு பெரும் கனவை நனவாக்கிடத் துடித்து வாழ்க்கையை அர்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி (கதையின் நாயகன்), அதன் பொருட்டு அவன் சந்திக்கிற மனப் போராட்டங்கள் இவைதான் இந்நாவலின் மையம்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1950- களின் நடுவில் கல்வியே தம் விடுதலைக்கான திறவுகோல் என்பதை வலுவாய் உணர்ந்து கொண்ட ஒரு தலைமுறையின் எழுச்சிதான் அன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அதே கல்வி அமைப்புச் சீரழிந்து, கல்வி வள்ளல்கள் வசூல் தந்தைகளாக மாறி, கல்வி நிலையங்கள் கொள்ளையடிக்கிற வணிகக் கூடரங்களாக மாறிவிட்ட நிலையில், கல்வியின் மேன்மையைப் பற்றி ஓரு காலத்தில் சிந்தித்துச் செயலாற்றியவர்கள் இருந்தார்கள் என்கிறது இந்த நாவல்.
இந்தக் கதையில் – மல்லாரி வாசிக்கையில் பச்சை வண்ணப் பட்டு உருமாவை பரிவட்டமாய் கட்டிக் கொண்ட நாயகன் ஞானி. முண்டாசோட சேர்த்து ஆறடி உயரமிருக்கும் ராசு. விடிய கருக்கல்ல வந்துட்டு பொழுதுவரைக்கும் பண்ணையிலேயே கதியாய்க் கிடக்கும் சின்னு , கல்லறுக்க பண்ணைக்கு வந்த பவுனு எனப் பல மனிதர்கள் பல நிறங்களில்.
இந்த நாவலில் உங்கள் கிராமத்தையோ அல்லது அங்கே வாழ்ந்த மனிதர்களின் சாயலில் வேறு யாரையேனும் ஓருவரை கண்டிப்பாக நீங்கள் பார்க்ககூடும்.
இந்த நாவலை, தரமான இலக்கிய நூல்களை வெளியிடும் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 *****************//
அதன் நேரடி இணைப்பு இங்கே
#bunglawkotta

Sunday, June 26, 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர்.

தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் வருடாவருடம் நடைபெறும் புகழ்பெற்ற தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சியைப் போல திருவாரூரில் மும்மூர்த்திகளின் நினைவாக வருடாவருடம் மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடைபெறும்.  சுமார் ஓரு வாரம் நிகழும் அந்த விழாவுக்குச் சிறுவயதில் தினமும் என்னுடைய பாட்டனாருடன் சென்றிருக்கிறேன்.

அதுபோல் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருடாவருடம்  தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது பின்னிரவு வரை கலைஞர்களின்  இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படிதான் ஜேசுதாஸ், பாம்பே சகோதரிகள், நித்யஶ்ரீ, கன்னியாக்குமரி, குன்னக்குடி, விக்கி வினாயக்ராம்  போன்ற பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாக கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறேன்.

தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு இப்படி பல இசை அனுபவங்கள் இருந்தாலும் நாதஸ்வரம்  அன்னியமில்லாத, மனத்துக்கு நெருக்கமான ஒன்று.

சரி, சஞ்சாரம் நாவலின் கதைக்கு வருவோம். நாவலின் கதைக்களம் கரிசல் மண். கதை அங்குள்ள இரு நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது.

பக்கிரி, ரத்தினம் எனும் அந்த இரு நாதஸ்வர கலைஞர்களை ஒரு கிராம மக்கள் அவமதிக்கிறார்கள். அவர்களைப் பழிவாங்கும் வகையில் பக்கிரி செய்யும் ஒரு காரியம் அங்கே சில உயிர்களை காவு வாங்கிவிடுகிறது. அதனால் அவர்கள் போலீஸுக்குப் பயந்து பல ஊர்களுக்குப் பயணமானபடி இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் நினைவுகளின் வழியாக நாதஸ்வரக்கலையையும், கலைஞர்களையும், கரிசல் மண்ணையும் ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கரிசல் காட்டு நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் எனும் நல்ல மனநிலையில் ரசனையோடு  பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர்.

ஆசிரியர்  பல ஆய்வுகளையும் களப்பணியையும் செய்திருப்பார் என நினைக்கிறேன்.  ஒரு கதைக்குள் வேவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த பல கிளைக் கதைகள். அதில் அபூர்வமான, ஆச்சர்யமூட்டும் வரலாற்றுத் தகவல்கள் பல இருக்கின்றன.

கரிசல் காட்டின் பல நுட்பமான தகவல்களைப் பதிவு செய்கிறார். உதாரணமாக. அது போன்ற ஓரு காலத்தில் அதே ஊரோடிப் பறவைகள் திரும்பவும் வானில் பறந்து வந்தன. .. கரிசல் கிராமங்களின் மீது பறந்தபடியே 'ஊராரே ஊராரே மண்ணு வேணுமா, பொன்னு வேணுமா' எனக் கேட்டன” (பக்கம்-53)

ஊரோடிப் பறவைகளைப் பற்றி   கோபல்ல கிராமத்தில் படித்த நினைவு இருக்கிறது. அந்த வகையில் கி.ரா.வின் ஆஸ்தான கோட்டையான கரிசல் பூமியை எஸ்.ரா.வும் கொண்டாடி மகிழ்கிறார்.

மாலிக் காபூர் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்த நிகழ்வைச் சொல்லும் 'அரட்டானம் '  எனும் தலைப்பில் வரும் பகுதி அட்டகாசம். அருமையான கதைச் சொல்லலில் அந்த  நிகழ்வுகள் நம் கண்முன்னே அழகாய் விரிகின்றன. (பக்கம்-46)

மாலிக் காபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா   என்பவர் மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து மாலிக் காபூர் பிரமித்து அந்த கோயிலை கொள்ளையிடாமல் சென்றான் என கதை தொடர்கிறது.

ஆசிரியர் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். ஆனால், நாவலை வாசிக்கும்போது வாசகனால் நூறு சதவீதம் கதையோடு சேர்ந்து பயணப்பட முடியவில்லை.  துண்டு துண்டாகப் பல செவிவழிக் கதைகளை ஒன்றாக இணைத்து நாவலை அமைத்ததுபோல ஒரு உணர்வு மேலிடுகிறது.   அதே போல்,   கதாபாத்திரங்களை இன்னமும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கதையில் அன்றைய மாலிக் காபூரையும், இன்றைய சிகரெட் அட்டை பொறுக்கும் சிறுவனையும் ஒரே புனைவில் எளிதாக ஆசிரியர் இணைத்துச் செல்கிறார். ஆனால் படிக்கும் வாசகனால் அவ்வாறு முடியவில்லை. அதற்கு மொழி நடையும் ஒரு காரணமாக இருக்கலாம். கரிசல்மண் எனும் இந்த கதைக்களத்தை வட்டார வழக்கில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது.

அது மட்டுமில்லாமல், சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல்  இருக்கின்றன. உதாரணமாக 'கிதார மகாலிங்கத்தின்' கதையைச் சொல்லலாம் (பக்கம் 196). அவருக்கும் நாதஸ்வரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.  அது ஒரு கரிசல் காட்டு செவிவழிக் கதை என்பதைத் தவிர வேறுசிறப்பு இருப்பது மாதிரித் தெரியவில்லை.

ஆனால், நாவலை வாசித்து முடித்த பின்பும் நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை மீண்டும் ஒருமுறையேனும் கேட்கவேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவலை வாசகனுக்கு உண்டாக்கி விடுவதில் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது.

இசை மேல் ஆர்வமிருக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.

அப்புறம், வாய்ப்பிருந்தால் பிபிசி வெளியிட்ட 'மறைந்து வரும் மங்கல இசை'  எனும் செய்திக் கோவையின் ஒலிவடிவத்தை நீங்களும் கேட்டுப் பாருங்கள். நாதஸ்வரம் பற்றிய மிக அருமையான, விரிவானதொரு ஆவண ஒலிப்பேழை இது.

http://www.bbc.com/tamil/arts_and_culture/nagaswaramseries ( இணைப்பு )

இந்தக் கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.


http://omnibus.sasariri.com/2016/06/blog-post_16.html


சஞ்சாரம் – நாவல் – எஸ் ராமகிருஷ்ணன் – 375 பக்கங்கள்
 – விலை ரூ.370 – உயிர்மை பதிப்பகம், 11,29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18