Saturday, July 20, 2019

First They killed my father - Loung Ung

நாம் நினைத்தது நடக்காத போது அல்லது விரும்பியது கிடைக்காத போது
பெரும்பாலும் நாம் அதற்குப் புறச்சூழலைக் காரணம் காட்டி நம்மை நாமே சுருக்கிக்கொள்கிறோம். இல்லை அதுகுறித்து தொடர்ச்சியாக புலம்பத் தொடங்குகிறோம்.

அந்த எதிர்மறையான புலம்பல் ஆளாளுக்கு வேறு வேறாக இருக்கிறது.
பலருக்கு பொருளாதாரம். சிலருக்கு கல்வி, எனக்குப் பின்புலம் இல்லை குடும்பச்சூழல் என ஏதோ ஒன்று. ஆனால்,  வரலாற்றைப் பின் நோக்கினால் இது போன்ற தடைகளை, ஏன் இதைவிட மோசமான சிக்கல்களைத் தாண்டி தன்னெழுச்சியாக கடந்து வந்தவர்களே அதிகம் வென்றிருக்கிறார்கள்.

அதுபோல படையெடுப்பு, போர், உள்நாட்டுக்கலவரம் என அத்தியாவசியங்கள் கிடைக்காமல்  பல இலட்சம் பேர் செத்துமடிந்த யுத்த பூமியிலிருந்து குறிஞ்சிகள் பூக்கத்தான் செய்கின்றன.  அந்த வகையில் 40 ஆண்டுகளுக்கு முன் கிழக்காசிய நாடான கம்போடியாவில் நடந்த மனதை உலுக்கும் அழுத்தமான உண்மைக் கதை ஒன்றைச் சமீபத்தில் ஆங்கிலத்தில்  வாசிக்க நேர்ந்தது.  புத்தகத்தின் பெயர் "First They killed my father " (முதலில் அவர்கள் என் அப்பாவைக் கொன்றார்கள்) by Loung Ung (லொங் ஒக்)

1975 ல் கம்போடியாவைக் கெமர் ரூஜ் எனும் இனக்குழு அதிகாரத்தைக் கைப்பற்றிய போது நடந்த மோசமான இனப்படுகொலையில் 20 லட்சம்
மக்கள் செத்தொழிந்திருக்கிறார்கள். அந்த இனப்படுகொலையில் தனது பெற்றோர்களை இழந்து பல இன்னல்களில் இருந்துத் தப்பித்த ஒரு 10 வயது சிறுமியின் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் உண்மை படைப்பு இது.

புத்தகத்தை எழுதிய லொங் ஒக் தான் அந்தச் சிறுமி, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர் போருக்கு முன் தனது குடும்பத்தோடு
கம்போடியாவில் ஒரு சராசரியான சீனக் குடும்பமாகதான் இருந்திருக்கிறது. அன்பான பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், அப்பாவுக்கு அரசாங்க வேலை,  நல்ல உணவு, தரமான கல்வி, நண்பர்கள் என வறுமை இல்லாத சூழல்.

ஆனால், போரின்போது அகதிகளாகும் அவருடையக்  குடும்பம் சந்திக்கும் அவலங்கள் மனதை உலுக்குகின்றன. சமூகத்தில் பெரும்பான்மையினர்
கொத்தடிமைகளாக்கப்படுகிறார்கள். மக்கள்  நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள். அங்கே வயல்வெளிகளில்
சிறியவர், பெரியவர் என வயதுவித்தியாசமின்றி நாள் முழுக்க இடுப்பொடியும் வேலை, அரைவயிறு உணவு,  மோசமான வாழ்விடம் ஒத்துழைக்க மறுப்பவர்கள் மாயமாகின்றனர். இளம்பெண்கள் கெமர் ரூஜ் வீரர்களால் நள்ளிரவில் இழுத்துச் செல்லப்படுவது எனத் தொடர்ந்தார் போலப்  பல கொடுமைகள் அடுக்கடுக்காக அரங்கேறுகிறன.

அது போர் உக்கிரம் அடையும் சமயத்தில் ராணுவத்திற்குக் கட்டாய ஆள்சேர்ப்பது, சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து படையில் சேர்ப்பது எனப் போகிறது. அடிமைகளுக்கு  அரைவயிறு, கால் வயிறு என்றிருந்த உணவு ஒரு கட்டத்தில் நிறுத்தப்படுகிறது. பசியின் உச்சத்தில் மக்கள் கையில் கிடைத்த விலங்குகளை அடித்து சாப்பிடுகிறார்கள். ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இந்த அவலம் தொடர்கிறது. ஒருநாள் நள்ளிரவில் வீரர்களால் அழைத்துச் செல்ப்படும் சிறுமியின் தந்தை வீடு திரும்பவில்லை. பின் ஆளுக்கொரு பக்கமாக குடும்பம் சிதறுகிறது. இலக்கில்லாமல் சுற்றித் திரிந்த சிறுமி கடைசியாக ஆயுதப்பயிற்சி பள்ளி ஒன்றில் கரைசேர்கிறாள்.  சிறுமியின் குடும்பத்துக்கு இறுதியில்  என்ன நேர்ந்தது என்பதைப் புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகத்தில் கொடுமையின் உச்சத்துக்கு ஒரு சின்ன உதாரணம். பசியின் கொடுமை தாங்காத ஒருவன் ஒருநாள் தெருநாயை அடித்து தின்று
விடுகிறான். அதைத் தெரிந்துகொண்ட புரட்சிப்படை வீரர்கள் அவனைத்
தேடி வந்து சுட்டுக்கொன்று விடுகி. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். அவன் நாய் மாமிசத்தை மற்ற அடிமைகளுடன் பகிர்ந்து உண்ணவில்லையாம். இப்படிப் பல அக்கிரமங்கள், இன்னல்கள்.  கம்போடிய மக்கள் இந்தக் கொடுமைகளைச் சகித்திருந்த போது உலகம் என்ன செய்து கொண்டிருந்தது என வாசிக்கும் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

போருக்குபின்னான கம்போடியாவில் இருந்து தப்பித்து தாய்லாந்து வழியாக அமேரிக்காவிற்கு அகதியாக வந்த லொங் ஒக் இன்று ஒரு தொழிலதிபர், எழுத்தாளர் என வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவருடைய இந்தப் புத்தகம் ஏஞ்செலீனா ஜூலியின் இயக்கத்தில் அதேப் பெயரில் நெட்பிலக்சில் திரைப்படமாகி இருக்கிறது (படம் இன்னமும் பார்க்கவில்லை).

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அதை முழுமையாக சுதந்திரமாக வாழ முழு உரிமையும் இருக்கிறது. அந்த உரிமையை வலுக்கட்டாயமாக பறிப்பது அநியாயம். அதே சமயத்தில் விலை மதிப்பற்ற இந்த மனித வாழ்வை வீணடிக்காமல்  பூரணப்படுத்தி அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வது நம் கைகளில் இருக்கிறது என்பதே லொங் ஒக்கின் புத்தகம் சொல்லும் கருத்தாக நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள் இல்லை நெட்பிளக்சில் படத்தைப் பாருங்கள்.


Name: First They killed my father
Author : Loung Ung
Genre: Memoir
Publisher: HarperCollins
Pages: 238 p.
ISBN: 0-06-093138-8
Amazon : https://www.amazon.com/First-They-Killed-Father-Remembers-ebook/dp/B0046ZRG0M

நன்றி- படங்கள் இணையம்.

                                                          ************




Thursday, July 18, 2019

புரட்சி எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் - நேர்காணல்

மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் குறித்த ஓர் இரங்கல் கட்டுரையை அமெரிக்கத் தமிழ் பேரவையின் ஆண்டு மலருக்காக கேட்டிருந்தார்கள்.  முதலில் தயக்கத்தோடுதான்  ஒத்துக்கொண்டேன். ஒருவரைப் பற்றி இரங்கல் கட்டுரை எழுத அவருடைய எல்லா படைப்புகளையும் முழுமையாக வாசித்திராவிட்டாலும் ஒரிரு படைப்புகளையாவது வாசித்து எழுதுவதே அவருக்குச் செய்யும் குறைந்த பட்ச மரியாதையாக இருக்கும்.

அந்த வகையில் தோப்பில் அவர்களுடைய சாகித்ய அகாதமி விருதுபெற்ற சாய்வு நாற்காலியையும் ஒரு சில சிறுகதைகளையும் முன்பொரு முறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் மேலோட்டமாக மறுவாசிப்பு செய்தேன்.  
பிறகு மேலதிக்கத் தகவல்களைத் தேடியபோது  இணையத்தில்  அவருடைய நேர்காணல் ஒன்று கண்ணில் பட்டது. அதில் "தோப்பில் முகமது மீரான்" எனும் தனது பெயரின் பின்னணியைப் இப்படிச் சொல்லியிருக்கிறார். 

'எங்களைப்  (முகமது மீரான்)பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. 

ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.'

அதுபோல தனது "கடலோர கிராமத்தின் கதை" புத்தகம்
வெளியான சமயத்தில் ஊர்மக்களிடம் வந்த பலத்த எதிர்ப்பு போன்ற பல 
சுவையான தகவல்களை அந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.  முழு நேர்காணலை நீங்களே கீழே இணைப்பில் வாசிக்கலாம்.

http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html

Wednesday, July 17, 2019

தமிழ் சவலைப்பிள்ளை !? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -2)

முதல் பதிவு 

சூலை 6, 7 என இரண்டு நாட்கள் நடந்த விழாவின் தொடக்கநாள் அன்று
பங்கேற்ப்பாளர்களுக்கு ஆடம்பரமில்லாத விளம்பரங்கள் அற்ற
ஓர் ஆய்வரங்க கையேடு வழங்கப்பட்டது.  சிறிய நோட்டுப்புத்தக வடிவில் இருந்த அந்தக் கையேட்டில்  ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களின் வாழ்த்துகள், விழா குழுவினர், பொறுப்பாளர்கள், ஆயவரங்கம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன. குறிப்பாக  மாநாட்டுக்கான சின்னம்  "கல்லணை" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சின்னம் எனும் தலைப்பில்...

"மாநாட்டுக்கான சின்னம் தமிழர் வாழ் நானிலமும், பொங்கும் காவேரி உறையும் கல்லணையும், இந்தமாநாடு நடைபெறும் வடஅமெரிக்க நாட்டின் கொடியும் சூழ தமிழ் அறம் வளர்த்த வள்ளுவனாரை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சின்னம் தமிழர்ப் பண்பாட்டைச் பறைச்சாற்றும் கணியன் பூங்குன்றனாரின் வாக்காம் யாதும் ஊரை யாவரும் கேளிர் என்பதையும் தாங்கியதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது."

மேலேக் குறிப்பிடப்பட்டிருந்த கல்லணை மாதிரியும், விஜிபி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட  திருவள்ளுவர் சிலையும் கலையரங்கில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சூலை 6- சனிக்கிழமை  அன்று காலை 8 மணிக்கு வரவேற்புரை, வாழ்த்துரையுடன் தொடங்கிய நிகழ்வில் சங்கப் பொறுப்பாளர்களுடன்
உலகின் பல நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் பலர் உரையாற்றினார்கள். அதன் மையநாதம் தமிழின் தொன்மை, தமிழர்களின் பெருமையைப் பேசுவதாக அமைந்தது.

குறிப்பாக  இன்று அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில் தமிழ் மட்டுமே பேச்சு,எழுத்து எனப் பயன்பாட்டில் இருக்கும் மொழி என்பதால் தமிழராகிய நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. அதுபோல தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் காலத்திய சில படைப்புகள் தமிழின் ஆண்டாள் பாசுரங்களை ஒட்டியிருக்கின்றன. தமிழ் இன்றி துளசிதாஸர் இராமயணம் இல்லை. குறிப்பாக கீழடி ஆய்வுக்குப்பின் சிந்து சமவெளி நாகரீக முடிவுகளை மறுஆய்வு  செய்யவேண்டியிருக்கலாம் போன்ற கருத்துகளைக் குறிப்பிட்டனர்.

அதுபோல, நமது அறிஞர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்வதில் மிகச் சிறப்பாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறார்கள். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால்,  இதுவரை தமிழின் தொன்மை, பெருமைகளை ஆய்வு செய்த பல அறிஞர்களின் படைப்புகள், ஆய்வுகள் தமிழ்மொழியில் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.  அந்த நிலை மாறவேண்டும். ஒப்பியல் நோக்கிலும், விசால நோக்கிலும் ஆய்வு செய்ய தமிழ் அறிஞர்கள் ஆங்கிலம், சமஸ்கிருதம் அறிந்துகொள்வது இன்றைய தேவை என்றும் வலியுறுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மரபணுத்துறையைச் சேர்ந்த முனைவர் பென்சர் வெல்சு (Spencer Wells) பற்றி இங்கேக் குறிப்பிட வேண்டும். பிறப்பில் அமெரிக்கரான இவர் நேசனல் ஜியோகிராபிக்கின் (National Geographic Channel) புகழ்பெற்ற Journey of Man,  The Human Family Tree போன்ற பல தொடர்களில் பங்காற்றியவர். இவர்தான் தன்னுடைய மரபணு ஆய்வின் படி 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை மதுரை அருகில் உள்ள ஒரு சிற்றூரில் விருமாண்டி எனும் நபரிடம் கண்டடைந்ததாக (மரபணுவை ஒத்திருப்பதாக) சொன்னவர்.

"M130" எனப்படும் அந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானதாம். அதுபோல  ஆப்பிரிக்கர்களை மூதாதையராகக் கொண்ட ஆஸ்திரேலிய பூர்வ குடிகள் இந்தியா வழியாகவே சென்றார்கள் என்பதற்கு இதுவே முதல் உயிரியல் சான்று என்றும் அறிவித்தவர். அவர் கீழடி குறித்து மரபணு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார் என நினைக்கிறேன்.

அதன்பிறகு தொல்பொருள் ஆராய்ச்சி நுண் கண்டுபிடிப்புகள், ஆய்வரங்கள் குறித்த சிறிய அறிமுக உரையைப் பலர் விரிவாக பேசியதால்  திட்டமிட்டபடி   09;35 மணிக்கு முடிந்திருக்கவேண்டிய நிகழ்ச்சிநிரல்  நீண்டதால் அன்றைய காலை அமர்வுகள் அனைத்தும் மதியத்திற்கு தள்ளப்பட்டன. அதனால் முன்பே திட்டமிடப்பட்டிருந்த காலை நிகழ்வுகளும், மதிய நிகழ்வுகளும் இணைந்து 1:00 -4:00 மணி,  4:00-7:00 மணி என இருநிகழ்வுகளாக நடந்தன.

நிகழ்வில் பலர் தமிழ் மொழி பற்றி பெருமையாக பேசினாலும், ஒருசிலர் தமிழின் இன்றைய நிலைகுறித்து அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக மலேசியா (அல்) சிங்கப்பூர் என ஏதோ ஒரு அயல்நாட்டில் இருந்து பேசிய ஒரு பிரதிநிதி தமிழின் நிலைகுறித்து பேசிவிட்டு இறுதியாக தமிழ் இன்றும் "சவலைப் பிள்ளை"யாக இருப்பதாக இறுதியாக சொல்லி நிறைவு செய்தபோது அது உண்மை என்பதை வழிமொழிவதுபோல அரங்கம் கரகோசம் செய்தது.

வரும் பதிவுகளில் ஆய்வரங்கள் குறித்த விவரங்களை ஆவணப்படுத்துவேன்.


படம் நன்றி- இணையம் (Spencer Wells)
References-
https://www.thehindubusinessline.com/2002/11/19/stories/2002111900480600.htm
https://www.rediff.com/news/2002/nov/21spec.htm

Friday, July 12, 2019

வங்கிக் கணக்கில்லாத தமிழ் மன்றம் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -1)

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த வாரம் (சூலை 6-7, 2019) அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடந்து முடிந்திருக்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்து முடிந்துவிட்டதால் இனி மொழி செழித்து  பட்டிதொட்டி எங்கும் தமிழ் வழிந்தோடும் என நினைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக சிகாகோ மாநாட்டின் நோக்கங்களை முதலில் பார்ப்போம்.  மாநாட்டின் நோக்கம்  “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” மட்டுமே.

இந்தத் தருணத்தில் இந்த மாநாட்டினை நடத்திய IATR (International Association Of Tamil Research) எனும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பற்றியும்
கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 1964ல்  தனிநாயகம் அடிகளார் எனும் தமிழறிஞரின் தலைமையில் புதுதில்லியில் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் நோக்கம்  தமிழை ஆய்வு செய்வதாகவும்,  உலகலாவிய அளவில் தமிழ்மொழிக்குக் கவனம் பெற்றுத் தருவதாகவே இருக்கிறது. http://iatrnew.org எனும் முகவரியில் இயங்கும்  இணையதளத்தின் படி அவர்களுடைய குறிக்கோள் பெரும்பாலும் கல்விப் புலத்தில் இயங்குவதாக இருக்கிறது.  முழுமையான நோக்கம், அவர்கள் தளத்தில் இருந்து

"உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது."

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மன்றம்
சமகாலத்தில்  தமிழ்மொழியின் இன்றைய அவல நிலை குறித்துப் பேசுவதாகவோ இல்லை அதைச் சரிசெய்யச் செயல்திட்டங்களை முன்னெடுப்பதாகவோ இல்லை எனும் தமிழ் ஆர்வலர்களின் குரலை இங்கே பதிவு செய்யும் அதே நேரத்தில் இந்த மன்றம் பொருளாதாரத்தில் வலிமையற்று பெரிய நிதி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.  இந்த மன்றம் அரசியல் சார்பற்ற,  இலாப நோக்கமற்ற நிறுவனம் என்பதால் மாநாடுகளை நடத்தக் கூட ஒரு நாட்டின் அரசையோ, பல்கலைக்கழகத்தையோ நம்பித்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

அவர்களுக்குப் போதிய நிதி ஆதாரங்கள் இருந்திருந்தால் மன்றம் தொடங்கிய காலந்தொட்டு திட்டமிட்டபடி  அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாநாடு என இதுவரை 25க்கும் அதிகமான மாநாடுகளை  நடத்தியிருக்க வேண்டுமே.

அவ்வளவு ஏன் 2016-ஆம் ஆண்டுவரை கூட அதாவது தொடங்கிய நாள் முதல் 52 ஆண்டுகள் வரை இந்த மன்றம் முறையாக இந்தியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கிறது. சமீபத்தில் அப்படிப் பதிவுசெய்ய முயன்றபோது IATR இல் இருக்கும் International எனும் சொல் தவிர்க்கப்பட்டு World Tamil Research Association எனப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதாம். அதுபோல  1995ல் தஞ்சாவூரில் நடந்த 8-ஆவது மாநாட்டின் போது புத்தகவிற்பனை மூழமாக மன்றத்துக்குச் சேரவேண்டிய சுமார் 12 இலட்சத்தை வாங்கிக் கொள்ள அன்று  மன்றத்திற்கு வங்கிக் கணக்கில்லை என்பது ஆச்சரியத் தகவல். இன்று அந்தக் குறை களையப்பட்டதாக நம்புவோம்.  அதுபோல இத்தனை ஆண்டுகள் பழைமை வாழ்ந்த இந்த மன்றம் சகல வல்லமையுடன் தனிப்பெரும் சக்தியாக செயல்பட எது தடையாக இருக்கிறது என்பதும் புரியவில்லை.

முப்பெரும் விழா குறித்து  அறிவிப்பு வெளியான சமயத்தில்  வந்த காணோளி உங்களுக்காக...




அடுத்தப் பகுதியில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குள் நுழைவோம். 

Monday, July 8, 2019

ராஜ தேநீர் வந்திருக்கிறது

ராஜ தேநீர் வந்திருக்கிறது. ஆமாம்,  காப்புரிமை எனும் ராயல்டி (royalty) வந்திருக்கிறது என்பதை வீட்டில்  பொதுவில் சொன்னபோது ஆறு வயது மகள் அப்படித்தான் புரிந்து கொண்டாள். :)   என்னது Royal Tea வந்திருக்கா ? என அப்பாவியாகக் கேட்டவளுக்கு விளக்கம் சொன்ன கதை ஒருபுறம் இருக்கட்டும்.

வனநாயகன் விற்பனைக்கான ராயல்டி தொகை வந்திருக்கிறது. தொகையை  பதிப்பகத்தின் சார்பில் சிறகுகள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிட்டார்கள். வழக்கம் போல் அது அறக்கட்டளை  வாயிலாகக்  கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். ராயல்டியாக வந்த தொகை லட்சங்களில் இல்லாவிட்டாலும் அது நமது எழுத்திற்கான அங்கீகாரம். உழைப்புக்கான  மரியாதை.  தமிழின் மூலமாக வரும் தொகை முழுமையும் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறேன். அது  தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது படிப்பை மட்டுமே நம்பி இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும்  மாணவ மாணவிகளுக்கு  நம்மால் முடிந்த சிறு உதவி.  அது படித்தால் முன்னுக்கு வரலாம் கஷ்டங்கள் தீரும் பெரிய சாதனைகள் செய்யலாம் என்பதை உறுதிசெய்யும் நம்பிக்கை விதை என்பதைத் தவிர வேறில்லை.

இன்று நினைத்தாலும் கனவுபோல இருக்கிறது.  ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுத்துலகில்  எந்தவிதமான நட்புகளுமின்றி பெரிய பின்புலமில்லாமல்  தனியாக உள்ளே நுழைந்து முதன் முதலாகக் கையில் இருந்த கவிதைகளைப் புத்தகமாக வெளியிட்டது (என் ஜன்னல் வழிப் பார்வையில், முன்னேர்) .  பின்னர் பங்களா கொட்டா (அகநாழிகை), வனநாயகன் --மலேசியநாட்கள்(கிழக்கு), அந்த ஆறு நாட்கள் என வரிசையாக எழுதிய நாவல்களை வெளியிட பதிப்பகங்கள் கிடைத்தது மகிழ்ச்சி . முக்கியமாக அவை நண்பர்களுடைய வரவேற்பைப் பெற்றது மேலும் உற்சாகமளித்து இயங்கச் செய்கிறது.

இதைச் சாத்தியப்படுத்திய வாசக நண்பர்களுக்கும் உறுதுணையாக இருந்த பதிப்பகத்தினருக்கும் நெஞ்சம் நிரம்பிய நன்றிகள், என்றும்.

                                     **************






Tuesday, July 2, 2019

வனநாயகன் குறித்து-13 ( வனநாயகன் - கனநாயகன்)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)"  சிங்கப்பூர் வாசகர்  கங்கா பாஸ்கரன்(Ganga Baskaran) அவர்கள் முகநூலில் குறித்து எழுதிய கதை விமர்சனம்.  நன்றி  கங்கா பாஸ்கரன்!!

/////
வனநாயகன் - கணினிப் பொறியாளராக மலேசியாவிற்குச் செல்லும் நாயகன் சந்திக்கும் இடர்களை அழகாக விளக்கும் நாவல். இரு வங்கிகளின் இணைப்பில் மறைமுகமாக நடக்கும் சூழ்ச்சிகளைப் பற்றி அறியாமல் பலியாடாகும் சுதாங்கன் மீண்டும் இந்தியாவிற்குச் செல்லும் முன் எதிர்கொள்ளும் சவால்கள். கணினி உலகில் நடக்கும் கண்ணுக்குத் தெரியா திருட்டுச் சம்பவங்கள், வனநாயகன் என அழைக்கப்படும் உராங் உட்டான் பற்றிய செய்திகள், பத்திரிகைத் துறையின் தர்மம், இடையிடையே நட்பு, காதல் என சற்றே மாறுபட்ட களமிது. 

இந்த நாவலைப் படிக்கும் அனைவரும் நாவலைத் தாண்டி பல புதிய தகவல்களையும் நிச்சயம் அறிந்துகொள்வர். வழக்கமான நாவல்களில் இருந்து வேறுபட்ட தளத்தைக் கண்முன் கொண்டு வரும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான மலேசியாவின் மற்றொரு கோணத்தை நம்மிடம் எழுத்தின்வழிக் காட்டுகிறார். 

நிரந்தர வேலை இல்லையென்றால் காதலி தோழியாவாள்; அன்பு அதிகமிருந்தால் தோழியும் காதலி ஆவாள் எனக் கதையோட்டத்தோடு உண்மை அன்பையும் வாசகர்களுக்கு உணர்த்துகிறார். நட்பிற்காக இறுதி வரை துணை நிற்கும் சிங், சாரா, நண்பனாக இருந்தாலும் துரோகியாகும் உடன் பணிபுரிபவர்கள் எனப் பல கதாபாத்திரங்களையும் கச்சிதமாகப் பொருத்தி நாவலைச் சிறப்பாக நகர்த்திச் செல்கிறார்.


வனநாயகன் - கனநாயகன்.


/////


புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க: