Wednesday, July 17, 2019

தமிழ் சவலைப்பிள்ளை !? (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -2)

முதல் பதிவு 

சூலை 6, 7 என இரண்டு நாட்கள் நடந்த விழாவின் தொடக்கநாள் அன்று
பங்கேற்ப்பாளர்களுக்கு ஆடம்பரமில்லாத விளம்பரங்கள் அற்ற
ஓர் ஆய்வரங்க கையேடு வழங்கப்பட்டது.  சிறிய நோட்டுப்புத்தக வடிவில் இருந்த அந்தக் கையேட்டில்  ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களின் வாழ்த்துகள், விழா குழுவினர், பொறுப்பாளர்கள், ஆயவரங்கம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன. குறிப்பாக  மாநாட்டுக்கான சின்னம்  "கல்லணை" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சின்னம் எனும் தலைப்பில்...

"மாநாட்டுக்கான சின்னம் தமிழர் வாழ் நானிலமும், பொங்கும் காவேரி உறையும் கல்லணையும், இந்தமாநாடு நடைபெறும் வடஅமெரிக்க நாட்டின் கொடியும் சூழ தமிழ் அறம் வளர்த்த வள்ளுவனாரை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சின்னம் தமிழர்ப் பண்பாட்டைச் பறைச்சாற்றும் கணியன் பூங்குன்றனாரின் வாக்காம் யாதும் ஊரை யாவரும் கேளிர் என்பதையும் தாங்கியதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது."

மேலேக் குறிப்பிடப்பட்டிருந்த கல்லணை மாதிரியும், விஜிபி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட  திருவள்ளுவர் சிலையும் கலையரங்கில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சூலை 6- சனிக்கிழமை  அன்று காலை 8 மணிக்கு வரவேற்புரை, வாழ்த்துரையுடன் தொடங்கிய நிகழ்வில் சங்கப் பொறுப்பாளர்களுடன்
உலகின் பல நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் பலர் உரையாற்றினார்கள். அதன் மையநாதம் தமிழின் தொன்மை, தமிழர்களின் பெருமையைப் பேசுவதாக அமைந்தது.

குறிப்பாக  இன்று அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில் தமிழ் மட்டுமே பேச்சு,எழுத்து எனப் பயன்பாட்டில் இருக்கும் மொழி என்பதால் தமிழராகிய நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. அதுபோல தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் காலத்திய சில படைப்புகள் தமிழின் ஆண்டாள் பாசுரங்களை ஒட்டியிருக்கின்றன. தமிழ் இன்றி துளசிதாஸர் இராமயணம் இல்லை. குறிப்பாக கீழடி ஆய்வுக்குப்பின் சிந்து சமவெளி நாகரீக முடிவுகளை மறுஆய்வு  செய்யவேண்டியிருக்கலாம் போன்ற கருத்துகளைக் குறிப்பிட்டனர்.

அதுபோல, நமது அறிஞர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்வதில் மிகச் சிறப்பாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறார்கள். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால்,  இதுவரை தமிழின் தொன்மை, பெருமைகளை ஆய்வு செய்த பல அறிஞர்களின் படைப்புகள், ஆய்வுகள் தமிழ்மொழியில் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.  அந்த நிலை மாறவேண்டும். ஒப்பியல் நோக்கிலும், விசால நோக்கிலும் ஆய்வு செய்ய தமிழ் அறிஞர்கள் ஆங்கிலம், சமஸ்கிருதம் அறிந்துகொள்வது இன்றைய தேவை என்றும் வலியுறுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மரபணுத்துறையைச் சேர்ந்த முனைவர் பென்சர் வெல்சு (Spencer Wells) பற்றி இங்கேக் குறிப்பிட வேண்டும். பிறப்பில் அமெரிக்கரான இவர் நேசனல் ஜியோகிராபிக்கின் (National Geographic Channel) புகழ்பெற்ற Journey of Man,  The Human Family Tree போன்ற பல தொடர்களில் பங்காற்றியவர். இவர்தான் தன்னுடைய மரபணு ஆய்வின் படி 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை மதுரை அருகில் உள்ள ஒரு சிற்றூரில் விருமாண்டி எனும் நபரிடம் கண்டடைந்ததாக (மரபணுவை ஒத்திருப்பதாக) சொன்னவர்.

"M130" எனப்படும் அந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானதாம். அதுபோல  ஆப்பிரிக்கர்களை மூதாதையராகக் கொண்ட ஆஸ்திரேலிய பூர்வ குடிகள் இந்தியா வழியாகவே சென்றார்கள் என்பதற்கு இதுவே முதல் உயிரியல் சான்று என்றும் அறிவித்தவர். அவர் கீழடி குறித்து மரபணு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார் என நினைக்கிறேன்.

அதன்பிறகு தொல்பொருள் ஆராய்ச்சி நுண் கண்டுபிடிப்புகள், ஆய்வரங்கள் குறித்த சிறிய அறிமுக உரையைப் பலர் விரிவாக பேசியதால்  திட்டமிட்டபடி   09;35 மணிக்கு முடிந்திருக்கவேண்டிய நிகழ்ச்சிநிரல்  நீண்டதால் அன்றைய காலை அமர்வுகள் அனைத்தும் மதியத்திற்கு தள்ளப்பட்டன. அதனால் முன்பே திட்டமிடப்பட்டிருந்த காலை நிகழ்வுகளும், மதிய நிகழ்வுகளும் இணைந்து 1:00 -4:00 மணி,  4:00-7:00 மணி என இருநிகழ்வுகளாக நடந்தன.

நிகழ்வில் பலர் தமிழ் மொழி பற்றி பெருமையாக பேசினாலும், ஒருசிலர் தமிழின் இன்றைய நிலைகுறித்து அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக மலேசியா (அல்) சிங்கப்பூர் என ஏதோ ஒரு அயல்நாட்டில் இருந்து பேசிய ஒரு பிரதிநிதி தமிழின் நிலைகுறித்து பேசிவிட்டு இறுதியாக தமிழ் இன்றும் "சவலைப் பிள்ளை"யாக இருப்பதாக இறுதியாக சொல்லி நிறைவு செய்தபோது அது உண்மை என்பதை வழிமொழிவதுபோல அரங்கம் கரகோசம் செய்தது.

வரும் பதிவுகளில் ஆய்வரங்கள் குறித்த விவரங்களை ஆவணப்படுத்துவேன்.


படம் நன்றி- இணையம் (Spencer Wells)
References-
https://www.thehindubusinessline.com/2002/11/19/stories/2002111900480600.htm
https://www.rediff.com/news/2002/nov/21spec.htm

No comments:

Post a Comment