Monday, July 8, 2019

ராஜ தேநீர் வந்திருக்கிறது

ராஜ தேநீர் வந்திருக்கிறது. ஆமாம்,  காப்புரிமை எனும் ராயல்டி (royalty) வந்திருக்கிறது என்பதை வீட்டில்  பொதுவில் சொன்னபோது ஆறு வயது மகள் அப்படித்தான் புரிந்து கொண்டாள். :)   என்னது Royal Tea வந்திருக்கா ? என அப்பாவியாகக் கேட்டவளுக்கு விளக்கம் சொன்ன கதை ஒருபுறம் இருக்கட்டும்.

வனநாயகன் விற்பனைக்கான ராயல்டி தொகை வந்திருக்கிறது. தொகையை  பதிப்பகத்தின் சார்பில் சிறகுகள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிட்டார்கள். வழக்கம் போல் அது அறக்கட்டளை  வாயிலாகக்  கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். ராயல்டியாக வந்த தொகை லட்சங்களில் இல்லாவிட்டாலும் அது நமது எழுத்திற்கான அங்கீகாரம். உழைப்புக்கான  மரியாதை.  தமிழின் மூலமாக வரும் தொகை முழுமையும் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறேன். அது  தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது படிப்பை மட்டுமே நம்பி இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும்  மாணவ மாணவிகளுக்கு  நம்மால் முடிந்த சிறு உதவி.  அது படித்தால் முன்னுக்கு வரலாம் கஷ்டங்கள் தீரும் பெரிய சாதனைகள் செய்யலாம் என்பதை உறுதிசெய்யும் நம்பிக்கை விதை என்பதைத் தவிர வேறில்லை.

இன்று நினைத்தாலும் கனவுபோல இருக்கிறது.  ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுத்துலகில்  எந்தவிதமான நட்புகளுமின்றி பெரிய பின்புலமில்லாமல்  தனியாக உள்ளே நுழைந்து முதன் முதலாகக் கையில் இருந்த கவிதைகளைப் புத்தகமாக வெளியிட்டது (என் ஜன்னல் வழிப் பார்வையில், முன்னேர்) .  பின்னர் பங்களா கொட்டா (அகநாழிகை), வனநாயகன் --மலேசியநாட்கள்(கிழக்கு), அந்த ஆறு நாட்கள் என வரிசையாக எழுதிய நாவல்களை வெளியிட பதிப்பகங்கள் கிடைத்தது மகிழ்ச்சி . முக்கியமாக அவை நண்பர்களுடைய வரவேற்பைப் பெற்றது மேலும் உற்சாகமளித்து இயங்கச் செய்கிறது.

இதைச் சாத்தியப்படுத்திய வாசக நண்பர்களுக்கும் உறுதுணையாக இருந்த பதிப்பகத்தினருக்கும் நெஞ்சம் நிரம்பிய நன்றிகள், என்றும்.

                                     **************






2 comments: