Friday, July 12, 2019

வங்கிக் கணக்கில்லாத தமிழ் மன்றம் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -1)

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த வாரம் (சூலை 6-7, 2019) அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடந்து முடிந்திருக்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்து முடிந்துவிட்டதால் இனி மொழி செழித்து  பட்டிதொட்டி எங்கும் தமிழ் வழிந்தோடும் என நினைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக சிகாகோ மாநாட்டின் நோக்கங்களை முதலில் பார்ப்போம்.  மாநாட்டின் நோக்கம்  “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” மட்டுமே.

இந்தத் தருணத்தில் இந்த மாநாட்டினை நடத்திய IATR (International Association Of Tamil Research) எனும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பற்றியும்
கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 1964ல்  தனிநாயகம் அடிகளார் எனும் தமிழறிஞரின் தலைமையில் புதுதில்லியில் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் நோக்கம்  தமிழை ஆய்வு செய்வதாகவும்,  உலகலாவிய அளவில் தமிழ்மொழிக்குக் கவனம் பெற்றுத் தருவதாகவே இருக்கிறது. http://iatrnew.org எனும் முகவரியில் இயங்கும்  இணையதளத்தின் படி அவர்களுடைய குறிக்கோள் பெரும்பாலும் கல்விப் புலத்தில் இயங்குவதாக இருக்கிறது.  முழுமையான நோக்கம், அவர்கள் தளத்தில் இருந்து

"உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது."

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மன்றம்
சமகாலத்தில்  தமிழ்மொழியின் இன்றைய அவல நிலை குறித்துப் பேசுவதாகவோ இல்லை அதைச் சரிசெய்யச் செயல்திட்டங்களை முன்னெடுப்பதாகவோ இல்லை எனும் தமிழ் ஆர்வலர்களின் குரலை இங்கே பதிவு செய்யும் அதே நேரத்தில் இந்த மன்றம் பொருளாதாரத்தில் வலிமையற்று பெரிய நிதி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.  இந்த மன்றம் அரசியல் சார்பற்ற,  இலாப நோக்கமற்ற நிறுவனம் என்பதால் மாநாடுகளை நடத்தக் கூட ஒரு நாட்டின் அரசையோ, பல்கலைக்கழகத்தையோ நம்பித்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

அவர்களுக்குப் போதிய நிதி ஆதாரங்கள் இருந்திருந்தால் மன்றம் தொடங்கிய காலந்தொட்டு திட்டமிட்டபடி  அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாநாடு என இதுவரை 25க்கும் அதிகமான மாநாடுகளை  நடத்தியிருக்க வேண்டுமே.

அவ்வளவு ஏன் 2016-ஆம் ஆண்டுவரை கூட அதாவது தொடங்கிய நாள் முதல் 52 ஆண்டுகள் வரை இந்த மன்றம் முறையாக இந்தியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கிறது. சமீபத்தில் அப்படிப் பதிவுசெய்ய முயன்றபோது IATR இல் இருக்கும் International எனும் சொல் தவிர்க்கப்பட்டு World Tamil Research Association எனப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதாம். அதுபோல  1995ல் தஞ்சாவூரில் நடந்த 8-ஆவது மாநாட்டின் போது புத்தகவிற்பனை மூழமாக மன்றத்துக்குச் சேரவேண்டிய சுமார் 12 இலட்சத்தை வாங்கிக் கொள்ள அன்று  மன்றத்திற்கு வங்கிக் கணக்கில்லை என்பது ஆச்சரியத் தகவல். இன்று அந்தக் குறை களையப்பட்டதாக நம்புவோம்.  அதுபோல இத்தனை ஆண்டுகள் பழைமை வாழ்ந்த இந்த மன்றம் சகல வல்லமையுடன் தனிப்பெரும் சக்தியாக செயல்பட எது தடையாக இருக்கிறது என்பதும் புரியவில்லை.

முப்பெரும் விழா குறித்து  அறிவிப்பு வெளியான சமயத்தில்  வந்த காணோளி உங்களுக்காக...
அடுத்தப் பகுதியில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குள் நுழைவோம். 

No comments:

Post a Comment