Thursday, March 4, 2021

பாட்டனும் முப்பாட்டனும் ...

உறவினர் வீட்டில் ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சி கும்பகோணத்துக்கு பக்கம். அழைத்திருந்தார்கள். போயிருந்தேன்.

அருமையான பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி நெருக்கமான மரங்கள்,  வாசலில் இருந்தபடியே மயில், குரங்கு, கிளி என சகலமானவற்றையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பார்த்துவிட முடியும். நல்ல இயற்கையான சூழல். 

ஒரு நாள் காலை,  மயில் ஒரு கூட்டமாக வந்து மேய்ந்து கொண்டிருந்தது.


அப்போது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த உறவினர் பையனை நான் தூக்கி வைத்து மயிலை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன். என்ன சொல்லி  வேடிக்கை காட்டி இருப்பேன் ? குயில் என்றா சொல்லி இருக்கப் போகிறேன். மயில் என்றே சொல்லி காட்டி கொண்டிருந்தேன். நகரத்தில் வளரும் பையனுக்கு மயில் எல்லாம் புதுசு என்பதால், பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். நிறைவாக இருந்தது.

பையனுடைய அம்மா இதையெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே மயில் மறுபடியும் வந்தது. இந்த முறை பையனைத் தூக்கி வைத்து வேடிக்கைக் காட்டியது பையனுடைய அம்மா. மயிலைக் கைகாட்டிபடியே "2யே... peacock பாரு... அதோட features  சாஃப்டா எவ்ளோ நல்லா இருக்கு பாரு..." எனச் சத்தமாக என் காதில் விழும்படி சொன்னார். 

அந்தப் பக்கம் வந்த நான் இதைக்  கவனிக்கிறேன் என்பது தெரிந்ததும்கூட இன்னமும் கூடுதல் அழுத்தத்தோடு  peacock, peacock  அழுத்தி சொன்னார். அதாவது, மயில் என்பது peacock எனத் தெரியாத முட்டாள் நான் என்பதை விட  அவருடைய பையன் மனதில் மயில் என்பது தப்பித் தவறிக் கூட  பதிந்து விடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனமாக இருந்தார் என நினைக்கிறேன். ஏனென்றால்,  அதன்பிறகு நாங்கள் அங்கு இருந்த 3 நாட்களும் தவறாமல் அவரே தனது பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு மயிலையும், குரங்குகளையும் Peacock, Monkey  எனக் காட்டிக் கொண்டிருந்தார். மேய வந்த மயில்களும், வாழைப்பழத்துக்காக வந்த குரங்குகளும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரக்க பறக்க வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தன. 

சரி விடுங்கள். நமக்குத்தான் அடுத்தத் தலைமுறை மொழியை இப்படி படிப்படியாக இழக்கிறதே என்ற கவலை, ஆற்றாமை எல்லாம்.  அவைகளுக்கு என்ன... உனது பாட்டனும் முப்பாட்டனும் என்னைப் பல்லாயிரம் ஆண்டுகளாக "மயில்" என்று தானே சொன்னார்கள். இது என்ன புதுசா "peacock ?" என மனிதர்களிடம் கோவித்துக் கொள்ளப் போகிறதா என்ன..

No comments:

Post a Comment