Sunday, March 21, 2021

சாதனை சியமளா

 40+ என்பது கொஞ்சம் தடுமாற்றமான வயதுதான். ஒருவருடைய  சராசரி  வாழ்நாள் வயது 80-இல் இருந்து 85 என வைத்தால் கூட, இந்த 40+ என்பது ஏறக்குறைய வாழ்வின் பாதியை வாழ்ந்து முடித்த வயது. பலர் வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி இருக்கும் வயதும் கூட. 

வாழ்வின் முதல் பாதியை இதுவரை  எப்படிப் பயணித்தோமா அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பதா ? அல்லது முற்றிலும் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா என்பதைப் பற்றிகூட பலர் யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். ஆனால், வெறும் யோசனையோடு விடாமல் சிலர் மட்டுமே திரும்பி முற்றிலும் வாழ்வின் வேறு திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் , தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி தனது 48 வயதில் சாதித்திருக்கிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான சியமளா ஒரு குடும்பத்தலைவி. சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நிச்சல் பழகி இருக்கிறார். நிச்சல் கற்றுக்கொண்ட கையோடு இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பரப்பை நீந்தி உலக சாதனை செய்திருக்கிறார்.

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் பரப்பு என்பது ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் போன்ற பல உயிரினங்கள்  நிறைந்த ஒன்று. அதை  ஏறக்குறைய 14 மணி நேரங்கள் இடைவெளியில்லாமல் கடலில் நீந்திக் கடப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை  குற்றாலீஸ்வரன் 1994-இல் நீந்திக் கடந்து சாதனை புரிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அப்போது குற்றாலீஸ்வரனுக்கு வயது 13, அதை தனது 48 வயதில் செய்து முடித்த சியமளா இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப்பெரிய ஒரு  உந்துசக்தி.

40 வயதில் தொப்பையோடு கை காலைப் பிடித்துக்கொண்டு ஐயோ, அம்மா என உட்காரும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த வயதில் உலக சாதனையை நிகழ்த்தியிருக்கும் சியாமளா ஒரு தெறிப்பு. அனைவரும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரு ஒளிக்கீற்று. ஏன் நம்பிக்கை தந்து எல்லா வயதினரையும் சாதிக்கத் தூண்டும் ஒரு துருவ நட்சத்திரமும் கூடத்தான்.


ஆதாரம்-பிபிசி தமிழ் 

படங்கள் நன்றி இணையம்.


No comments:

Post a Comment