திருமண நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை சமீபத்தில் 8 வயது மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.
முதல் நாள் இரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களுக்கு மரியாதை. முதலில் ஆண்கள். வரிசையாக மேளம், கிடார், கீபோர்ட் வாசித்தவர், பாடியவர், மைக்செட்காரர் என ஒவ்வொருவராக அழைத்து பெரிய மனிதர் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை செய்கிறார். இறுதியாக, 3 பெண் பாடகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் துண்டுவாங்க குனியும் சமயத்தில் பெரிய மனிதர் துண்டைப் போர்த்தாமல். கொஞ்சம் பொறுங்க!! எனச் சொல்லிவிட்டு வேறோரு பெண்மணியை ( அவருடைய மனைவி என நினைக்கிறேன் ) கூப்பிடுகிறார். கூட்டத்தில் அந்தப் பெண்மணியை தேடிக்கண்டுபிடித்து அந்தப் பெண்பாடகிகளுக்கு மரியாதை செய்யச் சொல்கிறார்கள்.
இதைக் கவனித்த மகள், 'ஏன் முதலில் ஆண்களுக்கு மட்டும் முதலில் மரியாதை ? அப்புறம், பெண்களுக்கும் அந்தப் பெரிய மனிதரே போர்த்தி இருக்கலாமே ? ' என அடுக்கடுக்காக சில கேள்விகள். நான் 'அது அப்படித்தான். நீ பேசாம பாரு ' என அமர்த்தினேன்.
அடுத்த நாள் திருமணம்- சடங்குகள் செய்ய வழக்கம்போல... மணமேடைக்கு முதலில் அழைக்கப்பட்டது மணமகன். பாதபூஜைக்கு முதலில் அழைக்கப்பட்டது மணமகனின் பெற்றோர். பார்வையாளர்கள் பகுதியில் ஆண்களும், பெண்களும் தனிதனியாக பிரிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த விசயங்களைத் தொடர்ச்சியாக கவனித்தவள். 'Why there is such segregation against women ? ' என்கிறாள்.
பெண்களை ஏன் இப்படி விலக்கி வைக்கிறீர்கள் என்பதைச் சிறு பெண்ணின் வேடிக்கையான கேள்வி என என்னால் எளிதாக ஒதுக்க முடியவில்லை. அவளே கூட கொஞ்சம் வளர்ந்தால் , ' சடங்குகள் என்ற பெயரால் ஏன் ஆண் பெண் கழுத்தில் நிரந்தரமாக தொங்க தாலி கட்டுகிறான் ?... மெட்டி அணிவித்து விடுகிறான் ?... ' எனக் கேட்பாளாக இருக்கும்.
No comments:
Post a Comment