Sunday, August 21, 2022

மூத்த அகதி

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்-தமிழரசி அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2021 இலக்கிய விருது பெற்ற "மூத்த அகதி"-ஐ வாசித்தேன்.  நூலின் ஆசிரியர் வாசு முருகவேல்.


வாசு முருகவேல் "கலாதீபம் லொட்ஜ்" மூலம் எனக்கு அறிமுகமானவர். நம்பிக்கைக்கு உரிய ஈழ எழுத்தாளர். இங்கே நான்  ஈழ எழுத்தாளர் எனக் குறிப்பிடுவது அவரைத் தனித்துவப்படுத்தி காட்டவே தவிர தனிமைப் படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது.

ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்பது தன்னளவில் வாசிப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய  மாற்றத்தை, தன்னுணர்வுப் புரிதலைத் தரவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை வாசு முருவேலின் மூத்த அகதி நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஈழப் போரின் பொருட்டு சில தமிழர்கள் இங்கே அகதியாக வந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே அகதி முகாமில் வசிக்கிறார்கள் என்றெல்லாம்  மேலெழுந்த வாரியாக பேசப்படும் (தமிழ்நாட்டு) ஈழத் தமிழர் வாழ்வின் ஒரு துளி இந்த மூத்த அகதி.

ஆரம்பத்தில் பல உதிரி மனிதர்களின் கதைகள் சென்னையின் சில தெருக்களில் இலக்கின்றி பயணிப்பது போல தோன்றினாலும் மெல்ல மெல்ல வாசனும், துவாரகனும் கதை மாந்தர்களாக உருபெற்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் நம்மை புத்தகத்தை கீழே வைக்கவே விடுவதில்லை. 

மனதில் நினைப்பதை சுருக்கமாக அதே சமயத்தில் ஆழமாக எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையின் உச்சம் என்பது அப்படி எழுதியதை எந்த இடத்தில் மிகச் சரியாக நிறுத்துவது என்பதும் கூடத்தான்.  அதை வாசு சிறப்பாக செய்திருக்கிறார். அந்த வகையில் வாசு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மிளிர்கிறார். வாழ்த்துகள்

முன்பே சொன்னது போல இது ஈழப் போரின் வரலாற்றை, இன்னல்களைப் பேசும் படைப்பில்லை. மாறாக இது ஒரு தனிப்பட்ட அகதி வாழ்க்கையின் அபத்தத்தை, பண்பாட்டு திரிபைச் சொல்லும் படைப்பு. இது அகதி என்றில்லாமல் கிராமங்களில் இருந்து பொருளாதார வாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த அனைவரும் ஏதோ ஓரிடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் படைப்பும் கூட.

மேலேலுந்த வாரியாக வாசிப்பவர்களுக்கு நூல் நேரடி மொழியில் இருப்பது போல தோன்றினாலும், தேர்ந்த வாசகர்கள்  இந்தப் படைப்பில் வரும் குறியீடுகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். வாசு முருகவேலின் மூத்த அகதி வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு.

Book : மூத்த அகதி

Author: வாசு முருகவேல்

Publisher: எழுத்து பிரசுரம் (Zero Degree Publishing)

********









No comments:

Post a Comment