Thursday, August 18, 2022

அறத்துக்கு அப்பால் - அர்லாண்டோ சேந்தன்

 "அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்" புத்தகம் குறித்து அர்லாண்டோ சேந்தனின் விரிவான வாசிப்பனுபவம் (ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது) ...

****
சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே உள்ளே இழுத்துக்கொள்ளும் அப்படியான எழுதும் கலையை கைவரப்பெற்றவர் எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர். அவரின் ஒரு வருட உழைப்பின் பலனாக, எழுதிய புத்தகம் தான் சமீபத்தில் வெளிவந்த இந்த அபுனைவு (Non-fiction) படைப்பு, ஆனால் ஆரம்பமே ஒரு த்ரில்லர் நாவலை வாசிக்க ஆரம்பிக்கிறோமா என்று நினைக்க வைக்கும் வேகம். மிக லாவகமாக வாசகனை புத்தகத்தோடு இறுக கட்டிவிடுகிறார். முதல் இரு அத்தியாயங்களை வாசித்த பிறகே முன்னுரை, அறிமுக உரையெல்லாம் வாசித்தேன்.
முதல் இரு அத்தியாங்கள் வெவ்வேறு பின்னனியில் சமூக ஊடகங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களை பற்றியது. அது எழுதப்பட்ட விதம் என் வாசிப்பு அனுபவத்தில் புதியது. முதல் சம்பவம் உச்சம் பெறும் இடத்தில் நிறுத்தி, அடுத்த சம்பவத்தை பற்றி ஆரம்பிக்கிறார். அடுத்த சம்பவத்தின் உச்சத்தில், முதல் சம்பவத்தின் தொடர்ச்சி வருகிறது. இந்த எழுத்துமுறை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் குறையவில்லை.
நைஜீரிய தொழில்நுட்ப குற்றக் குழுக்கள் எப்படியெல்லாம் சமூக ஊடகங்களை வைத்து Social Engineering (சரியான நபர் போல் பேசி தகவல்களை திருடி ஏமாற்றவது) செய்து ஏமாற்றுகிறார்கள் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். அடுத்த அத்தியாயமே பெண்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறான கெடுபிடிகளையும் அருவருப்புகளையும் சந்திக்கிறார்கள் என்பது பற்றியது.
சமூக ஊடகங்களின் வழியே வேலை வாங்கி தருகிறோம் என்று ஏமாற்றும் கும்பல்களை பற்றிய அத்தியாயம் தமிழக இளையர்கள் வாசிக்க வேண்டிய பதிவு. சமூக ஊடகங்கள் இவ்வளவு இழிவான செயல்களுக்கு தான் பயன்படுகிறதா எனும் அயர்ச்சி வரும் போது, அவரே அதை ஆக்க பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துபவர்களை பற்றிய தனித்தனி அத்தியாயங்களாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழக பெண்களின் சமூக ஊடக அனுபவங்களை அவர்களிடமே கேட்டு எழுதிய அத்தியாயங்கள் அருமை. பொதுவாக ஆண்களே பெண்களுக்கும் சேர்த்து கருத்து சொல்வதை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம் அதை கவனமாக தவிர்த்திருக்கிறார்.
சமூக ஊடக வெளியில் இருக்கும் பெண்களின் பதிவுகளில் தமிழ் இணைய சமூகம் எவ்வளவு பிற்போக்கானது என்பதும், சமூக ஊடகங்களில் பெண்கள் மீது எவ்வளவு வெறிக்கொண்டு தாக்குதல் நடைபெறுகிறதென்றும் தெரிகிறது, நாமும் இதை பலமுறை பார்த்து கடந்திருப்போம், அது வேறு ஒருவருக்கு நிகழ்கிறது அதனால் பெரிதாக கண்டுகொள்வதில்லை, அதன் தாக்கம் அந்த பெண்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஏனும் யோசித்திருப்போமா என்று நினைத்த போது, இல்லை என்று தான் சொல்வேன்.
ஒவ்வொரு அத்தியாத்தை முடித்தவுடன், அது போன்ற விஷயம் நமது சமூக ஊடக பயணத்திலும் நிகழ்ந்திருக்கிறதே என்று தோன்றும், அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து இருக்கிறதே என்று தோன்றும். அதனால் இந்த புத்தகத்தை இன்னும் நெருக்கமாக நம்மால் வாசிக்க முடிகிறது.
நேற்று இரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 2 மணி வரை வாசித்துவிட்டு இன்று மாலை மீண்டும் ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் கிட்டதிட்ட நான்கு மணி நேர வாசிப்பு. தமிழில் சமூக ஊடகங்களை பற்றி இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சமூக ஊடக வெளியில் உலவும் அனைவரும் வாசிக்க வேண்டிய
அருமையான
நூல்.
****
நூல் குறித்து விரிவாக எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி சேந்தன் !!

4 comments: