முந்தாநாள்
என் மதுக்கோப்பையில்
ஒரு தூசி விழுந்து கிடந்தது
முந்தாநாள்
என் மதுக்கோப்பையில்
ஒரு தூசி விழுந்து கிடந்தது
அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் அன்றாடத்தில் நின்று நிதானமாக வரலாற்று சின்னங்களையோ ஆவணங்களையோ கூர்ந்து கவனித்து படிக்க பெரும்பாலனர்களுக்கு நேரமிருப்பதில்லை.
அது சொந்த ஊராக இருந்தாலும் அதே நிலைதான். அந்த விதத்தில் சென்னை கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால், தற்போது 'சென்னை தினம்' கொண்டாடுகிறார்கள். ஶ்ரீராம் போன்ற சிலர் அதன் வராலாறு குறித்து யூடியூபில் பேசுகிறார்கள். ஒரு சில ஆங்கில புத்தகங்கள் கூட வாசிக்கப்படுகின்றன.
ஆனால், தமிழகத்தின் மற்ற சிறு, குறு நகரங்களின் வரலாறு அறிதல் என்பது பெரும்பாலும் கோயில்களின் தல வராற்றோடு நின்றுவிடுவது துரதிஷ்டம். அந்த வகையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய மதுரையின் வரலாற்றைப் பேசும் 'தூங்காநகர நினைவுகள்' கட்டுரை நூலை ஒரு நல்ல முன்னெடுப்பாக பார்க்கிறேன்.
இது ஆனந்தவிகடனில் எழுதிய தொடர்கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழகத்தின் ஒரு சில ஆயிரம் பேரின் கவனத்துக்குச் சென்றிருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் வரலாற்றின் எச்சங்களாக மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நிற்கும் பல இடங்களின் இன்றைய வண்ணப் படங்களுடன் வந்திருப்பதாலோ என்னவே விலையை ரூபாய் 500 என விகடன் வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் வரலாற்றை 250 பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்றாலும் மதுரையின் தொன்மை குறித்த ஆர்வத்தை இந்த நூல் கண்டிப்பாக தூண்டும். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.
நூல்: தூங்காநகர நினைவுகள்
ஆசிரியர்: அ. முத்துக்கிருஷ்ணன்
வகை: வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை
வெளியீடு: விகடன் பிரசுரம் (2021,2022)
விலை : ரூ.500
சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஓட்டலில் இந்தப் படத்தை வைத்திருக்கிறார்கள்.
அதில் காமராஜரின் வலதுபுறம் கேக் வெட்டும் சீமாட்டி இரண்டாம் எலிசபெத் ராணி. வலது கோடியில் இருப்பது அவருடைய கணவர் பிலிப். கூடவே, இந்தப் படம் ராஜாஜி அரங்கில் 1961-இல் எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் இருந்தது.
வருடா வருடம் வரும் அம்மா தினம், அப்பா தினம் போல சென்னை தினம் கொண்டாடுகிறார்கள். ஆனால், சென்னையின் வரலாற்றுத் தகவல்களின் சேகரமாக எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியகம் (Government Museum) தவிர்த்து வேறேதும் உருப்படியாக இருக்கிறதா என்ன?
முகநூல் வாசகர் Raji Athappan "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவல் குறித்து பகிர்ந்தது..
பிரதிக்கு :
ஒரு மகிழ்ச்சியான செய்தி!
2023-ஸீரோ டிகிரி சிறுகதைப் போட்டி-இல் என்னுடைய 'அம்மாவின் பிடிவாதம்’ சிறுகதை தேர்வாகி இருக்கிறது.
ஸீரோ டிகிரி பதிப்புக் குழுமத்திற்கும் , நடுவர்களுக்கும் நன்றி சொல்லும் இந்த நேரத்தில் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி !!
இதன் இரகசியம்தான் என்ன ? என நண்பர்கள் கேட்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன். இதில் பெரிய இரகசியமெல்லாம் இல்லை. நான் முன்பே எழுதி வைத்த கதைகளைப் போட்டிக்கு அனுப்புகிறேனே தவிர. போட்டிக்காக தனியாக கதைகளை எழுதுவதில்லை.
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே. இந்த இரண்டு கதைகளும் அமெரிக்கக் கதைக்களத்தை மையப்படுத்தியது என்பதைத் தாண்டி இரண்டுக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. அதைக் கதைகள் நூலாக வரும்போது வாங்கி வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த பின் இறுதியில் சிலர் மனநிறைவாக இருந்தது இல்லை வெறுமையாக இருந்தது என்பார்கள். சிலர் அது நல்லவிதத்திலோ அல்லது கெட்டவிதத்திலோ தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது என்பார்கள்.
அப்படிச் சமீபத்தில் வாசித்ததில் உறுத்திக் கொண்டே இருப்பது சிவக்குமார் முத்தையாவின் "தூண்டில் முள் வளைவுகள்" தொகுப்பில் கடைசி கதையான 'நீல நிற ஆக்காட்டி'.
மேலோட்டமாக பார்த்தால் அன்றைய கீழத் தஞ்சையின் பறவைகள். விவசாயம் பொய்ந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றின் நிலை பற்றிய கதை போல தோன்றும். ஆனால், ஆசிரியர் அதனுள் ஒரு அழகான காதல் கதையை வைத்து காதலியைப் பறவை எனும் படிமமாக செதுக்கியிருக்கிறார்.
இந்தக் கதை பறவை குறித்த என்னுடைய "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நாவலை யும் நினைவுபடுத்தியது என்றாலும் இந்தத் தொகுப்பில் சிவக்குமார் முத்தையாவின் அக உலகம் என்பது பெண்கள், மது, காதல், காமம், விவசாயம் என பல தளங்களில் மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.
சிவக்குமார் முத்தையாவின் எழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.
ஆசிரியர்: சிவகுமார் முத்தையா
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.266
இளையராஜாவின் காதலிகள்
தினமும் எழுதப்படும் பல நூறு கதைகளில் எது இலக்கியம்? என்ற விவாதம் இங்கு பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், அந்த விவாதத்துக்குள் சிக்காமல் நேர்மையோடு வாசித்தால் எழுத்தில் எது இலக்கியம் ? என்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்வான். அப்படிச் சமீபத்தில் உணர்ந்தது சிவக்குமார் முத்தையாவின் "இளையராஜாவின் காதலிகள் (சிறுகதைத் தொகுப்பு)".
'நான் டெல்டாவைச் சேர்ந்தவன்' எனும் முன்னுரையோடு வந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இதில் பல கதைகள் முன்பே இதழ்களில் வெளியாகி பரிசுகள் பெற்றிருந்தாலும் அவற்றை ஒரு தொகுப்பாக வாசிப்பது நல்லவாசிப்பனுவமாக இருக்கும்.
பொதுவாக சாமானியனின் பல்லாண்டு அனுபவத்தை ஒரு எழுத்தாளன் தனது கதையோட்டத்தில் ஒரு சில வரிகளில் எழுதிச் சென்றுவிடுவான்.
ஆனால், அதை வாசிக்கும் வாசகன் அங்கேயே நின்று ஒருவித அக தரிசனம் பெறுகிறான். அதுவே ஒரு படைப்பின் உயரத்தை தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
அப்படிப் பல உச்சங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியது இந்த நூல்,
உதா. நூலின் ஐந்தாவது கதையான செவத்த கன்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணை தனது வாழ்வில் கண்ட நாயகியின் மனம் இப்படி ஓடுகிறது…
'இந்த உடல் இல்லை என்றால் என்னைப் பின்தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்…. ஒவ்வோரு முறையும் உடலை ஓப்புக்கொடுத்துதான் அவர்களின்(ஆண்களின்) சுயத்தை கண்டறிய வேண்டுமா என்ன ? '
இப்படிச் சுயத்தை இழந்த கிராமம் அங்கு பொய்த்த விவசாயம், அழிந்த கிராமிய கலைகள், அங்கு தனித்திருக்கும் பெண்களும் அவர்கள் மீதான சமூக கண்ணோட்டம் என அடித்தள மக்களின் வாழ்வு இவருடைய கதைகளில் பல அடுக்குகளாக நம் கண்முன் விரிகிறது. அதிலும் குறிப்பாக, காவிரி கடைமடை வேளாண்குடி மக்களின் வாழ்வியலை இப்படிச் சம காலகட்டத்தில் வேறுயாரும் இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்வதாக எனக்குத் தெரியவில்லை.
பொன்னியின் செல்வர்கள் என்றில்லை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
நூல்-இளையராஜாவின் காதலிகள் (சிவகுமார் முத்தையா)
பதிப்பகம் -யாவரும், விலை-₹160.00
எழுத்தாளர் இமையத்துடன் கலிபோர்னியாவில் நடந்த உரையாடலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பின் நுட்பம், சமூக வலைதளங்கள், இன்றைய சிற்றிதழ்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற பல விசயங்கள் குறித்து பேசியிருக்கிறேன். பாருங்கள்
ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்கிவிட்டது (ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 15 வரை). என்னுடைய பெரும்பாலான நூல்கள் ஸ்டால் எண் 76, 77ல் (ஜீரோ டிகிரி பதிப்பகம்) கிடைக்கும். நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மக்கள் சிந்தனைப் பேரவையும் தமிழக அரசும் இணைந்து நடந்தும் இந்தப் விழா புத்தகத் திருவிழா மட்டுமல்ல ஒருவிதத்தில் இலக்கியவிழாவும் கூட. இது தமிழ் ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றும் கருத்து மையமாகவும் இருக்கும். என்னூடைய புத்தகங்கள் என்றில்லை நீங்கள் வேறு யாருடையதையும் வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நல்ல தமிழ் காதில் விழவாவது போய் வாருங்கள். நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
முகநூல் வாசகர் Aarthi Siva, "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவலின் கதைசொல்லி பற்றி பகிர்ந்தது..
//...கதை சொல்லியின் மகளின் வயதை வைத்து கணக்கிடும்போது அவர் தடாலடியாக செயல்படுகிற இளமை வேகம் கடந்தவர்ங்கிறதும், அவரோட நிதானப்போக்கினை பார்க்கும்போது மிகுந்த யதார்த்தவாதிங்கிறதும் புரியவருது. ᴩꜱyᴄʜᴏ ᴀɴᴀʟyꜱɪꜱ படி சொல்லனும்னா ᴄᴀᴜᴛɪᴏᴜꜱ ᴛyᴩᴇ ᴩᴇʀꜱᴏɴᴀʟɪᴛy. தன் காதலை பத்தியோ, அவளுடனான உறவை பத்தியோ ꜱʜᴀʀᴇ பண்ணிக்கிற அளவுக்கு கூட வேறு நெருக்கமான நட்போ உறவோ இல்லாதவர். தமிழ்நாட்டு பாணில "நல்ல குடும்பத்துப் பையன்" ᴛyᴩᴇ. அவளது (ஜெஸி) இழப்பினால் விளைந்த துக்கத்தை மௌனமாக விழுங்கி ஜீரணிப்பாரே தவிர துக்கத்தில் முழுகிவிடமாட்டார். அதனால அவர் பேர்ல இரக்கம் தோணலன்னு நினைக்கிறேன்.//
பிரதிக்கு :
ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்த தனது வாசிப்பனுபவத்தை முகநூலில் பகிர்ந்த பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. நூலின் இறுதியில் வரும் கவிதை அவருடையதே.
//
மனதில் ஒரு நீலநாரையின் சிலாசாசனம் (கல்வெட்டு)
'ஆலங்குயில் கூவும் இரயில்..' பாடலில் கவிஞர் கபிலன் மீசையை "கூந்தல் குழந்தை" என்ற புதிய கோணத்தில் உருவகப்படுத்தி எழுதியிருப்பார் (படம்-பார்த்திபன் கனவு). அது நடந்ததோ 2003-வாக்கில்.
அந்தக் கூந்தல் குழந்தை குறித்து ஒரு சிறுகதை எழுதுவேன். அது பரிசு பெறும் கதையாகும் என்றெல்லாம் சுத்தமாக நினைக்க வில்லை. 'நீட்டலும் மழித்தலும்' இடம் பெற்ற 'அமெரிக்கக் கதைகள்' புத்தகம் இப்போதுதான் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
அந்த நூலின் முன்னுரையில் ஈழ எழுத்தாளரும் கவிஞருமாகிய தீபச்செல்வன் இப்படி எழுதியிருக்கிறார்.
'நீட்டலும் மழித்தலும் என்ற கதை இயல்பான மொழியில் மீசை தமிழ் சூழலில் கொள்ளும் இடத்தையும் புலம்பெயர் தேசத்தில் மீசை குறித்த பார்வையும் ஒரு தனி மனிதனிடத்திலும் அவன் குடும்ப வாழ்விலும் மீசை ஏற்படுத்தும் அசைவுகளையும் நிலத்திற்கும் புலம்பெயர் நிலத்திற்குமான பெயர்வின் வழியாக ஏற்படும் தத்தளிப்புகளையும் மனக்குழப்பங்களை மிக நேர்த்தியாக பேசுகிறது. அதே நேரம் மிக இயல்பாக அதிர்வை உண்டு பண்ணுகிறது.'
நன்றி-தீபச்செல்வன்
நண்பருக்கு தனது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் நீண்ட நாள் தள்ளி போய் கொண்டே இருந்தது. பொறுமையிழந்த அவரோ தனது தகுதிக்கு ஏற்ற இன்னொரு வேலையைத் தேடிக் கொண்டார்.
அதைக் கேள்விப்பட்ட பழைய நிறுவனமோ 'போகாதீங்க.. பதவி உயர்வை இப்போ தர்றோம்..' என்றார்களாம். ஆனால், நண்பரோ காலந்தாழ்த்தி இறுதியில் வரும் பதவி உயர்வு தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார்.
புதிதாக கிடைத்த வாய்ப்பு என்பது கொஞ்சம் சவாலாக இருந்தாலும் அதைச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு, பழைய நிறுவனத்தில் 'TOO LATE...' எனச் சொல்லிவிட்டார்.
இதை நண்பர் ஆழ்மனதின் வழிகாட்டுதலில், பெரிதாக யோசிக்காமல் செய்திருக்கலாம்.
ஆனால், அது பற்றி கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது எனக்குத் தோன்றியது ;
காலம் கடந்து கிடைக்கிற ஒன்றை வேண்டாம் என மறுப்பதன் மூலம் அதைச் சார்ந்து இருக்கின்றவர்களைத் தண்டிப்பதாக நமது மனது உள்ளூர ஆறுதல் கொள்வதே காரணம் என நினைக்கிறேன்.
மேற்கண்ட பதிவை முகநூலில் பகிர்ந்தபோது பல அன்பர்கள் 'தன்மானம் ' என்பதும் இன்னொரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய மனம், உடல் மட்டுமின்றி உலகின் பல சிக்கலான விசயங்கள் குறித்த ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஆராயப்படும் பல விடயங்களில் ஒன்று பறவைகள் வலசை போவது. இதைப் பற்றி பேசும் How do birds find their way? எனும் ஒரு புத்தகம் வீட்டில் கண்ணில் பட்டது.
பல பறவைகள் குளிர் காலங்களில் சூடு தேடி கண்டம் விட்டு கண்டம் பறப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதன் வழித்தடம்தான் பலருக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. சிலர், அந்தப் பறவைகள் சூரியன் எழும் திசை, மறையும் திசை ஏன் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பொருத்தும் கூட அவை இரவும் பகலும் பயணிக்கின்றன என்கிறார்கள். அதே சமயத்தில், அவைகளால் மேகமூட்டமான நேரத்திலும் பயணிக்க முடிகின்றன என்பதையும் கவனிக்கிறார்கள்.
சிலர் பறவைகளின் உடலுக்குள்ளேயே தென்புலம், வடபுலம் அறியும் காந்த ஊசி இருப்பதாக நம்புகிறார்கள். ஏன், வலசை என்றில்லை பொதுவாகவே பறவைகள் எப்படி பறவைகள் தங்கள் வழித்தடத்தை தொடர்கின்றன அல்லது கூட்டை வந்தடைகின்றன என்பதே இன்னமும் புதிராகவே இருக்கிறது.அதிலும் குறிப்பாக புறாக்கள் (homing pigeons) தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகளாம். ஒரு முறை அதன் கண்களைத் திரையிட்டு மறைத்தாலும் அவைச் சரியான வழியில் பயணித்து தன்னுடைய கூடுவந்து சேர்ந்து விடுகின்றனவாம். (இதெல்லாம் தெரிந்துதானே அன்றே நம்மாட்கள் புறாவை தூது அனுப்பினார்கள் :))
ஒரு லண்டன் பறவையை திடீரென விமானத்தில் கொண்டுவந்து அமெரிக்காவில் 'அம்போ' என விட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பறவையோ சரியாக 12-வது நாள் தன்னுடைய லண்டன் கூட்டில் ஜாலியாக வந்து உட்கார்ந்து பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு பறவைகளின் வழித்தடம், அதன் பறக்கும் உயரம், காலநிலை போன்றவைகளை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனாலும், பறவைகளின் உள்ளுணர்வு எனபது இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.
முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!
//
ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.
சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.
கடந்தவாரம் பள்ளியில் நடந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டது. அதுபோல, தமிழ் பாடத்தைச் சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்ற மாணவருக்கும் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.
பரிசு பெற்றவர்கள் ஆதித்யா(முதல் இடம்), ஆரூத்ரா(2-ஆம் இடம்), பரணிதரன் (3-ஆம் இடம்).
தமிழில் முதல் இடம் - விசுவநாத்
இதைச் சாதித்துக் காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளோடு, பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !!
#சிறகுகள்2023
'ஃபேர்-அன்-லவ்லியின் (fair and lovely) பேரா
நீயும் நானும் வேறா
ஐந்துக்கு பின் ஆறா
நீ ஓட்டுவது பிம்-எம்-டபில்யூ (BMW) காரா ?'
என்பது போன்ற நாலு காமா சோமா பாட்டெழுதி கூட ஒருவர் இன்று பிரபல பாடலாசிரியராகிவிட முடியும். ஆனால், இலக்கியத்தில் 30-ஆண்டுகளுக்கு மேலாக செறிவான நவீன கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவதேவன் போன்றவர்கள் புகழ்பெறுவது என்பது கானல் நீர்தான். அதுவும் வாசிப்பு அரிதாகி வரும் இந்தக் காலத்தில்.
அவரைப் போன்றவர்களுக்கு அரசியலும் சரியாக தெரிவதில்லை.பாவம்.
யார் அந்த தேவதேவன்? அவருடைய கவிதை ஒன்று சொல்லமுடியுமா? என்பவர்களுக்கு அவருடைய 'ஒரு மரத்தடி நிழல் போதும்' எனும் கவிதை கீழே...
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்.
ஒரு காலத்தில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி பலர் பேச்சினுடே குறள், ஓளவை முதுமொழி ஏன் குறைந்த பட்சம் ஒரு பழமொழியையாவது மேற்கோள் காட்டி பேசுவது என்பது மிகச் சாதாரணம். சிலர் ஏகலைவன், கட்டை விரல், கண்ணகி, கர்ணன் என்றெல்லாம் புராண கதைகளை டக்கென சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால், இன்று அது போன்ற வழக்கங்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டதாகவே நினைக்கிறேன். மாறாக, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உரையாடல்கள் என்பது கொஞ்சம் தட்டையாகி அந்த இடத்தை சினிமா பிடித்துவிட்டதாக நினைக்கிறேன். அதாவது, வயது வித்தியாசமின்றி பேச்சுவழக்கில் ஒரு சினிமா காட்சியையோ அல்லது வசனத்தையோ மேற்கோள் காட்டி பேசாதவர்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இளைய தலைமுறைக்கு சினிமாவைத் தொடாமல் எதையும் பேசவே முடிவதில்லை. (தமிழ்புத்தகங்கள் !?- மூச்!) அந்த அளவுக்கு சினிமா வாழ்வில் புரையோடிக் கிடக்கிறது. இது முற்றிலும் உண்மை.
தமிழில் சினிமா, அரசியல் இரண்டும் யூ-டியூபின் இரண்டு கண்கள் என்றால் மூன்றாவது கண் வீரப்பன் விவகாரமாகதான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தினமும் மக்கள் பரபரப்போடு இணையத்தில் இதைக் கவனிக்கிறார்கள். வீரப்பன் மரணமடைந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்பும் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.
ஏன், பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைச்சித்திரம்‘வீரப்பன் வாழ்க்கை’ வரலாறாக இருக்கும் போல. நெப்போலியனின் ‘சீவலப்பேரி பாண்டி’ சக்கைபோடு போட்டதை இங்கே நினைத்துப் பாருங்கள். (வீரப்பன் தொடர்பான 40-50 ஆண்டுகால நிகழ்வுகளை சமூகபார்வையில் அணுகி ஏன் உருப்படியான ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கக் கூடாது ?).
இதெல்லாம் போதாதென்று, சிலர் வீரப்பன் காட்டு பழங்குடியினருக்கு உதவுகிறோம் பேர்வழி என பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும் சொல்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல், வீரப்பன் மறைவுக்கு பின் வெளியாட்கள் பலர் தைரியமாக காடுகளுக்குள் நுழைந்து ஆழ்துளை கிணறு, நீர்முழ்கி மோட்டார் என சகட்டு மேனிக்கு நீரை உறிஞ்சி இயற்கைக்கு புறம்பான விவசாயம் செய்கிறார்களாம்.
அதுபோல, வீரப்பன் மறைந்து வாழ்ந்த காட்டை மையப்படுத்தி சுற்றுலா கொண்டுவரும் திட்டம் வேறு சிலருக்கு இருக்கிறதாம். அப்படி, ஏதாவது வந்தால் உல்லாசப் பயணம் என்ற போர்வையில் வெளியாட்கள் உள்ளே புகுந்து இன்னமும் இயற்கை வளத்தை அழிப்பார்கள். பாவம் அங்கே எஞ்சி நிற்கும் உயிரினங்கள்.
இப்படிச் சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர் அழித்த காடுகளின் பரப்பளவு ஒன்பது சதவிகிதம் எனில் மீதமுள்ளதை அழித்துக் கொண்டிருப்பது நாமே.
#தீதும்நன்றும்
படம் நன்றி- இணையம்.
ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி என்பது தனது படைப்பு பலரைச் சென்று சேர்வது என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, அந்தப் படைப்பு அவர்களால் எந்த அளவு புரிந்து கொள்ளப்பட்டது என்பதும் மிக முக்கியமாகும்.
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரின் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கும்? அமெரிக்கக் கனவு இனியதா கொடியதா? அமெரிக்காவும் இந்தியாவும் எந்தெந்த வகைகளில் வேறுபடுகின்றன, எந்தெந்த வகைகளில் ஒன்றாக இருக்கின்றன? இந்தியப் பெருநகரங்களின் வாழ்க்கை எந்தளவுக்கு அமெரிக்க வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை ஒரு நெடுங்கதையின் ஊடாகச் சொல்லும் நாவல், ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங் நாவல்.
அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்க வாழ் பெண்ணுடன் உருவாகும் காதலும் அதை ஒட்டிய நினைவுகளும் இந்தக் கதையின் களம். இதில் அந்தத் தமிழர் அமெரிக்க நிலத்துடன் எப்படி ஒன்றுகிறார், ஒன்ற முடியாமல் தவிக்கிறார், அமெரிக்கப் பெண்ணுடன் அவரது உறவு எப்படி நிகழ்கிறது, அந்த அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கையை இவர் எப்படிப் பார்க்கிறார் என்பன போன்ற பரிமாணங்களில் விரிகிறது இந்த நாவல். வழக்கமான ‘Who done it?’ வகை ஒரு கிரைம் த்ரில்லராக ஆகிவிடக்கூடிய கதையை, நிலம், பண்பாட்டுக் கூறுகள், மனிதரின் இயல்புகள் மற்றும் பிறழ்வுகளைக் காட்டும் நெடுங்கதையாக மாற்றி இருக்கிறார் நாவலாசிரியர்.
புலம்பெயர்ந்த நாட்டில் ஒற்றைப் பெற்றோராக (Single Parent) இருக்கும் இந்தியத் தமிழ் ஆண் ஒருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இன்னொரு ஒற்றைப் பெற்றோரான பெண் ஜெஸிகா கிங்கும் கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரின் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் இவர்களுடன் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஆகியோர் இக்கதையின் பிற கதைமாந்தர்கள். இவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்பவர்கள் என்பதால், இவற்றில் பல கதைமாந்தர்களை நாம் தமிழ்நாட்டில் குறிப்பாகப் பெருநகரங்களில் நம்முடன் வாழும் பலரோடும் பொருத்திப் பார்க்க முடிவது, நம்மைக் கதையுடன் எளிதில் ஒன்றச் செய்கிறது.
குற்றத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், கிரைம் திரில்லர்களைப் போல் கதையின் முடிவை நோக்கிய வெறும் பரபரப்பை உருவாக்குவதாக இந்நாவலின் கதையாடல் இல்லை. கதையில் இருக்கும் கதைமாந்தர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணி, காரணம் மற்றும் கதைக்கான பங்களிப்பு இருப்பதால், விறுவிறுப்பான வாசிப்போடு, கதைமாந்தரின் பண்புகளையும் வாழ்வையும் பற்றிய புரிதல் கதையோடு சேர்ந்து வளர்கிறது.
ஜெஸிகா கிங்க்கும் கதை சொல்லியாக வரும் தமிழருக்கும் இடையிலான காதல்மிகு கணங்களில் காதல் கதையின் பண்புகள் முழுமையாக இருக்கின்றன. கதையில் நிகழும் குற்றத்தை ஆராயும் இடங்களில் கிரைம் த்ரில்லர் வகைமையில் கதை நகர்கிறது. கதையின் முடிவில் உணர்ச்சிகரமான, எதிர்பாராத சில நிகழ்வுகள் இந்த இரு வகைமையில் இருந்தும் மாறுபட்டு திகில் ஜானருக்கு மாறி வியப்பளிக்கிறது. இது வாசிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது.
அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழரின் கதை என்றாலும், பல பாத்திரங்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் அவற்றின் உரையாடல்களை எப்படி எழுதி இருப்பார் என்ற எண்ணம் கதையை வாசிக்கத் தொடங்கியதும் உருவாகிறது. கதை தமிழரின் பார்வையில் நகர்வதால் பல இடங்களில் உரையாடல்களைத் தமிழில் எழுதி இருக்கிறார். சில இடங்களில் ஆங்கில உரையாடல்களைத் தமிழில் அப்படியே எழுதி, அந்த உடையாடலில் அமெரிக்கத் தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த பொருளை, பின்புலத்தைத் தமிழில் விளக்கி, இந்த மொழிச் சிக்கலை அருமையாகக் கடந்திருக்கிறார் எழுத்தாளர்.
பல இடங்களில் காட்சிப் படிமங்கள் நன்றாக விவரிக்கப்பட்டு, அந்தச் சூழலை உணர உதவுகின்றன.
மேலோட்டமாக காதல் கலந்த கிரைம் திரில்லர் போல் தோன்றினாலும் அதையும் தாண்டிப் பல விஷயங்களைப் பேசுகிறது ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளால் உருவாகும் மோதல்கள், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் மோதல்கள், மனிதருக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே எற்படும் மோதல்கள், மனிதருக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையே நிகழும் மோதல்கள் ஆகியவை கதையின் ஊடாக அழகாக சொல்லப்பட்டு இருக்கின்றன.
தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் மனித வாழ்வை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன, இன்றைய பதின்ம வயதினர் தொழில்நுட்பத்தை நுகரும் மற்றும் தொழில்நுட்பத்தால் நுகரப்படும் விதம், மூத்த தலைமுறையினர் அதைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள், இந்தத் தொழில்நுட்பங்கள் வாழ்வில் எற்படுத்தும் நல்ல விளைவுகள் மற்றும் கேடுகள் ஆகியவையும் கதையின் ஊடாகப் பேசப்படுகின்றன.
கோவிட் காலத்தில் மானிட இனம் எதிர்கொண்ட பல சிக்கல்களும் நாவலில் விரிவாக பேசப்படுகின்றன.
கதையின் முக்கியக் கதாப்பாத்திரமான ஜெஸிகா, 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறாள். தனது உடல் குறித்து பெருமை கொண்டவளாக இருக்கிறாள். உரிமைகளைக் குறித்து தெளிவு மிக்கவளாக இருக்கிறாள். அவள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள், அன்றாட வாழ்வின் செயல்களுக்கு முரண்படாமல் இருக்கும் அளவுக்குத் தெளிவானவளாக, மன முதிர்ச்சியும் மன உரமும் கொண்டவளாக இருக்கிறாள். சுற்றுச்சூழலைப் பற்றிய ஆர்வமும் அக்கறையும் அறிவும் கொண்டவளாக இருக்கிறாள். இயற்கை மீதான அவளது அன்பு, நாய் பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளோடு மட்டுமே குறுகிப் போகாமல், அடுக்கு மாடிகளின் வெளிப்புறக் கண்ணாடிகளில் மோதி இறக்கும் பறவைகள், ஏரியில் காணக்கிடைக்கும் நீர்ப்பறவைகள், சூழலுக்குத் தொடர்பில்லாமல் வேற்று நிலத்தில் இருந்து அழகுக்காக மட்டுமே நட்டு வளர்க்கப்படும் மரங்கள் என்று பரந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.
ஜெஸிகாவின் சொல்லும் செயலும் நிலைப்படும் ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக இருக்கின்றன. உறவுகள் குறித்த சில முடிவுகள் தவறாகும்போது அவற்றில் இருந்து விலக அவள் தயங்குவதில்லை. அவளது வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வந்தபோதும் நாம் இப்படிப்பட்ட நபராக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்று அவள் வருந்துவதில்லை.
தனது உயிருக்கே ஆபத்தாகும் என்ற போதிலும் கொள்கை சார்ந்த தனது முடிவுகளில் இருந்து அவள் மாறவில்லை. எடுத்துக்காட்டாக உயிருக்கே ஆபத்து நேரும் எனும் நிலை வந்தாலும், அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அவள் துப்பாக்கி வைத்துக்கொள்ளாமலே வாழ்கிறாள். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆணின் மதிப்பீடுகளை அவள் சார்ந்திருப்பதில்லை.
நாவலின் குறிப்பிடத்தக்க இரண்டாவது சிறப்பு, கதை சொல்லிக்கும் ஜெஸிகாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதல். எற்கனவே விவாகரத்து பெற்ற ஆணுக்கும் பெண்ணும் இடையில் உருவாகும் இந்தக் காதல், வெறும் உணர்ச்சிப் பொங்கல்களால் ஆனது அல்ல. தனிப் பெற்றோராக (Single parent) இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் இந்தக் காதல் மிகவும் நளினமானதாக, இயல்பானதாக, மெல்ல நிகழ்வதாக உள்ளது. இந்தக் காதல் ஒருவரை ஒருவர் சுரண்டுவதாக இல்லை, அதனால் சுரண்டலின் பொருட்டு உருவாகும் குற்ற உணர்ச்சிகள் இந்தக் காதலில் இல்லை. வெறும் சொல்லால், எண்ணங்களால், இலக்குகளால், கனவுகளால் ஆனது அல்ல இந்தக் காதல், ஆணும் பெண்ணும் இணைந்து செய்யும் செயல்களால் ஆனது. அவ்வகையில், மிகவும் மனமுதிர்ச்சி பெற்ற இருவரின் காதலாக இந்தக் காதல் இருக்கிறது. அந்தக் காதலை உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த விவரணைகளால் நிரப்பாமல், காதல் மிகும் கணங்களைக் கவித்துவமாக எழுதிக் காட்டி இருப்பது எழுத்தாளரின் சொல்முறையின் சிறப்பு.
நாவலின் தொடக்கத்தில் பரந்த வெளியில் எங்கோ ஓர் நீலப் புள்ளியாகத் தெரியும் ஜெஸிகா, கதையின் போக்கில் நெருங்கி நெருங்கி நீலப் பறவையாகி பிரம்மாண்டம் கொண்டு, ஒவ்வொரு கதாப்பத்திரத்தின் மீதும் வெளிர் நீல ஒளியாகப் படர்கிறாள். நாவலை வாசிக்கும் நம் மீதும் அந்த நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது.
ஜெசி (எ) ஜெஸிகா கிங்
ஆசிரியர்: ஆரூர் பாஸ்கர்
விலை: ₹330
வெளியீடு: எழுத்து பிரசுரம்
ஆன்லைனில் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
இந்தக் கட்டுரையின் சுட்டி Link
அமெரிக்க வாழ் மருத்துவர் மோகன் அவர்களுடைய வாசிப்பனுபவம்.
வணக்கம், தங்களுடைய வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசித்தேன். இரசித்தேன். சைபர் செக்கியூரிட்டி, இன்டெர்நெட், இகோ-டெரரிசத்தையெல்லாம் (Eco-terrorism) தொட்டு எழுதியது சிறப்பு. வாழ்த்துகள் !!
*நாவல்* -வனநாயகன். மலேசியநாட்கள்
புத்தகத்தை வாங்க
ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்து முகநூல் நண்பர் சரவணன் மாணிக்க வாசகம் அவர்களின் பதிவு..