Friday, November 28, 2014

நன்றி சொல்ல உனக்கு..

Nov-26 வியாழக்கிழமை, அமெரிக்காவில் Thanksgiving day, (நன்றி தெரிவிக்கும்  நாள் ) கொண்டாடப்பட்டது.

இது நம்ம ஊரு தைப்பொங்கல் போல ஒரு பண்டிகைனு தப்பு கணக்கு போடாதீங்க இது அதையும் தாண்டி. .. நாம பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைளை  டீவி சேனல்கள்கிட்ட அடகு வச்சு ரொம்ப நாளச்சு பாஸ்...


சரி விஷயத்துக்கு வருவோம், இது அமெரிக்காவின் முக்கியமான ஆண்டின் நீண்ட வாரஇறுதி அல்லது Long Weekend.   வியாழன் அன்று  தேங்க்ஸ் கிவீங் கொண்டாடிவிட்ட களைப்பு தீராமல் மறு நாளை (Black Friday) ப்ளாக் ப்ரைடே எனப்படும் ஷாப்பிங் வெள்ளியை கொண்டாடி மகிழ்கிறது.

 ப்ளாக் ப்ரைடே அன்று கிருஸ்மஸ் சீசனை வரவேற்பது போல நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்று குவிக்கின்றனர். தங்கம் முதல் தகரம் வரை எல்லாத்‌துக்குமே தள்ளுபடி தான் போங்க. இது நம்ம ஊரு ஆடிக் கழிவையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடியது.

இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பெரிய சில்லறை நிறுவனங்களாகிய வால்மார்ட்,மேஸிஸ்,பெஸ்ட் பை போன்றவை வியாழாக்கிழமை மாலையிலே கடைகளை திறந்து விற்பனையை தொடங்கினர்.

அதனால் எப்போதும் வெள்ளியன்று சூடுபிடிக்கும் ஷாப்பிங் காய்ச்சல் இந்த தடவை வியாழக்கிழமையே தொற்‌றிக்கொண்டது.  இதற்கு அமெரிக்க மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்காது என பரவலாக பேசப்பட்டாலும். வசூல் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டியதாக தெரிகிறது.

ப்ளாக் ப்ரைடே  என்பதை நுகர்வு கலாச்சாரத்‌தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன்.   இந்த ஆண்டில் இருந்து பிரிட்டனிலும் வால்மார்டின் ஆசியிடன் இது தொடங்கியதாக தெரிகிறது.  இந்த அமெரிக்க நுகர்வு கலாச்சார புயல்  சென்னை போன்ற நகரஙகளை தாக்கும் அபாயம் தூரத்தில் இல்லை. சல்லிசான விலையில பொருள் கிடைச்சா மக்கள் வேண்டாமானா சொல்லப்போறாங்க ?. :)

இந்த விடுமுறையின் முதல் பாகமான  நன்றி தெரிவித்தலுக்கு வருவோம்,  தற்போதய அவசர சூழலில் காலையில் அப்பார்ட்மெண்டில் லிப்ட் கதவை திறந்து விடும் செக்கியூரிட்டியில் தொடங்கி   தினமும் இயந்திரத்தனமாக பல தடவை 'Thanks' என்ற வார்த்தையை அவசரகதியிலே உதிர்த்து செல்கிறோம்.

ஒரு வாழ்த்தையோ அல்லது ஒரு நன்றியையோ நம்மில் எத்தனை பேர் உணர்ந்து சொல்கிறோம் என்பது நிஜத்தில் கேள்விக்குரியதே.

தமிழில் நன்றி சொல்ல வார்த்தையின்றி மயங்காமல் மாறுதலுக்கேனும் அடுத்தமுறை  'நன்றி' என  எதிரில் உள்ளவரின் கண்களை பார்த்து மனதறிய சொல்லிப் பாருங்கள்.  பின்பு சொல்லுங்கள்,  உங்கள் மனதில் மின்சாரம் பாய்ந்ததா என்று.  அது உண்மை என்றால்,  இருவருக்கும் அது பொருந்தும்.

Sunday, November 16, 2014

2014 தீபாவளி கலை நிகழ்ச்சி - What A Function!!!

 நேற்று (Nov-15-2014)  தென் புளோரிடா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடந்த தீபாவளி கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மிக சிறப்பாக நடந்து முடிந்தது அப்படினு எழுதினா ஏதோ தினமணி பேப்பர்ல வரும் நீயூஸ் மாதிரி இருக்கும்.

  சரியா சொல்லனும்னா ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தி இருந்தது. ரஜினி படம்னா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்திபடுத்தும் அம்சங்கள் இருக்கும்  இல்லையா அது போல.

  சிறுவர்களும், பெரியவர்களும் சினிமா பாடல், நடனம் என கலக்கினர்.
சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் தூண்டுதலாய்   இருந்திருக்கும் என்பது எனது அனுமானம்.

ஆனா,  நமக்குததான் அவர்கள் தேர்தெடுத்த பெரும்பாலான லேட்டஸ்ட் பாட்டோ டான்ஸோ புரியல அல்லது தெரியல,  உதாரணத்துக்கு "வாட் அ கருவாடு"  பாடல் (What A Karavaad!!) பெரிய வெற்‌றிப் பாடல் என்ற அறிமுகத்துடன் ஆடிக்களித்தனர். (By the way, செத்த மீனுக்குதான கருவாடுன்னு பேரு ? ) :)

எனது மூத்த மகள் கிருஷ்ணனின் "கோபிகா "பாடலுக்கு குழு
நடனமாடி இருந்தாள். அதை தவிர்த்து மருந்துக்காவது  ஒரு பாரதியோ இல்ல நல்ல ஆண்டாள் பாசுரமாவது வருமான்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

அதைத் தவிர்த்து, எனது விருப்பபாடலான AR ரஹ்மானின்  'ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா!!'  என்ற ஸ்டார் படப்பாடலை தேர்தேடுத்து ஆடியது மனத்துக்கு நிறைவு.

மேலும், நிகழ்ச்சியின் மகுடம் என சிலாகித்து  நன்றி உரையில் குறிப்பிடப்பட்டது  சுதாகர் கிருஷ்ணமூர்த்தியின்  பாடல்.  மௌனராகத்தில் இருந்து  "மன்றம் வந்த தென்றலுக்கு" எனும் பாடலை மிகஅசத்தலாகப் பாடி  அனைவரையும் மயங்கச் செய்தார். வாழ்த்துக்கள் அன்பரே!

தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன.
அதுபோல நிகழ்ச்சியும் பாடல், இசை, நடனம், நாடகம் என அனைத்து அம்சங்ககளையும் கொண்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி கொண்டாட்டமாய்
இருந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளினி மூன்று மணி நேரமும்  சுவாரஸ்யமான பேச்சால் பார்வையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
வாழ்த்துக்கள்!

மிக அருமையானதொரு நிகழ்வு, நிர்வாகக் குழுவினர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை.Sunday, November 9, 2014

சதுரங்க ஆட்டத்‌தில்..

என்றைக்கும் இல்லாத மாற்றமாய் வானம் லேசான மேகமூட்டமாய் இருந்தது.  அதிர்ஷ்டமாய் கிடைத்த மர நிழலில் காரை பார்க் செய்து விட்டு நூலகத்திற்குள் நுழைந்தாள் நளினி.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இங்கே சிறுவர்களுக்கான செஸ் வகுப்புகள் நடக்கின்றன.  இன்று  எட்டு வயது மகள் அம்முவை கூட்டிப்போக வந்திருந்தாள்.

நேராக முதல் தளத்தில் இருந்த அந்த அறைக்குள்  நுழைந்தாள்.  அங்கே வரிசைக்கு நான்கு வீதம் இரண்டு வரிசையாக டேபிள்கள் போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு டேபிள்களிலும் இரண்டு சிறுவர்களாக அமர்ந்து அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

செஸ் ஒரு யுத்த தந்திர விளையாட்டு, அவர்களுக்கான ஆடுகளத்தில் தங்கள் தந்திரங்களை கையாண்டு கொண்டிருந்தனர். இங்கே யாரும் பெரும்பாலும் அதிர்ந்து பேசியதாக  நினைவில் இல்லை. கடைசி வரிசையில் அம்முவின் தலை தெரிந்தது.

அனைவரையும் கடந்து அருகில் சென்றபோது தான், அவளுக்கு எதிரே ஆடிக்கொண்டிருந்த சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தாள்.
அதிர்ந்தபடி அம்முவிடம் கேட்டாள்.

"என்ன பண்ணின அவ ஏன் அழறா ?"

"நான் ஒன்னும் பண்ல, ஏன்னு தெரியாது"

சிறுமியோ பதிலேதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் இப்போது அவளின் பிங்க் நிற சட்டையில்
வழிந்தது.

ஆனாலும், அம்மு ஏதோ சொன்னதால் தான் சிறுமி அழுவதாக முடிவு செய்திருந்தேன்.

அந்த சமயத்தில் அங்கிருந்த செஸ் பயிற்சியாளர் பிங்கியும் என்னுடன் சேர்ந்து நின்று கொண்டார்.

"சாரி சொல்லிட்டு கிளம்பு, நீ விளையாண்டது போதும்"

"நான் ஒன்னும் பண்ல, அப்புறம் ஏன்?"  என்றாள்  அம்மு.

அப்போது அங்கு வந்த ஒரு  வயதான பெண்மணி  குனிந்து சிறுமியின் காதோடு சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பாட்டியாக இருக்கக் கூடும் என நினைத்தேன்.

நிமிர்ந்து எங்களை பார்த்து பேசிய பாட்டி "அவ அம்மாவை நினைச்சு அழறா" என்றாள்.

அழுகையை நிறுத்தி இருந்த சிறுமி

"என்னோட அம்மா என்ன விட்டுட்டு பிலிப்பைன்ஸ் போயிட்டாங்க"  என்றாள்.

பிங்கிக்கு என்ன நினைதாரோ, ஆனால் எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.

"அம்மா என்ன வேலை செய்றாங்க? " என அன்பாக கேட்டார் பிங்கி

"அங்க டாக்டரா, நோயாளிகளுக்கு உதவி பண்றாங்க"

"எப்ப போனாங்க?"

"போன மாசம்"

இப்போது தொண்டயை செருமியபடி பிங்கி,

"  பெரும்பாலும் வாழ்க்கை சதுரங்கத்தில், எதிராளியின் நகர்த்தலை நாமே முடிவுசெய்து, சொந்த எண்ணங்களில்  உறிஞ்சப்படுகிறோம்.

உண்மையில், எதிராளியே இறுதியாக தங்‌கள் நகர்த்தலை தீர்மானிக்கிறார்கள். 

என்று அனைவரும் கேட்கும்படி அழகாய்ச்  சொல்லி முடித்தார். அவர் குரலில் ஓரு உறுதி இருந்தது.

ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.

வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது.  பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.