Sunday, June 28, 2020

2020 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா

அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு பெட்னா (FETNA-The Federation of Tamil Sangams in North America) தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது  திருவிழா போல கொண்டாட்ட மனநிலையைத் தரும் ஒரு நிகழ்வு.

அந்த வகையில், கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.

அதுபோல,  இந்த ஆண்டும் அட்லாண்டா மாநகரில் கோலாகலமாக திட்டமிட்டபடி  நடந்திருக்க வேண்டிய பேரவை விழா கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், பேரவையின்  தொன்மையைத் தொடரும் விதத்தில் இந்த ஆண்டு  பேரவை விழா  இணைய வழி விழாவாக நடக்க இருக்கிறது. ஆமாம், வரும் ஜூலை 3,4 & 5 ஆகிய தேதிகளில்  நடக்கும் இந்த விழாவை உலகத் தமிழர்கள் உடனடியாக கண்டுகளிக்கும் வகையில் நேரலையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கவிதை,  இசை, கலந்துரையாடல் எனப் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்தவிழாவில் தமிழ் நெஞ்சங்கள் தவறாமல்
கலந்துகொண்டு சிறப்பியுங்கள்.

Friday, June 26, 2020

ராக்கெட் தாதா - ஜி. கார்ல் மார்க்ஸ்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  கொஞ்சம் வெளிப்படையான மனிதர். மனதில் தோன்றுவதைச் சட்டென சொல்லக் கூடியவர். ஒருமுறை கவிஞர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. என்ன ?...  இரண்டாவது கொஞ்சம் 'லேபர் இன்டென்சிவ்' என்று சொல்லிவிட்டு எளிதாகக்  கடந்து சென்றவர்.

அதுபோல அவர் எல்லா படைப்புகளுக்கும் நற்சான்று கொடுத்துவிடுபவரும் அல்ல. தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத கறார் பேர்வழியான அவர் கடந்த ஆண்டு ஜி. கார்ல் மார்க்ஸின் "ராக்கெட் தாதா" நூலை வெளியிட்டு பேசும் போது ஒரு விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, இந்த நூலின் எழுத்தாளரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. முன் அறிமுகம் எதுவுமில்லை.  ஆனால், நல்ல படைப்பாளர் என்பதால் ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்த்துகிறேன் எனச் சொல்லி இருந்தார்.

நாஞ்சில் நாடனைக் கவர்ந்த எழுத்து எனும் காரணத்துக்காகவே நான் அந்த நூலை கிண்டிலில் தேடிப்பிடித்து வாங்கி வாசித்தேன். எழுத்தாளர் ஏமாற்றவில்லை. ஆமாம், ஆசிரியர் சொற்சிக்கனத்தோடு காத்திரமாகக் கதை சொல்லும் நேர்த்தி தெரிந்தவர். உதாரணமாக ராக்கெட் தாதா எனும் அந்தக் கதையே ஒரு திரைப்படத்துக்கான,  நெடுங்கதைக்கான பரப்பியல் கொண்டது. ஆனால், அதை மிக அழகாக ஒரு சிறுகதைக்குள் அடக்கியிருக்கிறார். செறிவான எழுத்து.

தொகுப்பில் தொத்தமாக பதினோரு கதைகள். ஆணோ, பெண்ணோ வாசிப்பவர்கள் எளிதில் தொடர்புபடுத்தக் கூடிய பல பாத்திரங்கள். அதில் காஃபி ஷாப் எனும் பகடி-கதையும் அடக்கம். சில கதைகள் 1980களில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அதுபோல,  தொகுப்பின் கடைசி கதை எத்தனைப் பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை.  மற்றபடி வாசிக்கலாம்.

நூல் : ராக்கெட் தாதா
ஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ்
விலை: ₹190
ISBN: 9789387333543
வெளியீடு: எதிர் வெளியீடு
வகை: சிறுகதைகள் / குறுங்கதைகள்

Friday, June 19, 2020

'க்ரியா' ராமகிருஷ்ணன்

தமிழ்ச்சரம் (tamilcharam.com) வலைத்திரட்டி வந்தபிறகு, தமிழில் சிறப்பாக எழுதும் பலருடைய புதிய தளங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்டது. ஆசை அவர்களுடைய தளம் (http://writerasai.blogspot.com/).  'ஆசை' என்பது  அவருடைய இயற்பெயரா அல்லது புனைப்பெயரா எனத் தெரிந்து கொள்ளும் ஆசையில் அவருடைய தளத்தைக் கொஞ்சம் துழாவிய போது, ஆசை என்பது ஆசைத்தம்பி என்பதன் சுருக்கம் என்றும் மன்னார்குடிக்காரரான அவர் தற்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஆசை தனது தளத்தில் கடந்த சில நாட்களாக  'க்ரியா' ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு தொடர் எழுதி வருகிறார். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய  75-வயது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஆசை அவருடனான தனது அனுபவங்களை மிகச் சிறப்பாக எழுதிவருகிறார். 

இதற்கு முன் பெரியவர் கிரியா ராமகிருஷ்ணன் குறித்த முன் அறிமுகம் எனக்கு எதுவும்  பெரிதாக இல்லை.  வாசித்த பின்பு, அவர் கிரியா பதிப்பகம் ஊடாக தற்கால தமிழ் அகராதி, புதிய தமிழ் எழுத்துருக்கள்,
 'க்ரியா' ராமகிருஷ்ணன்
குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளின் படைப்புகள்,  பல நேரடி மொழி பெயர்ப்பு நூல்கள்  எனத் தமிழ் பதிப்புத்துறையில் புது இரத்தம் பாய்ச்சியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து வாசிக்க  ஆர்வமிருப்பவர்களுக்கு - ஆசை அவர்களுடைய தளம் http://writerasai.blogspot.com/

Wednesday, June 10, 2020

அருகாமை என்றால் என்ன ?

"அருகாமை ஆளுமை" என்ற நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் முகநூலில் கண்ணில்பட்டது. அருகாமை என்றால் என்ன ?

அவர்கள் என்ன நினைத்து "அருகாமை ஆளுமை" எனப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால், அருகாமை எனும் சொல் பொதுவாக அருகில் அல்லது பக்கத்தில் எனும் பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது.

அது முற்றிலும் தவறானது. அருகு என்பது அண்மை எனப் பொருள்படும். அதனால் அருகாமை என்பது 'அருகு' என்ற சொல்லுக்கு எதிரான பொருளைத்தான் தரும். அதாவது, 'செய்யாமை' என்ற சொல், 'செய்' என்ற சொல் என்ன பொருள் தருமோ அதற்கு எதிரான பொருளைத் தருவது போல. 'கலங்காமை' என்பது 'கலங்கு' என்பதற்கு எதிரான பொருளைத்தான் தருவதுபோல.

அதனால் , இனி "இந்த வீட்டுமனை சென்னைக்கு அருகாமையில் உள்ளது : வாங்கிவிட்டீர்களா? " என்பது மாதிரியான விளம்பரங்களைப் பார்த்தால்
சட்டை செய்யாமை நன்று !!

Tuesday, June 2, 2020

நீங்கள் கவிதை எழுதுபவரா !?

எழுத்தாளர் அரசன் ஊரில் இருந்து ஒரு கவிதை புத்தகத்தை கொடுத்தனுப்பி இருந்தார். "காதல் தின்றவன்" எனும் தலைப்பிட்ட அந்தக் கவிதைப் புத்தகத்தை சி.கருணாகரசு எனும் அன்பர் எழுதியிருந்தார்.

பூக்களை விற்பவள்,
கூடை நிறைய சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை..

****
நம் பெயரை ஒருசேர
எழுதித் தந்தேன்
காதலுக்கு முகவரியாய் !

என்பது மாதிரியான விடலைக் கவிதைகளை அழகான வண்ணப்
படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள்.

இதுபோல கவிதைகளை வாசித்தேன், எழுதினேன் என பொதுவில் சொல்லவே பலர் கூச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், இன்றைய தேதியில் கவிதை எழுதுவது என்பது தேசதுரோகம் போன்றொரு பிம்பத்தை அறிவார்ந்த சமூகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அப்படியே யாராவது தப்பித் தவறி கவிதை எழுத நேர்ந்தாலும் அந்தக் கவிதையில் அது இல்லை இது இல்லை என கேலியோடு ஒதுக்கும் மனப்பான்மையே இன்று இருக்கிறது.  

பள்ளியில் இருக்கும் வரை நமது மொழிப்பாடத்தில் கவிதை குறித்தோ கவிதை எழுதுவது குறித்தோ முறையான அறிமுகங்களோ , பயிற்சிகளோ இருந்ததாக நினைவில்லை (மரபில் செய்யுள் எழுதுவது என்பது வேறு). அப்படி இருந்தும் கூட நம்மில் பல சிறந்த கவிஞர்களும், பாடலாசிரியர்களும் உருவாகி வந்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யப்படவேண்டிய விசயமே. 

உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதில் கவிதை எழுவது என்பது மிகவும் இயற்கையானது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் தங்கள் உணர்ச்சிகளை கவிதையாக எழுதுவது ஆரோக்கியமானதும் கூட.பல மேலை நாடுகளில் கவிதையின் ஆற்றலை உணர்ந்திருப்பதால் அவர்கள் மிகச்சிறு வயதிலேயே கவிதை எழுதுவதை உற்சாகப்படுத்துகிறார்கள். பிடித்த கவிதையை  மீண்டும் மீண்டும் வாசிப்பது இல்லை மனனம் செய்து இசையோடு வாய்விட்டு ஒப்புவிப்பது என கவிதையின் சுவையை ஊட்டுகிறார்கள். சிறுவயதில் கவிதையை எழுதுவது, எழுதியதைப் பிறரிடம் பகிர்வதையும் உற்சாகப்படுத்துகிறார்கள்.  அந்த வயதில் பலருக்கு தங்கள் சொந்த கவிதைகளை எங்கிருந்து தொடங்குவது என்றுகூட தெரியாது. அதற்கான பயிற்சியையும் சேர்த்தே மொழி வகுப்பில் சொல்லித் தருகிறார்கள்.

இதுபோல் எழுதப்படும் கவிதைகளுக்கு என்ன மதிப்பு எனும் ஆராய்ச்சியில் 
நாம் இறங்காமல் அவற்றை அந்தந்த இடத்திலேயே நிறுத்தினால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், நம்மூரில் கவிதை எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளுக்கு இலக்கிய உயரம் கேட்கும் போதுதான் சிக்கலே தொடங்குகிறது. ஒருமுறை பள்ளியில் கவிதை என்றால் என்ன என தமிழாசிரியர் கேட்டபோது, கட்டி உரைப்பது கவிதை, நெஞ்சில் இருப்பது கவிதை என அன்று வகுப்பில் இருந்த 40 பேரும் ஆளுக்கொன்றாக எழுதி வந்திருந்தார்கள் (இப்போதெல்லாம், அப்படிக் கேட்கிறார்களா என்ன ? ).

பொதுவாக கவிதை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.  உணர்ச்சிகளில் பேதம் எதுவுமில்லை.  ஆனால், அதைச் சரியான சொற்களால் 
கடத்துவதில் தான் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது.  அதில் எதுகை, மோனை, இசை இருக்கவேண்டிய பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
அந்தப் புரிதல் அனைவருக்கும் ஏற்ப்பட்டால் நல்ல கவிதைகள் உருவாகும். 
பலர் பிட் நோட்டிஸ் அடிப்பது போல கவிதைப் புத்தகங்களை அடித்து தூக்கிச் சுமக்கவேண்டிய தேவையும் இருக்காது.

கவிதைகள் நம் வாழ்விற்கு முக்கியம்.  அதற்கு சிறந்த கவிஞர்களை
உருவாக்குவது மிக முக்கியம்.  அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவசியம்.
ஏன், அது இன்றைய அவசரமும் கூட.