Sunday, August 23, 2015

ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்

டினோசர் பொம்மைக்கு விளையாட்டாய் ஆப்பிள் ஊட்டிக் கொண்டிருந்த எனது மூன்று வயது மகள் இந்த கவிதைக்கான தூண்டுதல்.

அதுவே 'ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்' எனும் தலைப்பிட்ட
இந்தக் கவிதையானது.

**
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது 
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.

சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது

அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி 
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய் 
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்

இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு 
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
***

வெளியிட்டவர்கள்:

இன்மை : கவிதைக்கான இணைய மாத இதழ்.
இணைப்பு:
http://www.inmmai.com/2015/07/blog-post_66.html

ஆனந்த விகடன்-சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளது (131வது இதழ்)
இணைப்பு:
http://solvanam.com/?p=40757

கவிதைக்கு செறிவூட்டிய நண்பர் வா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல!

உங்கள் மேலானக் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்.

Sunday, August 16, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

சாஹித்திய  அகாடமி   விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.

இதுவே எனக்கு ஜெயகாந்தனின்  முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே.  ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.

இந்த நாவலில் அறியாத வயதில்  கற்பிலந்த பெண்ணாக கங்கா.  ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான  முரண்பட்ட  போராட்டமே கதை.

அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி என
கங்காவின்  மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடுக்கிச் செல்கிறார். ஓரு பெண்ணின் இதயத்துக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தியை  ஜெயகாந்தன் எங்கிருந்து பெற்றார்  எனத் தெரியவில்லை.

இந்த நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் இப்போது காலாவதியானவை. ஆனால் ஒரு முடிந்து போன காலகட்டத்தின் சுவடாக வரும் தலைமுறையாலும் இந்த நாவல் பேசப்படும் என்பது உறுதி.

நாவலை படித்த கையோடு அதே பெயரில் வெளியான படத்தைப் பார்த்தேன் (1977 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது).  கங்காவாக லக்ஷ்மி நடித்துள்ளார்.
ஆனால் நாவலின் உயரத்தை படம் தொட வில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நாவலின் சாரம் குறையாமல் முழு நிறைவுடைய ஒரு படமாக எடுப்பது எளிதானது அல்ல போல. படத்தின் YouTube இணைப்பு இங்கே.
https://youtu.be/RsijKvLbTQM

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்  பெற்றவர் ஜெயகாந்தன்.  அவரது மற்ற புத்தகங்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.



வெளியீட்டாளர்மீனாக்ஷி புத்தக நிலையம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 447