Monday, December 10, 2018

கடவுளின் செயல்(Act of God)

2015ல் நடந்த சம்பவம் இது.  டிசம்பர் விடுமுறையில் இந்தியா
வந்து மூன்று வாரம் இருப்பதாக ஏற்பாடு. விமான டிக்கெட்டும் எடுத்தாகிவிட்டது.  ஆனால், எதிர்பாராத விதமாக சென்னையில்  பயணம் செய்வதற்கு நான்கு ஐந்து நாட்களுக்கு முன் சாதரணமாகப் பெயத் தொடங்கிய மழை பேய் மழையானது. அசாதாரணமான மழை. இரவு, பகல் என விடாமல் தொடர்ந்து பெய்த  கனமழையால் அணை உடைந்து சென்னையின் பல இடங்கள் நீரில் மூழ்கி சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அன்றிரவு மீனப்பாக்கம் விமானநிலையத்தில் சர்வதேச விமானங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு விமானசேவை ரத்துசெய்யப்படுகிறது. பதைபதைப்புடன்
ஃபிளாரிடாவில் காத்திருந்த நான் விமானசேவை நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டபோது சென்னை செல்லும் விமானங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்படுகின்றன என்றார்கள். சரி, அங்கிருந்து ? அவர்களிடம் பதிலில்லை.
அடுத்த நாள் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர்கள் இரண்டு வாய்ப்புகள் தந்தார்கள். ஒன்று டிக்கெட்டை இன்னொரு நாளுக்கு மாற்றிக் கொள்வது இல்லை முற்றிலுமாக கேன்சல் செய்துவிடுவது.

துரதிஷ்டவசமாக என்னால் அந்த இன்னொரு நாளை தர இயலாத சூழல். சென்னையில் காரோடிய சாலைகளில் படகு ஓடிக் கொண்டிருக்கும் போது
நான் போய் சென்னையில் இறங்கி யார் வீட்டில் தங்கி...

அதனால் டிக்கெட்டுடன் கையில் இருந்த விமான இன்சுரன்ஸை நம்பி பயணத்தை ரத்துசெய்துவிட்டேன். அடுத்து கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டபோது தான் வில்லங்கம் வந்து சேர்ந்தது. காலநிலை பிரச்சனைகளால் விமானம் ரத்து செய்யப்பட்டால் நீங்கள் பயணத்தேதியை மாற்றி இருக்கவேண்டுமே தவிர கேன்சல் செய்தது செல்லாது. அதனால் இழப்பீடு இல்லை என கைவிரித்துவிட்டார்கள்.

அவர்களுக்கு சென்னை இந்தியாவில் வடக்கிலா ? தெற்கிலா?  என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கோ மகா எரிச்சல். டிசம்பர் சீசனில் அதிக விலைகொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்கான பணத்தை வீணாக இழக்க விருப்பமில்லை. இதற்கு பயன்படாத இன்சுரன்ஸ் எதற்குதான் பயன்படும் என நினைத்து ஒரு பெரிய மறுப்புக் கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தேன்.  அதில் இது "அக்ட் ஆஃப் காட் (Act of God)" என ஆங்கிலத்தில் சொல்லும் கடவுளின் செயல். மனிதக்கட்டுப்பாட்டைத் தாண்டிய ஒரு இயற்கை அபாயம்.  நான் துணிந்து சென்னை போயிருந்தாலும் எந்த ஓட்டலும் திறந்திருக்க வாயப்பில்லை. இது வரலாறு காணாத பேரழிவு எனச் சொல்லி அதற்கான பிபிசி, சிஎன்என் போன்ற சர்வதேச ஊடகத் தரவுகளை இணைத்து இதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை எனச் சொல்லி கழுத்தில் துண்டைப் போட்டி இறுக்கினேன்.

ஒருவழியாக ஒரு மாத பரிசிலனைக்கு செய்து பிறகு இழப்பீட்டு பணத்தை
திரும்பத்தருவதாக இமெயில் அனுப்பியிருந்தார்கள். சென்னை வெள்ளம் போன்ற எதிர்பார்க்காத நிகழ்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும்  பயணங்களைத் தடம் புரளச் செய்து விடலாம் என்பதனால்
இப்பொழுதெல்லாம் தவறாமல் நான் பயண இன்சுரன்ஸ் எடுத்துவிடுகிறேன்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Wednesday, December 5, 2018

தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

இதுவரை வாசித்ததில் ஆகச்சிறந்த பயணக்கட்டுரைத் தொகுதி எழுத்தாளர்
எஸ்.ரா. வின் `தேசாந்திரி `  எனச் சொல்வதில் எனக்குப் பெரிய தயக்கம் எதுவுமில்லை. அமெரிக்காவின் புலிட்சர் பரிசைத் தமிழுக்குத் தருவதாக இருந்தால் சமகாலத்தில் தந்து பெருமை படுத்தப்படவேண்டியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று கூடச் சொல்லலாம்.

தேசாந்திரி -அவர்  வாரந்தோறும் ஆனந்த விகடனில் எழுதியத் தொடர்
பயணக்கட்டுரைகளின் தொகுப்பு.  வடக்கே காசி முதல் தெற்கே குற்றாலம் என தேசம் முழுமையும் திரிந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளின் சிறப்பம்சமே அதன் வடிவம் என்றுகூட சொல்லத் தோன்றுகிறது. வழமையான பயணக்கட்டுரைகளின்  எல்லா
வடிவங்களையும் கட்டுடைத்து ஒரு புதியபாணியில் வாசகர்களின்
மனதோடு பேசி இருக்கிறார். இந்தக் கட்டுரைகள் இலக்கியத் தரத்தோடு இருப்பதும் சிறப்பே.

சோழர்களின் கலை உச்சமாகக் கருதப்படும் கங்கைகொண்ட சோழபுரம்,
தஞ்சை சரபோஜியின் சரஸ்வதி மகால், நல்லதங்கங்காள் தன் பிள்ளைகளோடு கிணற்றில் விழுந்து மாண்டதாக நம்பப்படும் அர்ச்சுனாபுரம்  என நீளும் அவருடைய இந்தப் பயணம் மிக நீண்டது.
அந்தப் பயணத்தில் வாசகனோடு ஆத்மார்த்தமான நெருங்கிய உரையாடல் செய்தபடி அவனுடைய கரம் பிடித்து அழைத்துச் செல்லும் எழுத்து
நேர்மையானது.

வெவ்வேறு தளத்தில் இயங்கும் இந்தக் கட்டுரைகள் தண்ணீரை ஒரே மடக்கில் முழுவதுமாக குடிப்பது போல்  ஒரே மூச்சில் தொடர்ந்தார்போல் வாசிக்கக் கூடியது அல்ல. மாறாக அலாதியான வாசிப்பனுபவத்தைப் பெற தினம் ஒரு கட்டுரை என வாசித்தாலும் குற்றமில்லை எனச்
சொல்லும்படியான ஆழமான எழுத்து. கட்டுரைக்குப் பொருத்தமாக கவிதைகளும், ஒவியங்களும் துருத்திக்கொண்டில்லாமல் இயல்பாக சேர்த்திருப்பது கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணமானத்தைத் தந்திருக்கிறது.

தொகுப்பில் குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல பெரிதாக இல்லை. மாறாக இந்த எழுத்தோவியத்துக்கு அட்டைப் படமாக புத்தரின் புகைப்படம் ஏனோ பொருத்தமில்லாமல் தோன்றுகிறது. அதுவே வேறு ஓவிமாகவோ இல்லை புத்தரின் ஒவியமாக கூட இருந்திருந்தால் அது புத்தகத்தை இன்னொரு படி உயர்த்திப் பிடித்திருக்கும்.

எஸ்.ரா. இந்தப் பயணத்தின் ஊடாக இன்று  நமது பாரம்பரியமான கலைகளும், பண்பாடும் மரபும் மக்களால் பின்தொடரப்படாமல் கைவிடப்பட்டு உதாசினப்படுத்தப்படுவதை ஆதங்கத்தோடு கவலை தேய்த குரலோடு பதிவுசெய்திருக்கிறார். அது ஒரு தமிழ் எழுத்தாளனின் குரல் என்பதைத் தாண்டி அது காலத்தின் குரலாகவே பதிவுசெய்யப் பட்டிருப்பதாக நினைக்கிறேன். தமிழின் முக்கியமான இந்தச் சமகால நூலை அனைவரும் வாசிக்கவேண்டும்.

குறிப்பு- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை வாழ்த்துவோம்.

Saturday, December 1, 2018

நவம்பர் - தேசிய நாவல் எழுதும் மாதம் (NaNoWriMo)

எழுதுவது என்றில்லாமல் பொதுவாக கலை தொடர்பான விசயங்களுக்கு
படைப்பூக்கம் அவசியம். அதுவும் புனைவு எழுதுபவர்களுக்கு அது கூடுதலாக தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். அந்தப் படைப்பூக்கத்துக்கான தூண்டுகோல் எது ?

பெரும்பாலும் இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. அவை அவர்களின் வாழ்வோடு
ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவை. அவர்கள் வாழ்வில் தன்னைப் பாதித்த, தான் கடந்து வந்த வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களை, தனது உணர்ச்சிப் போராட்டத்தை அல்லது தான் சந்தித்தவர்களின் மறக்கமுடியாத அனுபவங்களை எழுத்தில் நாடகமாக நடத்திக் காட்டுவார்கள்.

அப்படி ஒரு கதையை எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். சிலருக்கு அது ஒரு பயணம் போல. சிலருக்கு அது ஒரு  குறுக்கெழுத்து விளையாட்டு போல. சிலருக்கு எழுத்து இருட்டில் மெழுகுவர்த்தி போல.
சமயங்களில் எழுத்து சிலருக்கு மனக்காயங்களுக்கு மருந்தாகவும், துயரத்துக்கு வடிகாலாகவும் அமைவது உண்டு. அந்த வகையில் நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

தற்போது கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கும்
காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான காட்டுத்தீ. அந்த நெருப்புக்குத் தான் குடிருந்த வீட்டையும் மொத்த கம்யுனிட்டியையும்
இழந்த எழுத்தாளர் மாட் ஃபோர்ப்ஸ். தனது அனுபவத்தை நாவலாக
எழுதத் தொடங்கியிருக்கிறாராம். வாழ்க்கையின் துன்பத்துக்கு  மிகச்சிறந்த பதில் அதன் அழிவுகளில் இருந்து மீண்டுவருவதே. அவர் அந்தத்  துன்பங்களில் இருந்து மீள்வது என்பது தனக்கு எழுதுவது என்கிறார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஃபிளாரிடா மாநிலத்தை உலுக்கிய இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதிமுடித்திருக்கிறேன். உலகமெங்கிலும் நவம்பரை தேசிய நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகிறார்கள் (NaNoWriMo). அந்த (30-Nov) நவம்பரில் இதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.