Tuesday, March 31, 2020

Sunday, March 22, 2020

தமிழ்ச்சரம்.காம் - வரவேற்பு

தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com)  வலைத்திரட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கிறது.  தளம் குறித்து நண்பர்கள்
வழியாக முகநூல், (பேஸ்ஃபுக்),வலைப்பதிவுகளில் பகிர்ந்ததைத் தவிர விளம்பரம் என்று எதுவும் பெரிதாக செய்யவில்லை.

ஆனாலும், தளத்திற்க்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது.  ஆமாம், கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த எனது வலைப்பதிவுக்கான வருகை இப்போது வாரத்திற்க்கு 600+ என்றாகி இருக்கிறது. இந்தத்  தளம் குறித்து  வந்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து துறைவல்லுநர்களிடம் காட்டியபோது புதிய தளத்திற்கு இது நல்ல வரவேற்பு, 'அபாரம்' என்கிறார்கள்.  தளத்தை டெஸ்க்டாப் எனும் கம்யூட்டர் மூலமாக அதிகம் வாசித்திருக்கிறார்கள். வாரஇறுதி நாட்களை விட வார நாட்களில் வருகை அதிகமாக இருக்கிறது போன்ற தரவுகள் பலருக்கு சலிப்பாக இருக்கக் கூடும். ஆனால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜெர்மனி,
பின்லாந்து, பெல்ஜியம்,  ஜப்பான் என 51 நாடுகளில் இருந்து தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இருந்தாலும்,  இது முடிவல்ல. இது ஒரு சிறு தொடக்கம் என்பதையும் புரிந்து கொள்கிறேன். தமிழ்ச்சரம் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள்.

அதுபோல, தமிழ்ச்சரத்தின் வழியாக பார்வையாளர்களுக்கு பல்சுவை வாசிப்பு அனுபவமும், வலைப் பதிவர்களுடைய எழுத்துக்கு வெளிச்சமும் கிடைத்தால் அதுவே தளத்துக்குக் கிடைத்த முழு வெற்றியாகவும் இருக்கமுடியும். வரும் நாட்களில் பார்வையாளர்கள் விரும்பும் புதிய அம்சங்களை முடிந்தவரை அறிமுகம் செய்து தளத்தைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருப்போம்.

குறிப்பு - இது தமிழ்ச்சரம் குறித்து முகநூலில் எழுதிய பதிவு.

Saturday, March 14, 2020

வனநாயகன் குறித்து-15 (வரவேற்கத்தக்க ஒரு படைப்பு)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன் (மலேசிய நாட்கள்)"  குறித்து  ஜெர்மனி வாழ் சுபாஷிணி (தலைவர்- தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்கள் கடந்த டிசம்பரில் முகநூலில்  எழுதியது.  நன்றி  சுபாஷிணி !!

முனைவர் சுபாஷிணி மலேசியத்தமிழர் என்பதை இங்கே குறிப்பிட்டுச்சொல்ல விரும்புகிறேன்.
**************************
ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து இஸ்தான்புல்.. அங்கிருந்து குவைத்.. என தமிழகத்திற்குப் பயணம் தொடர்கிறது. பயணத்தில் துணையாக ஆரூர் பாஸ்கர் எழுதிய வனநாயகன் - மலேசிய நாட்கள் நாவல்

வித்தியாசமான கதை பொருளில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். வாசிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது. துறை சார்ந்த அனுபவங்கள்
, மலேசிய வாழ்க்கைச் சூழலின் பதிவுகள்.. இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.. அனுபவங்கள்.. என கதையை மிகச் சிறப்பாக அமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர். இதுவரை பயணத்தில் நாவலின் பாதி பகுதியை முடித்து விட்டேன். மேலும் தொடர வேண்டும் சென்னை வந்தடையும் வரை..


************
நூல் கைக்கு வந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.. இடையில் கல்வெட்டுப் பயிற்சி, புலம்பெயர்வு தொடர்பான ஆய்வுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நடவடிக்கைகள் சார்ந்த ஆய்வு, ஐரோப்பியர்களின் தமிழகம் தொடர்பான பங்களிப்புகள் பற்றிய ஆய்வு என பல்வேறுபட்ட வகையில் எனது கவனம் குவிந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நாவலை வாசித்த அனுபவம் அண்மையில் கிட்டியது. ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் விமானநிலையத்தில் தொடங்கிய வாசிப்பு அடுத்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் வந்து அங்கு சில மணி நேர காத்திருப்பு... பின்னர் அங்கிருந்து குவைத்துக்குப் பயணம்... பின்னர் அங்கு ஓரிரு மணி நேர காத்திருப்பு.. பின் அங்கிருந்து சென்னை என பயணம் நீண்டிருந்தது. பயணத்தின் களைப்பைப் போக்கும் வகையில் நாவல் வாசிப்பு எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது.
நாவலின் தலைப்பு: வனநாயகன் -மலேசிய நாட்கள்
நாவலாசிரியர்: ஆரூர் பாஸ்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
இந்த நாவலின் கதைக்களம் முழுவதுமாக மலேசிய சூழலில் பின்னப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மலேசிய மக்கள் எழுதும் கதைக்கு மாற்றாக, இந்திய பின்புலத்தைக் கொண்ட ஒரு நாவலாசிரியர் எழுதிய நாவல் இது. இந்த நாவலின் கதைக்களம் தமிழகத்திலிருந்து வேலை தேடி மலேசியா வந்து அங்கு பணியாற்றும் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறைசார்ந்த வல்லுநர் ஒருவர் அனுபவிக்கும் பல்வேறு அனுபவங்களை கதையாக்கி காட்டும் ஒரு நாவலாக அமைந்துள்ளது.
கதையின் நாயகன் சுதா. அவனைச் சுற்றியே கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதை செல்கிறது. கதாநாயகனின் அனுபவங்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், மலேசிய வரலாறு, சுற்றுச்சூழல், தற்கால நிலை, வணிக சூழல், வணிகத்திற்குள் இயங்கும் அரசியல் தன்மை, மூன்று பெரும் இனங்களான தமிழர்,
சீனர், மலாய்க்காரர் ஆகியோரிடையே நிலவும் சிறுசிறு வேறுபாடுகள் ஆகியவற்றை துல்லியமாக பதிந்து வைக்கும் ஆவனக் குறிப்பாகவும் இந்த நாவல் அமைந்திருக்கின்றது.
பொதுவாகவே காதல், திருமணம், பிரிவு, குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள், ஏமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் பெரும்பாலான நாவல்களில் இருந்து மாறுபட்ட உத்தியாக புலம்பெயர்ந்து தொழிலுக்காகச் செல்லும் தேர்ச்சி பெற்ற ஒரு வல்லுநர், புதிய நாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், தொழிற்சார்ந்த போட்டிகள், அவை தருகின்ற சவால்கள் அவற்றை எவ்வாறு கதாநாயகன் எதிர்கொள்கிறார் என்ற வகையில் இந்த நாவல் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றது. மலேசிய சூழலில் தமிழ் மக்களின் உடை
அலங்காரம்,தோற்றம் பேச்சு வழக்கு, பல இனங்கள் ஒன்றுபட்டு வாழும் சூழலில் தமிழ் மக்களின் நிலை என்பவற்றை நூலாசிரியர் மிகக் கவனமாக கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்து அவற்றை பதிவாக்கி இருக்கின்றார். சிறு சிறு விஷயங்கள் கூட இந்த வகையில் இந்த நாவலில் பிரதிபலிக்கின்றன. மலேசியத் தமிழர்கள் ஒரு தனி இனம் என்ற அளவில் தோற்றம், உடை அலங்காரம், சிந்தனை சமூக செயல்பாடுகள் என இயங்கும் சூழல் கடந்த ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகால நிலையில் தமிழகத்திலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. நாவல்கள் அல்லது கதைகளை எழுதுவோர் இதனை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு எழுதும்போது தான் புதிய நிலத்தின் மண்ணின் மனம் நாவல்களில் சரியாக ஆவணப் படுத்தப் படும். இந்த நாவலில் ஆசிரியர் அதனை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற எனக்கு கதாநாயகனின் சிந்தனையோட்டமாக வருகின்ற ஒவ்வொரு வரிகளும் என்னை மீண்டும் கோலாலம்பூர் நகருக்கே இழுத்துச் சென்று விடுகின்றன. அந்த அளவிற்கு மிக விரிவான விளக்கங்களாக ஒவ்வொரு சிறிய விஷயங்களும் கையாளப் பட்டிருக்கின்றன. கணினித்துறையில் நிலவுகின்ற தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி விவரிக்கும் வகையில் செல்லும் பகுதிகள் நாவலில் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் பார்வையைக் காட்டுவதாக அமைவதால் நாவல் உத்தியில் தொழில்நுட்ப கூறுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த எழுத்துமுறை வாசிக்கின்ற வாசகர்களுக்கு வழங்குகின்றது.
நூலின் பாதிப் பகுதியை வாசிக்கும் போதே கதாநாயகனுக்கு இறுதியில் என்னவாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு குறையவில்லை. மிகச் சுருக்கமான ஒரு பகுதிதான் என்றாலும் இறுதிப்பகுதி மனநிறைவாக அமைந்திருக்கின்றது. பத்மா மனதில் நிறைந்து நிற்கின்றார்.
வனநாயகன் மலேசிய நாட்கள் - வரவேற்கத்தக்க ஒரு படைப்பு.
தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு தமிழ்மக்கள் செல்கின்ற சூழல் அமைந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் தேவைக்கேற்ப எழுதப்பட்ட ஒரு நாவல் என்று நிச்சயம் கூறலாம். நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
-சுபா


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க: