Monday, October 31, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(3)

ஒருவருடைய எழுத்துக்கான அங்கீகாரம் என்பது அதனை வாசிப்பவர்களின் அனுபவத்திலிருந்து வருகிறது. அந்த வாசிப்பனுபவத்தைத் தனிமடலில் அல்லது பொதுவெளியில் பகிர்வதில் சிலருக்குச் சில தயக்கங்கள் இருக்கலாம்.

அந்தத் தயக்கங்களில் இருந்து விடுதலைப் பெற்று எங்கிருந்தாவது வரும் அங்கீகாரமே நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் என்னுடைய எல்லா நூல்களையும் உடனடியாக வாசித்து கருத்துகளை விரிவாகப் பதிவிடும் வாசக நண்பர்களில் ஃபிளாரிடா சேந்தன் முதன்மையானவர்.  அவருடைய வாசிப்பனுபவம் இங்கே..

//ஆரூர் பாஸ்கர் அவர்களின் புதிய நாவல், வாசிப்பு அனுபவம்:

மார்வெல் யூனிவர்ஸ், விக்ரம் லோகிவெர்ஸ் போன்று ஆரூர் பாஸ்கர் யூனிவர்ஸ் என்று ஒன்றில் நுழைந்ததாகவே தோன்றியது, அவரது முந்தைய நாவலான வனநாயகனில் பத்மாவை திருமணம் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு நாவல் நிறைவு பெரும், ஆனால் பத்மாவை மணந்துக்கொள்ளவில்லை என்று கதையின் ஆரம்பமே சற்றும் எதிர்பாராத திருப்பம். நாவலில் வரும் அழகியல் தன்மை ஒவ்வொரு பாத்திரத்தையும், சூழ்நிலையையும் விவரிப்பதில் வெளிப்படுகிறது.
வனநாயகனிலும் சரி, ஜெசி நாவலிலும் சரி, இயற்கையே கதையின் எல்லா இடங்களிலும் இழைந்திருக்கும். இயற்கையின் மீதான ஆரூர் பாஸ்கரின் காதல் அவர் படைப்புகளில் தெரியும். வனநாயகனில் வரும் ஒராங்குட்டானாகட்டும், இர்மா நாவலில் வரும் மேனட்டி ஆகட்டும், ஜெசி கதையில் வரும் கிரேட் ப்ளூ ஹெரான் ஆகட்டும் அந்த இயற்கை குறியீடுகளும், இயற்கை மனிதனின் பேராசையால் அழிக்கப்படும் காட்சிகளும் ஆரூர் பாஸ்கர் அவர்களின் சிக்னேச்சர் (ஹா..ஹா… Sig(nature)-சிக்னேச்சரிலும் கூட நேச்சர் வருகிறது)😅

ஒரு புனைவில் எத்தனை நுட்பமான இயற்கை சார்ந்த தகவல்கள், அதன் பின்னால் இருக்கும் கடும் உழைப்பை பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை. திரைபடங்களில் வரும் பின்னனி இசை போல The Great Blue Heron(நீல பறவை) கதை முழுக்க நம் கற்பனைகளில் விரிந்துக்கொண்டே வருகிறது. ஜெசியை பற்றிய வர்ணனைகளை தொடர்ந்து வாசிக்க வாசிக்க, Blue Eyed Blonde பெண்களை கண்டால் ஜெசி கதாபாத்திரம் இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றிவிடும். கதாநாயகனின் ஜெசி மீதான காதலை சொல்லும் தருணம் மிக subtleலாக அழகாக இருந்தது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பலரும் அவர்கள் வாழும் ஊர்களை பற்றி, மக்களை பற்றி, இயற்கையை பற்றி அதிகம் தெரியாமலேயே வாழ்ந்துவிடுவார்கள். யாரோ சொன்ன அல்லது எங்கேயோ கேட்டதை வைத்து தங்கள் அனுமானங்களை அமெரிக்கா பற்றிய புரிதலாக உருவாக்கி வைத்திருப்பர். அவர்கள் பலரும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அறியாத ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற அல்லது கடந்து போகிற பல தகவல்களைக் கதையின் போக்கிலேயே எழுதியிருக்கிறார்.


ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பலருக்கும் பலமுறை பார்த்தும் கூட தெரியாத ஒரு பறவை அநிஹ்ங்கா(Anhinga) (தன் இறக்கைகளை விரித்து பாம்பு போன்ற கழுத்தை நீட்டி ஏரி கரையோரங்களில் வெயில் காய்ந்துக்கொண்டிருக்கும், மற்ற பறவைகளிலிருந்து பார்த்தவுடனே வித்தியாசமாக இருக்கும், இது வட அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் மட்டுமே காணகிடைக்ககூடிய பறவை) பற்றிய குறிப்பு வரும் இடத்தை வாசித்த போது, மனிதர் எவ்வளவு தூரம் ஒரு நாவலை எழுத ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கு பிடித்த இன்னொரு செய்தி குறைந்த வாடகை அப்பார்ட்மென்டுகளை தடுக்கும் வெள்ளையின மனநிலையை விளக்கும் இடம். இவற்றை நம்மவர்களும் சேர்ந்து எதிர்க்கும் பல சமயங்களை நானே பார்த்திருக்கிறேன்.

இவை எல்லாமே நாவலில் நான் வாசிக்க வாசிக்க வியந்த இடங்கள், இதை தாண்டி நாவலின் உச்சம் என்பது கடைசி மூன்று அத்தியாங்கள், சரியான திரில்லர்! ....

அருமையான
வாசிப்பு அனுபவமாக படைத்துக் கொடுத்த ஆரூர் பாஸ்கர் அவர்களின் யுனீவர்ஸ் தொடர
வாழ்த்துக்கள்
!

இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது, உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு எங்களூரில் [ஃப்ளோரிடா] இருந்து எழுத்தாளர் ஆரூர் பாஸ்கரால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜெஸி (எ) ஜெஸிகா கிங் (Tamil Edition)
//

இதைப் பகிர்ந்த சேந்தன் அவர்களுக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்.

Saturday, October 22, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(2)

ஜெஸி(எ)ஜெஸிகா கிங் நாவல் குறித்த கருத்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

//ஜெசிகா கிங் என்கிற தலைப்பைப் பார்த்ததும், இந்தக் கதை ஜெசிகா என்கிற அமெரிக்கப் பெண்ணைப் பற்றிய கதை என்பதை எந்த சஸ்பென்சும் இல்லாமல் உடனே தெரிந்து விடுகிறது. இதில் வரும் தமிழ்க் கதாநாயகன் ஒரு பெண் குழந்தையோடு வசிக்கிறான். அவன் வாழ்வில் நுழைந்த ஜெஸி பற்றிய நெடுங்கதை இது. இந்த நாவலைப் படிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக  தங்கு தடையின்றி வழுக்கிச் செல்கிறது. கதாசிரியர் எழுத்துக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பதும் எப்படி ஒரு அத்தியாயத்தை வாசிப்பவர்களுக்கு சலிப்பை கொடுக்காமல் சுவாரசியமாக நகர்த்தவேண்டும் என்கிற உத்தி தெரிந்தவர் என்பதும் தெரிகிறது. அத்தியாயங்களை ஆரம்பிப்பது, நகர்த்துவது, முடிப்பது போன்றவை தெளிந்த நீரோட்டம் போல இருக்கிறது. தனித் தனியாக வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் இனிமை. உதாரணத்திற்கு அவன் பெர்மினா வீட்டிற்குச் சென்று ஆருடம் பார்க்கும் காட்சிகள் மிகுந்த அழகு. 

கதையில் வெவ்வேறு குணாதியங்களைக் கொண்ட கதா பாத்திரங்கள் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பறவைகள்,பசுமைப் பாதை, அஷோசியேஷன் சண்டைகள்... இவையெல்லாம் அமெரிக்க வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்.

//

இதைப் பகிர்ந்த அந்த நண்பருக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்

Read Jessi

Sunday, October 16, 2022

ஜெஸி - கவிதைப் போட்டி

கவிதைப் போட்டி
"ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நூலை அமேசானின் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish)  போட்டியில் இறக்கிவிட்ட பின் ஏதாவதொரு விதத்தில் ‘ஜெஸி’ என்ற பெயரை வாசகர்களிடம் பரவலாக்க வேண்டும் இல்லையா ?

அதற்கான விளம்பர உத்திதான் இந்தக் கவிதைப் போட்டி. இதை மறக்காமல் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிருங்கள். 

ம்.. பட்டையைக் கிளப்புங்கள். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்... :)

நன்றி !!

#pen2publish5


Sunday, October 9, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(1)

வந்தியத் தேவன் மூலமாக ஓலை முதலில் தஞ்சைக்கு போய்விட்டு பிறகு பழையாறை செல்வது போல ஜெஸி நாவல் கிண்டிலில்  pen2publish-இல் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தச் செய்தி இன்னமும் கிண்டில் அன்லிமிடெட் (kindle unlimited) வாசகர்களுக்கு போய் சேரவில்லை போல. அதற்கு சுமார் 1 வாரம் ஆகும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.  அதன்பின் பலர் வாசித்து கருத்துகளைப் பகிர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இதுவரை வாய்வழிச்செய்தியாக கேள்விப்பட்டவர்கள் மட்டும் வாசித்துக் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிச் சமீபத்தில் வந்த ஒரு அமேசான் கருத்து ...


இப்படி எங்கிருந்தெல்லாமோ வரும் உற்சாகம் நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே !!

Read Jessi

 

கிண்டில் வாங்கித் தர நீ ரெடியா ?

என்னுடைய "ஜெஸி" நாவல் கிண்டிலில் கிடைக்கிறது என்றவுடன் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு மானே, தேனே எனச் சொல்லிவிட்டு, "புத்தகம் வாங்கி படிக்க நான் ரெடி.  கிண்டில் வாங்கித் தர நீ  ரெடியா ?" என்கிறார்.  எப்படி இருக்கிறது கதை, பாருங்கள்.


நம்முடைய அன்பு சொந்தகங்களில் பலருக்கு இந்த விசயம்  முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக - கிண்டில் நூல்களை வாசிக்க தனியான சாதனம் எதுவும் தேவையில்லை. கிண்டிலின் செயலியை (app) போஃன், டேப்லெட்-களிலும் தரவிறக்கம் செய்து அதில் எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இல்லையென்றால், எந்தவித சாதனமும் இல்லாமல் கணினி  பிரொளசரிலும் கூட நேரடியாக எளிதாக  படிக்கலாம்.

நேரடியாக பிரொளசரில் படிக்க உதவும் கீழே இணைப்பில் தருகிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://read.amazon.com/kindle-library

Read Jessi

Thursday, October 6, 2022

பின்னட்டைக் குறிப்பு - போட்டி

புத்தகங்களுக்கு  'பளிச்'சென பின்னட்டைக் குறிப்பு இருப்பது அவசியம். அது வாசகர்களைக் கவரும் ஒரு மார்கெட்டிங் யுத்தி என்பதைத் தாண்டி சுமார் நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படைப்பை வாசித்து அதற்கு அழகான சுருக்கம் அல்லது 'blurb' எழுதுவது என்பது ஒரு கலை.  

அந்தக் கலையை ஊக்குவிக்குவிக்கும் வகையிலும் எனது ஜெஸி நாவலைப் பரந்த வாசகர் பரப்புக்கு எடுத்து செல்லும் முயற்சியாகவும் ஒரு சின்ன போட்டி.

அமேசானில் கிடைக்கும் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' நாவலை கிண்டலில் வாசித்து 60 சொற்களில் இருந்து 120 சொற்களுக்கு மிகாமல் சிறப்பாக blurb எழுதி அனுப்பும் அன்பர்களுக்கு பரிசு கொடுப்போம். முதல் பரிசு ரூ.1000 மற்றும் 10 பேருக்கு ரூ.150 (தொகை அமேசான் வவுச்சராக) தரலாம்.


விதிமுறை- போட்டியில் கலந்து கொள்பவர்கள் கிண்டிலில் புத்தகத்தை வாசித்து அங்கு  தங்கள் கருத்துகளைப் (ரேட்டிங்ஸ் & ரிவியூ) பகிர்ந்திருக்க வேண்டும். அதை உறுதி செய்த பின் சுருக்கத்தை aarurbass AT gmail.com க்கு அனுப்ப வேண்டும். போட்டிக்கான கடைசி நாள்- அக்டோபர் 10 (இந்திய நேரம்). 

இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது. ‘அட்டை’காசமாக எழுத வாழ்த்துகள் !

போட்டி நடுவர்களின் முடிவே இறுதியானது. புத்தகத்தை வாசிக்க அமேசான் தள முகவரியை கீழே தருகிறேன்.  இதை மற்றவர்களிடமும் பகிருங்கள்,

Read In Amazon

Monday, October 3, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங்

நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.  எனது "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நாவல் (புதினம்) அமேசான் கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. 

இதன் மூலமாக ஐந்தாவது ஆண்டாக அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish) போட்டியில் என்னுடைய நான்காவது புனைவு கலந்து கொள்கிறது.


இந்த அறிவிப்பு வந்தவுடன் என்னைப் பங்கேற்க ஊக்குவித்து உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி !!

இனி இதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியது நண்பர்களின் கைகளில் இருக்கிறது. ஆமாம், இங்கே கீழே புத்தகத்துக்கான இணைப்பைத் தருகிறேன். வாசித்து தங்களுடைய கருத்துகளை (ரேட்டிங்ஸ் அண்ட் ரிவியூஸ்) மறக்காமல் பதிவிடுங்கள்.

Read In Amazon

இந்தப் படைப்பு Pen to publish-ல் இணைத்துள்ளதால் இது மிக முக்கியம்.