Sunday, March 13, 2016

'நோ' சொன்ன அந்த நடிகை

சென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம்.

சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந்த நள்ளிரவில் விமானம் சென்னையை  நெருங்க நெருங்க மனதுக்குள் ஏதோ ஏதோ எண்ணங்கள்  வந்து அலைகழிக்கத் தொடங்கின.

சென்னையில் கடும் மழை,  வெள்ளம்  ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் இவற்றை இணையத்தில் பார்த்திருந்த எனக்கு அவை கண் முன்னால் படமாய் ஓடத் தொடங்கியிருந்தது.

குறிப்பாகத் தண்ணீரில் மிதந்து உலகத் தமிழர்களையெல்லாம் கண்ணீரில் நனையவிட்ட சென்னை விமான நிலைய ஓடுதளத்தைப் பார்க்க மனது பரபரத்துக் கொண்டிருந்தது.


ஆனால் எதிபார்த்ததற்கு மாறாக சென்னை விமானநிலையம் பேரழிவின் எந்தவிதச் சுவடுமின்றி வழக்கம் போல் இருந்தது.

விமான நிலையத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களை பார்த்தபடியேச் சென்றேன். அவற்றைப் பூம்புகார் நிறுவனம் மிக நேர்தியாக வடிவமைத்திருக்கிறது. அந்தப் படம் கீழே.


வழக்கத்திற்கு மாறாக குடிபெயர்தல் (Immigration) கூடச் சில நிமிடங்களில் முடிந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் நம் கண்களில் முதலில் பளிச்சென்று படும்படி ஓரு பெரிய பதாகை (Banner) வைத்திருந்தார்கள்.

அதில் "அப்பலோ மருத்துவமனை உங்களை அன்புடன் வரவேற்கிறது" !! என்று எழுதியிருந்தது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனப் புரியாமல் பெட்டிகளை எடுக்க விரைந்தேன்.

ஆனால், பயணிகளின் உடைமைகள் காலதாமதாகதான் வந்து சேர்ந்தது.
ஓரு மணி நேரம்  காத்திருந்து எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வரும் போது சீருடை அணிந்த விமான நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா துபாயிலிருந்து வரும் விமானத்தில் வந்திருப்பதாகச் சொன்னாரகள்.

பெரும்பாலும் பிரபலங்களை உள்ளூர் விமானநிலையத்தில் மிகச் சாதாரணமாகப் பார்த்திருந்த எனக்கு சர்வதேச விமான நிலையத்தில் அதுவும் பின்னிரவு 3 மணிக்கு இந்தச் செய்தி வியப்பாக இருந்தது.  அப்பொழுதுதான் துபாயிலிருந்து வந்த திரை நட்சத்திரங்கள் ஓரு  கும்பலாக அடுத்த பேகேஜ் கரோசல் அருகே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

அவர்களில் சில நடிகர்களை என்னால் எளிதாக  அடையாளம் காண முடிந்தது.  அவர்கள் நடிகர் ஜெயம் ரவி, அருண் விஜயகுமார் போன்றோர். சிறிது நேரத்தில் விமான ஊழியர்கள் ஜெயம் ரவியை சுத்திவளைத்துப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.

நடிகர் ஜெயம் ரவி


துரதிஷ்டவசமாக எனக்கு நடிகைகளை அடையாளம் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஓருவேளை அவர்கள் மேக்கப் இல்லாமல்    இருந்திருக்கலாம் அல்லது நான் காலத்தில் பின்தங்கியிருக்கலாம். படத்தைத் தருகிறேன் முடிந்தால் நீங்களே யாரையேனும் அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். 


பொதுவாக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக எனக்கு ஆர்வமில்லை. நான் முதன் முதலில் அருகில் சென்று பேசி ஆட்டோகிராப் வாங்கிய பிரபலம்  கவிஞர் வைரமுத்து. இப்போது எனது ரசனை உங்களுக்கு புரிந்திருக்குமே.

எனது உடைமைகளை டிராலியில் நான் தள்ளியபடி வெளியே வரும் போதுதான் என் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த நடிகையை கவனித்தேன்.  சிறிது இடைவெளியில் தானே செல்கிறார் ஓரு புகைப்படம்  எடுக்கலாம் என்ற திடீர் ஆர்வத்தில் 'ஓரு புகைப்படம் எடுக்க உங்களுக்கு ஆட்சேபணை உண்டா ?' என ஆங்கிலத்தில் கேட்டேன். 

அவர்  'இல்லை ' என மறுத்திருந்தால் அதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர் திரும்பி தமிழில்  சொன்ன பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த பதில் யதார்தமானதா ? இல்லை நழுவும் உத்தியா ?  இல்லை தமிழ் திரையுலகில் நடிகையரில் இன்றைய நிலையைச் சொல்வதா ?  அந்த நடிகை ஓன்றும் ஓரிரு படங்கள் நடித்து பின்பு காணாமல் போனவரில்லை எனக்கு குழப்பமாயிருந்தது.

அதைப் பற்றி அடுத்தப் பதிவில் பேசுவோம். அதுவரை யார் அந்த நடிகை ? என ஊகித்து வையுங்கள். அவர் யார் என நீங்கள் ஊகிக்க இங்கே ஓரு சிறிய குறிப்பு .
அந்த நடிகை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்பு உச்ச நடிகருடன் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர்.

தொடருவோம்..

படங்கள் நன்றி;
PIB- Press Information Bureau 

No comments:

Post a Comment