Saturday, April 13, 2024

சாட்ஜிபிடி-க்கு போட்டி - Perplexity.ai

சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாப்ட் கோ-பைலட்(Microsoft Copilot) போன்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-களுக்கு போட்டியாக 'பிர்ப்லக்ஸிட்டி '(Perplexity.ai)  வந்திருக்கிறது. வழக்கம் போல், 'யார் ஆரூர் பாஸ்கர் ?' என்ற கேள்வியைக் கேட்டபோது perplexity  அளித்த பதில் நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது.


கூடவே, எதை ஆதாரமாகக் கொண்டு நமக்கு பதில் தருகிறது என்பதற்கு source link-ஐயும் தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளைத் தொடர்ச்சியாக கேட்கலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதனால் நாம் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது. 

சாட்ஜிபிடி-யின் செயல்திறனில் திருப்தி இல்லாதவர்கள் perplexity.ai -ஐ முயற்சி செய்து பார்க்கலாம். 

ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே... பிர்ப்லக்ஸிட்டி (perplexity, n) என்பதைத் தமிழில் குழப்பம் அல்லது  சிக்கலான, கடினமான சூழல் என  பொருள் கொள்ளலாம்.Thursday, March 28, 2024

வனநாயகன் குறித்து-33 (நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்)

தற்செயலாக அமேசான் தளத்தில் குருபாரதி என்ற வாசகர்  வனநாயகன் பற்றி எழுதிய இந்தக் குறிப்பு கண்ணில் பட்டது. கூடவே 5 (5 star rating) நட்சத்திரக் குறியிட்டு இருப்பதையும் பார்த்தேன். 


குருமூர்த்தி போல வனநாயகன் (மலேசியநாட்கள்)-ஐ தொடர்ச்சியாக வாசித்து உற்சாகமளிக்கும் அனைவருக்கும் நன்றி !

//

எடுத்த புத்தகத்தை என்னால் மேசை மேல் வைக்க முடியாத அளவு விறுவிறுப்பு, தொடர்ந்து 3 நாட்களில் முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன்.  

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.

ஆசிரியருக்கு நன்றி !

//


Wednesday, March 27, 2024

எம்.ஜி.ஆரின் கோரிக்கை - ஒரு வெற்றிக் கதை

1980-களின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப்பழமையான Parryware (  பேரிவேர்) நிறுவனம்  பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.  அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். அதை முருகப்பா நிறுவனம்  ஏற்று நடத்த  கோரிக்கை வைக்கிறார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அதை ஏற்றுக்கொண்டது முருகப்பா  நிறுவனம்.
அதன் நிறுவனத் தலைவர்  முதல் நாள் Parryware  அலுவலகத்துக்கு தான் வழக்கமாக பயன்படுத்தும் பழைய காரில் போய் இறங்குகிறார்.  அங்கு போர்டிகோவில்  முன்னாள் முதலாளி பயன்படுத்தியதாகச் சொல்லி ஒரு மெர்சிடிஸ் பென்ஸைக் காட்டுகிறார்கள். அது எனக்கு இனி  தேவையில்லை என ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன்  காரில் இருந்து இறங்கி நடக்கிறார். அப்போது அவருடைய கைப்பையை வாங்கிக் கொள்ள ஒரு வேலையாள் பவ்யமாக 'ஐயா..' கை நீட்டுகிறார். அவரோ 'என்னுடைய வேலையை நானே செய்வதுதான் சரி..' என அவரை ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன் நடந்து லாபிக்குள் நுழைகிறார்.

அங்கே வலது, இடது என இரண்டு லிஃப்டுகள் இருக்கின்றன. வலது புறம் உள்ள லிஃப்டோ காலியாக இருந்தது.  இடது புற லிப்ஃடில் ஏறவோ தொழிலாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.  புதிய தலைவர் 'என்ன காரணம் ?.' என வினவ அங்குள்ள அதிகாரிகள் 'இது உயர் அதிகாரிகளுக்கென பிரத்தியோகமானது...' என்கிறார்கள்.

சரி என்ற புதிய தலைவர், வலதுபுற லிஃப்டை ஒதுக்கிவிட்டு தொழிலாளர்கள் வரிசையில் போய் கடைசியில் இணைந்து நிற்கிறார். அதிகாரிகளோ பதறிக்கொண்டு ஓடிவந்து இன்னோன்றில் ஏறச் சொல்கிறார்கள். அவரோ 'தாராளமாக நான் வருகிறேன். ஆனால், மற்ற தொழிலாளர்களும் என்னோடு சேர்ந்து அதில்  வருதாக இருந்தால்... 'எனச் சொல்ல அங்கிருந்த தொழிளார்கள் அடைந்த ஆனந்தத்தைத் சொல்லி தெரியவேண்டுமா என்ன!?

அன்று பிறந்தது பேரிவேர்(Parryware) நிறுவனத்துக்கு விடிவு. அதுவரை பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த  நிறுவனம்  பின் அடைந்ததெல்லாம் வெற்றிமுகம் என்பது வரலாறு. இன்று அதன் ஆண்டு வருமானம் 35,000 கோடி ரூபாய்கள். பேரிவேரின் தலையெழுத்தை மாற்றிய அந்தத் தலைவர் எம்.வி.சுப்பையா. அவர் 2012-இல் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அளித்து கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இது ஏதோ ஒரு திரைப்படத்தின் அறிமுகக் காட்சி போல தோன்றினாலும் ஒன்றுக்கும் உதவாத நடைமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு மாத்தி யோசிப்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி மாத்தி யோசிக்க சமயங்களில் வெளியில் இருந்தும் இப்படியான ஆட்கள் வர வேண்டியிருக்கிறது.

Monday, March 18, 2024

ராயல்டி தொகை

இது மார்ச் -  இந்த ஆண்டும் ஜீரோ டிகிரியிடம் இருந்து வழக்கம் போல  புத்தகங்களுக்கான ராயல்டி தொகை வந்திருக்கிறது.ராயல்டி தொகைக்கு நன்றி ஜீரோ டிகிரி. கடந்த ஆண்டு விற்பனையில் முதல் இடத்தில் இருந்த எனது 'அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்' நூலை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டு 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' (நாவல்) முதலிடம் பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தில் 'சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை'.

ஓ சொல்ல மறந்துவிட்டேனே. 2024-ல் 'வனநாயகன்(மலேசிய நாட்கள்)'-க்கு ஜீரோ டிகிரி மூலமாக புதிய பாதை அமைத்து தரவேண்டும் என

நினைத்திருக்கிறேன்.பார்ப்போம்.


Wednesday, February 14, 2024

வனநாயகன் குறித்து-32 (அறுசுவை உணவுபோல இந்த நாவல் வந்துள்ளது)

வனநாயகன் குறித்த முகநூல் வழியாக அறிமுகமான அமெரிக்கவாழ் அன்பர் தியா காண்டீபன் அவர்களுடைய கட்டுரை.

உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன் (மலேசிய நாட்கள்)’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார்.

“வனநாயகன் என்றால் என்ன?”

என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங் குட்டான்’ என்ற குரங்கினத்தைத்தான் ‘வனநாயகன்’ என்று சொல்வார்கள் என இந்தக் கேள்விக்கான பதிலை இந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே எழுத்தாளர் அவர்கள் சொல்லிவிடுகிறார்.

“சரி அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்?”

“திரும்பவும் கேள்வியா…?

“சொல்லுங்க பாஸ்…” 

“ம்ஹூம்… என்கிட்டேயா? சொல்லமாட்டேனே… முதலில் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.”

எல்லாக் கதைகளின் தலைப்பும் கதைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்றில்லை. ஆனாலும், இந்தக் கதையில் ஏதோ ஒரு மையப் புள்ளி எங்கோ ஒரு இடத்தில் கதையின் தலைப்புடன் ஒத்துப் போகிறது. “கண்ணாமூச்சி ரே ரே… கண்டுபிடி பார்ப்போம்…”

வெளிநாடுகளில் இந்திய மென்பொருள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைக்கான போட்டியில் போட்டுக் கொள்ளும் குடுமிப் பிடிச் சண்டைகள், உள்குத்துகள், குழிபறிப்புகள், நம்பிக்கைத் துரோகங்கள், ஊழல்கள் என்று மலேசிய மண்னைக் கதைக் களமாகக் கொண்டு சிறப்பான முறையில் அனுபவப் பதிவாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் மலேசியாவைத் தெரியாத ஒருவருக்கு அங்கு நடக்கும் நாட்டு நடப்புகள், ஊழல்கள், அரசியல் தில்லு முல்லுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த நாவல் பெரிதும் உதவுகின்றது. மற்றும் மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள், பார்க்கக் கூடாத விடயங்கள் என பல விடயங்களையும் இந்த நாவல் தொட்டுச் செல்கின்றது. அதனால் சில இடங்களில் நாவலின் கதை சொல்லும் பாணியில் இருந்து சற்று விலகி ஒருவகையான விவரித்தலை தந்துவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது தெரிகிறது. அவ்வாறில்லாமல் நடுவில கொஞ்சம் பக்கங்கள் நீண்டாலும், முடிந்தவரையில் கதையை பாதிக்காமல் எல்லாவற்றையும் அறுசுவை உணவுபோல தகுந்த அளவில் கலவையாக இந்த நாவல் தந்துள்ளது என்றே நான் சொல்வேன்.

என்னைச் சுற்றிப் பெண்கள் என்பதுபோல கதையின் நாயகனான சுதாவைச் சுற்றி சுஜா, பத்மா, சாரா, வீணா, லீசா, மற்றும் ஓவியா என்று பல பெண்களைளின் கதைகள் இடியப்பச் சிக்கல்களாகப் பின்னப்பட்டுள்ளன. இப்பெண்கள் அனைவரிலும் கடைசிவரை தொடரும் மர்மம் ஓவியா என்பேன்.

என்னதான் சுதா கதையின் நாயகனாக இருந்தாலும் அவனைச் சுற்றிப் பல சதிவலைகள் பின்னப்பட்டாலும் மனதுடன் ஒட்டிவிட்ட பாத்திரங்களாக ட்ரைவர் சிங், சாரா, மற்றும் பத்மாவைச் சொல்வேன். சம்பத் என்னதான் வில்லத்தனம் செய்தாலும் மனதுடன் ஒட்டாத பாத்திரமாகவே கடைசிவரை தொடர்கின்றான். ரவி மற்றும் ஜேகேயின் பாத்திரங்களும் தமக்குரிய பங்கைச் சிறப்பாகச்  செய்துள்ளனர்.

கதையின் தொடக்க அத்தியாயங்களில் பாத்திரங்கள் பேசுவதாகச் சில மலாய் சொற்கள் உட்பட ஆங்காங்கே நிறைய ஆங்கிலச் சொற்கள் வந்து கதைக்குள் குடி கொண்டாலும் பின்னைய அத்தியாயங்களில், “…தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்று தனக்குப் பிடித்தமான பெண்ணின் கைவிரல்களை சங்கத் தமிழில் வியப்பது அழகோ அழகு.

தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலையை முறியடிக்கும் கதையின் நாயகன் சுதா, கதை முழுவதும் ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் திண்டாடும் இடங்களைப் பார்க்கும்போது இவ்வுலகில் யாரைத்தான் நம்புவதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும், “…ஓட முடியலையா நட, நடக்க முடியலையா தவழு… இப்படி ஏதோ ஒரு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கணும்” (“If you can’t fly then run, if you can’t run then walk, if you can’t walk then crawl, but whatever you do you have to keep moving forward.” ― Martin Luther King Jr.) என்று மாட்டின் லூதர் கிங் சொன்ன தாரகை மந்திரத்தை முன்னிறுத்திக் கதைக்கு அப்பப்போ புத்துயிரூட்டி தொய்வின்றிக் கொண்டு சென்று செவ்வனே முடித்த எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

 -தியா காண்டீபன்-

இந்தக் கட்டுரை பனிப்பூக்கள் மின்இதழில் வெளியாகியிருக்கிறது. அதன் சுட்டி கீழே...

https://www.panippookkal.com/ithazh/archives/26724?fbclid=IwAR2t78BxeF1YCZRS72938gRbDu7C4tNnB25JF4yT-GN-q2zFhhNVbLOCqU8


Thursday, February 1, 2024

2023-இல் வாசித்த நூல்கள்

ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக  படிக்கும் புத்தகங்களில் முடிந்தவரை குறிப்பெடுக்க முயற்சி செய்வேன்.  சரியான மனநிலை கூடி வந்தால் அதுபற்றி சற்று விரிவாக எழுதியும் பகிர்வதுண்டு. இல்லை வெறும் பெயரையாவது குறித்துவைத்துக் கொள்வேன். ஆண்டு இறுதியில் அதைக் கொஞ்சம்  திரும்பி பார்ப்பேன்.

திரும்பி பார்கிறேன்.

Hello 2023... !
 • கவிஞர் வெய்யில் - அக்காளின் எலும்புகள்
 • The Story of More: How We Got to Climate Change and Where to Go from Here- Book by Hope Jahren
 • Coyote America - Dan Flores
 • 7 Habits of Highly Effective People
 • Life After Life  - Raymond A. Moody Jr.
 • Surrounded by Narcissists - Thomas Erikson
 • அப்பா (ஜிடி. நாயுடு)- சிவசங்கரி
 • Many Lives, Many Masters- Book by Brian Weiss
 • இளையராஜாவின் காதலிகள் - சிவக்குமார் முத்தையா
 • சைக்கிள் கமலத்தின் தங்கை - எஸ்.ரா.
 • அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது -பெருந்தேவி
 • தமிழர் திருமணத்தில் தாலி -மா.இராசமாணிக்கனார்
 • 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் -ஜீரோ டிகிரி
 • நூறு ரூபிள்கள் - மயிலன் ஜி சின்னப்பன்
 • Anything but my phone mom - Roni Cohen Sandler
 • தூண்டில் முள் வளைவுகள்- சிவக்குமார் முத்தையா
 • அமெரிக்கக் கதைகள் (சிறுகதைகள்)
 • தூங்காநகர நினைவுகள் - அ.முத்துக்கிருஷ்ணன்
Sunday, January 21, 2024

வனநாயகன் குறித்து-31 (இலக்கிய சுவையும், அறிவின் தெளிவும் பெற்றேன்)

ஒரு படைப்பாளிக்கு அதிக மகிழ்ச்சி தரும் விசயம் என ஒன்றிருந்தால் அது பாராட்டாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அது முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து வரும்போது இன்னமும் சிறப்பானதாகிறது.

அமெரிக்கா வந்த ஒரு அன்பர் வழியாக மலேசியா பயணப்பட்ட எனது வனநாயகன்(மலேசிய நாட்கள்) நாவல் ஒரு சிராம்பன் நண்பரை நெகிழச் செய்திருப்பது மகிழ்ச்சி (படம்). 


சிரம்பான் (Seremban) நகரம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கிறது. வனநாயகன் வந்ததிலிருந்தே அது குறித்து பல நல்ல அபிப்பிராயங்களை தொடர்ந்து  கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். வனநாயகன் மலேசியர்களுக்கானது மட்டும் இல்லை. தமிழர்களுக்கானது. வெளியீடு- கிழக்கு பதிப்பகம்.Sunday, January 14, 2024

கரைந்த நிழல்கள் - வாசிக்கும் போது

திரைப்பட தயாரிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப்பட்ட பின் சென்னையில்  இயங்கிய பெரிய ஸ்டுடியோக்கள் எப்படி நசிந்தன என்பதை மையப்படுத்தியே ஒரு சுவாரஸ்யமான படம் எடுக்கலாம் போல இருக்கிறது. திரைக் கதை அமைப்பதும் அவர்களுக்கு எளிதுதான். 

ஏனென்றால், இது அவர்களுடைய சொந்த கதை. தேவையில்லாமல், யாருடைய நாவலில் இருந்து எதை உருவலாம். மொழி புரியாத எந்தப் படத்தை  விடிய விடிய கண்விழித்து  பார்த்து அதில் எந்தக் காட்சியைச் சுடலாம் என பாயை பிராண்டி கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அது மட்டுமல்லாமல், அந்த நாட்களில் சென்னையில் 10-15 ஸ்டியோக்கள் இயங்கின. தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தி படங்களும் இங்கே தயாரானது. அதனால், பல மாநில பார்வையாளர்களைக் குறி வைத்து  போட்ட பணத்தை எடுத்து விடலாம்.

இந்த யோசனையெல்லாம், அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்' வாசிக்கும் போது தோன்றியது.  1960-களில் ஜெமினி ஸ்டுடியாவில் வேலை செய்த அவர் இந்த நாவலின் வழியாக திரைத்துறையின் எதார்த்தத்தைச் சொல்லி இருக்கிறார்.

Thursday, January 11, 2024

வனநாயகன் குறித்து-30 (அன்பர்கள் தைரியமாக வாங்கலாம்)

நட்புவட்டத்தில் இருக்கும் மலேசிய முகநூல் அன்பர் மங்கள கெளரி அவர்களுடைய வாழ்த்து.

 


Saturday, January 6, 2024

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் திருவாரூரிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணம்தான் என்றாலும் ஜனவரியில் (2023) தான் போகும் வாய்ப்பு கிடைத்தது. அது பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கமாக காத்தாடும் அந்தக் கோயிலில் அன்று எங்கும் மனித தலைகள் என்றார்கள்.இந்தக் கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராகவும் இருந்திருக்கிறது.

இதுபோல கலையம்சத்தைக் கல்லிலும், மண்ணிலும், உலோகங்களிலும் கண்ட மனிதர்கள் மறைந்தாலும் அதற்கு பிறகு வரும் தலைமுறைகள் அதை வியந்து போற்றி பாதுகாப்பது சிறப்பு.

அந்த விதத்தில் காலம் கடந்து நிற்கும் அழகிய கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் துறையின் வசம் இருப்பதும் அதைக் கட்டுவித்த இராஜேந்திர சோழன் நினைவு கொள்ளப்படுவதும் சிறப்பு.