Thursday, November 22, 2018

கஜா புயலில் கால்நடைகள்

ஆடு, மாடு, நாய், பறவை மட்டுமல்லாமல் பொதுவாகவே விலங்குகளுக்கு புயல்,வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

அவை மனிதர்களைப் போல் இல்லாமல் சூழ்நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து அவற்றை முன்கூட்டியே  உணர்ந்து கொள்கின்றன. குறிப்பாக புயல் சமயங்களில் வானிலையில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டைத் தெரிந்துகொள்கின்றன. அந்தச் சமயங்களில் அவற்றின் போக்கு வழக்கத்திற்கு மாறாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பறவைகள் வித்தியாசமாக ஒலி எழுப்பியபடி அவசர அவசரமாக கூட்டுக்குத் திரும்பவதையும், நாய், மாடு, பூனைகளின் கண்களில் தோன்றும் ஒருவித மிரட்சியையும் கவனித்திருக்கலாம்.

அப்போது நாய்கள் குட்டிபோட்ட பூனைபோல நிலையில்லாமல் உலாத்திக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில நாய்கள்
பயத்தில் வாலை  உள்நோக்கி சுருட்டி வைத்துக் கொண்டிருக்கும். சில வீட்டில் பாதுகாப்பான இடத்தைத் தேடி பதுங்கும். சில வழக்கத்திற்கு மாறாக நம் கால்களைச் சுற்றி சுற்றி வரும்.

இது நாய்கள் வீட்டில்  ஊளையிட்டால் மரணத்தின் சகுனம் என்பது போல நம்பிக்கை சார்ந்த விசயமில்லை. மாறாக மனித செவி உணர இயலாத தாழ்ஒலிகளை விலங்குகளால் உணரமுடியும் என்பது அறிவியல் உண்மை.
இங்கே அமெரிக்காவின் ஃபிளாரிடாவில் ஹரிக்கேன் சமயங்களில் சுறாமீன்கள் முன்கூட்டியே ஆழ்கடல் பகுதிகளுக்குத் தஞ்சம் புகுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுபோல ஆபத்து சமயங்களில் விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுவதும், வெள்ள சமயங்களில் மேடான இடங்களுக்கு கூட்டமாகத் தப்பித்துச் செல்வதும் இயற்கையான நிகழ்வுகளே.

சமீபத்திய கஜா புயலில் சிக்கி பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துபோனதைப் பார்த்தோம்.  புயலின்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டும் நாம் ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கு என்ன
செய்துவிட்டோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இயற்கைப் பேரிடருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரிதமாகச் செயல்பட்டு  மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினோமா ?  அப்படி அனுப்பியிருந்தால் அதே அளவு கரிசனத்தை நம்முடைய கால்நடைகளுக்கும் காட்டியிருக்க வேண்டாமா ? 2004இல் வந்த சுனாமி போல எந்தவொரு முன்னறிவுப்புமின்றி ஒரு பேரழிவு
வரும்போது விலங்குகளைத் தவிக்கவிட்டு மனிதர்களாகிய நாம் தப்பிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முன்னெச்சரிக்கையோடு கஜா போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது ?

எல்லா மாவட்டங்களிலும்  இயற்கைப் பேரிடர்களின் போது மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க இடம் இருப்பது போல விலங்குகளுக்கு
இருக்க வேண்டியது அவசியம் தானே. எல்லா மாவட்டங்களிலும்
இல்லாவிட்டாலும் கால்நடைகள் அதிகமுள்ள கடலோர மாவட்டங்களிலாவது செய்திருக்கலாமே. அதிகம் வேண்டாம் புயலின் கண் (cyclone eye) நேரடியாக தாக்கப் போகிற வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் இதுமாதிரியான முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்திருக்கலாமே.

சரி, நாகை மாவட்டத்தின் நன்னம்பிக்கை முனையான கோடியக்கரையில் வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில் அடைத்து வைத்திருந்த
காட்டுயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கையாக நாம்  என்ன செய்தோம் ?
கடலில் இருந்து தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் அந்தச் சராணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட பல ஆயிரம் விலங்குகள் வீசிய புயல்காற்றில் சிக்கி தப்பிக்க வழியின்றி திணறியிருக்குமே. அச்சத்தில் துள்ளி ஓடிய அந்த மான்களின் கூக்குரல் மனிதர்களுக்குக் கேட்டிருக்குமா ?  இல்லை அலறியபடி மரத்துக்கு மரம் தாவி ஓடிய குரங்குகளின் அலறல் தான் கேட்டிருக்குமா ?

வாய்ப்பு இல்லை. விலங்குகளிடமிருந்து இந்த பூமியைக் கவர்ந்த மனிதன் அவற்றைப் பல லட்சம் ஆண்டுகளாக அடிமையாக்கி அல்லவா வைத்திருக்கிறான். அடிமைகளுக்கு இந்த உலகில் குரல் இருக்கிறதா என்ன ?

Monday, November 19, 2018

கஜா- அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள்

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள் தன்னார்வமாக ஒரு குழுவாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்தக் குழு புயலால் கடும் சேதமடைந்தவர்களுக்கு உதவும்பொருட்டு நிதி உதவி என்பதைத் தாண்டி களப்பணியாளர்களையும், பயனாளிகளையும் ஒருங்கிணைக்கும் பணியையும் அதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகளையும் மிகத் துரிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

நிவாரண உதவி தேவைப்படுபவர்களும் அதற்குத் தன்னார்வமாக உதவி செய்ய நினைப்பவர்களும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். களப்பணியாளர்களை ஒருங்கிணைக்கும் குழு 24X7 செயல்படுகிறது.


அவர்களுடைய இணையதளம் - http://www.gajahelp.valaitamil.com/
விழுப்புணர்வு காணோளி-  https://youtu.be/XR4QkEMz4Xc

Sunday, November 18, 2018

கஜாவுக்குப் பிறகு...

கஜா பேரழிவுக்கு பிறகான பாதிப்பு குறித்த செய்திகள் உள்மாவட்டங்களில் இருந்து மெள்ள வரத்தொடங்கியிருக்கின்றன. புயலுக்கு இதுவரை 45க்கு அதிகமானவர்கள் மரணமடைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்கள் ஊரில் இருந்து வந்திருக்கும் நிழற்படங்களையும், வீடியோக்களையும் என்னால் முழுதாகப் பார்க்க முடியவில்லை. புயலின் கோரதாண்டவத்தால் ஊரே சூரையாடப்பட்டு முற்றிலுமாக உருகுலைந்து கிடக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் வீட்டைச் சுற்றி நின்ற முப்பது, நாற்பது வருட மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து அகாலமாக விழுந்துகிடக்கின்றன.  வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கிளைகள் உடைந்து, மரக்கொப்புகள் விழுந்து, பசுந்தலைகள் கொட்டி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.  வீடியோவில் பறவைகளும், அணில்களும், சில் வண்டுகளும் விடாமல்  தொடர்ந்து அலறி ஏதோ நிகழக்கூடாத அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்வது போல போரோலி எழுப்பும் காட்சிகள் வயிற்றைப் பிசையவைக்கின்றன.


தோட்டத்தில் மா,பலா, வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, கொய்யா, வேம்பு, நார்த்தை, எழுமிச்சை என பலநூறு மரங்கள் மல்லாந்து தலைசாய்த்து கிடக்கிறன. பாதிரி, ஒட்டு, பங்கனப்பள்ளி, நீலம் என வகைவகையாக காய்த்துக்கொண்டிருந்த மாமரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் வேரோடு சாய்ந்துகிடக்கின்றன.

அதுபோல செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் என குலைதள்ளிய வாழை மரங்கள் நுனி முறிந்து கிடக்கின்றன.
பல்லாண்டுகளாக காய்த்துக்கொண்டிருந்த பலா மரங்கள் சுழல்காற்றில் சிக்கி தலைதிருகி போட்டதுபோல மரணித்துக் கிடக்கின்றன. மரங்களோடு சேர்ந்து மின்கம்பங்களும் விழுந்து கம்பிகள்  அறுந்து கொடிபோல சுற்றிக் கிடைக்கின்றன. அகன்ற கிளைகள் கொண்ட முதிர்ந்த தேக்கு மரங்கள் வேரோடு முறிந்து பாதையில் விழுந்து கிடப்பதால் தோட்டத்தின் உள்ளே முன்னேறி செல்லமுடியாத நிலை.

இப்படி ஊழித் தாண்டவமாமாடிச் சென்றிருக்கும் கஜா இது போல எத்தனையோ லட்ச கிராமமக்களின் வாழ்வாதாரத்தை பறித்துச் சென்றிருக்கிறது.  மண், மரம், பறவை, அணில் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிராமத்து மனிதர்களின் உயிர்குலையைச் சுத்தமாக அறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

தடைபட்டுள்ள மின்சாரம் வந்து, தகவல்தொடர்பு கிடைத்து அவர்களுடைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப கண்டிப்பாக சில மாதங்கள் ஆகலாம்.  அவர்கள் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறார்கள். கஜா விட்டுச் சென்றுள்ள இந்த வடு இனி வரும் பல்லாண்டுகளுக்கு அவர்களின்
நினைவை விட்டு அகலப் போவதில்லை.  நேற்றுவரை மற்றவர்களுக்கு உணவளித்த அந்த வெள்ளந்தி மனிதர்கள் இன்று உதவிக்கு நிவாரண முகாம்களில் கையெந்தும் நிலை.

புயலுக்குப் பின்  சாலைகளில் கிடக்கும் மரங்களை அகற்றும் வேலையை அரசாங்கம் உடனடியாக செய்து தருமே தவிர விளைநிலங்களையும், மரங்களையும், கால்நடைகளையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்பவர்களுக்கு  அரசு நிவாரணம் உடனே கிடைத்துவிடும் என நான் நம்பவில்லை.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற
அத்யாவசியங்கள் உடனடியாக தேவை. பல இடங்களின் விவசாயிகளின்
வீடுகளைச் சுத்தப்படுத்தவும் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தக் கூட ஆட்கள் கிடைக்காது என்பதே உண்மை அப்படியே கிடைத்தாலும் செலவு செய்யமுடியாத சூழல். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நமது உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்பது நமது கடமையும் கூட.


படங்கள். நன்றி - இணையம். (கடைசி படம்)

Monday, November 12, 2018

மறப்போம்... மன்னிப்போம்

துபாயிலிருந்து கிளம்பி நீயூயார்க் விமானநிலையத்தில்  வந்து
இறங்கி பெட்டியைத் தேடினால்  அதிர்ச்சி. செக்கின் செய்த இரண்டு பெட்டிகளில் ஒன்று வந்து சேரவில்லை. விமானத்தில் ஏற்றிய கடைசி பெட்டி 
வெளியே வரும் வரை பொறுத்து பொறுத்துப் பார்த்து காத்திருந்துதான் மிச்சம். கடைசிவரை பெட்டி  வரவில்லை. கூடவே அகோர பசி வேறு. விதியை  நொந்தபடி அங்கே இங்கே என விசாரித்து  ஒருவழியாக காணவில்லை என வாடிக்கையாளர் சேவையில் புகார் தந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வரும்போது நள்ளிரவு 1 மணி.  24 மணி நேரப்பயணக் களைப்பு.
அசதியில் படுக்கையில் விழுந்து காலையில் அலுவலகத்துக்கு கிளம்பலாம் என எழுந்தால் அடுத்த அதிர்ச்சி. பல் துலக்க, சவரம் செய்ய,குளிக்க எனத்
தேவையான எல்லாம் காணாமல் போன பெட்டியில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி ? வீட்டில் இருந்த பழைய பேஸ்டை தேடி எடுத்து பிதுக்கி துவம்சம் செய்து பல் துலக்கினேன். விடுமுறைக்கு பின் அலுவலகம் போவது பெருங்கொடுமை அதுவும் இரண்டுநாள் தாடியோடு போவது ?
காலையில் திறந்தும் திறக்காமலும் இருந்த கடையில் முதல் ஆளாக
நின்று 'அத்தியாவசிய'ங்களை (essentails) வாங்கி ஒருவழியாக வேலைக்குப் போய் சேர்ந்தேன்.

பெட்டி காணாமல் போன மூன்றாவது நாள் கண்டுபிடித்துவிட்டோம்
என வீட்டுக்கு பெட்டியை அனுப்பியிருந்தார்கள். பெட்டியில் இருந்த
பொருட்களை சரிபார்த்த கையோடு 'அத்தியாவசியம்' என முதல்நாள்
வாங்கிய ரசீதைத் தேடி எடுத்தேன்.  உங்களுடைய கவனக்குறைவால் தான் இதெல்லாம் வாங்க நேரிட்டது, கூடவே மனஉலைச்சல் வேறு  எனச் சொல்லி
நஷ்டஈடு கேட்டு அந்த ரசீதை விமானசேவை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன்.

எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கான முழுத்தொகையையும் காசோலையாக அனுப்பியவர்கள் கூடவே ஒரு வருத்தக்கடிதத்தையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். போனால் போகிறார்கள். மறப்போம்.  மன்னிப்போம். :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Sunday, November 11, 2018

மலையாள மேலாளர் வாக்கு

பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு மலையாளி எனக்கு மேலாளராக இருந்தார். அப்போதே அவருக்கு வயது 60 இருக்கும். அடுத்தவர்களை சரியாக எடைபோட்டு வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். அலுவலகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிழும் சரளமாக பேசினாலும் அடிக்கடி மலையாள பழமொழிகளை அப்படியே மேற்கோள் காட்டுவார்.

ஒருமுறை அறைக்குப் பேச அழைத்திருந்தார். போயிருந்தேன்.
அப்போது புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பையனின் பெயரைச் சொல்லி, அவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் ? என ஆலோசனை கேட்டார். நிலுவையில் இருந்த எல்லா வேலைகளையும் சொன்னேன்.  கடைசியில் இதெல்லாம் சரியா வராது என்றவர், தானாகவே உருப்படாத வேலை ஒன்றைச் சொல்லி அதைக் கொடுக்கலாம் என்றார். "அதை புதிதாக வந்தவரால் செய்யமுடியாதுங்க" என விளக்கியபோது.  "எனக்கு அதுதான் வேணும், அவன் அடிக்கடி கேஃப்டேரியா பக்கம்  தேவையில்லாமல் கடலை போட்டுகிட்டு திரியிரான்" என்றவர் சிரித்தபடி 'பட்டிக்கு முழுவன் தேங்கா கொடுத்தது போல இருக்கனும்' என்றார்.

நான் புரியாமல் தலைசொறிந்த போது, அவர்  சிரித்தபடி "மலையாளத்துல அப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்கப்பா. இட்ஸ் Like a dog  gets a whole coconut. give something which they cannot use.. அதாம்பா தொந்தரவு தற்ர நாய்க்கு முழுத்தேங்காய கொடு. அது நம்மல விட்டு போய் கொஞ்ச நேரத்துக்கு  அத போட்டு உருட்டி திரிஞ்ட்டு வரட்டும் " என அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படும் பல விசயங்களைப் பார்க்கும்போது அந்த மலையாள மேனேஜரை தான் நினைத்துக்கொள்கிறேன். :)