Tuesday, November 28, 2017

தொழில் பிரச்சனை-1

வியாபரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வருவது தவிர்க்க இயலாது.  ஆனால், அந்தப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள்
என்பதே  வியாபாரத்தில் ஒருவரின்  வெற்றி, தோல்வி என்பதைத் தீர்மானிக்கிறது.  இது தொடர்பான எனது சமீபத்திய அனுபவம் இங்கே.

ஒரு பெரிய அலுவலக விருந்துக்கு  இந்திய உணவுவகைகளை ஆர்டர் செய்வது தொடர்பாக இங்கிருக்கும் இரண்டு இந்திய உணவக உரிமையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்தேன்.    அவர்கள் இருவரும் இந்தியாவின்  ஒரே மாநிலத்தைத் சேர்ந்தவர்கள். துரதிஷ்டவசமாக சொல்லி வைத்தார்போல் இருவருக்கும் ஒரு இக்கட்டானச் சூழல் ஏற்ப்பட்டது. அதை இருவரும் கையாண்ட விதம் நேர் எதிரானது. அந்த இரண்டு நிகழ்வுகள் உங்களுக்காக.

நிகழ்வு#1 ;
முதலாமவரை நான் நேரில் அவருடைய உணவகத்தில் சந்தித்து ஆர்டர் தொடர்பாக பேசினேன்.  ஆரம்பம் முதலே அவருடைய பேரத்திலும், பேச்சிலும் கரார் தன்மை இருந்தது. தனது சரக்கு தரத்தால் உயர்ந்தது அதனால் விலை சற்று அதிகம்தான் எனவாதிட்டுப் பேசினார். அவருடைய அனுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது. தலைக்கு இத்தனை 
டாலர் ($) எனத் தெளிவாக சொல்லிவிட்டார்.  அந்த உணவகத்தின் தரம் எனக்குத் தெரியும் என்பதால் அதிக பேரமின்றி ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பேசி இறுதிசெய்தேன். 

விருந்துக்கு 4 நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அந்த உணவகத்தில் இருந்து போன் வருகிறது. என்னால் அந்தப் போனை எடுக்கமுடியவில்லை. நான் திரும்ப இரவில் அந்த உணவக எண்ணுக்கு 
அழைத்தபோது நேரடியாக வாய்ஸ் மெசேஜிக்குச் சென்றது.  அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தி எனக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சி தான்.

அந்த வாய்ஸ் மெசேஜ் அதிர்ச்சி செய்தி- "உணவகத்தின் சமயலறையில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தால் பராமரிப்பிற்காக உணவகம் வரும் 3 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்" என்பதுதான்.

நான் வேறு வழியில்லாமல் வேறு நபர்களைத் தேட வேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை அலுவலக எண்ணிற்கு
அந்த உரிமையாளர் அழைத்திருந்தார். தீவிபத்து விசயத்தை நேரடியாக சொன்னவர். மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 'உங்களுக்கு விருப்பமிருந்தால்
வேறு ஆளை ஏற்பாடு செய்ய இயலும்' என்றார். அவர் சொன்ன உணவகத்திற்கு நல்ல பெயர் இல்லாததால், நான் மறுத்தேன். அவர் மறுபடியும்  'ஐ ம் எக்ஸ்டீமிலி சாரி. மை அப்பாலஜிஸ்' என மனதார பேசினார். அடுத்த முறை தேவைப்படும் போது கண்டிப்பாக தொடர்புகொள்ளச் சொன்னார். சுபம்.

நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.

Wednesday, November 15, 2017

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் கார்த்திக் புகழேந்தி ஒரு முகநூல் பதிவு எழுதி அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளரிவிட்டிருந்தார்.

ஸ்டெல்லா புரூஸ் எனக்கு 90களில் வெகுஜன இதழில்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பெயரில் இருக்கும் வசிகரத்தால்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டேன் எனச் சொன்னால்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
( இயற்பெயர்- ராம் மோகன்).

நெஞ்சதைத் தொடும் பல சிறுகதைகள், புதினங்கள்(நாவல்கள்) எழுதி
புகழ் அடைந்த அந்த எழுத்தாளர் தனது 67வது வயதில் (2008) தனது மனைவி இறந்தச் சோகத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மட்டும் ஏனோ மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும், பல  மனிதமனங்களின் உள்ளடுக்களில் சஞ்சாரிக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இத்தகைய விநோதங்கள் சாத்தியமே எனும் குரலும் என்னுள் கேட்கத்தான் செய்கிறது.

அவர் தன் கடைசிகாலத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார் எனும்
செய்தி மேலும் துயரமளிப்பதாக இருக்கிறது.

அவருடைய "25 வருடக் கதை" எனும் சிறுகதையை முடிந்தால் வாசித்துப்பாருங்கள்.  அது வசதிவாய்ப்பிற்காக, தன் கொள்கைகளை விட்டு ஒரு பணக்கார வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு டாக்டரின் கதை. நல்ல கதையம்சம். செறிவான எழுத்து.

நன்றி- படங்கள் இணையம்.


Wednesday, November 1, 2017

ஹார்வர்டு தமிழ் இருக்கை

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு சமீபத்தில் ரூ 10 கோடி
நிதி வழங்கியிருப்பதன் மூலம் இந்தச் செய்தி தமிழகம் முழுமையும்
சென்று சேர்ந்திருக்கிறது. அது தொடர்பான சில தகவல்கள்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை
மேற்கொள்ளவும் வசதி செய்து தரும் முயற்சி இது.  இதற்கு தலா 500,000  அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கி தொடங்கிவைத்த ஜானகிராமனும்,  திருஞானசம்பந்தமும் அமெரிக்க வாழ் மருத்துவர்கள்.   மருத்துவர்
ஜானகிராமன் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் காவிரி மைந்தர்கள் அனைவரும்  பெருமை கொள்ளலாம்.

மருத்துவர் ஜானகிராமன் அவர்களை  2016- அமெரிக்காவின் நீயுஜெர்சி பெட்னா பேரவைக் கூட்டத்தில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது.  ( படத்தில், வலதுபுறம் மருத்துவர் ஜானகிராமன், இடதுபுறம்  திரு. பாலசந்திரன் இ.ஆ.ப எனது பங்களா கொட்டா புதினத்தை பெற்றுக் கொண்டபோது )  மருத்துவருடன் அவருடைய மனைவி, மகனுடன் (அவரும் ஒரு மருத்துவர்) தனிப்பட்ட முறையில் உரையாடும் ஒரு நல்ல வாய்ப்பும் அன்று கிடைத்தது.

அன்றைய விழாவில்   இருக்கையை அறிமுகம் செய்து உரையாற்றிய  மருத்துவர் ஜானகிராமன் இந்த எண்ணம் உருவான ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

அமேரிக்காவின் ஹவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர்.
அவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் உதயமானது தான்
தமிழுக்கான நிரந்தர இருக்கை என்றார்.

ஜானகிராமன்,  'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என
அம்மையாரிடம் கேட்டிருக்கிறார்.   வைதேகி அவர்கள்
அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ எனச் சொன்னாதாக  நினைவு கூர்ந்தார். (இன்னொரு செய்தி- வைதேகி அம்மையாரிடம் தொலைபேசி வழியாக வாரமொரு முறை சங்கஇலக்கியம்  பயிலும் அமெரிக்க நண்பர்கள் குழுவில் அடியெனும்
இருக்கிறேன்)

ஹார்வர்டில் தமிழ் இருக்கை திட்டம்  அயல்நாட்டு தமிழர்களாலும் தமிழுக்கும், தமிழகத்திற்கும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என நினைக்கிறேன். இருக்கை குறித்தான  மேலும் விரிவான தகவல்களை அவர்களுடைய
(http://harvardtamilchair.org/) இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அவர்களின் தளத்தில் உள்ள தகவல்களின்படி இருக்கை அமைக்கத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் 2.67 மில்லியன்கள் நிதி திரட்டியிருக்கிறார்களாம்.  இதைச் சமூக வலைத்தளங்களின் வழியாக முன்னெடுப்பதில் தீவிரக் களப்பணி ஆற்றும் நண்பர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யச் சொன்ன பாரதியின் கனவு மெய்பட வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.