Sunday, March 27, 2016

கெடைகாடு - ஏக்நாத்

தமிழில் இன்றைய  வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சிகள். அவற்றைத் தாண்டி திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் என மக்களுக்கு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். அச்சில் வெகுஜன ஊடகங்களாக  தினசரிகளும்,வாராந்திர பத்திரிகைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையிலும் கட்டுரைகள், அரசியல், சுய முன்னேற்றம், பொது அறிவு புத்தகங்களைத் தாண்டி தமிழில் கதைகளை வாசிக்க சிறிய கூட்டம் ஓன்று இருக்கத்தான் செய்கிறது.

அந்த வாசகர்களை கருத்தில் கொண்டு வருடம்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவருகின்றன.  அவற்றில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்புகள் ஏதோ ஓரு வகையில் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன என்பது சொல்லத் தேவையில்லை.  ஆனால் மற்ற படைப்புகளில் தரமானதை அடையாளம் காண வாசகனுக்கு பெரும் வழிகாட்டலாக இருப்பது மூத்த எழுத்தாளர்கள் தான்.

அப்படி எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனால் சமீபத்தில் அடையாளம் காட்டப்பட்டது ஏக்நாத்தின் "கெடைகாடு" புதினம் (நாவல்).  எஸ். ரா. வால் அடையாளம் காணப்பட்டதும் டிஸ்கவரி புக்பேலஸ் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறது. நாவலாசிரியர் ஏக்நாத் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை. அதனால் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன்.

இனி புத்தகத்தைப் பற்றி பார்ப்போம். தமிழில் கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு பல படைப்புகள் வந்திருந்தாலும் இந்த படைப்பு கொஞ்சம் வித்தியாசமானது அல்லது புதுமையானது என்றுகூட சொல்லலாம் அதற்குக் காரணம் கதை நடப்பது மலையும் மலை சார்ந்த மேய்சல் நிலம். புதுமையான நாவல் என பரவலாக பேசப்பட்ட மேய்சல் நிலத்தைப் பேசும் ஓநாய் குலச்சின்னம் நாவல்கூட சீன மொழிபெயர்ப்புதான்.


கிராமங்களில் கிடை(கெடை) போடுதல் என்பது மாடுகளையோ, ஆடுகளையோ பகல் நேரங்களில் வயலில் மேயவிட்டு இரவில் அங்கேயே படுக்க வைப்பது.   ஆடுகளை வைத்து போடப்பட்டால் ஆட்டுக்கிடை இல்லை மாட்டுக்கிடை என்பார்கள். இதை செய்பவர்கள் நாடோடிகள். அவர்கள் வெளியூர்களிலிருந்து பொடிநடையாக தங்களுடன் ஆடுகளையோ மாடுகளையோ மந்தையாக அழைத்து வருவார்கள்.

அவர்கள்  ஓரு இரவிற்கு இவ்வளவு எனப் பேசி நெல் அல்லது பணத்தைக் கூலியாக வாங்கிக் கொள்வார்கள். கிராமங்களில் வயலில் வேலையில்லாத கோடைகாலங்களில் பெரும்பாலும் இதைச் செய்வார்கள். மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் வயலுக்கு இயற்கை உரம் என்பதால் இதை விவசாயிகள் இதை பெரிதும் விரும்பவார்கள். விவசாயத்திற்கு ரசாயன உரங்கள் பெரிதாக பயன்படுத்த தொடங்கிய பின் இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்டது என்றே சொல்லாம்.

இந்த நாவலில் அப்படி மாடுகளை மேய்சலுக்காக காட்டுக்கு நண்பர்களுடன் ஓட்டிச் செல்லும் உச்சிமாகாளி எனும் பாத்திரத்தின் வழியாக கதை விரிகிறது.

நாவலில் பெரும்பாலும் பேசப்படுவது காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், அதன் மேய்ச்சல்.  அது போல கிராமம்,  அந்த கிராமத்தில் உச்சமகாளிக்கு நேரும் காதல், அவர் நண்பர்களின் காமம்  என விரிகிறது.

உச்சிமாகாளி காட்டில் இருப்பது ஓரு தளமாகவும் கிராமத்தில் நடக்கும் இன்ன பிற விஷயங்களை இன்னோரு தளமாகவும் எடுத்துக் கொண்டால் என்னைக் கவர்ந்தது முதல் தளம்.  ஆனாலும் இரு தளங்களையும் ஆசிரியர் கதையில் அருமையாக இணைத்திருக்கிறார். நான் ஓரு நாவலின் படைப்பாளி என்ற முறையில் அதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை அறிவேன். அதற்காக முதலில் வாழ்த்துக்கள் ஏக்நாத்.

நாவலில் மலையின் குளிர்ச்சியையும், காடுகளின் இயற்கை அழகையும் தன் எழுத்தில் கண் முன்னே நேர்த்தியாய் ஆசிரியர் விரிய வைக்கிறார்.  மாடுகள் மற்றும் காடுகளின் நுணுக்கமான விவரிப்பு படிக்கும் நம்மை மலைக்க வைக்கின்றன. காட்சிரீதியான அனுபவத்தை அவருடைய எழுத்தில் கொண்டுவருகிறார். உதாரணமாக அத்தியாயம் ஏழில் இருந்து சில வரிகள் உங்களுக்காக.

"விடிந்துவிட்டது. மாட்டின் சாணமும் மூத்திரமும் ஓரே இரவுக்குள் மூக்கில் வந்து அடித்தது.  இந்த வாடை புதிதில்லை என்றாலும் அந்நியபிரதேசத்தில் இந்த வாசனை புதிதாகத் தெரிந்தது."

இதில் கவித்துவனமான வரிகளில்லை ஆனால் நாவலினூடே இதை படிக்கும் போது மூத்திரவாடை உங்களுக்கு புரியத் தொடங்கும். அது போல ஓரிடத்தில்
தேங்காய் அளவில் கொய்யா பழங்கள்  என்றொரு வரி வரும். இப்படி திருகலான வார்த்தை பிரயோகங்கள் இல்லாத எளிதான அனைவருக்கும் புரியும் மொழி நடை. இப்படி முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன் அந்த வட்டார பேச்சு வழக்கில் கதையை நகர்த்துகிறார்.அதுபோல

"வனம் பெரிது, வானத்தைப் போல. கால் போன போக்கில் போகவும் மனம் போன போக்கில் பாடவும் முடியும்." உணர்ந்து எழுதியிருக்கிறார்.

காட்டின் உள்ளே நடக்கும் பல விஷயங்கள் நுட்பமாக சிறு சிறு சம்பவங்கள் மூழமாகப் பதிவாகியிருக்கிறது. உதாரணமாக காடுகளில் தேன் எடுப்பது, ரேஜ்சர்கள் எனப்படும் வன அதிகாரிகளின் அத்துமீறல்கள், புலி, மான் போன்ற விலங்குகளைத் திருட்டுதனமாக வேட்டையாடுவது, சந்தன மர திருட்டு, காட்டில் சாமிக்கு நடக்கும் படையல் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

நாவலில் இந்தபகுதியையே மேலும் செழுமைபடுத்தி, கிராமத்து பஞ்சாயத்துகள், சாராயச் சாவுகள் போன்றவற்றைத் தவிர்திருக்கலாம் என்பது எனது கருத்து. அதுபோலச் சில காட்டு விலங்குகளைப் பற்றிய சிறிய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக "மிளா" என்பது ஓரு வகையான மான் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன். அதே சமயத்தில சில வழக்குச் சொற்களுக்கான மாற்றுச் சொல்லை அடைப்புக் குறியில் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் அட்டளை எனபதற்கு பரண் எனக் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. மற்றபடி கெடைகாடு ஓரு நல்லதொரு வாசிப்பனுபவம்.

கண்முன்னே  நகர்மயமாதலுக்கு நம் கிராமங்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் "கெடைகாடு" போன்றதொரு நாவலின் எழுத்துக்கள் மட்டுமே இழந்த வாழ்க்கையை மீட்டேடுக்க உதவும்.

அதுபோல அடுத்தத் தலைமுறைக்கு இந்தப் படைப்புகள் மட்டுமே அந்த வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும்.

தலைப்பு :கெடைகாடு
எழுத்தாளர்: ஏக்நாத்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
ISBN : 9789384301019
பக்கங்கள்: 200
விலை : ரூ.170

குறிப்பு- இந்த நூல் அறிமுகம் ஆம்னி பஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

http://omnibus.sasariri.com/2016/03/blog-post.html

Sunday, March 20, 2016

எனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)

எனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2.

கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த நடிகை யார் ? என்ற கேள்விக்கான விடையை நண்பர் துளசி சரியாக மீனா என ஊகித்திருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்!!!.

ஆம். அந்த நடிகை வேறு யாருமல்ல. அது நடிகை மீனா தான்.   மீனா - பெரிதான அறிமுகம் தேவையில்லாதவர்.

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பரவலாக கவனிக்கபட்ட அவர் அடுத்ததாக ரஜினியின் எஜமான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.  ரஜினியில் தொடங்கி எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.


90களில் இருந்து கடந்தசில வருடங்கள் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தன் அழகாலும், குடும்பபாங்கான  முகத்தோற்றதாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் மக்கள் மனத்தில் தனி இடம்பிடித்தவர்.


எஐமான் வெளியான வருடமான 1993ல் மீனாவிற்கு வயது 17 தான்.
அப்போழுது அவருடைய உடல் பூரிப்பை கண்ட பத்திரிகைகள் அவர் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு  ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டார் என பரபரப்பாக எழுதின. அப்போதேல்லாம் என்னைப்போன்ற பதின்மவயதுக்காரர்களின் கனவுக்கன்னி மீனா. அந்த தெத்துப் பல் அவருக்கு மிகப்பெரிய பிலஸ் என நினைக்கிறேன்.

பெங்களூரில் வசிக்கும் கம்யூட்டர் இன்ஜீனியரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.  அதன்பின் கொஞ்சநாட்கள் சின்னத்திரையில் பார்த்த ஞாபகம்.

மீனாவை நான் பார்ப்பது எனக்கு இது முதல் முறையல்ல. பத்து வருடங்களுக்கு முன் நான்  சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற விமானத்தில் மீனாவும் வந்திருந்தார். 

அன்று விமான நிலையத்தில் தன் பெண் குழந்தையுடன் அவருடைய அம்மாவும் உடனிருந்தார். நடிகைகளுடன் அவர்களின் அம்மாக்கள் நிழலாக பின் தொடர்வார்கள் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். மீனாவின் அம்மா 
மல்லிகாவும் கூட முன்னாள் நடிகை என எங்கோ படித்த நினைவு.

அவருடைய அம்மா எனக்கு மிக அருகில் பெட்டிகள் வைத்திருந்த வண்டியைத் தள்ளியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தார். அந்த வண்டியில் அவர் பேத்தியும் (மீனாவின் மகள்) உட்காந்திருந்தாள்.  அவருக்கு கொஞ்சம் முன்னால் நடிகை மீனா தனியாக ஓரு வண்டியைத் தள்ளியபடி சென்றுக் கொண்டிருந்தார்.

விஷயத்திற்கு வருவோம். எனக்கு 'நோ' சொல்லாமல் அவர் என்ன சொன்னார் என நீங்கள் ரொம்ப யோசிக்கத் தேவையில்லை.

'போட்டோ எடுத்துக்க நான் என்ன  பெரிய ஆளா ? ' என்பது போல ஏதோ சொல்லி அவர் மறுத்துவிட்டார்.

'நான் பரவாயில்லை ' என ஆங்கிலத்தில் உற்சாகம் குறையாமல் சொன்னேன். எனக்கு பெரிதான ஏமாற்றமில்லை. ஆனால், உள்ளே வளைத்து வளைத்து ஜெயம் ரவியை போட்டோ எடுத்தவர்கள் ஓருவர்கூட மீனாவைக் கண்டுகொள்ளாதது துரதிஷ்டம். தமிழ்திரையுலகில் ஓரு நடிகைக்கான இடம் இதுதானா. மார்க்கெட் இழந்து அதுவும் ஓரு சிறுமிக்குத் தாய் எனும்போது சீண்டுவாரில்லையா? . அவர் வேண்டாம் என மறுத்ததற்கு அந்த ஏமாற்றம் கூட ஓரு காரணமாயிருக்கலாம். தெரியவில்லை.

நான் உடனிருந்த அவருடைய அம்மாவிடம் பேத்தியை பற்றி விசாரித்தபடியே நடந்தேன். அவர் மிகச் சோர்வாகத் தெரிந்தார். பயணக்களைப்பாய் இருக்குமென நினைத்துக் கொண்டேன்.  தன் பேத்தியின் பெயர் நைநிகா என்றார். பேத்தியை பற்றி பேசும்போதுகூட  அவர் முகத்தில் பெரிதாக உற்சாகமில்லை. ஓரு நொடிக்கு குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து திரும்பின.

நாங்கள் பேசியபடி விமான நிலையத்தின் வெளியே வரும்போது யாரும் நடிகை மீனாவை அடையாளம் கண்டது போல் தெரியவில்லை.   நான் வெளியே கூட்டத்தில் என் தம்பியை அவசரமாக கண்களால் துலாவிக் கொண்டிருந்தேன். அதற்குள் அவர்கள் என்னை விட்டு சற்று தூரம் நடந்திருந்தனர்.

நான் அவர்களை உற்றுபார்த்துவிட்டு விலகி கூட்டத்தை  நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த மங்கலான ஓளியில் இருபத்தைந்தாண்டுகள் உடன் நடந்த சோர்வு அந்த அம்மாவின் நடையில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது.

விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் விடிந்திருக்கவில்லை.

தொடருவோம்..

நன்றி; படங்கள்
google.com

Sunday, March 13, 2016

'நோ' சொன்ன அந்த நடிகை

சென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம்.

சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந்த நள்ளிரவில் விமானம் சென்னையை  நெருங்க நெருங்க மனதுக்குள் ஏதோ ஏதோ எண்ணங்கள்  வந்து அலைகழிக்கத் தொடங்கின.

சென்னையில் கடும் மழை,  வெள்ளம்  ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் இவற்றை இணையத்தில் பார்த்திருந்த எனக்கு அவை கண் முன்னால் படமாய் ஓடத் தொடங்கியிருந்தது.

குறிப்பாகத் தண்ணீரில் மிதந்து உலகத் தமிழர்களையெல்லாம் கண்ணீரில் நனையவிட்ட சென்னை விமான நிலைய ஓடுதளத்தைப் பார்க்க மனது பரபரத்துக் கொண்டிருந்தது.


ஆனால் எதிபார்த்ததற்கு மாறாக சென்னை விமானநிலையம் பேரழிவின் எந்தவிதச் சுவடுமின்றி வழக்கம் போல் இருந்தது.

விமான நிலையத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களை பார்த்தபடியேச் சென்றேன். அவற்றைப் பூம்புகார் நிறுவனம் மிக நேர்தியாக வடிவமைத்திருக்கிறது. அந்தப் படம் கீழே.


வழக்கத்திற்கு மாறாக குடிபெயர்தல் (Immigration) கூடச் சில நிமிடங்களில் முடிந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் நம் கண்களில் முதலில் பளிச்சென்று படும்படி ஓரு பெரிய பதாகை (Banner) வைத்திருந்தார்கள்.

அதில் "அப்பலோ மருத்துவமனை உங்களை அன்புடன் வரவேற்கிறது" !! என்று எழுதியிருந்தது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனப் புரியாமல் பெட்டிகளை எடுக்க விரைந்தேன்.

ஆனால், பயணிகளின் உடைமைகள் காலதாமதாகதான் வந்து சேர்ந்தது.
ஓரு மணி நேரம்  காத்திருந்து எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வரும் போது சீருடை அணிந்த விமான நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா துபாயிலிருந்து வரும் விமானத்தில் வந்திருப்பதாகச் சொன்னாரகள்.

பெரும்பாலும் பிரபலங்களை உள்ளூர் விமானநிலையத்தில் மிகச் சாதாரணமாகப் பார்த்திருந்த எனக்கு சர்வதேச விமான நிலையத்தில் அதுவும் பின்னிரவு 3 மணிக்கு இந்தச் செய்தி வியப்பாக இருந்தது.  அப்பொழுதுதான் துபாயிலிருந்து வந்த திரை நட்சத்திரங்கள் ஓரு  கும்பலாக அடுத்த பேகேஜ் கரோசல் அருகே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

அவர்களில் சில நடிகர்களை என்னால் எளிதாக  அடையாளம் காண முடிந்தது.  அவர்கள் நடிகர் ஜெயம் ரவி, அருண் விஜயகுமார் போன்றோர். சிறிது நேரத்தில் விமான ஊழியர்கள் ஜெயம் ரவியை சுத்திவளைத்துப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.

நடிகர் ஜெயம் ரவி


துரதிஷ்டவசமாக எனக்கு நடிகைகளை அடையாளம் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஓருவேளை அவர்கள் மேக்கப் இல்லாமல்    இருந்திருக்கலாம் அல்லது நான் காலத்தில் பின்தங்கியிருக்கலாம். படத்தைத் தருகிறேன் முடிந்தால் நீங்களே யாரையேனும் அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். 


பொதுவாக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக எனக்கு ஆர்வமில்லை. நான் முதன் முதலில் அருகில் சென்று பேசி ஆட்டோகிராப் வாங்கிய பிரபலம்  கவிஞர் வைரமுத்து. இப்போது எனது ரசனை உங்களுக்கு புரிந்திருக்குமே.

எனது உடைமைகளை டிராலியில் நான் தள்ளியபடி வெளியே வரும் போதுதான் என் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த நடிகையை கவனித்தேன்.  சிறிது இடைவெளியில் தானே செல்கிறார் ஓரு புகைப்படம்  எடுக்கலாம் என்ற திடீர் ஆர்வத்தில் 'ஓரு புகைப்படம் எடுக்க உங்களுக்கு ஆட்சேபணை உண்டா ?' என ஆங்கிலத்தில் கேட்டேன். 

அவர்  'இல்லை ' என மறுத்திருந்தால் அதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர் திரும்பி தமிழில்  சொன்ன பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த பதில் யதார்தமானதா ? இல்லை நழுவும் உத்தியா ?  இல்லை தமிழ் திரையுலகில் நடிகையரில் இன்றைய நிலையைச் சொல்வதா ?  அந்த நடிகை ஓன்றும் ஓரிரு படங்கள் நடித்து பின்பு காணாமல் போனவரில்லை எனக்கு குழப்பமாயிருந்தது.

அதைப் பற்றி அடுத்தப் பதிவில் பேசுவோம். அதுவரை யார் அந்த நடிகை ? என ஊகித்து வையுங்கள். அவர் யார் என நீங்கள் ஊகிக்க இங்கே ஓரு சிறிய குறிப்பு .
அந்த நடிகை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்பு உச்ச நடிகருடன் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர்.

தொடருவோம்..

படங்கள் நன்றி;
PIB- Press Information Bureau 

Tuesday, March 8, 2016

அந்த இளம் பெண் செய்தது சரியா?


    கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை 
மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் சென்னை சென்ற வந்த எனது பயண அனுபவங்கள்.

நான் பயணத்தை ஓத்திப் போடாமல் டிக்கெட்டை ரத்து செய்ததால் பெரிய தொகையை இழக்கும்படியாகிவிட்டது. நான் எதேர்சையாக டிராவல் இன்ஷியூரஸ் எடுத்திருந்ததால் பெரிய இழப்பின்றி தப்பித்தேன். ஆனால் அதை அவர்களிடம் இருந்து வாங்குவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

உலகம் முழுவதும் பயணக் காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களின் பாடு பெரிய திண்டாட்டம் தான் போல. உதாரணத்திற்கு பணம் செலுத்திய உடனே மின்னஞ்சலில் காப்பீட்டை அடுத்த நொடியில் அனுப்பினார்கள். ஆனால் இழப்பீடு என அணுகும் போது மட்டும் அதற்கான பதிலை ஆற அமர யோசித்து இரண்டு வாரம் கழித்து தபாலில் நிராகரிக்கப்பட்டது என்று அனுப்புகிறார்கள்.

நானும் விடாப்பிடியாக பக்கம் பக்கமாக பதில் மேல் பதில் எழுதி ஓருவழியாக அவர்களிடமிருந்து நஷ்டயீட்டை வாங்கிவிட்டேன்.

டிக்கெட்டை இந்த முறை கத்தார் எர்வேயிஸ் எடுத்திருந்தேன். அதனால் பயணத்தின் முதல் விமானம் மியாமியிலிருந்து கதார் நாட்டின் தோஹா வரை பின் அங்கிருந்து சென்னை வரை. 


வழக்கமான கெடுபிடிப் பாதுகாப்புச் சோதனைகள். ஓவ்வொரு முறையும் கெடுபிடிகள் அதிமாகின்றதே தவிர குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மியாமிலிருந்து புறப்பட்ட அந்த முதல் விமானத்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. ஓரு டிக்கெட் எடுத்த எனக்கு சேர்ந்தார்போல் மூன்று இருக்கைகள் தந்தார்கள். மிக வசதியாக போயிற்று. கை, காலை நீட்டினேன்.

அதில், எனது குளிர் கண்ணாடியைத் தொலைத்ததைத் தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்வது மாதிரி நடக்கவில்லை. சன் கிளாஸுக்கு குளிர் கண்ணாடி என்பது சரியான மொழிபெயர்ப்பா? தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் சரிசெய்து விடுகிறேன். அதுபோல சைவ உணவுக்கும் பெரிதாக பிரச்சனையில்லை. அதில் ருசியெல்லாம் பார்ப்பது நியாமாயிருக்காது என நினைக்கிறேன். அந்த விமானத்தில் கையிலிருந்த புத்தகங்களை வைத்து சமாளித்துவிட்டேன். அதைப் பற்றி பிறகு விரிவாக எழுதலாம்.

இரண்டாவது விமானத்தில் பெரும்பாலும் தமிழர்கள்தான் எனச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதிலும் ஓன்றிரண்டு வெளிநாட்டுத் தலைகளும் உண்டு.  அந்த விமானத்தில் பல சுவாரஸ்யங்கள்.

குழந்தைகளுடன் இருந்த குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. சொல்லிவைத்தது போல் எல்லோரும் தங்கள் இருக்கையின் முன்னால் இருந்த தொடுதிரை  (Touch Screen) டிவியில் தமிழ் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சினிமாக்களில் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அடர் வண்ண உடைகளில் பெரிய மீசை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர். திரையில் தேவர் மகன் போல் பெரிய மீசைவைக்க அண்ணனும் தம்பியும் குத்தகை எடுத்துவிட்டார்களா தெரியவில்லை.

இரண்டு வரிசைகள் தள்ளி உட்கார்ந்திருந்த ஓரு வெளிநாட்டு பெண்மணியிடம் அருகிலிருந்த சுத்த தமிழ் மங்கையொருத்தி ஆங்கிலத்தில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பையும் குதுக்காலத்தையும் அவள் சகத் தமிழ் பயணியிடம் கண்டிப்பாக காட்டமாட்டாள் என்பது என் கணிப்பாயிருந்தது.

கவனித்த இன்னோரு விஷயம், புத்தகவாசிப்பு. ஓருவர் கூட மருந்துக்கு
புத்தகங்களை தொட்டது போல தெரியவில்லை.ம்ம்.. எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த புஷ்டியான கூட அதற்கு விதிவிலக்கில்லை. அவன் தன் பங்குக்கு ஆங்கிலக் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் வயதுக்கு மிஞ்சிய அளவில் இருந்த அவனுக்கு வீட்டில் நல்ல ஊட்டம் போலிருக்கிறது. நான் தெரியாதனமாக அவருடைய அப்பாவிடம் ' என்னங்க பையனுக்கு 4 வயசு இருக்குமா ? ' எனக் கேட்டேன். ' இல்லங்க, 2 தான் '  என்று முறைத்தவர் கடைசிவரை என்பக்கம் திரும்பவே இல்லை. நான் என்னை நொந்து கொண்டேன்.

அந்த இளம்தாய் விஷயத்திற்கு வருகிறேன்.  அவர் பின் சீட்டில் இரண்டு அல்லது மூன்று வயதுடைய சிறுமியுடன் இருந்தார். சிறுமி அம்மாவைப் போல பெரிய கண்களுடன் துறுதுறு வென்று இருந்தாள்.

அவர் அந்தச் சிறுமியை மடியில் அழுத்திபிடித்து  தட்டிகொடுத்து தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்; பலனில்லை. அடுத்த முயற்சியாக ஆங்கில ரைமிஸில் தாலாட்டு பாடத் தொடங்கினார். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான குடும்பங்களின் இன்றைய நிலை இதுதானா? . குழந்தைகளுக்கு தாலட்டையே ஆங்கிலத்தில் பாடத் தொடங்கியபின். அப்புறமென்ன? . ஆங்கில வழிக் கல்வி, ஆங்கிலத்தில் கார்ட்டூன் , படித்தால் ஆங்கில புத்தகங்கள் எனத் தொடராமல் என்னதான் செய்வார்கள்.

அந்த பெண்ணுக்கு குரலும் மிக இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் சிறுமிதான் கேட்கும் மனநிலையில் இல்லை. நான்கு, ஐந்து பாடல்களை தொடர்ந்து பாடியும் சிறுமி தூங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அந்த தாயும் என்னதான் செய்வார்- பாவம். ஓருகட்டத்தில் பொறுமையிழந்து விட்டு விட்டார். உடனே விட்டால் போதுமென அந்த சிறுமி சீட்டில் எழுந்து நின்று மீண்டும் விளையாடத் துவங்கினாள். அருகில் இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போதும் பக்கத்திலிருந்த அவளுடைய கணவன் எந்தவித அலட்டலுமின்றிக் காதில் ஹெட்போனுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். 

நான்  சும்மா இல்லாமல் கடைசியில் இருக்கையிலிருந்து எழுந்து வரும் போது அந்த பின் சீட் பெண்ணிடம்  'ரொம்ப நல்லா பாட்டு பாடுனிங்க..' என பாராட்டிவிட்டு வந்தேன். அவர் அதை தன் கணவனின் காதருகில் சொல்லி வெட்கத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்...

அதைக் கேட்ட அந்த கணவனின் முகம்போன போக்கை, நீங்கள் பார்திருக்க வேண்டுமே..

தொடருவோம்..

படங்கள் நன்றி;
www.qatarairways.com

Sunday, March 6, 2016

பங்களா கொட்டா - நூல் வெளியீட்டு விழா

அன்றும் இன்றும் காதலர் தினமெல்லாம் எனக்கு மற்றுமொரு நாள் போலத்தான். ஆனால் இந்த வருட காதலர் தினம் முக்கியமாகிவிட்டது. அதற்கு காரணம் எனது புத்தகவெளியிட்டு விழா.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் எனது முதல் புதினம் (நாவல்) "பங்களா கொட்டா" வெளியிடப்பட்டது.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

அந்த அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு:
விழாவினை பற்றி பார்க்கும் முன் நாவலை பற்றிக் கொஞ்சம் -  (பின் அட்டையில் இருந்து) வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. இந்த நாவலின்  கதைக் களம் தஞ்சை மண்.


பங்களா கொட்டாவிற்கு பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அற்புதமானதொரு அணிந்துரை தந்துள்ளார்.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன். முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

விழாவில் இருந்து சில துளிகள்:

மாலை 6 மணி என அறிவித்திருந்தாலும், சென்னைப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு 7 மணி அளவில் விழா துவங்கியது.(மேலே படத்தில் இடமிருந்து டிஸ்கவரி வேடியப்பன், அகநாழிகை பொன் . வாசுதேவன், கவிகோ, ஆரூர் பாஸ்கர், எழுத்தாளர் சிவகுமார், ஆசிரியர் வளர்மதி)

எழுத்தாளர்  க.சீ.சிவகுமார் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்  ‘கன்னிவாடி’ உள்ளிட்ட பல சிறுகதை நூல்களின் ஆசிரியர். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

பாவையர் மாத இதழை தொடர்ந்து வெற்றிகரமாக வெளியிட்டுவரும் ஆசிரியர் வான்மதியும் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்தான்.

கவிக்கோ  ஞானச்செல்வன் அவர்கள் எனது மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பில் தமிழாசிரியர். 'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!' எனத் தொடர்ந்து பேசியும், ஊடகங்களில் எழுதியும் வருபவர். அவரை பற்றி தனியாக ஓரு பதிவு எழுதுமளவுக்கு பல்லாண்டுகளாக அரும் தமிழ்ப் பணி ஆற்றிவருபவர்.

சிவக்குமார் கதைச் சுருக்கத்தையும் அதன் முக்கிய நிகழ்வுகளையும் தொட்டுக் காட்டினார். எனக்கு சிவக்குமார் நேரடியாக அறிமுகம் இல்லாவிடினும்,  நாவலில் ஓரு ஆன்மா இருப்பதை உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டது நல்ல உணர்வாக இருந்தது.

கவிக்கோ அவர்கள் நூலை வெளியிட்டு  அருமையான  மதிப்புரை செய்தார். கவிக்கோ அவர்கள் பாராட்டியது வசிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்றது போல இருந்தது. அவர் பேச்சினுடே சில பிழைகளையும் சுட்டிக்காட்டினார். திருத்திக் கொள்வோம்.

கவிக்கோவின் மாணவன் எனச் சொல்லிக் கொள்வதே பெருமை. அதிலும் அவர் கரங்களால் எனது நூல் வெளியிடப்பட்டது என்பது  'ராஜபாட்டை ' போல. அவருக்கு நன்றிகள் பல.

விழாவின் நிறைவாக எனது ஏற்புரையில்  'அந்த காலம் நன்றாக இருந்தது ' எனும் கவிஞர் மகுடேஸ்வரனின் கவிதையை மேற்கோள் காட்டி, இந்த நாவலின் பின்புலத்தைப் பற்றி பேசினேன்.

விழாவில் கவிகோ, எழுத்தாளர் சிவகுமார் மற்றும் பொன். வாசுதேவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படங்கள் கீழே.

கவிகோ - இந்த எழுத்தாளருக்கு (!)  பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தபோது.


விழாவில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்த அனைவரும் எனது நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள்.

இரண்டு எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்து விழா ஏற்பாடுகளையும் மிகக் குறுகிய நேரத்தில் செய்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு மனமார்ந்தநன்றிக்குறியவர்கள்.

இதுப் போல பல நூல் வெளியீடுகளைத் தொடர்ந்து டிஸ்கவரி புத்தக நிலையத்தில் செய்கிறார்கள். வாய்ப்பு உள்ளவர்கள் முடிந்தால் எட்டிப் பார்க்கலாம். ஏதேனும் ஓரு உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் அல்லது பிரபல கவிஞர்களைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

விழாவிற்கு சென்னையிலிருக்கும் நண்பர்களை  மட்டும் அழைத்திருந்தேன். இலக்கியவிழா என யோசிக்காமல் பெரும்பான்மையானவர்கள் தைரியமாக வந்திருந்து சிறப்பித்தனர். ஓரு இலக்கிய விழாவிற்கு போதுமானதோரு கூட்டமாக இருந்தது. அவர்கள் வாழ்க!.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். புத்தகத்தை அமேரிக்காவில் இருந்தும் வாங்கலாம்.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

பங்களா கொட்டா நாவல் தலையணை அளவு எனப் பயப்படத் தேவையில்லை. மொத்தமாக 128 பக்கங்கள் தான். தொடர்ச்சியாகச் சில மணி நேரங்களில் வாசித்துவிட இயலும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி.