Sunday, May 22, 2016

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் -நாஞ்சில் நாடன்

தமிழில் சிறுகதைகளின் பயணம்  நீண்டநெடிய ஓன்று.  காலத்துகேற்ப அது தன் பரப்பிலும் வடிவத்திலும் பல மாற்றங்களை உள்வாங்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பக்கங்கள் பல தாண்டி, சிறு சிறுகதைகள் (சி.சி கதைகள்), உடனடிக் கதைகள், நான்கு வரி, நான்கு செகண்ட் என கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை பல வடிவங்களை கடந்து வந்துள்ளது.

அந்தக் கோணத்தில் ஓரு எழுத்தாளரின் ஏறக்குறைய நாற்பது வருடத்திற்கு முந்தைய சிறுகதைகளை அதன் வடிவம் மாறாமல் அப்படியே மறுபதிப்பாக வெளியிட்டால் என்ன ? அதற்கான விடைதான் சமீபத்தில் வெளியான நாஞ்சில் நாடனின் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் சிறுகதைத் தொகுப்பு. இது நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.


நாற்பது வருடங்கள் என்பது ஓரு தலைமுறையைத் தாண்டிய நீண்டதொரு இடைவெளி. அந்த வகையில் தமிழில் இந்த நிகழ்வை கண்டிப்பாக ஓர் அற்புதம் எனலாம். இன்றைய இலக்கியச் சூழலில் இது ஓரு ஆரோக்கியமான தொடக்கம்.

"33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது" என நாஞ்சில் நாடன் தனது முன்னுரையில் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் பாலா எழுதி  'இவன்தான் பாலா' என்று ஆனந்த விகடன் வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான 'இடலாக்குடி ராசா' வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்ற வகையிலும் இந்தத் தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தத் தொகுப்பில் ஆசிரியர் 1975ல் எழுதிய முதல் சிறுகதையில் தொடங்கி 1979 வரை எழுதிய 11 கதைகள் மொத்தமாக  இடம்பெற்றுள்ளன.  நாஞ்சில் நாடனின் படைப்புகளுக்கு அறிமுக வாசகன் என்ற அளவில் இந்தத் தொகுதியை எந்தவிதமான எதிர்பார்ப்பின்றி அதே சமயத்தில் ஓருவித ஆர்வத்துடன் அணுகினேன்.

ஊர்த்திருவிழாவில் அம்மன் வாகனத்தை வைத்து அரசியல் பண்ணும் ஓரு கூட்டம். தன் பெயர் தெரியாத வைத்தியனை எப்படியும் ஊராட்சி தேர்தலில் ஓட்டுபோட வைத்துவிடத் துடிக்கும் இரண்டு கோஷ்டிகள். வீரிய முருங்கை நடும் நிகழ்ச்சியை அம்மன் கோயில் மைதானத்தில் நடத்தும் ஊர்மக்கள்.

அது போல, கட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை. கல்யாண வீட்டில் கடைசிப் பந்தியை எதிர்பார்த்துக் கிடக்கும் பண்டாரம் என ஓவ்வொரு கதையும் ஓவ்வோரு தளத்தில் இயங்குகிறது. ஓரு கதையைப் போல இன்னோன்று அதன் சாயலின்றி இருப்பது இந்தத் தொகுதியின் சிறப்பு.

கதைகள் திருகலான மொழியில்லாமல் எளிமையாக வாழ்வின் அனுபவத்தைப் பேசுவதாக உள்ளது. தொகுப்பில் எந்தவோரு கதையும் சோடை போகவில்லை.

ஓவ்வோரு கதையிலும் வேவ்வேறு நாஞ்சில் நாட்டு மனிதர்களையும் அவர்களின் எளிய வாழ்க்கையையும் சித்திரமாய் வரைந்திருக்கிறார்.

வெளிப் பார்வைக்கு அந்தச் சித்திரங்கள் ஓன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தோன்றினாலும் வாசிப்பின் முடிவில், அவை ஓன்றுடன் ஓன்று சேர்ந்து அழகானதோரு சித்திரக்கதை போல நாஞ்சில் நாட்டு எளிய மனிதர்களின் வாழ்க்கையை மனத்தில் வரைந்து செல்கிறது.

நாஞ்சில் நாடனின் மொழியில் சொல்வதேன்றால் மாடுகளின் மணிச் சத்தத்தில் மயங்கி நிற்பதைப் போன்றதோரு அனுபவம் வாசனுக்கு.

இந்த நாற்பது வருடத்திற்கு முந்திய கதைகளை அதே மொழியில், அதே சொல்லாடல்களில் படிப்பது மாறுபட்ட வாசிப்பனுபவமாக இருக்கிறது. 
அப்படி யதார்த்த நடையில் இருப்பதால் இந்தக் கதைகளை எளிதாக நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கின்ற வகையில் இருக்கிறது.

மனித வாழ்க்கையையும் அதனுள் மறைந்திருக்கும்  ஆசை, அன்பு, அறம், முரண்கள், அவலங்கள் என சகலமானவற்றையும் சொல்லும் பிரதிநிதிகளாக எளிய நாஞ்சில்நாட்டு மனிதர்களைப் படைத்து தன் கதைகளில் உலாவவிட்டிருக்கிறார்.

அவர் எழுத்தில் அந்த நாஞ்சில் நாட்டு மனிதர்களின் வாழ்க்கை நம் கண்முன் அழகாய் விரிகின்றது.

"எச்சம்" என்ற கதையில் பலநாட்கள் நோய்வாய்பட்ட பலவேசம் பிள்ளை  செத்துப்போகிறார். அதற்கு முன் அந்தக் குடும்பத்தின் மனநிலையை இப்படி விவரிக்கிறார்:

"..மகன்களோ, இது சீக்கிரம் தொலைந்தால் தேவலையே என்ற நிலைக்கு வந்துவிட்டனர். என்றாலும் மருந்தும் மத்திரையும் நின்று போகவில்லை.
( பலவேசம் பிள்ளையின்) ஜாதகங்கள் ஓன்றுக்கு மூன்று முறை சோதிக்கப் பட்டன. கிரகங்கள் எதுவும் சரியான நிலையில் இல்லை. "பாடு படுத்திவிட்டுத்தான் போவார்" என்றுதான் சோதிடர்கள் மதிப்பிட்டனர். அவர்களுடைய மதிப்பும் தான் பொய்யாகிவிடவில்லையே! இந்த ஐந்து மாதங்களாகச் சின்னபாடாப்படுத்திவிட்டார் ? எப்படியோ இன்று காலை எட்டு மணிக்கு பலவேசம் பிள்ளை செத்துதான் போனார்..."

இப்படி வாசகனை அந்த சாவை தாண்டி மேலே கதைக்குள் செல்ல மனதளவில் தயார்படுத்திவிடுகிறார். பாசாங்கற்ற தன் எழுத்தால் செத்த வீட்டையும் அதை ஓட்டிய சம்பவங்களையும் கண்முன்னே கொண்டுவருகிறார். அவர் கதையில் சொல்லும் நோயாளியின் முடை வாடையும் அதைத் தொடர்ந்த பெண்களின் ஓப்பாரியும் கதையை வாசித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகும் நம் மனத்தைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது.

இவர் கதைகளில் இடம்பெறும் சில விவரணைகள் கூட ஆச்சர்யமூட்டுகின்றன. உதாரணமாக "இட்லிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் 'கொர்' என்ற சீரான இரைச்சல் ".  தன்னைச் சுற்றிய மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஆசிரியர் எந்த அளவு வாசித்திருக்கிறார் என ஆச்சர்யப்பட வைக்கிறார்.

"காளைகளின் கழுத்துமணி ஓசை நின்றுவிட்டபடியால், தாலாட்டு நின்றதும் விழிக்கும் குழந்தைபோல், உறக்கம் கலைந்து விழித்தார்".  இப்படிப் போகிற போக்கில் கவித்துவத்துடனும் கதைச் சொல்லிச் செல்கிறார்.

உயிரோட்டமான இந்தக் கதைகளில் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கலந்தே இருக்கின்றது.

காக்கன் குளத்தில் நடைபெறும் முருங்கை மரம் நடும் நிகழ்ச்சிக்கு தயாராகும் அம்மன் கோயில் மைதானத்தில் (பக்கம் 90) :

"...ஊரிலிருந்த பெண்டு பிள்ளைகளிடமும் வருகின்ற போகின்ற ஆண்களிடமும் அந்த ஓலிப்பெருக்கிப் பெண் மச்சானைப் பார்த்தீங்களா ? என்று பலமுறை கேட்டுவிட்டாள். மணி- மாலை ஆறரை நெருங்கிவிட்டது. 'மச்சானை'ப் பற்றி யாரும் கவலைப்படாமல்.. "

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னோரு விஷயம் உணவு. ஏதோ ஒரு விதத்தில் உணவு பற்றிய குறிப்பு பெரும்பாலான கதைகளோடு இழைந்தாடுகிறது.  தேர்தலின் போது தொண்டர்களுக்குத் தயாராகும் சுக்குக்காப்பி , தேர்தல் சின்னமான பூசணிக்காயில் தயாராகும் சாம்பார்.  கல்யாணப் பந்தியில் பறிமாரப்படும் எரிசேரி, அவியல் என வரிசையாக நாஞ்சில் நாட்டு உணவு வழக்கத்தை நமக்கு நாவில் எச்சில் ஊறும் வகையில் தன் எழுத்தில் சுவையோடு சமைத்திருக்கிறார்.

மொந்தன் காயில் செய்யப்படும் வாழைக்காய் புட்டு பற்றி அவருடைய குறிப்பு (பக்கம் 100) :

".. (மொந்தன் காய்) இரண்டாகக் குறுக்கு வாட்டில் நறுக்கி, அவித்து, தோலை நீக்கிப் புட்டரிப்பார் சீவி, தேங்காய் துருவிப் போட்டு, பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, உப்பு, உளுத்தம்பருப்பு,கடுகு எல்லாம் போட்டு எண்ணைய் உற்றித் தாளித்து.."

இப்படி ஓரு தேர்ந்த சமையல் கலைஞனின் குறிப்பு போல ரசனையுடன் சொல்கிறார்.

அதே சமயத்தில் அந்தகால அரசியல் சூழ்நிலை, தாழ்த்தபட்ட மக்களின் சமூக நிலைமை போன்ற விசயங்களும் கதையோடு ஓட்டி வருகிறது.
உதாரணமாக. "இந்தியச் செல்வம் எழுபத்தைந்து பேருக்கு அடிமைப்பட்டிருப்பதைப் போன்று ஊரில் நிலபுலன்கள் ஏழேட்டுப் பேரிடமே இருந்தன".  இது கதை எழுதிய காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை வாசகனுக்குச் சுட்டுகிறது.

"..சேரியையும் வெள்ளாளங்குடியையும், இணைக்கும் கப்பிரோடு அந்த மூலையில் சந்திக்கிறது. எனவே கொடை பார்க்க வந்திருந்த பெண்களும், ஆடவர்களும் அங்கு ஓரமாக ஓதுங்கி நின்றனர். மற்ற நாட்களில் வேளாளர்கள் வீட்டு அடுக்களை வரை புழங்கும் அவர்கள், இன்று தனிப்பட்டு நின்றனர்." எனும் போது பொதுவெளியில் வேளாள சமூகத்தின் முரண்பாட்டைத் தோலுரிக்கிறார் (பக்கம் 23).

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது எழுத்துகளில் ஆங்கிலச் சொல்லாடல்களை (பேச்சு வழக்கல்ல) பிரயோகித்திருக்கிறார்  என்பதை மட்டும் கொஞ்சம் மாற்றுக் கருத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது.

'இடலாக்குடி ராசா' கதையில் அவனுடைய கண்களை இப்படிச் சொல்கிறார் (பக்கம் 81).

"ஆனால் கண்கள் ? வெண்டிலெஷனுக்குப் போடும்  நிறமில்லாத ஓளி ஊடுருவாத கண்ணாடிபோல் ஓரு மங்கல்."

அதை ஆசிரியரின் பாணியாகப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஓரு வாசகனாக நல்ல நாவலின் முடிவில்  நாம் ஓரு சில கதாபாத்திரங்களின் வழி  அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து திரும்புவோம். அதில் வாசகர்களாகிய நமக்கு கிடைக்கும் உணர்வு உன்னதமானது.  இந்த சிறுகதைத் தொகுப்பு அதுபோன்றதோரு வாசிப்பனுபவத்தை தரவல்லது.

நாஞ்சில் நாதனை அறியாதவர்கள் கூட இந்தத் தொகுப்பிலிருந்து தொடங்கலாம். அருமையாதொரு அறிமுகமாயிருக்கும்.

சாகித்திய அகாடமி  விருதுப் பெற்ற நாஞ்சில் நாடனின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பு எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஓன்று.

இந்த நூல் அறிமுகம் சொல்னம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

http://solvanam.com/?p=44495

தலைப்பு :தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்
ISBN : 978-93-82648-17-8
பக்கங்கள்: 112
விலை : ரூ.90

Friday, May 13, 2016

தேர்தல் - அமேரிக்காவும் தமிழகமும்

 இந்தியாவில் மாநில தேர்தலுக்கு  தமிழகம் தயாராவது போல அமேரிக்காவிலும் நவம்பர் மாத ஜனாதிபதி  தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.

இங்கே  எல்லா அரசியல் தொலைக்காட்சி நிறுவனங்களும் இருபத்துநான்கு மணி நேரமும் தேர்தலை அலசிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக எல்லாரும் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்கும் ஓரு விஷயம் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி.
முழு நேர அரசியலுக்கு  வந்த ஓரு வருடத்தில் தேசிய அரசியல் களத்தில் பலவருட அனுபவமுள்ளவர்களை வென்றிருக்கிறார்.

வந்த புதிதில் சொந்த கட்சியினராலும் , எதிர்க் கட்சியினராலும் சுத்தமாக  அனுபவமற்றவர், அரசிலுக்கு லாயக்கற்றவர் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்,  மீடியாக்கள் தந்த எதிர்மறை பிம்பத்தால் இன்று மக்களிடம் எளிதாக சென்று சேர்ந்துவிட்டார்.

இன்று டிரம்ப் குடியரசுக் கட்சியின் உள்கட்சி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தனி வேட்பாளராக வலம் வருகிறார்.  அதுபோல இவருக்கு எதிராக  போட்டியிட்ட எவரும் இன்று தேர்தல் களத்தில் இல்லை. எனவே  குடியரசுக் கட்சி கூடிய விரைவில் இவரை ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக அறிவிக்க உள்ளது.

அதனால், டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி  சார்பாக போட்டியிடும் ஹில்லாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டிவது உறுதியாகிவிட்டது. 

இந்தச் சூழலில் இரு கட்சிகளுக்கிடையே தேசிய அளவில் அரங்கேறவுள்ள  தனி மனிதத்தாக்குதல்கள், பேரங்கள், குற்றச்சாட்டுகள் என மிகப்பெரிய  தேர்தல் சூதாட்டத்துக்கு அமேரிக்கா தயாராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் தமிழகத்துக்கு வருவோம். தமிழக ஊடகங்கள் தேவைக்கு அதிகமாக தேர்தலை பற்றி பேசிவிட்டன. "அண்ணன் வந்தால் தமிழ்நாடும் அமேரிக்கா"  என ஓரு படத்தில் ரஜினி பாடுவார் அதைத் தாண்டி இரண்டுக்கும் வேறு அரசியல் ஓற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் ஊழல் என்பதை தாண்டி நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.

 கடந்த ஐம்பது வருடங்களாக ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளுக்கு தமிழகம் இந்த வருடதேர்தலில் ஓய்வு தருமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அப்புறம், தமிழகத்தில் இருப்பவர்கள் மே 16 அன்று தவறாமல் வாக்களியுங்கள். உங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில் நோட்டோவை அழுத்திவிட்டு வரவும். 

நமது குரல்  ஜனநாயகத்தில் ஓங்கி ஓலிக்க வாக்களியுங்கள் என நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!.


Sunday, May 8, 2016

சின்னு முதல் சின்னு வரை - வண்ணதாசன்

நண்பர்களே,

கவிதைப் போலோரு ஓரு குறுநாவலை (குறுபுதினத்தை) சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை எழுதிய கவிஞர் யாராக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா ?


அவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் தான். அவர் வேறுயாருமல்ல, கவிதையுலகில் கல்யாண்ஜி எனும் பெயரில்  புகழ் பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தான்.  "புதிதாக எழுத வருபவர்கள் அனைவரும் வண்ணதாசனை வாசிக்க வேண்டும்" என சுஜாதாவால் பெருமைபடுத்தப்பட்டவர்.

வண்ணதாசன் நவீனக் கவிதையுலகில் தனக்கென ஓரு பாணியை அமைத்து அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். எந்த ஓரு சர்ச்சையிலும் சிக்காத அமைதியான இலக்கியவாதி. அவரை இலக்கியவாதி என்பதைவிட நல்ல மனிதர் எனலாம். நமக்கு நெருக்கமான உறவினரோ அல்லது பாசமான தந்தையோ தோள் மீது கைபோட்டபடி உரையாடுவது போன்றதோரு நல்லதோரு வாசிப்பனுவத்தை தரக்கூடியவர்.

இவர் கண்ணில் ஓரு சிறு கல் பட்டால் கூட கவிதையாய் முளைத்துவிடும். எனக்கு பிடித்த அவருடைய ஓரு ஆகச்சிறந்த கவிதை ஓன்றை நீங்களே பாருங்கள்.

"தினசரி வழக்கமாகிவிட்டது 
தபால்பெட்டியைத் 
திறந்துபார்த்துவிட்டு 
வீட்டுக்குள் நுழைவது. 
இரண்டு நாட்களாகவே 
எந்தக் கடிதமும் இல்லாத 
ஏமாற்றம். 
இன்று எப்படியோ 
என்று பார்க்கையில் 
அசைவற்று இருந்தது 
ஒரு சின்னஞ்சிறு 
இறகு மட்டும் 
எந்தப் பறவைஎழுதியிருக்கும் 
இந்தக் கடிதத்தை. "

- கல்யாண்ஜி, 'அந்நியமற்ற நதி' தொகுப்பிலிருந்து.

இப்படி நாம் அன்றாட வாழ்வில் எளிதாய் கடந்து போகும் விசயங்களில் அழகியலைக் காண்பவர்.

எனக்கு பிடித்த அவருடைய இன்னோருக் கவிதை

"அடிக்கடிப் பார்க்க முடிகிறது யானையைக் கூட
  மாதக் கணக்காயிற்று மண் புழுவைப் பார்த்து" 

என மண்புழுவுக்காகக் கூட ஆதங்கப்படும் ஜீவன் அவர்.

அவருடைய சின்னு முதல் சின்னு வரை எனும் குறுநாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன். இதுவரை அவர் எழுதிய ஓரே குறுநாவல் இதுதான் என்பது கூடுதல் தகவல். 1991ல் முதல் பதிப்பாக வந்த இந்த புத்தகத்தை சந்தியா பதிப்பகம் 2014ல் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.


கதை சின்னு என்கிற ஶ்ரீநிவாச லட்சுமி எனும் பெண்ணின் அழகைச் சிலாகிப்பதில் இருந்து தொடங்குகிது. பின்பு அவள் வீட்டுக்குத் துக்கம் கேட்க தன் மனைவி மற்றும் மகளுடன் கதைச்சொல்லி செல்கிறார். நாவலின் இறுதியில் அவர்  சின்னுவைப் பார்த்தாரா? அவளுடைய நிலை என்னவாக இருந்தது? என்பதைக் கதையின் முடிவில் அறியலாம்.

இது நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஓரு சாதரணமான ஓரு சம்பவம். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் இப்படி நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் நிகழ்வுகளையும், காணும் மனிதர்களையும், உறவுகளையும் அவர்களின் உணர்வுகளையும் நுட்பமாக பதிவு செய்வதே.

வாழ்ந்து முடிந்த ஓரு தலைமுறைக்கு இந்தச் சமூகம், உறவுகள் பற்றிய புரிதல்கள். வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த தலைமுறையின் நடைமுறைபுரிதல்கள். அதுபோல வாழப் போகும் அடுத்தத் தலைமுறையின் சிக்கல்கள் எனக் கதை பல தளங்களை தொட்டுச் செல்கிறது.

கதையில் திருநெல்வேலி வீடுகளையும், தெருக்களையும், மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வருகிறார். கதையின் ஊடாகக் கதைசொல்லி பல தத்துவங்களை அழகாகப் பகிர்ந்துச் செல்கிறார்.

துக்கவீட்டுக்குச் செல்லும் கதைசொல்லியின் மனநிலை இங்கே

"யாருடைய துக்கத்தை யார் அகற்றிவிட முடிகிறது. அப்படியெல்லாம்
நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். சின்னுவை இப்படி ஓடி ஓடி , இத்தனை ஆள் தாண்டிப் பார்க்கப் போகிறோம். இது சின்னுவின் துக்கத்தை அகற்றவா ?எங்களுடைய துக்கத்தை அகற்றவா?  (பக்கம்-42)"

எனும் போது மனதைத் தொடுகிறார்.

இலக்கியத் தனமானதோருப் படைப்பு  இது. அதாவது பாலுமகேந்திராவின் "வீடு" படத்தை ஸ்லோமோஷனில் பார்பது போல. பரபரப்பான வணிக எழுத்தல்ல இந்தப் புத்தகம்.  அதனால் வாய்ப்பும், ஆர்வமும் இருந்தால் வாசிக்கவும்.

தலைப்பு: சின்னு முதல் சின்னு வரை
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: வண்ணதாசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343937
பக்கங்கள்: 80
விலை: 60

Sunday, May 1, 2016

கவிஞர்களும் களங்களும் - கலைபாரதி

நண்பர்களே, கடந்த முறை இந்தியா சென்றபோது  நண்பர் கலைபாரதியின் "கவிஞர்களும் களங்களும்" எனும் கட்டுரைத் தொகுப்பை எனது பள்ளிதோழரும் கவிஞருமாகிய தமிழ்மணி கொடுத்திருந்தார். கலைபாரதி எனக்கு தமிழ்மணி மூழமாகதான் அறிமுகமானவர்.

கலைபாரதி தமிழாசிரியராக அரசு பணியில் இருக்கிறார். நல்ல தமிழ் உணர்வாளர்,  கடின உழைப்பாளி மட்டுமில்லால் தொடர்ந்து நிறைய வாசிப்பவர். நண்பர் தமிழ்மணிகூட ஓரு தமிழாசிரியர் தான்.

அரசு ஆசிரியர்களைப் பற்றி எவரேனும் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்துகையில்  நான் இவர்களைப் போன்ற நல்ல ஆசிரியரைகளை நினைத்துக் கொள்வேன். இவர்கள் தங்களின் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை தாண்டி மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும், சுய சிந்தனையையும் தூண்டும் விதத்தில் கற்பிப்பவர்கள். இதுபோன்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் குறைந்து வருகிறார்கள் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.

கடந்த வாரம் நூலை வாசித்து முடித்தவுடன் ஓரு நல்ல நண்பருடன் உணர்வுப்பூர்வமாக உரையாடியது போலோரு அனுபவம் எனக்கு.  அதனால் இதற்கு அறிமுகம் எழுதிவிடுவது என நினைத்து இன்று அது நிறைவடைந்திருக்கிறது.

பிரபல எழுத்தாளர்களுக்கு மட்டும் நூல் அறிமுகம் அல்லது விமர்சனம் எழுதும் நல்ல பழக்கத்தை (!) பலர் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறார்கள்.
அது அந்த எழுத்தாளர்களின் புகழுக்குக் கீழ்  குளிர்காய்வது அல்லது அவர்களின் வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சி என்பது எனது தாழ்மையான கருத்து.   சரி விசயத்துக்கு வருவோம்.

கலைபாரதி அவர்கள் மாதவம்  இதழுக்காக எழுதியவற்றின் தொகுப்பு இது.
சமூக அவலங்களைப் பற்றிய தனது கவலையை ஆற்றாமையோடு பல சமூகக் களங்களில் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

இந்த நூலை ஓரு தீப்பெட்டி எனில், அந்தத்  தீப்பெட்டியில் பெண்ணடிமை, உலகமயமாக்கல், சாதீயம், தீண்டாமை, இன்றைய கல்விமுறை, அழியும் விவசாயம் என்று பல தீக்குச்சிகள் எனச் சொல்லும் அளவுக்கு, கட்டுரைகளில் பொறி இருக்கிறது.



ஓரு மனிதனுக்குள் இத்தனை முகங்களா ? என மலைக்கும்படி   ஓவ்வோரு கட்டுரையிலும் தேர்ந்தேடுத்த பொருத்தமான கவிதைகளுடன் தன் கருத்துகளை நறுக்கு தெறித்தார்போல் முன்வைக்கிறார்.  இவரைப் பொருத்தவரை கவிதை என்பது காலத்தின் விளைச்சல். அது அனுபவத்தின் விளைபொருள் என்கிறார்.

அந்த வகையில் இந்த நூல் சந்தேகமின்றி நல்ல விளைச்சல் தான். உதாரணமாக- தறுதலைப் பசுக்கள் எனும் கட்டுரையில்  (பக்கம்-13)

"புத்தகங்களே
சமர்த்தாக இருங்கள்..
குழத்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்"

என குழந்தைகளுக்காக வாதாட கவிக்கோ அப்துல் ரகுமானை  துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

உரைநடையை இது போன்ற நல்ல கவிதைகளுடன் சேர்ந்து வாசிப்பது ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவது போன்றதோரு நல்ல அனுபவமாயிருக்கிறது.

ஆசிரியரும் ஓரு கவிஞர் என்பதால் இதுபோன்றதோருக் கட்டுரைகள் அவருக்கு கைகூடுகின்றன என்பதில் நமக்கு சந்தேகம் தேவையில்லை.

பெண்ணடிமைத் தனத்தைப் பேசுகையில்  (பக்கம்-28)

"குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தனாக மாறினான்.
நம்பி வந்த
யசோதா
என்ன ஆனாள் ?"

எனக் கேட்கும் போது கவிஞர் பாலபாரதியுடன் சேர்ந்துக் கொள்கிறார்.

"கொலு வைக்கும் வீடுகளில்
ஓரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களைத்
தூக்க முடியாமல் தூக்கிவரும்
அக்கா குழந்தைகள்"

எனச் சுண்டலுக்காகவும், வாழ்தலுக்காகவும் கையேந்தும் குழந்தைகளுக்காகக் கவிஞர். கலாப்ரியாவுடன் விசனப்படுகிறார் (பக்கம்-41).

அழியும் இயற்கை வளங்கள் போன்ற சமூக அவலங்களையும் கண்டு மனம் சினந்து வெகுண்டுள்ளார்.

"நண்டுகள் கபடி ஆடிய
வயல்களில்
வாண்டுகளின் மட்டைப் பந்தாட்டம்"

எனும் தமிழ்மணியின் துளிப்பாவை (பக்கம்-20) வாசிக்கையில் நம் கண்களில் கண்ணீர்த்துளி.

இது கலைபாரதியின் நல்ல அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் வாசிக்கவும்.

தலைப்பு :கவிஞர்களும் களங்களும்
எழுத்தாளர்: கலைபாரதி
பதிப்பகம்: பாவணர் பதிப்பகம், போன்- 9842011344
பக்கங்கள்: 80
விலை : ரூ.60