Sunday, August 27, 2023

தூண்டில் முள் வளைவுகள் - நீல நிற ஆக்காட்டி

பொதுவாக ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த பின் இறுதியில் சிலர்  மனநிறைவாக இருந்தது இல்லை வெறுமையாக இருந்தது என்பார்கள். சிலர் அது நல்லவிதத்திலோ அல்லது கெட்டவிதத்திலோ தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது என்பார்கள்.

அப்படிச் சமீபத்தில் வாசித்ததில் உறுத்திக் கொண்டே இருப்பது சிவக்குமார் முத்தையாவின்  "தூண்டில் முள் வளைவுகள்" தொகுப்பில் கடைசி கதையான 'நீல நிற ஆக்காட்டி'. 


மேலோட்டமாக பார்த்தால் அன்றைய கீழத் தஞ்சையின் பறவைகள். விவசாயம் பொய்ந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றின் நிலை பற்றிய கதை போல தோன்றும். ஆனால், ஆசிரியர் அதனுள் ஒரு அழகான காதல் கதையை வைத்து காதலியைப் பறவை எனும் படிமமாக செதுக்கியிருக்கிறார். 

இந்தக் கதை பறவை குறித்த என்னுடைய "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்"  நாவலை யும் நினைவுபடுத்தியது என்றாலும் இந்தத் தொகுப்பில் சிவக்குமார் முத்தையாவின் அக உலகம் என்பது பெண்கள், மது, காதல், காமம், விவசாயம் என பல தளங்களில் மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள். 

சிவக்குமார் முத்தையாவின் எழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

ஆசிரியர்: சிவகுமார் முத்தையா

வெளியீடு: யாவரும் பதிப்பகம்

விலை: ரூ.266


Friday, August 18, 2023

இளையராஜாவின் காதலிகள்

இளையராஜாவின் காதலிகள்

தினமும் எழுதப்படும் பல நூறு கதைகளில் எது இலக்கியம்? என்ற விவாதம் இங்கு  பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அந்த விவாதத்துக்குள் சிக்காமல் நேர்மையோடு வாசித்தால் எழுத்தில் எது இலக்கியம் ? என்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்வான். அப்படிச் சமீபத்தில்  உணர்ந்தது சிவக்குமார் முத்தையாவின்  "இளையராஜாவின் காதலிகள் (சிறுகதைத் தொகுப்பு)".

'நான் டெல்டாவைச் சேர்ந்தவன்' எனும்  முன்னுரையோடு வந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இதில் பல கதைகள் முன்பே இதழ்களில் வெளியாகி பரிசுகள் பெற்றிருந்தாலும் அவற்றை ஒரு தொகுப்பாக வாசிப்பது நல்லவாசிப்பனுவமாக இருக்கும். 

பொதுவாக சாமானியனின் பல்லாண்டு அனுபவத்தை ஒரு எழுத்தாளன் தனது கதையோட்டத்தில் ஒரு சில வரிகளில் எழுதிச் சென்றுவிடுவான்.

ஆனால்,  அதை வாசிக்கும் வாசகன் அங்கேயே நின்று ஒருவித அக தரிசனம் பெறுகிறான். அதுவே ஒரு படைப்பின் உயரத்தை தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.

அப்படிப் பல உச்சங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியது இந்த நூல், 

உதா. நூலின் ஐந்தாவது கதையான செவத்த கன்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணை தனது வாழ்வில் கண்ட நாயகியின் மனம் இப்படி ஓடுகிறது… 

'இந்த உடல் இல்லை என்றால் என்னைப் பின்தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்…. ஒவ்வோரு முறையும் உடலை ஓப்புக்கொடுத்துதான் அவர்களின்(ஆண்களின்)  சுயத்தை கண்டறிய வேண்டுமா என்ன ? ' 

இப்படிச்  சுயத்தை இழந்த கிராமம் அங்கு பொய்த்த விவசாயம், அழிந்த கிராமிய கலைகள், அங்கு தனித்திருக்கும் பெண்களும் அவர்கள் மீதான சமூக கண்ணோட்டம் என அடித்தள மக்களின் வாழ்வு இவருடைய கதைகளில் பல அடுக்குகளாக நம் கண்முன் விரிகிறது.  அதிலும் குறிப்பாக, காவிரி கடைமடை வேளாண்குடி மக்களின் வாழ்வியலை  இப்படிச் சம காலகட்டத்தில் வேறுயாரும் இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. 

பொன்னியின் செல்வர்கள் என்றில்லை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நூல்-இளையராஜாவின் காதலிகள் (சிவகுமார் முத்தையா)

பதிப்பகம் -யாவரும்,  விலை-₹160.00 


Friday, August 11, 2023

எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(2)


எழுத்தாளர் இமையத்துடன் கலிபோர்னியாவில் நடந்த உரையாடலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பின் நுட்பம், சமூக வலைதளங்கள், இன்றைய சிற்றிதழ்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற பல விசயங்கள் குறித்து பேசியிருக்கிறேன். பாருங்கள்  

https://youtu.be/-cDjj8EmGic

Wednesday, August 9, 2023

ஈரோடு புத்தகத் திருவிழா - 2023

ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்கிவிட்டது (ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 15 வரை). என்னுடைய பெரும்பாலான நூல்கள் ஸ்டால் எண் 76, 77ல் (ஜீரோ டிகிரி பதிப்பகம்) கிடைக்கும். நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மக்கள் சிந்தனைப் பேரவையும் தமிழக அரசும் இணைந்து நடந்தும் இந்தப் விழா புத்தகத் திருவிழா மட்டுமல்ல ஒருவிதத்தில் இலக்கியவிழாவும் கூட. இது தமிழ்  ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றும் கருத்து மையமாகவும் இருக்கும். என்னூடைய புத்தகங்கள் என்றில்லை நீங்கள் வேறு யாருடையதையும் வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நல்ல தமிழ் காதில் விழவாவது போய் வாருங்கள். நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
Sunday, August 6, 2023

எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(1)

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அமெரிக்காவில் நடந்த பேரவை விழாவுக்கு  (கலிபோர்னியா- ஜூலை 1, 2) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை அப்போது நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.இந்த நேர்காணல்  ஓர் எழுத்தாளருக்குரிய சமூக கோபம், அறச்சீற்றம், சொந்த அனுபவம், எதிர்கேள்வி  போன்ற கலவையான  உணர்வு கொப்பளிப்புகளோடு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

நிகழ்வின் முதல் பகுதிக்கான (part-1) இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.