Saturday, July 30, 2022

வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு

இந்தியாவில் வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை என்பது தெரிந்ததே. 

சென்னை போன்ற நகரங்களில் முன்பெல்லாம் அந்த வரிசையில் பெரும்பாலும்  ஒன்றிரண்டு வெள்ளை முகங்கள் நின்று கொண்டிருப்பார்கள். 


ஆனால், இந்தமுறை வந்த போது நிலையோ தலைகீழ். வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் வரிசை என்பது உள்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைவில்லாமல் நீண்டிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து  வெளிநாடு சென்று அந்தநாட்டு பாஸ்போர்ட் வாங்கிக் குடியேறியவர்களாக இருந்தார்கள்.(அவருடைய குடும்பத்தினர்)

இந்த நேரத்தில் அமெரிக்கக் குடியுரிமை பெற தங்களுடைய சொந்த நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களில் இந்தியர்கள் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

Sunday, July 10, 2022

பி.எச். அப்துல் ஹமீது - நியூயார்க்கில் ஒரு சந்திப்பு

தன்னுடைய தனித்துவமான தமிழாலும் இனிமையான குரலாலும் நம்மைக் கவர்ந்த இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீது அவர்களை நேரில் சந்தித்து  பழகும் ஒரு வாய்ப்பு நியூயார்க்கில் (பெட்னா) அமைந்தது.

கொஞ்சம் யோசித்தால் என்னைத் தமிழை நோக்கி ஈர்த்ததில் இலங்கை வானொலியின் பங்களிப்பு என்பது எனது தமிழாசிரியர்களுக்கு உள்ள பங்களிப்புக்குச் சற்றும் குறைவு இல்லாத ஒன்று என்றே நினைக்கிறேன்.

அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் போன்றவர்களை என்னால் எளிதில் மறக்க முடியாது. அந்த வகையில்,  நான் தமிழில் எழுதிய முதல் வாசகர் கடிதமே இலங்கை வானொலிக்காக அதுவும் அப்துல் ஹமீது அவர்களுடைய நிகழ்ச்சிக்காகதான்.


நேர்பேச்சில் இதுபோன்ற பல விவரங்களைக்  குறிப்பிட்டு  நானும் நண்பர் ஹாஜாகனியும்  அவருடன் சில மணிநேரங்கள் அளவளாவியது பெருமகிழ்ச்சி.   அவர் பெட்னா  மாநாட்டில் வெளியிட்ட 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலை நாமும் நண்பரும் பெற்றுக்கொண்டோம். 
கடந்தவாரம் அப்துல் ஹமீது அவர்களைச் சந்தித்து உரையாடியது , அவருக்கு  என்னுடைய வனநாயனையும், அறத்துக்கு அப்பால் நூலையும்  பரிசளித்தது எல்லாம் நான் சற்றும் எதிர்பாராமல் ஒரு கனவு போல நடந்திருக்கிறது.  

வாழ்க்கைக்கு இதுபோல கனவுகளும், கற்பனைகளும் அவ்வப்போது தேவையாகத்தானே இருக்கிறது. :)

Wednesday, July 6, 2022

35-ஆவது பெட்னா பேரவை விழா

"தலைமுறை தாண்டியும் தமிழ்" எனும் கருப்பொருளோடு தொடங்கிய பெட்னாவின் 35-வது ஆண்டு பேரவை விழா கடந்த திங்களன்று நியூயார்க்கில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டாவது நடக்குமா ? (கொரோனா பெருந்தொற்று)  நடந்தாலும் கூட்டம் வருமா ? என்பது போன்ற பல சந்தேகங்களைப் பொய்யாக்கும் வகையில் நியூயார்க் தமிழ்ச்சங்கம் இந்த ஆண்டு பேரவை விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்த்திக் காட்டியிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்தவகையில் நியூயார்க் தமிழ்ச்சங்கத்துக்கும் பெட்னா-வுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!.

விழாவில் பல சிறப்பான நிகழ்வுகள்-  திருநங்கை ரேவதியின் 'வெள்ளை மொழி' ஓரங்க நாடகம், அடுத்தத் தலைமுறைக்கான தமிழ் குறித்த கருத்துக் களம், ஆபிரகாம் பண்டிதர் -ஆவணப்படம், சிறார் யோகா (இளையராஜா-கவிதா), தமிழ்ச்சங்கங்களின் நாட்டிய நாடகங்கள் போன்றவை நினைவில் நிற்கின்றன. அதிலும் குறிப்பாக 'தகடூரான் தந்த கனி'-யும் அதைத் தொடர்ந்த நாட்டிய நாடகமும் உலகத்தரம். அந்தக் குழுவினரின் ஈடுபாடும், உழைப்பும் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்ந்தது. பாராட்டுகள் !அதே சமயத்தில், நிகழ்ச்சி நிரலை இன்னமும் சிறப்பாக மெருகேற்றி கடைசி நேரக் குளறுபடிகளைத் தவிர்த்து இருக்கலாம். உணவு உபசரிப்பு நேரத்தை இன்னமும் துரிதப்படுத்தி இருக்கலாம். விடுதி விருந்தினர்களின் பயண நேரத்தைக் குறைத்து இருக்கலாம்.  மக்கள் கூட்டத்தை ஈர்க்க வல்ல (crowd-puller) விருந்தினர் ஒரு சிலரையாவது அழைத்து இருக்கலாம் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகள் காதில் விழாமல் இல்லை.

வழக்கத்தை விட  இந்த ஆண்டு அதிக அளவில் விடுமுறைக்கு தாயகம் சென்றுள்ள அமெரிக்க குடும்பங்கள், இன்றைய அமெரிக்க பொருளாதார சூழல், சிறப்பு விருந்தினர்களுக்கு விசா நேர்காணல் கிடைக்காதது, கடைசி நேர மாற்றங்கள், நெருக்கடியான நியூயார்க் நகரம் என்பது மாதிரியான பல தடைகளைக் கடந்தே இந்த மிகப்பெரும் நிகழ்ச்சி சாத்தியமாகி இருக்கிறது என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பல ஆண்டுகளாக பெட்னா நிகழ்வுகளில் பங்கேற்பவன் என்ற முறையில் மேலே சுட்டிக் காட்டப்படும்  சிறிய குறைகள் எளிதில் களையப்படக் கூடியவை.  தமிழுக்காக... தமிழர்.. என்ற உணர்வோடு முற்றிலும் தன்னார்வத்தோடு ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்வு வரும் ஆண்டுகளில் சுட்டிக் காட்டப்படும் சிறு சிறு குறைகள் களையப்பட்டு மேலும் சிறப்பாக நிகழும் என்பதில் இங்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

நியூயார்க் தமிழ்ச்சங்கம், பெட்னா - மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !!. இந்த நேரத்தில் 36-ஆவது பெட்னா பேரவை விழாவை நடத்த இருக்கும் சாக்ரமெண்டோ (கலிபோர்னியா) தமிழ்ச்சங்கத்துக்கு நம் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

*******
குறிப்பு- பேரவை விழாவின் யூ-டியூப் நேரலையை கீழே தருகிறேன். நேரம் இருக்கும் போது பாருங்கள் (முழுவதுமானது அல்ல).

(FETNA 2022 l JULY 03 2022 l Live)

(FETNA l New York l July 02 2022 l Live)