Sunday, December 17, 2023

மதுக்கோப்பை



முந்தாநாள்

என் மதுக்கோப்பையில்

ஒரு தூசி விழுந்து கிடந்தது

எடுத்துப் போட்டுவிட்டுக்
குடித்துவிட்டேன்.

நேற்று
என் மதுக்கோப்பையில்
ஒரு பூச்சி விழுந்து கிடந்தது
எடுத்துப்போட்டுவிட்டுக்
குடித்துவிட்டேன்.

இன்று
என் மதுக்கோப்பையை
எடுத்து வைக்கிறேன்...
என்னால்
ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஏனென்றால் அதில்
நானே விழுந்து கிடக்கிறேன்.
- மலையாளப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மா

Thursday, December 14, 2023

தூங்காநகர நினைவுகள் - அ.முத்துக்கிருஷ்ணன் (ஆசிரியர்)

அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் அன்றாடத்தில் நின்று நிதானமாக வரலாற்று சின்னங்களையோ ஆவணங்களையோ கூர்ந்து கவனித்து படிக்க பெரும்பாலனர்களுக்கு நேரமிருப்பதில்லை. 

அது சொந்த ஊராக இருந்தாலும் அதே நிலைதான். அந்த விதத்தில் சென்னை கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால்,  தற்போது 'சென்னை தினம்'  கொண்டாடுகிறார்கள். ஶ்ரீராம் போன்ற சிலர் அதன் வராலாறு குறித்து  யூடியூபில் பேசுகிறார்கள். ஒரு  சில ஆங்கில புத்தகங்கள் கூட வாசிக்கப்படுகின்றன.

ஆனால், தமிழகத்தின் மற்ற சிறு, குறு நகரங்களின் வரலாறு அறிதல் என்பது பெரும்பாலும் கோயில்களின் தல வராற்றோடு நின்றுவிடுவது துரதிஷ்டம். அந்த வகையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய  மதுரையின் வரலாற்றைப் பேசும் 'தூங்காநகர நினைவுகள்'  கட்டுரை நூலை ஒரு நல்ல முன்னெடுப்பாக பார்க்கிறேன்.


நூலில் அன்றைய கல்வெட்டுகள் மீது பெயிண்ட் அடித்துவிடுவது, முதுமக்கள் தாழிகளை புல்டோசர் விட்டு அடித்து நிரவி அதன் மீது புதிய கான்கிரீட் வீடுகட்டுவது, சங்கம் வளர்த்த ஊரில் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமை பேசுவது போன்ற பல அறியாமைகளைச் சாடுகிறார். அதே நேரத்தில் மதுரை குறித்த சங்க இலக்கிய சான்றுகள், படையெடுப்புகள், போர்கள், ஆங்கிலேயர் கால ஓவியங்கள்,ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை  தேடி படித்து அக்கறையோடு வாசிப்பவர்களுக்குச் சலிப்பூட்டுட்டாமல் அழகான நடையில் எழுதியிருக்கிறார்.  அதிலும் குறிப்பாக, மதுரா கோட்ஸ் (Madura Coats) ஆலையின் 100 ஆண்டு கால வரலாறு என்பது தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தின்  ஒரு துளி.

இது  ஆனந்தவிகடனில் எழுதிய தொடர்கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழகத்தின் ஒரு சில ஆயிரம் பேரின் கவனத்துக்குச் சென்றிருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் வரலாற்றின் எச்சங்களாக மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நிற்கும் பல இடங்களின் இன்றைய வண்ணப் படங்களுடன் வந்திருப்பதாலோ என்னவே விலையை ரூபாய் 500 என விகடன் வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் வரலாற்றை 250 பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்றாலும் மதுரையின் தொன்மை குறித்த ஆர்வத்தை இந்த நூல் கண்டிப்பாக தூண்டும். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.

நூல்: தூங்காநகர நினைவுகள் 

ஆசிரியர்: அ. முத்துக்கிருஷ்ணன்

வகை: வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை 

வெளியீடு: விகடன் பிரசுரம் (2021,2022)

விலை : ரூ.500