Friday, January 27, 2023

ஜெஸிகா கிங் - சேஸிங்

புத்தகத்தை வாசிப்பது போலவே 'ஜெஸிகா கிங்' அச்சுப் பிரதியைப் பெறுவதும் விறுவிறுப்பான சேஸிங்காக இருந்தது.

கடந்த புதன் கிழமை ஜீரோ டிகிரி ராம்ஜீ புத்தகங்களை கொரியர் செய்து விட்டு  டிராக்கிங் எண் கொடுத்திருந்தார்.  அன்று மதியம் 12 வரைகூட கொரியர் தளத்தில் புத்தகப்பொதி இன்னமும் சென்னையில் இருப்பதாகவே சொன்னது. மதிய குட்டித்தூக்கத்துக்கு பின்  பார்த்தபோது, 3 மணி அளவில் புத்தகம் வந்து சேர்ந்துவிட்டதாக தளம் காட்டியது.


சரி வாங்கிவிடலாம் என நேரடியாக  கொரியர் அலுவலகத்துக்கு போய் கேட்டேன். அவர்களும் அதை உறுதி செய்தார்கள். ஆனால், மலை போல குவிந்த கிடந்த பார்சல்களை உருட்டி பிரட்டி விட்டு இறுதியில் கைவிரித்து விட்டார்கள்.

என்ன ஏது என விசாரித்தால், 'இங்கேதான் இருக்குபோல சார்... ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்றார்கள். அப்போது வந்த ஒரு மேலாளர் பெரிய பார்சலாக இருப்பதால் டெலிவரி போயிருக்கும், லைனை பிடியுங்கள் என்றார். அப்படி இப்படி என எங்கங்கோ பேசி ஒருவழியாக ஒருவரைப் போனில் பிடித்தார்கள்.

அவர் தன்னை சிவா என அறிமுகம் செய்துவிட்டு தான் இருக்கும் இடத்தையும் சொன்னார். அது ஒரு அம்மன் கோயில்.

சரி என அங்கே போய் பார்த்தால், இப்பதான் சார் அங்கிருந்து நகர்ந்தேன் என இன்னொரு இடத்தைச் சொன்னார். நான் அந்தக் கோயிலை இடவலமாக சுற்றி அவர் சொன்ன இடத்துக்கு போனால்,  அந்த இடமே எனக்குப் புதிதாக இருந்தது (ஊர் வளர்ந்துவிட்டது !?).  அங்கே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோகாரரை விசாரித்து ஒருவழியாக கொரியர் வேனையும் கண்டுபிடித்துவிட்டேன்.

கையெழுத்து இத்தியாதிகள் முடிந்த பின் நடந்ததுதான் ஹய் லைட், 'பொதி கனக்குதா?' என அவரிடம் கேட்டபோது , 'அப்படி எல்லாம் ஒன்னும் பெரிய வெயிட் இல்ல சார். சும்மா அலேகா தூக்கி அப்படியே டூவிலர்ல வையுங்க பொண்ணு மாதிரி உட்காரும்' என்றார் சிரித்தபடி.

பொண்ணு மாதிரி என்ன பொண்ணுதான். 'வெள்ளை பெண் (white girl)' என நினைத்தபடி மோட்டர் சைக்கிளை உதைத்தேன். 

கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் சிவனுக்கும் ஜெஸிகாவுக்கும் ஏதோ விட்ட குறை தொட்டகுறை தொடர்பு இருக்கிறதே என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் வெகுநேரம் ஓடிக்கொண்டிருந்தது. 

குறிப்பு- நண்பர்கள் சிவனுக்கும் ஜெஸிகா கிங்-க்கும் என்ன தொடர்பு என நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

Thursday, January 26, 2023

ஜெஸி - நூல் வெளியீட்டு விழா

ஜெஸி நூல் வெளியீட்டு விழா ஜனவரி,16, 2023 (திங்கள்) அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு விருந்தினர் கோவை சதாசிவம் அவர்களுடைய தாயார் காலமாகிவிட்டதால் அவரால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அந்தக் குறை தெரியாத வகையில் நிகழ்ச்சி நிரலில் கடைசி நிமிட மாற்றங்கள் செய்து நண்பர் தமிழ்மணி  மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். கூடவே தமிழ்பரதனும் இணைந்து கொள்ள விழா களைகட்டியது.


முனைவர் சந்தான லட்சுமி நூல் குறித்த விரிவான திறனாய்வை தந்தார். அவருடைய பல கோணங்கள் எனக்கு வியப்பளித்தன. அதுபோல, கலைபாரதி பங்களா கொட்டா நாவல் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். அதை எழுதி 6-7 ஆண்டுகள் ஆனதால் எனக்கே மறந்துவிட்ட பலவற்றை அவர் நினைவூட்டி சிறப்பாக பேசினார்.

வழக்கம்போல பேராசிரியர்  ஹாஜா கனி தன் பேச்சால் அரங்கைக் கட்டிப்போட்டார்.


 விழாவுக்கு வந்திருந்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களை எந்த வித முன்னேற்பாடுமின்றி வாழ்த்துரை வழங்க அழைத்தோம். அவரும் இசைந்து சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார். 


இறுதியில் பாவாணர் நினைவு பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களோடு, பல முகநூல் நண்பர்களும் கலந்து கொண்ட நிகழ்வு நிறைவாக இருந்தது. வேலை நெருக்கடியில் ஓடிக்கொண்டிருப்பதால் நிகழ்வின் எல்லா படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பகிர முடியவில்லை. இருக்கும் சில படங்களை மட்டும் இப்போது பகிர்கிறேன்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், உள்பெட்டியிலும், தொலைபேசியிலும் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்து சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றி !