Sunday, February 28, 2016

விசாரணை - விமர்சனம்

சில வாரங்களுக்கு முன் சென்னையில் நான் பார்த்த படம்  விசாரணை.
படத்துக்குள் போகும் முன் என்  கவனத்தைக் கவர்ந்த சில-

வித்யா  தியேட்டர்- தாம்பரம் பஸ்டாண்டில் இருந்து நடக்ககூடிய தூரம்தான். இந்த விஷயம் தெரியாமல் நான் தியேட்டர் விஜயா என ஆட்டோ நண்பரிடம் சொல்ல அவர்  என்னை தாம்பரம் விஜயா மருத்துவமனையில் இறக்கிவிட. கடைசியில் ஓருவழியாக வித்யாவைக் கண்டுபிடித்தோம்.

அது மஞ்சள் சுண்ணாம்பு அடித்த ஓரு பழைய கட்டிடம்.  ஓரு காலத்தில் கண்டிப்பாக கட்அவுட்டுகள், பாலாபிஷேகங்கள், பிளாக் டிக்கெட்டுகள் என நல்ல பரபரப்பாக இருந்திருக்கும். இன்று, பொலிவிழந்து, காற்றுவாங்கியபடி சீண்டுவாரின்றி இருக்கிறது.

படம் போடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்புவரை அங்கே ஜனநடமாட்டமில்லை. கடைசி 10-15 நிமிடங்களில்தான் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது.


முன்பெல்லாம் ஓரு தியேட்டரில் ஓரு படம் ஓடும். மிஞ்சினால் பகல் காட்சியில் இன்னோருபடம் ஓட்டுவார்கள். இப்போழுது 3 காட்சியிலும் 3 வெவ்வேறு படங்களை ஓட்டுகிறார்கள்.  2015ல் மட்டும் 200க்கும் அதிகமான படம் வந்திருக்கிறன. இப்படி, வருடத்துக்கு இத்தனைப் படங்கள் வந்தால் என்னதான் செய்வார்கள் ? சொல்லுங்கள்.

 இரண்டு வகையான டிக்கெட்கள் மட்டுமே தந்தார்கள், முதல் வகுப்பு 100 ரூபாய். பால்கனி 150 ரூபாய். முதல் வகுப்பு முழுமையாக நிரம்பியது. அதிலும் படம் பார்க்க என்பது வயது முதியவர்கள் கூட வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

அப்புறம், படத்துக்கு வரும் ரசிகர்களையும் அவர்களின் உடமைகளையும் சுத்தமாக சோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறார்கள். விசாரித்தால் ரசிகர்கள் வெளியிலிருந்து புகை பொருட்கள், மது போன்றவற்றை கொண்டுவருகிறார்களாம். கொடுமைடா சாமி!..

ரசிகர்கள் தங்களுக்குத் தரப்பட்ட டிக்கெட் எண்ணுள்ள சீட்டில்தான் அமர வேண்டுமாம். அதனால் படம் ஆரம்பித்தபின் வந்தவர்கள் இருட்டில் தட்டுத்தடுமாறி இருக்கைகளை தேடி அமர்ந்தனர். உதவிக்கு நிர்வாகத்திலிருந்து யாரும் வந்தமாதிரி தெரியவில்லை. ம்ம்..

ஆனால், தற்போதைய மல்டி பிலக்‌ஸ் தியேட்டர்கள் போலில்லாமல் உள்ளே நிறைய இட வசதியோடு தாராளமாய் இருந்தது.  அதுபோல பழைய தியேட்டராக இருந்தாலும் டிஜிட்டல் ஓலி தொழில் நுட்பத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

தியேட்டர் புராணம் போதும். படத்தை பற்றி பார்ப்போம். விசாரணை  -தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் படம். நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

இது எழுத்தாளர் சந்திரமோகன் எழுதிய 'லாக்கப்' எனும் உண்மை புதினத்தை தழுவியது. ஆங், தமிழ்ல புதினம்னா நாவல்ங்க. அப்புறம் இதுவோரு யதார்த்த வகை திரைப்படம். அதாங்க கம்பியூட்டர் விளையாட்டு, பரந்து பரந்து சண்டை, பாட்டேல்லாம் கிடையாது.


படத்தில் முதல்பாதி - தமிழ் இளைஞர்கள் நான்கு பேர். ஆந்திரா போலிஸ் அங்கே பிழைக்க வந்த அவர்களை செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. அப்போது ஆந்திரா வரும் ஓரு தமிழக போலிஸ்காரர் ஓருவர் (சமுத்திரகனி) அவர்களை அங்கிருந்துக் காப்பாற்றி தமிழகத்துக்கு அழைத்து வருகிறார்.

இரண்டாம் பாதி- தமிழகம் வரும் நான்கு பேரில் ஓருவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். மீதமுள்ள மூவரும் தமிழக போலிஸீன் கட்டுப்பாட்டில் கடைசில் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் முடிவு.

முதல்பாதி போலிஸ் சித்திரவதை என கொஞ்சம் தொய்வடைவது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் விட்டதை பிடிக்கிறார் இயக்குனர்.

படத்தில் சமுத்திரகனி வரும் சில காட்சிகளில் விசில் பரந்தது. தமிழ்நாட்டில் ரசிகர்களுடன் படம் பார்ப்பது ஓரு அனுபவம் தான். நடிகர் சமுத்திரகனி திரையுலகில் இன்னும் பல சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்க வைக்கிறார். பார்க்கலாம்.

படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இணையத்தில் இருப்பதால் ரொம்ப எழுதத்தேவையில்லை. குறிப்பாக படம் பார்த்துவிட்டு வரும்போது நாம் எந்தமாதிரியான பாதுகாப்பற்ற ஓரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி நம் மனதை அழுத்துகிறது. அதுதான் படத்தின் வெற்றியா? - தெரியவில்லை. நீதி, தனி மனித உரிமைகள், விசாரணைகள் இவற்றில்  வெளிப்படைத் தன்மை என இந்தியா கடக்க வேண்டிய தூரம் கண்களுக்கே புலப்படவில்லை.

அப்புறம் படம் வெளிவந்ததிலிருந்து பல பாராட்டுகளை பெற்றிருக்கிறது. வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பிரிவில் விருதுபெற்றிருக்கிறது.  அந்த விருதை எழுத்தாளர் சந்திரமோகன் பெறுவதை படத்தில் கடைசியில் காட்டுகிறார்கள். நல்ல அங்கிகாரம், நல்ல கெளரவம்.

ஆனந்த விகடன் வார இதழ் கூட பல வருடங்களுக்கு பின் இதற்கு நிறைய மதிப்பெண் வழங்கியிருக்கிறதாம். இந்த மிடியாக்களின் மதிப்பெண்கள் மீதேல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.

ஆனால், இந்தப்படம் தமிழ்திரையில் ஓரு மைல் கல். ஐந்து பாட்டு, மூன்று சண்டை எனும் வட்டத்திலிருந்து வெளியே வந்து நிற்கும் படம். நம்பிக்கையுட்டுகிறது. முக்கியமாக டாக்குமெண்டரி போலில்லாமல் மக்கள் ரசிக்கும் கலைப்படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக பாருங்கள்.!

படம் நன்றி;
http://www.google.com

Tuesday, February 23, 2016

ஞயம் பட வரை - வியாபாரம்?

'ஞயம் பட வரை' - எனும் தலைப்பில் 'ப்ரதிலிபி' இணையதளம் நடத்தும் ஓரு கட்டுரைப் போட்டியை பற்றி  வா.மணிகண்டன் மற்றும் முத்துநிலவன் முதலானோர் கடந்த மாதம் தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தனர்.  அப்போது தரப்பட்ட தகவல் இதோ.

அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக்கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

இதில் அவர்கள் -(ப்ரதிலிபி) போட்டிக்கான தேர்ந்தேடுக்கும் முறைகளைப் பற்றி எந்த தகவலையும் தரவில்லை. ஆனால் கட்டுரைகளை அவர்களுக்கு சமர்ப்பித்தபின், கடைசி நாளில் எல்லா கட்டுரைகளையும் தங்கள் தளத்தில் வெளியிட்டுவிட்டு, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஓரு ஈமெயிலை அனுப்பியிருந்தனர். அதில் தரப்பட்ட தகவல் இதோ,


கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்:
நடுவர் குழு – நடுவர்கள் கட்டுரைகளை படித்து அவற்றை மதிப்பீடு செய்வார்கள்.
வாசகர் விருப்பம்:
  • இங்கு இருக்கக்கூடிய உங்களது கட்டுரையின் சுட்டியை முடிந்த வரையில், உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் (பேஸ்புக், ஜிமெயில், மற்றும் இதர வழிகளில்). அப்படிப் பகிரும் நண்பர்களிடத்தில் சுட்டியை சொடுக்கி கட்டுரையின் பக்கத்திற்கு சென்று கட்டுரையை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள் (Rating the article).
  • இந்த கட்டுரைகளை எங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்வோம். அவ்வாறு முகநூல் மூலம் வரும் வாசகர்களாலும், எங்கள் தளத்திற்கு வழக்கமாக வரும் வாசகர்களாலும் இந்தக் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
  • எத்தனை வாசகர்கள் உங்கள் கட்டுரையை படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பீடு வழங்குகிறார்கள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முடிவுகள் 28.02.2016 அன்று அறிவிக்கப்படும். அதுவரை வாசகர்கள் உங்கள் மதிப்பீடுகளை வழங்கலாம்.
இதன்படி கட்டுரைகளை எழுதிய ஓருவர் எழுதியதைத் தாண்டி தனது கட்டுரைக்கு மார்கெட்டிங் வேலையையும் செய்ய வேண்டுமாம்.
இப்படி விரிவான  வாசகர் அல்லது நண்பர் வட்டம் உள்ளவர்கள் இது போன்றதோரு கட்டுரைப்போட்டியில் கலந்துதான் வெளிச்சம் பெறவேண்டுமா ? இது போன்றதோரு போட்டியில் கலந்துக் கொள்வதே ஆர்வத்தைத் தாண்டி ஓரு வெளிச்சம் அல்லது கவனம் அல்லது அங்கிகாரம் பெறத்தானே ?
இதை பரிசுகளை தருபவர்கள் தங்கள் தளத்துக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என விட்டுவிடலாம் தான்.  ஆனால் இந்த மார்கெட்டிங் யுத்தியை முன்பே அறிவித்திருந்தால் என்னைப் போன்றவர்கள் கவனமுடன் இருக்கலாம் தானே ?
இதுவரை, எனது கட்டுரைக்கு எந்தவிதமானதோரு மார்கெட்டிங் அல்லது விளம்பரமும் நான் செய்யவில்லை. அதனால் எனக்கு போட்டிமுடிவுகள் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. 
ஆனால், போட்டியில் வெற்றிபெற்றவர்களைத் தாண்டி நான் மிகவும் ஆர்வமாயிருப்பது நடைமுறையாக்கல். அதாவது, கட்டுரையாளர்கள் தந்த வழிமுறைகள் அல்லது உத்திகள் யாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை எப்படி, எப்போது, யாரால் முயற்சிக்கப்படும் என்பதே. அவை ஓரு குறுகிய வட்டத்தைத் தாண்டி மிகப்பலரை சென்று சேரவேண்டும் என்பது என் விருப்பம், பார்க்கலாம்..
கட்டுரைப் போட்டிக்கு வந்த எல்லா கட்டுரைகளும் இங்கே
எனது கட்டுரை;

நண்பர்களே !!, கடந்தவாரம் இந்தியாவில் இருந்து திரும்பினேன். அது பற்றி எழுதுவோம்.