Sunday, May 26, 2019

வனநாயகன் குறித்து-14 (தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத்தக்க வரவு)

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து  இளங்கோ 
அவர்கள் முகநூலில் எழுதிய வாசக அனுபவம்.  நன்றி  Elango Pattabiraman!!

/////

திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள் எழுதிய புதிய நாவல் " வன நாயகன் " பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்!
வன நாயகன் படித்தேன். Interesting novel! ஒரு துப்பறியும் நாவல் போல விறுவிறுப்பாக இருந்தது. கதாநாயகன் ஒரு super hero வாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், சராசரி மனிதனாக கதை சொல்வதும், தடங்கலில்லாமல் சரளமாகச் செல்லும் கதைப்போக்கும் நன்று! அத்துடன் மலேசியாவின் முழுமையான குறுக்குவெட்டுத் தோற்றமும், வெவ்வேறு விதமான கேரக்டர்களும்...! மலேசியாவின் நிலவியலைக் கண்முன் நிறுத்தும் வர்ணனை! 
இரா.முருகன் எழுதிய " மூன்று விரல்" நாவல் படித்திருக்கிறீர்களா? அதன் சாயல் கொஞ்சம். ஆனால் அவரைவிட ஆரூர் பாஸ்கர் கொஞ்சம் ஆழம். களமும் வேறு. Technical details கதைக்குத் தேவையான அளவு பயன்படுத்தி இருக்கிறார்!

I went through the novel Mr. Arur Baskar gave and could understand the despair and frustration ringing in each and every sentence of the book had a greater impact on me not only because of its content but also because of its style!
Please don't think that i try to flatter him when i say that he is far better than many of the second rate writers!
His creativity, his telling phrases and intensity with which Baskar tries to express his ideas really took me by surprise!
I am strongly aware of the talent in Mr. Arur Baskar! In due course the writers world will bring him to limelight as a famous writer!
I really congratulate him for his ability the ease with which he handle the language!
From this " VANA NAYAGAN" I could see a young ( to the literary world) writer blooming so much for the style of his writing!
தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத்தக்க வரவு! திரு. ஆரூர் பாஸ்கர் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்!

////


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:
https://www.nhm.in/shop/9788184936773.html

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

Monday, May 20, 2019

தமிழ் செத்த மொழி ?

எழுத்தாளர் சாருநி​வேதிதா தனது வலைதளத்தில் நேற்று  "தமிழ் செத்த மொழி ஐயா.  ஒரு நாவல் அம்பது காப்பி விற்றால் அது உயிரோடு இருக்கும் மொழி என்றா சொல்வீர்கள்? " என்று எழுதியிருக்கிறார். ஏன் என்றால் ஔரங்கசீப் மேடை நாடகத்தைத் தான் சமீபத்தில்  பார்த்தபோதே தமிழ் செத்த மொழி என்று தெரிந்து விட்டது என்கிறார். 

அந்த நாடகத்தில் நடிகர்கள் யாருக்கும் தமிழை உச்சரிக்கத் தெரியவில்லை. ஏன் தமிழ்நாடே அப்படித்தான் தமிழ் பேசுகிறது எனக் குற்றஞ்சாட்டி அதை ஒரு தனி பதிவாகவே போட்டிருந்தார். (கட்டுரைகள்  கீழே இணைப்பில்)

தமிழ் செத்த மொழி  என்றால் கண்டிப்பாக எதிர்ப்பு வரும் என நினைத்தாரோ என்னவோ உடனே இப்படி  எழுதியிருக்கிறார்.  "சரி.  பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியைச் செத்த மொழி என்று சொல்லக் கூடாது என்று நீங்கள் சொன்னால் ஓகே… ஒப்புக் கொள்கிறேன்.  தமிழ் சாகவில்லை.  ஆனால் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பேசுவதைக் கேட்டால் அதிலும் எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது" என முடித்திருக்கிறார்.

உண்மை. சாருவுடன் முரண்டுபோக எனக்குப் பல விசயங்கள் இருந்தாலும் ஒத்துபோகும் ஓரிரு விசயங்களில் மொழியும் ஒன்று. இன்று நேற்றல்ல அவர் பல ஆண்டுகளாக தமிழ் மொழியின் தொடர் வீழ்ச்சி பற்றி அக்கறையோடும் ஆற்றாமையோடும் எழுதியும்  பேசியும் வருகிறார். அவருடைய இந்தக்  கோபம் நியாயமானது. உண்மையில் இந்தத் தார்மீகக் கோபம் அவர் ஒரு தமிழ் எழுத்தாளன் என்பதால் அவருக்கு மட்டும்  வரவேண்டியதில்லை. தமிழ்பேசும் ஒவ்வொருக்கும் வரவேண்டிய ஒன்று.

நான் மொழி தேய்ந்து வருகிறது. தமிழர்கள் நாளுக்கு நாள் மொழியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நடக்கிறார்கள் எனத் தொண்டை கிழிய கத்தினாலும் எனது நெருங்கிய நண்பர்களே கூட இதில் பெரிதாக நாட்டம் காட்டுவதில்லை.  அவர்களுடைய எதிர்வினை இதுவும் கடந்துபோகும் என்பதாகத் தான் இருக்கும். நாளுக்கு நாள் தொலைகாட்சி, இணையம்,பொதுவெளி எனத் தமிழ் படும் பாட்டைச் சொல்லி மாளவில்லை. நாகரிகமாக பேசுகிறேன், இன்றைய தலைமுறைக்குப் புரியும்படியாக எழுதுகிறேன்,  பேசுகிறேன் எனச் சொல்லி வளமான மொழியை அநியாயமாக சிதைத்துக் கொண்டு இருக்கிறோம்.  

சாரு சொல்வதுபோலப் பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியை  செத்த மொழி எனக் கண்டிப்பாக சொல்லக் கூடாது தான். ஆனால், சிலர் அதை தங்கள் வாழ்நாளில் எப்படியாவது செய்து பார்த்துவிட வேண்டும் எனும் கெட்ட எண்ணத்தில் கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.  இந்தத் தருணத்தில் அனைவரும் விழிப்போடு இருந்து பதர்களைக் கண்டிப்பாக விலக்கவேண்டும். நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட.... அனுமதிக்கக் கூடாது.http://charuonline.com/blog/?p=7765
http://charuonline.com/blog/?p=7757

Sunday, May 12, 2019

ஆஸ்திரேலிய நெருக்கடி

ஆஸ்திரேலியா சமீப காலமாக வரலாறு காணாத  மோசமான காலநிலை மாற்றத்தைச்  சந்தித்துக்கொண்டிருக்கிறது.

தெற்கே தாஸ்மேனியாவில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட  காட்டுத்தீயில் பல லட்சம் ஏக்கர் மரங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. வடக்கே குயின்ஸ்லாந்தில் வந்த பெரு வெள்ளத்தால் 5 இலட்சம் கால்நடைகள் பலியாகி இருக்கின்றன.  அதுபோல முர்ரே டார்லிங் ஆற்றில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் 1 மில்லியன் மீன்கள் வரை செத்து மடிந்தன
எனும் இந்த அவலப்பட்டியல் நீள்கிறது.

கடும் வெப்பத்தால் அணைக்கட்டுகளில் நீர் வற்றி மண்ணின் ஈரப்பதம்
சுத்தமாக குறைந்து தானியம், மாமிசம் என உணவு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  மோசமான  இந்தப் பருவநிலை மாற்றத்தால்  அரசு மிகப்பெரிய பெருளாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால் எதிர்வரும் (18,மே,2019) ஆஸ்திரேலிய  தேர்தலில் காலநிலை மாற்றம் பேசுபொருளாகி இருக்கிறது என்கிறார்கள். இந்தியாவில் நாம் இதையெல்லாம் வெளிப்படையாக பேசாவிட்டாலும் புவிவெப்பமயமாதலால்
(global warming) ஏற்படும் இந்தப் பருவநிலை மாற்றம் பூமிப்பந்தின் ஒவ்வொரு
துகளையும் பாதிக்கத்தான் செய்திருக்கிறது.

#climatechange
#புவிவெப்பமயமாதல்

Monday, May 6, 2019

அந்த ஆறு நாட்கள்- வாசிக்க வேண்டிய சாரமான படைப்பு

வாசகர் ஹேமா ஜே (Hema Jay) முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து 
எழுதிய  வாசிப்பனுபவம்.  நன்றி  ஹேமா !!

                                              ******************
நல்ல படைப்பு. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தனிபதிவாக எழுதணும்னு நினைச்சு அப்படியே போயிடுச்சு. இப்போது இலவச தரவிறக்கம் கொடுத்திருக்கிறார். வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.

இர்மா பற்றிய ஆயுத்தங்களையும், ப்ளோரிடா நிலபரப்பின் தன்மைகளையும், நாயகனின் வேலை குறித்த தொழில்நுட்ப தகவல்களும் வாசிக்க விறுவிறுப்பாக இருந்தது. அமெரிக்க வாழ்க்கையின் போலிகளையும், புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் கவலைகளும் கூட நிதர்சனமாய். அந்த சூழலில் சிக்கியிருப்பவர்களின் மனநிலையை, அந்த பதட்டத்தை (குறிப்பாக அவர்கள் வேறு இடம் தேடி பயணப்படும்போது.. அத்தனை வருட உழைப்பையும் சேகரிப்பையும் அப்படியே விட்டுவிட்டு இங்கு மீண்டும் வருவோமா என்ற தவிப்புடன் செல்வதை....) மிக சரியாக கடத்தி இருந்தீர்கள்.
சிறு விலகல் என்று பார்த்தால் மின்தொடர்பு வேலைகள் குறித்த கவனத்தை போலவே அந்த குடும்பத்தின் தவிப்புகளையும் இன்னும் சிறிது அதிகமாக அழுத்தமாக கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது, குறிப்பாக அவன் மனைவியின் உணர்வுகளை. அவள் இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை வெகு மேலோட்டமாக கடப்பது போன்ற ஒரு எண்ணம் வந்தது. (அதே நேரம் மனிதர்கள் பலவிதம், அவள் ஈஸி கோயிங் ஆக இருக்கலாமே என்றும் நினைத்துக் கொள்கிறேன்) வெகு சில இடங்களில் தற்குறிப்பேற்ற வாக்கியங்கள் - எடிட்டிங்கில் விடுபட்டு போயிருக்கலாம்.
நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய வாசிக்க வேண்டிய சாரமான படைப்பு. வாழ்த்துகள் திரு. ஆரூர் பாஸ்கர்.

****************
நூலை வாங்க USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

https://amzn.to/2K1IoEr

இந்திய முகவரி - https://amzn.to/2UYBi4d

Saturday, May 4, 2019

ஒடிசாவைப் புரட்டிப்போட்ட ஃபானி புயல்

நேற்று சுமார் 245 கீ.மீ  வேகத்தில் கரையைக் கடந்த  ஃபானி புயல் ஒடிசாவைப் புரட்டிப்போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. கனத்த மழையோடு வீசிய சூறைக்காற்று நகரங்களிலும் கிராமங்களிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.

நேற்று வீசிய பலத்த காற்றில் மரங்கள், மின்கம்பங்கள்,தொலைத்தொடர்பு கோபுரங்கள்  அடியோடு விழுவது, பெரிய அலைகளோடு கடல் நீர் ஊருக்குள் நுழைவது போன்ற பல படங்களை இணையத்தில் பார்க்கமுடிகிறது. ஏறக்குறைய 300 கீ.மீ வேகத்தில் வீசிய புயலை எதிர்பார்த்து அரசு தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாக செய்திருப்பதாக தோன்றுகிறது. இல்லையென்றால் உயிர்சேதம் பலநூறை தொட்டிருக்கும். 


சுமார் 25 இலட்சம் குறுஞ்செய்திகள்,  பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள், அவசரகால தொழிலாளர்கள்,பொது அமைப்புகள்  
ஒத்துழைப்போடும் தொலைக்காட்சி விளம்பரங்கள், கடற்கரை சைரன்கள்
உதவியோடும் சூறாவளி வருவதை முன்கூட்டியே தொடர்ச்சியாக எச்சரித்து
மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் ஓடிசா-வுக்கு கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. ஆனால், அவர்களுடைய ஏழ்மை  ஃபானி புயலை எதிர்கொள்வதில் தடையாக இருக்கவில்லை என்பதாக புரிந்துகொள்கிறேன்.
அரசுக்கு பாராட்டுகள்.

மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், தொலைத் தொடர்பு போன்ற அத்தியாவசியங்கள் அனைவருக்கும் கிடைத்து இயல்பு வாழ்க்கை திரும்ப சில நாட்கள் ஏன் சில இடங்களில் பல மாதங்கள் கூட ஆகலாம். வேறு வழியில்லை.

இங்கிருக்கும் ஒடிசா நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் தலைநகர் புவனேஷ்வரில் வசிக்கிறார்கள். அவர்களைக் கடந்த இரண்டு நாட்களாக தொடர்புகொள்ள முடியவில்லையாம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புவதாக சொன்னார். அதுவரை அமெரிக்கா போன்ற தூரா தேசத்தில் பதைபதைப்போடு காத்துக்கொண்டிருப்பதைத் தவிர என்ன எங்களால்  பெரிதாக செய்துவிடமுடியும் சொல்லுங்கள்.

Wednesday, May 1, 2019

அந்த ஆறு நாட்கள்- தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது

சிங்கப்பூர் நண்பரும் எழுத்தாளருமான சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி  சித்துராஜ் !!

                                       ******************
ஆரூர் பாஸ்கரின் - அந்த ஆறு நாட்கள் - 4 1/2 பாரா வாசிப்பனுபவம்
Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.
சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் - அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம்.
அழகான நடை. ஆனால் சில இடங்களில் தகவல்களைச் சொல்ல வந்த கட்டுரை போன்ற பாராக்கள் அசதி ஏற்படுத்தின. அது போல் இன்னமும் அழுத்தமாக சில வெள்ளை, லத்தீனோ, கறுப்பு அமெரிக்க கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாமோ என்றும் தோன்றியது. பாஸ்கர் முயலவில்லை என்றில்லை. ஆனால் நாவலில் இருக்கும் அத்தகைய கதாபாத்திரங்கள் கொஞ்சம் மேம்போக்கானவையாகவே எனக்குத் தோன்றின. அதே நேரத்தில் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டிருக்கும் சில நீளமான வாக்கியங்களைத் தமிழில் எழுதியிருந்திருக்கலாமோ?
தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது. நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்.

****************
நூலை வாங்க USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-