Thursday, December 31, 2020

பரிசு பெற்ற கிறிஸ்துமஸ் மரம்

 கிருஸ்மசுக்கு வீட்டைச் சிறப்பாக அலங்கரிப்பவர்களுக்குப் பரிசு என HOA-இல் (வீட்டு உரிமையாளர்கள் சங்கம் !?) அறிவித்து இருந்தார்கள். அதில்  Most Creative வகையில் படத்தில் உள்ள டாய்லெட்  தாள் மரம் பரிசு பெற்றிருக்கிறது.
#Goodbye2020


Tuesday, December 29, 2020

தமிழ்ச்சமூகம் - கொடுத்ததும் பெற்றதும்

தொல்தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.  சிறந்த தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி என்றெல்லாம் தனித்தனியாக எழுதத் தோன்றவில்லை.கடந்த நூற்றாண்டின் தமிழ் மொழியின் எழுச்சியில் மேலெழுந்து வந்த தமிழ் ஆளுமைகளின்  மறைவு என்பது என்றும் வருத்தமளிக்கும் ஒன்று.

நமது தமிழ்ச்சிந்தனை பரப்பில் செல்வாக்கைச் செலுத்திய இத்தகைய ஆளுமைகளின் தொடர்ச்சியான இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று. அந்தத் தலைமுறை ஆட்களுக்கு நமது தமிழ்ச்சமூகம் கொடுத்ததை விடப் பெற்றதே மிக அதிகம் என்பதே இங்கிருக்கும் கசப்பான உண்மை.

இனி, மறைவுக்குப் பின் புகழ் பேசுவதை விடுத்து , எஞ்சியுள்ளவர்களையேனும் போற்றுவோம். அடுத்த தொ.பாக்களையும், அப்துல் ஜப்பார்களையும் நம்மில் தேடுவோம். இல்லையெனில் அவர்கள்  உருவாகி வரும் சூழலைத் தருவது தமிழுக்கு அவசரத்தேவையாக இருக்கிறது.

#கொடுத்ததும்_பெற்றதும்

Wednesday, December 23, 2020

அதை ஜப்பானியர்களால் படிக்க முடியாது

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான லட்சக்கணக்கான புத்தகங்கள்,
அந்தரங்க கடிதங்கள், நாட்குறிப்புகள் என பல கோடி வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆவணங்களை இன்று வாழும் பெரும்பான்மையான ஜப்பானியர்களால் படிக்க முடியாது, ஏனென்றால் அவை “குசுஷிஜி” (Kuzushiji) எனும் கூட்டெழுத்து வடிவில் (cursive script) எழுதப்பட்டிருக்கின்றன. இதைத் தமிழில் புள்ளி வைக்காமல் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துரு போருலொரு வடிவம் எனப் புரிந்துகொள்கிறேன்.

இந்த குசுஷிஜி ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குசுஷிஜியின் சரளமான வாசகர்கள் மிகக் குறைவு (நவீன ஜப்பானிய பூர்வீக மக்களில் 0.01% மட்டுமே). இதை வாசிக்க போதிய மனிதர்கள் இல்லாததால், இந்த அரிய வரலாற்றுத் தரவுகள்  தானாகவே அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த எழுத்துருவை அடையாளம் காணவும் அவற்றை நவீன ஜப்பானிய எழுத்துக்களாக மொழிபெயர்க்கவும் இயந்திர கற்றல் (Machine Learning) எனும் தொழில் நுட்பத்தை ஜப்பானியர்கள் நாடி இருக்கிறார்கள்.

இந்தச் சவாலை ஏற்க உலகம் முழுவதிலும் இருந்து இயந்திர கற்றல் நிபுணர்கள் (Machine learning experts) தேவை எனும் அறிவிப்பை ஜப்பானிய இலக்கியத்தின் தேசிய நிறுவனம் (The National Institute of Japanese Literature) வெளியிட்டிருக்கிறது. இதுபோல நம்முடைய  தமிழி எனும் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் ஒலைச் சுவடிகளையும்  இயந்திர கற்றல் வழியாக வாசித்து ஆவணப்படுத்தவேண்டிய தருணம் இது.

இப்படி இயந்திர கற்றல் வழியாக மொழிமாற்றம் செய்வது  சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு மட்டுமல்ல.  இது நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் புதிய உண்மைகளுக்கும் திறப்புகளுக்கும் வழிவகுக்கும்.

Monday, December 21, 2020

நோபல் பரிசு - ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற புத்தகத்தை வாசிக்க இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் நிதர்சனத்தை எஸ்.ரா தனது  வலைப் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.


"தாய்மொழி - தமிழ், நமது உயிர்மொழி" எனப் பேசி புலகாங்கிதம் அடையும் நாம் இப்படிச் சில எளிய இலக்குகளைத் தொடக் கூட பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டி இருப்பது வேதனை தருகிறது.


நோபல் பரிசு பெற்ற படைப்புகளுக்கே இந்த நிலை என்றால் நம்மால் மற்ற படைப்புகளைப் பற்றி யோசிக்க கூட முடியாது. இந்தப் படைப்புகள், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவரும் போது அதற்கு இருக்கப் போகும் வாசகர் பரப்பைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும். 

மற்றபடி, "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்.  தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும், என அன்றே சொன்னான் பாரதி " என மேடையில் பேசினால் மட்டும் போதாது. அறிவுசார் சூழலில் இயங்கும் உள்ளூர், வெளியூர் தமிழ் அமைப்புகளும், இசை நிகழ்ச்சி என நட்சத்திர விருந்து வைக்கும் அனைத்து அயல்நாட்டு தமிழ்மன்றங்களும் மொழிபெயர்ப்பிற்கு நிதி சேகரிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

அதுபோல, வரி விலக்கு எனச் சொல்லி வரிப்பணத்தைத் திரைத்துறைக்கு வாரிவிடும் அரசுகளும், கல்வி நிதி உதவி பெறும் பல்கலைக் கழகங்களும் இதை ஓர் இனத்திற்கு செய்யவேண்டிய அறிவு முதலீடாகக் (knowledge investment) கருதி செய்ய முன்வர வேண்டும்.

மற்றபடி, தமிழில் இல்லை என்றால் என்ன ? ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே தேடி பிடித்து வாசித்து விடுவார்கள். தமிழர்களிடம் வாசிப்பு குறைவு போன்ற காரணங்களைத் யாரும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். வாசிப்பும் ,எழுத்தும் மட்டும் இல்லை என்றால் தமிழகமும், தமிழினமும் என்றோ இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எஸ்.ராவின் கட்டுரை இணைப்பு https://www.sramakrishnan.com

Thursday, December 10, 2020

இர்மா - புதிய முயற்சி

என்னுடைய "இர்மா-அந்த ஆறு நாட்கள்"- ஐ வாசித்துவிட்டு சென்னை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ஒருவர் பேசினார்.

இன்றைய அரசியல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்திவரும் 
அமெரிக்கர்களின் வாழ்வியல் பற்றிய பல குறிப்புகளை "இர்மா" நாவலின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. புதிய முயற்சி என வாழ்த்தினார்.


அது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்தவரை அமெரிக்க பயண நூல்கள் பற்றி சிலர் ஆய்வுக் கட்டுரைகள் செய்திருப்பதாகவும், அமெரிக்கப் பின்புலத்தில் எழுதப்பட்ட தமிழ்கதைகளைப் பற்றிய பெரிய மதிப்பீடுகள் எதுவும் இதுவரை  நிகழவில்லை என்றார். புதிய ஆய்வு மாணவர்கள் கவனிக்கலாமே...

Monday, December 7, 2020

ஏ.ஆர்.ரஹ்மான்

தொலைகாட்சி என்றால் தூர்தசன் என்றிருந்த காலம். வெள்ளிக்கிழமை ஓளியும் ஓலியும்-க்கும் ஞாயிற்றுக் கிழமை படத்துக்கும் தமிழ்நாடே காத்துக் கிடந்த நாட்கள். ரோஜா படம் வெளியான வாரம் ஒளியும் ஒலியுமில் சின்ன சின்ன ஆசை பாடலை ஒளிபரப்புகிறார்கள். நானோ பத்தாவது படிக்கும் சின்னப் பையன். 

அதற்கு முன், குமுதம் இதழில் 'விக்ரம்' படத்தில் கமல் சொந்தக் குரலில் பாடிய  'விக்ரம்... விக்ரம்...' பாடலின் இசையில்தான் முதன்முதலாக  கம்யூட்டரில் கம்போஸ் செய்தார் இளையராஜா. அதன்பிறகு 9 வருடங்கள் கழித்து 'ரோஜா' படப் பாடல்களை  ஏ.ஆர்.ரஹ்மான் கம்யூட்டரில் சிறப்பாக கம்போஸ் செய்திருக்கிறார் என எழுதியிருந்ததைப் படித்திருந்தேன். 

ஆனால்,  இளையராஜா இரசிகனாக இருந்த எனக்கு சின்னப்பையன் என்ன பெரிய பிரமாதமாகச் செய்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையோடுதான் அந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலின் புது புது இசைத்துணுக்குகள் இதுவரை கேட்டிராத வித்தியாசமான ஒலியோடு என் காதில் நுழைகிறது. அது தமிழ்த்திரை இசையின் அடுத்த சகாப்தம் என அப்போது கண்டிப்பாக நினைக்கவில்லை. ஆனால், வித்தியாசமான ஏதோ ஒன்று இந்தப்பாடலில் இருக்கிறது என்று மட்டும் மனசு சொல்லியது. 

அன்று பலருக்கு கம்ப்யூட்டர் என்றால் என்ன ? சின்தசைஸர் (synthesizer) என்றால் என்ன ? எனப் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை கம்யூட்டர் என்பது ஒரு இயந்திரம். ஒரு இயந்திரத்தை வைத்து இளையராஜா எனும் மிகப்பெரிய மனிதரை ஓடங்கட்டிவிட முடியுமா என்ன ? 'இதெல்லாம் பிஸ்கோத் வேலை, எத்தனை நாளைக்கு கம்ப்யூட்டர வைச்சு மியூசிக் போட முடியும். நீ வேணா பாத்துக்கிட்டே இரு, ஒரே படத்தோட இவன் போய்டுவான் பார்' என என்னைப் போன்ற விடலைகள் எதிர்பார்த்திருந்த நேரம்.

ஆனால், அவரோ ரோஜாவுக்கான தேசிய விருதோடு நின்றுவிடாமல் ஜென்டில்மேன், திருடா திருடா, புதியமன்னர்கள் என தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களைத் தந்து என்னைப் போன்ற அன்றைய விடலைகளை அவருடைய இரசிகராக்கிவிட்டார். 

தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் 'கம்ப்யூட்டர்' குறித்து எழுதிய சிறிய குறிப்பில் இருந்து...

Friday, December 4, 2020

நிராகரிப்பு (Rejection) என்பது...

காலை எழுந்தவுடன் 'குடிக்க, காஃபி இருக்குமா ?' எனப் பாவமாகக் கேட்கும் நமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  குடிக்க டீ தரப்படும்போது தொடங்குகிறது நிராகரிப்புடனான நமது உறவு.

உண்மையில் Getting Rejected அல்லது நிராகரிக்கப்படுவது என்பது நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு சகஐமான விசயம் தான். காலையில்
வீட்டில் கேட்ட காஃபி கிடைக்காவிட்டால் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால், ஆபிசில் கேட்ட புரோமோசன் அல்லது சம்பள உயர்வு  கிடைக்காவிட்டால் ? இல்லை ஒரு வேலை தேடிக்கொண்டிருப்பவர்
நேர்காணலின் இறுதிச் சுற்றில் நிராகரிக்கப்பட்டால்  ? உருகி உருகி காதலித்தவர் நிராகரித்துவிட்டு சென்றால் ? அதெல்லாம்
நமக்குப் பெரிய மன உளைச்சலை தரக்கூடிய விசயங்கள். கொஞ்சம் நிதானதாக யோசித்தால் நிராகரிக்கப்படுவது ஒருவித வலி என்பது கூட புரியும். இப்படி நாம் அன்றாட வாழ்வில்  நிராகரிக்கப்படுவதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவது தொடர்பான ஒரு ஆங்கிலபுத்தகத்தைப் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Rejection Proof by Jia Jiang. அருமையான புத்தகம். ஆசிரியர் இந்த விசயத்தைத் தத்துவார்த்தமாக அணுகாமல் பிராக்டிகல் எக்பரிமெண்ட்ஸ் (practical experiments) எனப்படும் நடைமுறை விசயங்களால் இதை அனுகிருப்பதால்,  நிராகரிப்பு தொடர்பான பல புதிய திறப்புகளை நமக்குத் தருகிறார்.உதாரணமாக,  'நல்லா தயார் செய்திருந்தேன். ஆனால், இண்டெர்வியூவில் ரிஜெக்ட் ஆயிட்டேன். எனக்கு எதற்கும் தகுதியில்லை' என தலையில் கைவைத்து உட்கார்ந்து விடாமல் , அந்த நிராகரிப்பு என்பது உண்மை (fact) இல்லை. மாறாக அது வெறுமனே ஒருவருடைய அபிப்ராயம் (opinion) மட்டுமே எனும் புரிதல் வந்துவிட்டால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கையோடு இன்னோரு இடத்தில் முயற்சி செய்தால் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

அதுபோல நீங்கள்  ஒரு நல்ல பிராஜெக்ட் புரபோசலை அல்லது பாலிசி ஏதோ ஒன்றை யாரிடமாவது விற்க முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் 'வேண்டாம்' (No) என ஒற்றை வார்த்தையில் நிராகரித்துவிட்டார் என்றால். நீங்கள் மனம் புண்பட்டு அங்கிருந்து அவசரமாக நகர வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்த 'வேண்டாம்' க்கு பின்னால் எவ்வளவோ காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் உணர்ந்தால் நல்லது.

உதாரணதாக அவருக்கு அந்தப் பூவின் நிறம் பிடிக்காமல் இருக்கலாம். இல்லை அந்தப் பூ வாடி இருப்பதால், வேறோன்றைக் கொடுத்தால் வாங்குவாராக இருக்கும். அதுபோல அந்தப் பாலிசியை அவர் முன்பே எடுத்திருக்கலாம், பேசினால் அது தேவைப்படும் இன்னொருவர் பற்றிய ஆலோசனையை அவர் உங்களுக்குத் தரலாம்.

இப்படிப்பட்ட நிராகரிப்புகளைத் தவிர்க்கும் வகையில் மற்றவர்களிடம் பேசுவது கூட ஒருவித கலை தான் என்பதைத் தொடுகிறார். அதுபோல உங்களுக்குத் தேவைப்பட்டால் எப்படி நிராகரிப்பது  (Saying No) என்பதும் நாம் கைகொள்ளவேண்டிய அவசியமான ஒரு விசயம் தான் என்பதைத் பேசுகிறார்.
முடிந்தால் வாசியுங்கள்.

இந்தப் புத்தகம் அமேசானில் அச்சுப்புத்தகமாகவும், கிண்டில் வடிவிலும், ஒலி வடிவத்திலும் கிடைக்கிறது. 

***இது 2018-இல் எழுதிய குறிப்பு***