Sunday, January 24, 2016

அமேரிக்காவில் பெண்கள் வைத்த பொங்கல்

அமேரிக்காவில் பொங்கல் திருநாள் ஓருவழியாக முடிந்தது. தமிழகத்தில் வழக்கத்திற்கு  மாறாக இந்த வருடம் சலசலப்புகளைத் தாண்டி ஓரு பரபரப்பு.

அந்தப் பரபரப்புக்கு காரணம் ஜல்லிக்கட்டு. தமிழில் ஏறுதழுவல். அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் இதற்கு தடை
வாங்கிவிட்டார்கள். ஆனாலும் தடையை மீறி சில இடங்களில் மாடுகளும் மனிதர்களும் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. :) நல்ல விஷயம்.

சில வருடங்களுக்கு முன் தமிழ் புத்தாண்டை தை  மாதத்தில் கொண்டாடுவோம் என முதல்வர் கலைஞர் அறிவித்தபோது தமிழர்களிடம் ஓரு சலசலப்பு எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தமிழகத்தின் இரு பிரதான  கட்சிகளால் அரசியல் ஆக்கப்பட்டது துரதிஷ்டம். இரு சாராரும் தங்களுக்கு துணையாக பல ஆதாரங்களை காட்டி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினர்.  அப்போது பாரதிதாசனின் இந்தக் கவிதை அதிகம் மேற்கோள் காட்டப்பட்டது.

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு ...
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

கடைசியில் எல்லாவற்றையும் தாண்டி மக்களின் நீண்ட நம்பிக்கையே வலிமையானது என்று நிருபணமாகிவிட்டது. அந்த சர்ச்சைக்குள் நாம் போக வேண்டாம்.

அப்புறம் பொங்கல் பற்றி ஊரில் ஓருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். "இப்பேல்லாம் யார் சார் பொங்கல் கொண்டாறா? அவனவன் குக்கர்ல பொங்கல் வக்கிறான்.  ஜன்னல் வழியா சூரியனுக்கு காட்டிட்டு, சோபாவில உட்காந்து டிவி பாக்க ஆரம்பிச்சுடுரானுங்க" என அலுத்துக் கொண்டார். அவர் கவலை அவருக்கு.

உலகமயமான இந்த நாட்களில் இது மாதிரியான விழாக்கள் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த மண்ணின் அடையாளங்களை சில நொடிகளேனும் சிந்திக்க வைக்கின்றன என்பது என் கருத்து. 

நான் சொல்ல வந்த விஷயம் அதுதான் அமேரிக்காவில் கடந்த சனிக்கிழமை (மாட்டுப் பொங்கலன்று)  பொங்கல் கொண்டாடினோம். மேலே அந்த நண்பர் சொன்னதுப் போலில்லாமல் கொஞ்சம் பாரம்பரியத்துடன்.

இந்த வருடப் பொங்கலுக்கு நண்பர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார்.  நண்பர் இந்த வருடம் புதுவீடு வாங்கிருக்கிறார். அது தனி வீடு,  இரண்டு கார் பார்கிங் வசதி, ஐந்து படுக்கையறைகள், நீச்சல் குளத்துடன்.  சூரியனை பார்த்து பொங்கல் விட கண்டிப்பாக தாராளமான இடம். எங்களைப் போல மேலும் ஐந்து தமிழ் நண்பர்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

பொங்கலை பாரம்பரியமாக கொண்டாட  தேங்காய்,மஞ்சள், பூக்கள், கரும்பு, பழம் என அனைத்தையும் தேடி வாங்கி வைத்திருந்தார்கள். அப்புறம், புதுப் பானையில் முறைப்படி திறந்த வெளியில் கிழக்கே சூரியனைப் பார்த்து பொங்கல் எனக் களை கட்டியிருந்தது.  விறகு அடுப்புக்கு பதிலாக கேஸ் அடுப்பு மற்றபடி எல்லாம் பாரம்பரியப்படி. வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கூடக் கட்டினார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

வழக்கம் போல ஆணகள் அரட்டையடிக்க, பெண்கள் எல்லா வேலைகளையும் வலிய இழுத்துப்போட்டுச் செய்தனர். நாம செய்றோம்னா யாரு கேக்குறாங்க சொல்லுங்க?  :) இங்க ஓரு பானையில எத்தனை பேரு பொங்கல் விட்டுருக்காங்கனு பாருங்க


இப்பவும் நம்ம பத்திரிக்கைகளில் 'நட்சத்திரப் பொங்கல்'ன்னு நடிகைகள் பொங்கல் வைப்பது போல படம் போடுறாங்கலா?  :)


அன்று சிறுவர்களும்,சிறுமிகளும் ஆனந்தமாய் அங்குமிங்கும் வீட்டில் ஓடியாடி விளையாடி,  வீடு ஓரே கலகலப்பாக இருந்தது. அதிலும் பொங்கல் பொங்கி வழியும் போது "பொங்கலோ..பொங்கலோ" என அவர்கள் மகிழ்ச்சியாக குரலெலுப்பியது ஹைலைட்.

அப்புறம், பொங்கல் என்றால் கடித்து சுவைக்கும் திருநாள் இல்லையா?.  அதனால் அதையும் விடல. ரொம்ப வருசத்துக்கு பின்  கரும்பு தின்னதுகூட அருமைதான். பழைய ஞாபகங்கள்...
  
நான் தமிழ்நாட்டில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி ஓரு மாமாங்கத்துக்கு மேலாகிவிட்டது.  ஆனால் இந்த வருடம்  நண்பர் ராஜேஷு மற்றும் தமிழ்ச்செல்வி  புண்ணியத்தால் மற்ற தமிழ் குடும்பங்களுடன் பொங்கல் நல்ல ஓரு நிகழ்வாயிருந்தது.

ஓரு சிறு இடைவேளை:
          நண்பர்களே, எனது இந்தியப் பயணத்திற்கு  பின் மூன்று வாரங்களில் சந்திப்போம்.

Images:
நன்றி
pixshark.com
www.dinamalarnellai.com

Sunday, January 17, 2016

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சந்தேகத்துக்கிடமின்றி சுஜாதா எனக்கு பள்ளி நாட்களில் இருந்து ஆதர்சன நாயகன்.

மாலைமதி, குமுதம் போன்ற வெகுஜன ஊடகத்தில் 'யார் இவர்?' வித்தியாசமாய் இருக்கிறதே என திரும்பிப் பார்க்கச் செய்தவர். சமீபத்தில் அவருடைய 'கற்றதும் பெற்றதும்' வாசித்தேன்.

ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதியதை தொகுத்து வெளியிட்டுள்ளனர். நான் பெரிய ஆ.வி. பிரியனாக இல்லாததால் அனைத்தும் புதிதாகவே இருந்தன. இப்பவும் ஆனந்த விகடன் "ஆ.வி." தானா இல்ல "AV" ஆயிட்டா?  தமிழ்நாட்டில் இருந்து யாராவது சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகளை நிறைய ஜானர்களில் எழுதியிருக்கிறார். அறிவியல், சிறுகதை, நாட்டு நடப்பு, அனுபவங்கள், கவிதை இப்படி பல.

சுஜாதாவின் கவிதை ஆர்வம் எனக்குத் தெரியாத ஓன்று. இந்த புத்தகத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல கவிதைகள்  ரசிக்கும் படி இருந்தன.  பல கட்டுரைகளில் புதிய கவிஞர்களையும், கவிதைகளையும் ஆதர்சனமாக கொண்டாடியிருக்கிறார். அவர் இருக்கும் போதே என் பங்குங்கு கொஞ்சம் கவிதைகளை எழுதி அவருக்கு அனுப்பிப் பயமுறுத்தி இருக்கலாமோ ? நல்லவேலை அவர் பிழைத்தார் !  :) அப்போதே வைரமுத்துவின் மகன் கபிலனின் கவிதை ஓன்றை விமர்சித்து அறிவுரைத் தந்துள்ளார் என்பது சிறப்பு.

அப்புறம் நான் படித்து வியந்த  இன்னோரு  விஷயம் அவரின் நகைச்சுவை உணர்வு. குறிப்பாக அவருடைய டகோடா ரக விமானங்களைச் செலுத்திய அனுபவங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவரைப் போல நகைச்சுவை என்ற நல்ல உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்து வைத்தவர்தான்.

அதே சமயத்தில்,  தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவு என சில இடங்களில் பதிந்துள்ளார். உண்மை. நாம கொஞ்சம் சீரியஸ் டைப் தான். விளையாட்டுன்னு நினைச்சு சொல்றத சிலர் சீரியசா எடுத்துகிட்டு அருவாளோட வந்து நிப்பாங்க.

மற்றபடி பெரிதான புகார்கள் எதுவும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானதால் சில அறிவியல் விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. இது புத்தகத்தின் குறையே தவிர அவருடையதல்ல. 


இந்தப் புத்தகத்தைத் தாண்டி சுஜாதா பற்றி என் மனதைக் கவர்ந்த சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சுஜாதா  தன்னுடைய வயதான காலத்திலும் மிக இளமையாக சிந்தித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். நாற்பது வருடங்கள் ஓருவரால் தமிழில் இளமைக் குறையாமல் எழுத முடிந்தது ஆச்சர்யம்தான். கவிஞர் வாலியை இங்கே கண்டிப்பாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அது போல தன்னுடைய விசுவல் எழுத்து அல்லது காட்சிப்படுத்தும் தன்மையை ஆங்கிலத்தில் இருந்து கற்று, தமிழில் (1960-70s) முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.  உங்களுக்கு இதில் மறுப்பு இருந்தால் சொல்லுங்க.

ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய short & sweet என்பதை கட்சிதமாக மிகவும் அழகாக, சமயங்களில் கவித்துவமாகவும் பயன்படுத்தக்கூடியவர். 

நான் சமிபத்தில் படித்த அவருடைய ஓரு நாவலில் இருந்து. கதாநாயகனை அறிமுகம் செய்ய பக்கம் பக்கமாக வருணனை இல்லை. சுருக்கமாக நான்கு, ஐந்து வரிகள் தான். அதில் ஓரு வரி  **கழுத்தில் கேமரா மாலை **. மற்றோரு இடத்தில் ** ரயில் 'ழே' என்று கூவிவிட்டு சென்றது...**. இப்படிப் பல.

தமிழைத் தாண்டி பல ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து அதன் நுணுக்கங்களைத் தன் எழுத்தில் முயன்றிருக்கிறார்.  குறிப்பாக சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன்.  அவருடைய 'சிறு சிறுகதைகள்' புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் இங்கே. சிறு சிறுகதைகள்

சுஜாதா பெரிதும் சிலாகிக்கப்படுவது அவரின் அறிவியல் எழுத்துக்காக. மேல் மட்டமான ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தாண்டி விரிவான மற்றும் அடர்த்தியான பல புத்தங்களைப் படித்திருக்கிறார். அதே நேரத்தில், எழுதும் போது அனைவருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு அவருடைய பொறியியல் பின்புலம் இதற்கு மிக உதவியாக இருந்திருக்கிறது. இது அவருடைய மற்ற எந்த சமகால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஓரு தனிச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் சுஜாதா விட்டுச்சென்ற இடம் இன்றுவரை நிரப்படாமல் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்.

அதுபோல சமீபத்தில் 'ஆழ்வார்கள் ஓரு எளிய அறிமுகம்' எனும் புத்தகத்தை வாசித்த போது அவருடைய சங்க இலக்கிய நாட்டம் புரிந்தது. சங்க இலக்கியத்தில் பசலை நோய், ஆண்டாள் கண்ணனிடம் உருகினாள் எனப் படித்தவர்தான், தன் நாவலில் வசந்த் சைட் அடித்தான் என மார்டனாக எழுதினார்.


எந்தவோரு விஷயத்தையும் ஓரு நடுத்தர குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அல்லது மன ஓட்டத்தில் பார்த்து எழுதியிருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் எல்லா வகையான வாசகர்களையும் கவருமா?. அப்படிக் கேட்பதே தேவையில்லாதது. ஏனேன்றால், இப்போதுக்கூட புத்தக்க்கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லராம். ஜெயகாந்தன் எளிய மனிதர்களின் ஆதர்சன எழுத்தாளன் என்றால் சுஜாதா வேறு ரகம். அவ்வளவே.

சுஜாதாவைப் வாசிப்பது ஓரு சுகானுபவம்.  என்னைப் பொருத்தவரை அவர் 'ஆல் டைம் பெஸ்ட் எண்டர்டெயினர்'. வாய்ப்பிருந்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.


நுால்: கற்றதும் பெற்றதும்
ஆசிரியர்  சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 296

பதிப்பகம்

Sunday, January 10, 2016

ஆம்னிபஸ் - தெரியுமா?

நண்பர்களுக்கு 2016ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் 2015ஐயும் நான் திரும்பி பார்கிறேன். கடந்த ஆண்டு நான் செய்த ஓரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அது புத்தக வாசிப்பு.

இணையத்தில் எந்தவித இலக்கும்  இல்லாமல் முகநூல், டிவிட்டர், செய்தித்தாள் என மேயாமல்  செய்த உருப்படியான விஷயம் அது. உண்மையாகவே நிறைய நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறேன். அதில் பெரும்பாலானவை தமிழ் புத்தகங்கள்.

முக்கியமாக வாசிப்பதோடு நிற்காமல் வாசித்த புத்தகங்களை விமர்சித்தும்  எழுதியிருக்கிறேன். அதை விமர்சனம் என்பதை விட கருத்துன்னு சொன்னால் சரியாக இருக்கும். அவற்றில் சில எனது வலைதளத்தைத் தாண்டி  இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது.

நான் கடந்த வருடத்தில் (2015) நான் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பு இங்கே.

1) காற்றின் கையெழுத்து - கவிஞர் பழநிபாரதி
http://aarurbass.blogspot.com/2015/02/blog-post_19.html

2) தென்றல் வந்து தீண்டும்போது... (அமேரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ் பற்றி)
http://aarurbass.blogspot.com/2015/03/blog-post_23.html

3) சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post_29.html

4) லென்ஸ் வழியான வாழ்க்கை - ஆனி லெய்போவிட்ச்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post.html

5) சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
http://aarurbass.blogspot.com/2015/07/blog-post_23.html

6) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
http://aarurbass.blogspot.com/2015/08/blog-post.html

7)சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post_20.html

8)  Tuesdays with Morrie - Mitch Albom
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post.html

    புத்தக வாசிப்பைத் தாண்டி அதன் விமர்சனத்துக்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே.  ஓரு சினிமாவை பார்த்தபின் குறை நிறைகளை அல்லது பிடித்த விஷயங்களை நண்பர்களிடம் விவாதிக்கிறோம் இல்லையா அது போலதான் இதுவும்.

    அதையும் தாண்டி, எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்புகளைச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான ஓரு விமர்சனத்தையும், அங்கீகாரத்தையும் கண்டிப்பாக எதிர்பார்கிறான். 

    அதனால் ஓரு வாசகனாக நமது கருத்து அல்லது விமர்சனம் சக வாசகனைத் தாண்டி  அந்த படைப்பாளியையும் சென்று சேர்கிறது.

     நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ புத்தகங்களைக் கடந்து வருகிறோம். ஆனால், அதை விமர்சித்து எழுதுபவர்கள் நம்மில் மிகக் குறைவு. உருப்படியாக எழுதுபவர்கள் அதிலும் குறைவு. அப்படிபட்ட தரமான விமர்சனங்களை எங்கே படிக்கலாம்?.

     இந்தத் தருணத்தில் ஆம்னிபஸ் தளம் ஓரு சிறிய அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

     தினம் ஒரு தரமான புத்தக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 வாக்கில் தொடங்கபட்டு இயங்கி வருவது ஆம்னிபஸ் தளம். அதன் இணைப்பு இங்கே.

http://omnibus.sasariri.com/

    புது வெளிச்சத்தின் சிறு கீற்றாவது பாய்ச்சக்கூடிய நூல் அறிமுகங்கள் செய்ய முயற்சித்து வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
 
    ஆம்னிபஸ் தளம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து அப்படியே.

//"இங்குள்ள அச்சு ஊடகங்கள் தீவிர வாசிப்பு என எதற்குமே இடமளிக்காத சூழலில் இணையம் வழியாகவே நல்ல நூல்களை நாம் அடையாளம் காணமுடியும். ஆம்னிபஸ் என்னும் இணையதளம் அவ்வகையில் மிக முக்கியமானது. அதில் மட்டுமே இன்று தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன"//

     ஆம்னிபஸ் தளம் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் அதைப் பார்வையிடலாம்.  எழுதும் ஆர்வமிருப்பவர்கள் உங்கள் நூல் விமர்சனங்களுடன் ( கொஞ்சம் விரிவாக 500 சொற்களில்) அவர்களை அணுகலாம்.

     என்னிடம் இந்த வருடமும் ஆம்னிபஸ் தளத்திலிருந்து  விமர்சனங்களைக் கேட்டிருக்கிறார்கள். முயற்சிப்போம்.

     2015 தாண்டி மேலும் பல புத்தகங்களை வாசித்து 2106லும் எழுதும் ஆர்வமிருக்கிறது. நான் ரெடி அப்ப நீங்க? ;)

Thursday, January 7, 2016

தமிழ்மணம் நிலைக்குமா?

சில மாதங்களாகவே ஓரு கேள்வியை பதிவர்கள் பலர் என்னிடம் வேவ்வேறு மாதிரி கேட்டுக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் பயன்படுவது போல் அதை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி என்ன நம்மிடம் பெரிதாக கேட்டுவிட முடியும். ஓன்னுமில்லை.   சமீபகாலங்களில் பெரும்பாலனவர்கள் முகநூல் பக்கம் தாவுகிறார்களே?, பிளாகரில் நடமாட்டம் குறைகிறதே? தமிழ்மணம் நிலைக்குமா? என்பதுதான் கேள்வி.


அது உண்மைதான். மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. பிளாகரில் இருந்து முகநூலுக்கு தாவல்கள் அதிகரித்துள்ளன. அப்படித் தாவ பல காரணங்கள் இருக்கின்றன. அதை விரிவாக அன்பர் முரளிகூட அலசி இருக்கின்றனர் இணைப்பு கீழே.

http://www.tnmurali.com/2016/01/blogging-facebook-comparison.html

முகநூலும், பிளாகரும் வேறு வேறு வகையான பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டது. சுருக்கமாக எனது கருத்துகளை சொல்லிவிடுகிறேன்.

பிளாகர் போலின்றி முகநூல் கவர்சிகரமானதுதான். உடனடி கருத்துகள், பகிர்தல்,விருப்பமிடுதல், புகைபடங்கள்,காணோளி,மொபைல் பயன்பாடு இப்படி பல விஷயங்கள். இந்த தாவல் கண்டிப்பாக தடுக்க முடியாதது தான்.

ஆனால் பிளாகை மொபைல் போனில் பயன்படுத்த இயலாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது முற்றிலும் உண்மையில்லை. ஐஃபோன் மற்றும் அண்டிராடியில் blogger app ஐ நீங்கள்  தரவிரக்கம் செய்ய இயலும். இந்த செயலியில் நீங்கள் பிளாக் எழுதலாம், மற்றவர்களுடைதையும் பார்கலாம். இந்த செயலியை googleலே தருகிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.


பிளாகர் தேய அல்லது தேய்வது போல தெரிய இன்னோரு முக்கிய காரணம் இருக்கிறது. அது நாமெல்லாம் மறந்துவிட்ட ஒன்று திரைமணம்.

ஆம், திரைமணம் வந்தபின்பு சினிமா பதிவர்களும், பிரியர்களும் தமிழ்மணத்தை கண்டு கொள்வதில்லை. அதனாலேயே சமீபகாலங்களில் மற்ற பதிவுகளுக்கு பார்வைகள் குறைந்துள்ளது.

இப்போது தமிழ் மணத்துக்கு வருபவர்கள் கொஞ்சம் சீரியஸ் பதிவர்களும் அதற்கான வாசகர்களும் தான். அவர்களும் நண்பர்களிடம் உள்ள புரிதலில் தான் எழுதுகிறார்கள். அதாவது மாற்றி மாற்றி கருத்திடுவது எனும் நிலைதான். அதனால், புதிதாக வருபவர்களின் பாடு திண்டாட்டம் தான். சில நாட்களில் தாக்கு பிடிக்காமல் அவர்களும் முகநூல் பக்கம் போக வாய்ப்புகள் அதிகம். எனவே புதியவர்களை ஊக்குவிப்போம்.


அப்படி என்றால் பிளாகரின் எதிர் காலம் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.

எழுத்தில் எப்போதும் இரு வகை உண்டு.  ஒன்று நிறுத்தி நிதானமாக எழுதப்படுவது. இதில் அடர்த்தி அதிகம்,  இலக்கியத் தரமானது. படிக்க பொறுமையும் நிதானமும் வேண்டும்.
ஜெயமோகன்,சாரு போன்றவர்களுக்கானது. இவர்கள் இன்னமும் பிளாக் அல்லது வலைதளத்தில் தான் இருக்கிறார்கள். அப்படித்தான் எதிர்காலங்களிலும் தொடர்வார்கள். மாற்றமில்லை.   இதற்கு வாசகர்கள் குறைவு. ஆனால் தேடிப் போய் அதை படிப்பார்கள்.

இரண்டாவது பாப்புலர் அல்லது ஜனரஜ்சக எழுத்து - எளிமையான நடை. அனைவருக்குமானது. ஆனந்தவிகடன், குமுதம் வகையரா.  இந்த எழுத்துதான் சில காரணங்களுக்காக முகநூலிலும்,பிளாகிலும் பிரிந்து கிடக்கிறது.  அதற்கான காரணங்கள் வசதி, அங்கிகாரத்தை தாண்டியது என நினைக்கிறேன்.

உதாரணமாக- 

நண்பர் செந்தில் தற்போது  நீர் மேலாண்மை பற்றிய பதிவு ஓன்று எழுதிக்கொண்டிருக்கிறார்.

http://senthilmsp.blogspot.com/2015/12/8.html

இதுபோல கொஞ்சமேனும் ஆழ்ந்து படித்துப் புரிந்துக் கொள்ளவேண்டியதை கண்டிப்பாக வலைபதிவில் மட்டுமே விளக்கமான எழுத்தில் சொல்ல இயலும்.

இன்னோரு உதாரணம். முகநூலில் ஓருவர் ஜல்லிகட்டு சம்பந்தமாக இந்த புகைபடத்தை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவை நூற்றுக்கணக்காணவர்கள் விரும்பியிருக்கிறார்கள், 35 பேர் மற்றவர்களிடம்  பகிர்ந்திருக்கிறார்கள். இவையெல்லாம்
உடனடியாக சில நொடிகளில் நடந்து, நூற்றுக்கணக்கானவர்களின் கண்களைத் தொட்டிருக்கிறது. அதே முகநூலில் பிரபலமாகாத ஓருவர் சீரியசான விஷயங்களை எழுதினால் எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பது சந்தேகமே.

 'நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்' என்றுச் சொல்வது போல செய்தி அல்லது கருத்தின் உள்ளடக்கமே நமது ஊடகத்தைத் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.  மேலே சொன்ன இன்ன பிற காரணங்களுக்காக பிளாகும் தமிழ்மணமும் நிலைக்கும்.


எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்பிற்கான நியாயமான அங்கிகாரத்தை எதிர்பார்பது தவறோன்றுமில்லை.  நாமும் மனிதர்கள் தானே.? நான்கு பேர் நாம் எழுதுவதை படித்து அதை பாரட்டவோ இல்லாவிட்டால் திட்டவாவது செய்யவேண்டாமா ? சொல்லுங்கள்.

 மாற்றத்துக்கு தகுந்தாற்போல, உங்கள் வாசகர்களுக்கு ஏற்றதோரு ஊடகத்தை தேர்ந்தேடுங்கள் என்பதே எனது கருத்து.

உங்கள் கருத்துகளையும் பகிருங்கள். நன்றி!

Monday, January 4, 2016

சிறு சிறுகதைகள் - சுஜாதா

'ஆம்னிபஸ்'ஸில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  புத்தகம் பற்றிய எனது விமர்சனம்.
 
சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். சுஜாதா 2003வாக்கில்
குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது.  வெளியிட்டவர்கள் விசா பப்ளிகேஷன்ஸ். புத்தகம் கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.

சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். இப்படி சிறுகதை  சுஜாதாவின் 'ஹோம் பிட்ச்'  என்றால் சும்மா விடுவாரா என்ன ?, அழகான கதைகள், அருமையான விளக்கங்கள். சும்மா வெளுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக சின்னஞ் சிறு கதைகளின் பல வடிவங்களை எளிமையாகவும் அதே சமயத்தில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறார். சிறுகதைகளில் இவ்வளவு பரிமாணங்களா? என்று ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்தச் சிறுகதைகளைக் குறைந்தது இரண்டு வார்த்தைகளில் தொடங்கிச் சில நூறு வார்த்தைகளில் முடித்திருக்கிறார். அப்படி வெவ்வேறு கட்டுமானங்களில் செல்லப்படும் கதைகளுக்கு வேறு வேறு பெயர்கள். இரண்டு வரியில் கதையா? ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா.? இதோ ஓரு கதையைப் பார்ப்போமே.

தலைப்பு:  ஆபிஸில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி

இங்கே சூட்சுமமே கதையின் தலைப்பு என்பதைப் படித்தால் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் முதல் மற்றும் இரவு சேர்ந்து முதலிரவு ஆனதும் தமிழின் சிறப்பு.

சி.சி.களின் (அதாங்க சிறு சிறுகதைகள்)  வடிவத்தை அல்லது விதிகளை முதலில் சொல்லி அதை ஓரிரு கதைகளில் தானே முயற்சி செய்து வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். பிறகு அதை வாசகர்களை எழுத ஊக்குவித்து ஓரு போட்டியாக அறிவித்துள்ளார்.  பின்பு அந்த போட்டியில் வென்றக் கதைகளை வெளியிட்டு பரிசுகளையும் வழங்கியிருக்கிறார்.வாசகர்களும் தங்கள் பங்கிற்கு எழுதிக் குவித்திருக்கின்றனர்.


இது போல Short Fiction, Sudden Fiction (உடனடிக் கதை),ஹைகா,ஹைபுன்  என பலவற்றை அறிமுகம் செய்கிறார். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ. 'ஹைபுன்' என்பது ஓரு காட்சியை விவரித்து இறுதியில் ஓரு ஹைக்கூ வைப்பது. அவர் அறிமுகம் செய்த 55 Fictionல் 55 வார்த்தைக்குள் கதை சொல்லவேண்டுமாம்.

55- வார்த்தைகளில் கதை? பார்ப்போமே.

'முட்டாள் கூமூட்டை' என்று டைரக்டர்  அசிஸ்டண்டைத் திட்டினார். 'சாவுகிராக்கி ஓரு சின்ன கன்டியூனிட்டி ப்ராப் பார்க்கத் தெரியலை. இப்ப கலர்த் தண்ணிக்கு பதிலா நிஜ பியர் வெக்க வேண்டி வந்திருச்சி பாரு..'
 

அன்று ஷிட்டிங்கின் கடைசி நாள். நிஜமான பார் செட்டில். அரையிருட்டில் வயதான நடிகர் காத்திருந்தார். அடுத்த படம் எப்ப வருமோ? என்று கவலையில்.

'ரெடி வாங்க ராஜாராமன்.. ஓரு டேக் பாத்துரலாம்'

ஓரு டேக்கா ? இருபது டேக்காவது வாங்காமல் விடமாட்டேன் என்று மனத்துக்குள்
தீர்மானித்திருந்தார்.


கடிதங்களின் வாயிலாககூட கதைகளை நகர்த்தி சிறுகதை எழுத இயலும் என்பது சுவாரஸ்யமாகவே இருந்தது.  இது போன்றதோருக் ('துமாரி அம்ருதா') கதையை இந்தியில் ஷபனா ஆஸ்மியும், நஸ்ருதீன் ஷாவும் கடிதமாக மேடையில் தோன்றிப் படித்திருக்கிறார்களாம். ரிகர்சலே தேவையில்லை. மாற்றி மாற்றி ஓரிவருக்கொருவர் எழுதும் கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கதை மெல்ல மெல்ல மேடையில் உருவாகிறது. அவர்களுக்கு மேடையில் இரண்டு நாற்காலிகள் எதிரெதிராகவோ அருகிலோ போடப்பட்டிருக்கும். கடைசியில் ஓருமுறை நிமிர்ந்துப் பார்த்துக் கொள்வார்களாம்.

தமிழில் வெகுஜன ஊடகத்தில் சிறுகதைகளில் பல புதிய உத்திகளைக் குமுதம் கையாண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஓரிடத்தில் சிலாகித்திருக்கிறார். சிறுகதையின் இன்னபிற வடிவங்களை சுஜாதாவின் எழுத்தில் வாசிப்பது அருமையாகவே இருக்கிறது. படிப்பவர்களுக்கு அலுப்பூட்டாமல் வாசிக்த்தூண்டும் 'சுஜாதா மந்திரம்' நன்றாகவே வேலைச் செய்துள்ளது.

சி.சி. கள் நீதிக் கதைகளோ அல்லது உபதேசக் கதைகளோ இல்லை. கவனமாக் கட்டமைக்கப்பட்ட இவை படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும் என்கிறார். சி.சி. கதைகளை எழுத சொற்சிக்கனம் அதிமுக்கியம். சிக்கனமாக எழுத முயலுபவர்கள் பயிற்சிக்காக போஸ்ட் கார்டுக்கு கதை எழதி பழகச் சொல்கிறார். நிறைவாக சி.சி கதைகள் ஹைக்கூ அளவுக்கு வந்துவிட்டன. ஹைக்கூ  என்பது பளிச்சென்று ஓரு காட்சியை எடுத்த போட்டோ போல. சி.சி. கதை என்பது  குறும்படம் போல. போட்டோவும் திறமையான கலைஞர்கள் எடுத்தால் அழகான கதை சொல்லும். குறும்படமும் அப்படியே என்கிறார்.

சிறுகதை என்பது கடந்தகாலங்களில்  பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.  அன்று பத்துப் பக்க சிறுகதைகளில் தொடங்கி இன்று நாம் நாலு செகண்ட் கதை தாண்டி இரண்டு வார்த்தை கதைகளில் வந்து நிற்கிறோம். சி.சி.க்கள் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இது ஓருவிதத்தில் காலத்தின் கட்டாயம் கூட.  இந்த சூழல் ஆரோக்கியமானதா, மொழி தன் வளத்தை இழக்கிறதா, கதையில் ஆசிரியர் சொல்லமுனைந்த கருத்து சரியாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதா இல்லை பூடகமாக இருக்கிறதா என்கிற விவாதத்துக்குள் இப்போது நாம் செல்ல வேண்டாம். குறுகச் செய் என்பது சி.சி.ன் தாரக மந்திரமாய் இருக்கிறது அவ்வளவே.

குறையாகச் சொல்ல பெரிதாக ஓன்றும் இல்லை. புத்தகத்தில் அவர் எடுத்தாண்டுள்ள கதைகள் பெரும்பாலும்  ஆங்கில புத்தகங்களைத் தழுவி எழுதியவை. மிகச் சிக்கனமாக ஓரிரு இடங்களில் இந்திய எழுத்தாளர்களையும் ( Folk tales from India) எடுத்தாண்டிருக்கிறார்.

'ஹைகா'வுக்கு வாசகர்கள் அனுப்பிய ஹைக்கூவை மட்டும் பதிப்பித்துவிட்டுப் படத்தைக் கோட்டை விட்டுவிட்டனர். அதனால் புத்தகத்தைப் படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ என்பதை இங்கே நினைவில் கொள்க. இது பதிப்பக தவறே, ஆசிரியரின் தவறல்ல.

ஆம்னிபஸ் பதிவு:
http://omnibus.sasariri.com/2015/12/blog-post.html